அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட முதுமை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“NOTHING TEACHES US ABOUT THE PRECIOUSNESS OF THE CREATOR AS MUCH AS
WHEN WE LEARN THE EMPTINESS OF EVERYTHING ELSE.”—CHARLES SPURGEON.
******
திருச்சி வரும் சமயங்களில் முடிந்த வரை சில
கோவில்களுக்காவது சென்று வர நினைப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் வீட்டு மற்றும் வெளி வேலைகள்
என பொழுது சரியாக இருக்கும். எங்கும் செல்ல முடியாது. இந்த முறையும் வேலைகள் நிறையவே என்றாலும் சில
நாட்களுக்கு முன்னர் எந்த வித திட்டமும் இல்லாமல் காலை குளித்த உடன் புறப்பட்டு
விட்டேன்.
எங்கள் வீட்டிலிருந்து பொடி நடையாக நடந்து கொள்ளிடம் பாலம் வரை சென்று விட்டேன்
(இரண்டு கிலோமீட்டர்).
அங்கே இருந்து ஒரு நகரப்பேருந்தில் திருவாசி கிராமத்தின் வெளியே முசிறி/சேலம்
செல்லும் பிரதான சாலையில் இறங்கிக் கொண்டேன். பிரதான சாலையிலிருந்து சிறிது தொலைவு
(500 மீட்டர்) குறுகிய பாதை வழி, பக்கவாட்டில் இருக்கும் பசுமையான வயல்வெளிகளை
பார்த்தபடியே நடந்தால் சில நிமிடங்களில் கோவிலுக்கு சென்றடைந்து விடலாம்.
சிறியதோர் கிராமத்தில் அமைந்திருக்கும் அழகான சிவன்
கோவில்.
இந்த சிவன் கோவில் அமைந்திருக்கும் திருப்பாச்சிலாச்சிராமமே (தற்போதைய திருவாசி
கிராமம்) சிவபெருமானுக்கே பிடித்த தலம் என்று ஒரு கதை உண்டு. அந்த கதை…
அடர்ந்த வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் பராசக்தி,
பிரம்மன், திருமகள், அகத்தியர் ஆகியோர் 'சமீவனேஸ்வரர்' என்ற திருநாமம் கொண்ட ஈசனை
வணங்கி வந்தார்கள். அந்த சமயத்தில் அம்பிகையின் கேள்விக்கு பதில் உரைத்த
சிவபெருமான், 'வேதங்களும் வேத பண்டிதர்களும் தவமியற்றும் இந்த
திருப்பாச்சிலாச்சிராமமே என் விருப்பத்துக்குரிய தலம்' என்று சொன்னதாக இக்கோவிலின்
தல வரலாறு உரைக்கிறது.
பார்வதி தேவி இங்கு அன்னப்பறவையாக உருவெடுத்து வந்து
'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றார் எனவும்
ஒரு வரலாறு இருக்கிறது. அருள்மிகு பாலாம்பிகை உடனுறை மாற்றுரைவரதீஸ்வரர்
திருக்கோவில் என்று அழைக்கப்படும் இந்தக் கோவில் பல சிறப்புகளை பெற்ற திருக்கோவில்
- சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற சிவஸ்தலங்களில் இது 62-ஆவது
திருத்தலம். மிகவும் பழமையான திருக்கோவில் என்றாலும் தற்போது அதன் நிலை மிகவும்
மோசமாக இருப்பதாக தெரிகிறது.
பிரகாரத்தில் இருக்கும் பல தெய்வ சிலைகளுக்கு வஸ்திரம் இல்லை! பக்தர்கள் கூட்டம்
வருகிறதோ இல்லையோ, கோவிலை சிறப்பாக பராமரிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை
மட்டுமல்லாது மக்களின் கடமையும் கூட. பழமையை பாதுகாத்து வைப்பதில் நாம் மிகவும்
பின்தங்கி இருக்கிறோம் என்பதை இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.
கோவில் குறித்து நிறைய கதைகளுண்டு… வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு நடராஜர் சிலை
இங்கே உண்டு - பொதுவாக நடராஜர் சிலை என்றால் அவரது காலுக்கு கீழே முயலகன் எனும்
அரக்கனின் உருவம் தான் இருக்கும். ஆனால் இங்கே அப்படி இல்லாமல் ஒரு பாம்பு
இருக்கும்படியான சிலை இருக்கிறது – காரணம்? அதற்கும் ஒரு கதை உண்டு - அந்தக் கதை…
திருவாசியை உள்ளடக்கிய பகுதியை ஆண்டு வந்த அரசன்
கொல்லி மழவன்.
அவனது மகளுக்கு தீராத வயிற்று வலி. எத்தனையோ இராஜ வைத்தியங்கள் செய்தும் பலன் இல்லை. திருவாசி உரை ஈசனை வணங்கி, “என் மகளின் வயிற்று
வழியை தீர்க்க வேண்டியது உன் பொறுப்பு” என்று வேண்டிக் கொண்டாராம். அச்சமயத்தில் அங்கே வந்த திருஞான சம்பந்த பெருமான் 'துணிவளர் திங்கள் துளங்கி விளங்க' எனும் பதிகம் பாடி வேண்ட, அரசன் மற்றும் அவனது மகள்
மீது கருணை கொண்ட சிவபெருமான், அரசனின் மகளைத் தாக்கிய நோயை ஒரு பாம்பாக மாற்றி,
அதன் மீது நின்று ஆடினாராம்.
அரசனின் மகள் நோய் நீங்கி குணமடைந்தாள் என்ற கதை அக்கதை.
திருவாசி தலம் தீராத நோய் தீர்க்கும் தலமாகவும்
குறிப்பாக வயிற்று வலி, நரம்புத் தளர்ச்சி, வாதநோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய்
பிரச்னைகள், குழந்தைகளுக்கு வரும் பாலாரிஷ்டம் எனும் நோய்களையும் தீர்க்கும் என்ற
நம்பிக்கைய அளிக்கும் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்கிவருவதாக தகவல்கள்
இருக்கின்றன.
நான் சென்ற போது கூட விபத்தில் தலையில் அடிபட்டு நரம்பு பிரச்சனைகள் இருக்கும்
ஒருவர் வந்து பிரார்த்தனை செய்து கொண்டார். இப்படி எங்கிருந்தெல்லாம் பக்தர்கள் வந்த வண்ணம்
இருக்கிறார்கள்.
பாடல் பெற்ற இந்த சிவ ஸ்தலத்தினை சரிவர பராமரித்தால் வரும் காலத்திலும் பலருக்கும்
பயனுள்ள இடமாக இருக்கும்.
திருச்சி வரும் வாய்ப்பிருந்தால் இந்த கோவிலுக்கும் சென்று வரலாமே!
******
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து….
திருவாசிக்குச் சென்றிருந்தாலும் நுணுக்கமாக கோயிலின் சிறப்புகளை அறியவில்லை.
பதிலளிநீக்குதிருப்பைநீலி, திருத்தலையூர் கோயில்களும் இக்கோயில் உள்ள வட்டத்துள் இருக்கின்றன.
கீசாக்கா கண் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் இருப்பார்கள். சென்று பார்த்து விவரம் எழுதுங்கள்.
Jayakumar
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதிருவாசி என்னும் ஊர், கோவில் பற்றி இன்றுதான் தெரியும்.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு...
பதிலளிநீக்குதிருவாசி தலசிறப்பு அறிந்தோம்.
பதிலளிநீக்குபுகைப்படங்களும் தகவல்களும் மிகவும் சிறப்பு!!
பதிலளிநீக்குதிருச்சியை சுற்றி உள்ள கோயில்களுக்கு சென்றிருந்தாலும் திருவாசியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்கள் பதிவு படித்ததும் பார்க்க வேண்டும் என்ற ஆவலாக இருக்கின்றேன்.
பதிலளிநீக்குஇதுவரை அறிந்திராத கோயில் வெங்கட்ஜி. ஒவ்வொருகோயிலுக்கும் எத்தனை புராணக் கதைகள் கதைகளுக்குள் கிளைக்கதையாய் சுவாரசியமான வரலாறு என்று...சுவாரசியமான தகவல்கள்.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கின்றன. அந்தத் தூணுக்குள் ஒரு நீளமான ஓட்டை தனி அழகாக இருக்கிறது.
தீராத நோய் தீர்க்கும் இறைவன் எல்லோருக்கும் பிணிகள் அகன்று சந்தோஷமாக இருக்க அருள் புரியட்டும். நம் நட்புகள் பலருக்கும் ஏதோ ஒரு உடல்நலப் பிரச்சனை...
வாசகம் அருமை
கீதா
அருள்மிகு பாலாம்பிகை உடனுறை மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில் தரிசனம் மிக சிறப்பு
பதிலளிநீக்கு'அன்னமாம் பொய்கை' ..அழகிய பெயர் ...
திருஞான சம்பந்த பெருமான் 'துணிவளர் திங்கள் துளங்கி விளங்க' எனும் பதிகம் நரம்பு தளர்ச்சிக்கு 48 நாள் நம்பிக்கையோடு பாடினால் நோயிலிருந்து விடுபடலாம் என்பார்கள்.
பதிலளிநீக்குமாற்றுரைவரதீஸ்வ்ரர் நோய் இல்லா வாழ்வு தரட்டும்.