அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
PUT YOUR HEART, MIND, AND SOUL INTO EVEN YOUR SMALLEST OF ACTS. THAT
WOULD PROVE TO BE YOUR SECRET OF SUCCESS.
******
மாதத்தின் ஆரம்பத்திலிருந்து தினம் முகநூலில் ஏதாவது
எழுத வேண்டும் என நினைத்தேன்.
சில நாட்கள் மட்டுமே அதை தொடர முடிந்தது. நாம் ஒன்று நினைக்க நடப்பது வேறாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி நடக்க முடியாமல்
ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது. ஆண்டவன் நடத்த நினைப்பதே நடக்கும் - அதை மாற்ற
யாரால் இயலும்?
சில நாட்கள் முன்னர் திருவாசி கோவில் பற்றிய சில
தகவல்கள் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அதே நாளில் வேறொரு கோவிலும் சென்று வந்தேன்
என்றாலும் அது குறித்து இன்னும் இங்கே எழுத முடியவில்லை. எழுத வேண்டும்! விரைவில் எழுதிவிட நினைத்திருக்கிறேன் - நடப்பது
ஆண்டவன் சித்தப்படி!
ஏதேதோ நினைவுகள் மனதில் வந்து போகின்றன. நடப்பதை எல்லாம் ஆண்டவன் சித்தம் என்று எளிதில்
கடந்து போக முடிவதில்லை.
அப்படி கடந்து போக முடிவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அது போன்ற ஒரு நிகழ்வு தான் இன்றைக்கு எழுத நினைத்த
விஷயம்.
நேற்று எனது 84 வயது அப்பாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த போது, அவர் தனது அப்பா
(எனது தாத்தா) குறித்து பேசினார். எனது தாத்தாவின் அம்மா இறந்து போன சமயம் நடந்ததாக
அப்பா சொன்ன விஷயம்….
“அண்ணா, அம்மா நம்மள விட்டுட்டு போயிட்டா…..”
தாத்தாவின் சகோதரி சொன்னதும், உள்ளே சென்ற அப்பாவின் அப்பா, தனது அம்மாவை சென்று
பார்க்க, அவர் மீளாத துயிலில்.
சில நிமிடங்கள் அங்கே நின்றவர் சொன்னது தான் “Chapter
Close!” - அவ்வளவு தான். வெளியே வந்து அமர்ந்து கொண்டு அடுத்ததாக நடக்க வேண்டிய
விஷயங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டாராம். இவ்வளவு சுலபமாக ஒரு இறப்பை கையாள முடிவது
எல்லோருக்கும் சாத்தியமல்ல! தலைநகரில் நான் இருக்கும் பகுதியில் இருக்கும்
தமிழர்களின் வீடுகளில் எந்த துக்ககரமான சம்பவம் நடந்தாலும் நானும் சில நண்பர்களும்
குழுவாக சென்று மேல் காரியங்களை கவனித்து நடத்த உதவி செய்வது வழக்கம். பல துக்க வீடுகளில் நடப்பவை பார்த்து பல சமயம்
வியந்திருக்கிறேன்.
ஒரு இழப்பு மனிதர்களை என்னவெல்லாம் செய்து விடுகிறது என! இறப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள பலரால்
இயன்றதில்லை.
அவ்வளவு ஆர்ப்பாட்டமாக இருக்கும் (பார்க்க - பிரட் பக்கோடா பதிவு). எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இயல்பு நிலைக்கு
திரும்பி விடுவார்கள் என்றாலும் அந்த சமயம் வேதனையில் தான் இருப்பார்கள்.
எனது தாத்தா மாதிரி தனது அம்மாவின் இறப்பை சர்வ
சாதாரணமாக எடுத்துக் கொண்ட யாரையும் பார்த்தது இல்லை. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் உண்டு. வந்தவரெல்லாம் ஒரு நாள் திரும்பிப் போகத்தானே
வேண்டும் என்று சொல்வதுண்டு.
இறப்பை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எப்போதும் சொல்வதுண்டு -
ஒரு வேளை எனது தாத்தாவிடம் இருந்து இப்படி ஒரு எண்ணம் ஒட்டிக் கொண்டு விட்டதோ
என்று நேற்றிலிருந்து தோன்றுகிறது. இந்த இரண்டு வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஏனோ
மனதில் வந்த வண்ணம் இருக்கிறது!
எது நடந்தாலும் அது ஆண்டவனின் செயல்…
இறப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள எல்லோராலும்
முடியுமா? இந்த சிந்தனை எனது மனதை விட்டு அகலவில்லை… இது குறித்து உங்கள் எண்ணம்
என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
மற்றவர் வீட்டு நிகழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்வது
போல் நமது ரத்த சொந்தம் பிரியும்போது நடந்து கொள்வது சிரமம். ஆனால் அப்படி
எடுத்துக் கொள்ள முடிபவர்கள் உணர்வுகளிலும் இயல்பு வாழ்க்கையிலும் நிச்சயமாக பல்பல
உயரங்கள் எட்டியவர்களாக இருப்பார்கள். அந்த முதிர்ச்சி வந்தால் நாம் யாவரும்
சித்தர்கள்தான் - ரமா ஸ்ரீநிவாசன்.
என்ன தான் புத்திக்குத் தெரிந்தாலும்,
உணர்வுகளுக்குப் புரியாது. எனது இறப்பை அப்படித் தான் இயல்பாக எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று என் மகள்களிடம் சொல்லி வைத்திருக்கிறேன். சோகம் அறவே கூடாது.
எனக்குப் பிடித்த பாடல்களைப் போட்டு அவர்கள் என் இறப்பைக் கொண்டாட வேண்டும் என்று சொல்லி
வைத்திருக்கிறேன் - ஸ்ரீமதி ரவி.
இறப்பு என்பது நிரந்தரப் பிரிவு என்பதால் அது
நிகழ்ந்த கணத்தில் ஒரு சோகம்/ வருத்தம் எழுவது இயல்பே. ஆனால் அந்த சோகம் எவ்வளவு
நேரம் / நாட்கள்/ வருடங்கள் நமக்குள் தங்கி, என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது
என்பதை ஆராய வேண்டும். சில மணி நேரம் அல்லது சில நாட்கள் மட்டும் நாம் ஓரளவு
வருத்தத்தில் இருந்தால் அது சரி. அதற்கு மேலும் அதை நீடிக்க விடாமல் நாம் take
diversion என்று வேறு ரூட்டில் பயணம் தொடர வேண்டும். பொதுவாக வயதானவர்களின்
மரணங்கள் அதிகம் பாதிப்பது இல்லை. அகால மரணங்கள் பாதிப்பு கொஞ்சம் அதிகமாக
இருக்கும். காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் - கே.ஜி.கௌதமன்.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து…
எந்தப் பிரிவுமே, நமக்கு அதிர்ச்சி தந்து, ஒரு கணமாகவேனும் நம்மை சோகத்தில் ஆழ்த்தும். அதற்கு ரத்த சம்பந்தம் என்பது அவசியமில்லை. நம் மனதுக்கு உகந்தவராக இருந்தாலே போதும்.
பதிலளிநீக்குஉண்மையில், இறப்பவர்களில் பெரும்பாலும் நல்லவேளை கிளம்பினோம் என்ற நிம்மதி கொண்டிருப்பார்கள். அப்படி இல்லாதவர்கள், இந்த உலகில் அதீத பற்று வைத்திருப்பவர்களாகத்தான் இருக்கும்.
எந்த இறப்பும் யாரையும் பாதிக்காது, தங்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர வைக்கும், என்ன ஒண்ணு... கொஞ்சம் கூடுதல் சுமை. அவ்ளோதான்.
இன்றைய வாசகம் மிக மிக அருமை ஒரு உத்வேகம் கொடுக்கும் வாசகம்.
பதிலளிநீக்குகீதா
புத்திர சோகம் உட்பட எல்லா சோகங்களுக்குமே குறைந்த எக்ஸ்பயரி தேதிதான். காரணம், சோகப்பட்டு அதனால் பயன் எதுவும் கிடையாது என நாம் புரிந்துகொள்வதுதான்.
பதிலளிநீக்குஒவ்வொரு நாளும் திட்டமிட்டபடி நடக்க முடியாமல் ஆண்டவன் கட்டளைப்படியே நடக்கிறது. ஆண்டவன் நடத்த நினைப்பதே நடக்கும் - அதை மாற்ற யாரால் இயலும்? //
பதிலளிநீக்குஉண்மைதான் ஜி.
//அது குறித்து இன்னும் இங்கே எழுத முடியவில்லை. எழுத வேண்டும்! விரைவில் எழுதிவிட நினைத்திருக்கிறேன் -//
ஹாஹாஹாஹா நான் அடிக்கடி சொல்வது...ஹிஹிஹிஹி ...நீங்க எழுதிவிடுவீங்க ஜி!!!
//ஏதேதோ நினைவுகள் மனதில் வந்து போகின்றன. நடப்பதை எல்லாம் ஆண்டவன் சித்தம் என்று எளிதில் கடந்து போக முடிவதில்லை. அப்படி கடந்து போக முடிவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். //
டிட்டோ...டிட்டோ... ஜி!!
கீதா
எல்லோராலும் நம் நெருங்கிய சொந்த்தத்தின் இழப்பை டக்கென்று ஏற்க முடியாதுதான்...ஆனால் ஏற்கத்தான் வேண்டும். நீங்கள் சொல்லியிருப்பது போல் வந்தவர்கள் மீண்டும் சென்றுதானே ஆக வேண்டும். நினைவுகள் இருக்கும் ஆனால் நம்மை துயரம் ஆட்கொண்டுவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லதுதான். சிரமமான விஷயம் என்றாலும்.
பதிலளிநீக்குதலைப்பு சொல்வது போல சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவ சகாப்தம் முடிஞ்சுது போ என்று.
ஒரு வேளை வயதாகி படுக்கையில் இருந்தால் போனது நல்லது என்ற ரீதியிலும் பலரும் ஆசுவாசப்படுவதாக இருக்கலாம்...படுக்கையில் இருந்தால் அவருக்கும் கஷ்டம்...செய்பவர்களுக்கும் ஒரு பாயின்டில் சலிப்பு வரலாமாக இருக்கும்...படுக்கையில் இருப்பவருக்கு நினைவு இருந்தால் கஷ்டம்...நினைவற்று இருந்தால் அவருக்கு ஓகே ஆனால் செயப்வர்களுக்கு இப்படியான மனநிலை வரலாம்...
கீதா
எல்லா மனிதர்களுக்கும், எல்லா மரணங்களும் காயத்தை உண்டு பண்ணுவதில்லை.
பதிலளிநீக்குசிலருக்கு சில மரணங்கள் வடுவைத் தந்து விடும் ஜி.
மற்ற பல சொந்தப் பிரச்னைகள் நம்மை அழுத்தும்போது இந்தப் பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் செல்லும். சில மரணங்களின் பாதிப்பு அடிமனதில் இருந்துகொண்டே இருக்கும். பெரிய ஆபீஸர் என்று அறியப்பட்ட ஒரு பெண்மணி தனது தந்தை மரணத்துக்கு ஆஸ்பத்திரியில் வைத்து மிக மிகப்பெரிய குரலில் அலறி அலறி அழுதது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஇந்த இன்ஸபிரேஷனில் நான் சில வருடங்களுக்கு முன்னர் எழுதிய கவிதை ஒன்று!
பதிலளிநீக்குஅழுது கொண்டிருந்த
அனைவரும்
ஆற்றங்கரைக்குப்போய்க்
குளித்து விட்டு
வந்த பிறகு
புன்னகைக்கத் தொடங்கினார்கள்...
அடுக்களையை
எட்டிப்பார்த்த
அக்கா சொன்னாள்..
'எளவு..
எலையப் போட்டா
சாப்பிட்டுக் கிளம்பிடலாம்..
டிரெயினுக்கு நேரமாகுது...'
இறப்பு என்பது துயர்தான் சில காலத்தில் மீண்டு விடுகிறோம்.
பதிலளிநீக்குகாட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்...
பதிலளிநீக்குகூட்டை திறந்து விட்டால் அந்த
குருவி பறந்து விடும்...
காலில் விலங்கும் இட்டோம் - கடமை என அழைத்தோம்...
நாலு விலங்குகளில் - தினம்
நாட்டியம் ஆடுகின்றோம்...
மனிதன் நினைப்பதுண்டு - வாழ்வு நிலைக்குமென்று...
பிரிவுத் துயரை காலம்தான் கரைக்கும்
பதிலளிநீக்குஉற்றவர் பிரிவு தரும் சோகம் மனதில் ஆழ பதிந்துவிடும் . அந்த நேரம், அந்த நாள் வரும் போது எல்லாம் மனம் கனத்து வேலைகள் ஓடாது. பிரிவு துயரை காலம் போக்கும் என்றாலும் முடியாது என்று தான் சொல்வேன். அடுத்து உள்ள வேலைகள் நம்மை அந்த் துயரிலிருந்து மீண்டு வர சொல்கிறது. துக்கத்தை பகிர்ந்து கொள்ள ஆள் வேண்டும், வாய் திறந்து அழுதுவிட வேண்டும். மனதில் வைத்து இருந்தால் சோகமே நம்மை கொன்றுவிடும்.
பதிலளிநீக்குஎன் அப்பா, அக்கா, அண்ணன் மரணம் வாய் விட்டு அலற வைத்தது, கணவரின் மரணத்தின் போது உற்றவர்கள், நட்புகள் ஆறுதல் சொல்லும் போது மட்டும் வாய் விட்டு அழ வைத்தது. முன் பின் தெரியாதவர்கள் வந்து துக்கம் விசாரிக்கும் போது விவரம் கேட்பவர்களுக்கு சலனம் இல்லாம்ல் சொல்லும் போது, அவர்கள் கல்நெஞ்சம், தைரிய சாலி என்று பிறரிடம் சொல்லும் போது மனம் கனத்து தான் போகிறது.
இன்று அவர்கள் நமக்கு எப்போது அது ஆண்டவன் கையில்.