புதன், 8 பிப்ரவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ராஜ் (dh)த்வார் மந்திர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TIME, POWER, MONEY AND BODY MAY NOT COOPERATE EVERY TIME IN LIFE, BUT GOOD NATURE, GOOD UNDERSTANDING, SPIRITUAL PATH AND TRUE SPIRIT WILL ALWAYS COOPERATE IN LIFE.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி இருபத்தி நான்கு




 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு  ; விதி பதினேழு  ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ; விதி இருபது ; விதி இருபத்தி ஒன்று ; விதி இருபத்தி இரண்டு ; விதி இருபத்தி மூன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

இருபத்தி  நான்காம் விதி சொல்வது, "ஒரு சிறந்த இராஜ ஆலோசகராக விளையாடக் கற்றுக்கொள்".

 

மூல நூலில், இதை "PLAY THE PERFECT COURTIER" என்கிறார் எழுத்தாளர்.

 

இன்று மன்னராட்சி இல்லாதபோதிலும், அதிகாரம் புகுந்து விளையாடும் அரசியல் மற்றும் கார்ப்பரேட் உலகில், இராஜ ஆலோசகர்களுக்கான தேவை இருப்பதையும், அத்தகைய தகுதி கொண்டோர், உயர்ந்த மரியாதையுடன்  நடத்தப்படுவதையும் காண்கிறோம்.

 

ஒரு சிறந்த இராஜ ஆலோசகரால், அரசாங்கத்திலோ, தொழிலகங்களிலோ, அதிகார மையங்கள் மாறினாலும், அவருக்கான மரியாதையும், வலிமையும் குன்றாமல் இருக்குமாறு பாதுகாத்துக்கொள்ள இயலும்.

 

சென்ற இரு விதிகளில் காட்டப்பட்ட துரதிஷ்டமான காலங்களில் கூட, அவரை ஆதரிக்கும் வலிமையான கரங்கள் இருப்பதை உறுதிசெய்ய அவரிடம் உள்ள இராஜ ஆலோசகருக்கான பண்பு நலன்களே மிகவும் உதவும்.

அக்குணநலன்களை, ஒரு விளையாட்டு போல புரிந்து ரசித்து விளையாடக் கற்காதவர்கள், எப்போது வேண்டுமானாலும் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அபாயத்திலேயே இருப்பர்.

 

சமீபத்தில், திரு எலான் மஸ்க் அவர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் எண்ணம் இல்லை எனத் தவறாக எண்ணி, அவரை இழித்துரைத்த திரு பாரக் அக்ரவால் அவர்களின் "CEO" பதவி பறி போனது, இவ்விதியை புரிந்துகொள்ளாததின் எதிர்விளைவே எனலாம்.

 

எனவே, இராஜ ஆலோசகர் என்னும் விளையாட்டில் கடைபிடிக்கவேண்டிய மிக முக்கிய விதிகளை அறிந்துகொள்ளலாமா?

 

சுய புராணம் பாடுவதைத் தவிர்ப்பது இவ்விளையாட்டின் மிக இன்றியமையாத முதன்மை விதி.

 

நம் தகுதி, திறமைகள் குறித்து பிறர் தான் பேசுமாறு பார்த்துக் கொள்ளவேண்டுமே ஒழிய, நாமே தம்பட்டம் அடிப்பது நம் பலவீனமாகவே பார்க்கப்படும்.

 

இப்பலவீனத்தின் பக்கவிளைவாக, எதிலும் ஒரு குறையைக் காண்பவராகவும், இவ்வுலகமே தமக்கு எதிராகச் செயல்படுவதாகப் பேசிப் பேசி பரிதாபம் சம்பாரிப்பவராகவும் மாறுவோர் பலர் உண்டு.

 

"Court cynic" என நூல் குறிப்பிடும் இத்தகையோரை, எதற்கும் பயனற்றவர்களாகக் கருதி உலகம் மெதுமெதுவாக ஒதுக்கும் அவலமே ஏற்படும்.

 

எனவே, பிறர் பார்வையில் நம் நிலையைக் காணும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வதே, இவ்விதியின் சிக்கலிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி.

 

தீய செய்திகளை அப்படியே நம் உயர் அதிகாரியிடம் சொல்வதைத் தவிர்க்கவேண்டியது இவ்விளையாட்டின் அடுத்த மிக முக்கிய விதி.

 

ஒருவேளை, அத்தகைய எதிர்மறைச் செய்தியைச் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதற்கான தீர்வுகளையும் சேர்த்தே முன்வைத்தலோ, அல்லது தீர்வுகளை அறிந்தோரின் தொடர்புகளை அதிகாரியிடம் அளிப்பதோ நம் நிலையை உயர்த்தவல்லது.

 

எப்போதும் ஏதாவது ஒரு வழியில் உதவி கோரிக் கொண்டே இருப்போரும், தீய செய்தி கொண்டு வருவோருக்கு இணையாகவே பெரும் சுமையாகக் கருதப்படுவர்.

 

எனவே, நம் திறமையால் பலர் பலன் பெற்று, நமக்கான உதவிகள் தானாகக் கிடைக்குமாறு சூழலைத் தகவமைக்கத் தெரிந்திருக்கவேண்டும்.

 

நமக்கான கடமைகள், அனாயாசமாக முடிக்கப்படுவது போல் காட்டப்படவேண்டும் என்பது இவ்விளையாட்டின் மிகச் சுவாரசியமான விதி.

 

மிகக் கடினமான உழைப்பாளியை விட, மிகச் சாதுரியமான உழைப்பாளிக்கே இங்கு மரியாதை மிக அதிகம்.

 

சமீபத்திய இருபது ஓவர் உலகக்கோப்பையின் முதல் ஆட்டத்தில், கடைசி ஓவரில் விராட் கோலி அவர்கள், பதினாறு ஓட்டங்களைப் பெற்று  வென்ற விதம் இதற்கான சிறந்த உதாரணம்.

 

மிக ஆபத்தான ஷார்ட்டுகளை ஆடாமல், பாக்கிஸ்தான் பந்துவீச்சாளரின் உளவியலோடு விளையாடி ஆறு உதிரி ரன்களை எளிதில் பெற்ற விதம் பார்ப்பதற்கு மிக அனாயாசமாகத் தெரிந்திருக்கலாம்.

ஆனால், அதற்குப் பின்னால் செயல்பட்ட அனுபவம் வாய்ந்த மூளையின் பொறுமையான அபார ஆற்றலை, மிகச் சிலராலேயே உணர முடிந்திருக்கும்.

 

இதை அடிக்கடி செய்துகாட்டிய முன்னாள் அணித்தலைவர் திரு மஹேந்திரசிங் தோனி அவர்கள் "என்னைவிட எனக்குப் பந்து வீசுபவரே மிகவும் நெருக்கடியில் இருப்பார்" எனப் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

 

இவ்விதிமுறையின் பல விசித்திரமான கோணங்களை, நூலின் முப்பதாம் விதி குறித்த விவாதத்தில் விரிவாகக் காணவிருக்கிறோம்.

 

பொதுவெளியில் விமர்சிப்பதோ, வெற்றுப்புகழ்ச்சியோ, ஒரு பயனையும் அளிக்காமல் உயர் அதிகாரியின் சினத்திற்கும், சந்தேகத்திற்குமே வழிகோலும் என்பது இவ்விளையாட்டின் அடுத்த விதி.

 

எனவே, புகழ்வதைக் கூட  அவ்வப்போதுதான் செய்யவேண்டும் என்பதும், விமர்சிக்கும் போதும், நம்மைத் தாழ்த்தி பிறரை உயர்த்தும் பக்குவமே இதில் வெல்ல வழிகோலும் என்பதையும் மனதில் கொள்வோம்.

 

முக்கியமாக, பத்தொன்பதாம் விதியில் விளக்கப்பட்ட பலவகை மனிதர்களை அடையாளம் கண்டு, அவரவருக்கேற்ப நாம் பேசும் முறையை வடிவமைக்கவேண்டும் என்பதும் நம் நினைவில் இருக்கட்டும்.

 

தலைமையிடம் ஒரு நண்பரைப் போல மிகவும் நெருங்குதலும் கூடாது, அதிகமாக விலகுதலும் கூடாது என்பது இவ்விளையாட்டின் இன்றியமையாத விதி.

 

இதையே வள்ளுவர் "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க" என்கிறார்.

 

இதை உணர்ந்தவன், தம் ஆலோசனைகள் கேட்கப்படும்போது மட்டுமே வழங்குவான்.

 

மேற்குறிப்பிட்ட முக்கிய விதிகளைச் சரியாக விளையாடத் தெரிந்தவரே, தம் உணர்ச்சிகளின் தலைவனாகவும், அனைவரையும் மகிழ்விக்கும் தலைசிறந்த இராஜ ஆலோசகராகவும் மிளிர முடியும்.

 

இவ்விளையாட்டின் மேலும் பல பயன்மிக்க  விதிகளையும், அவற்றைச் சிறப்பாகக் கடைபிடித்தோரின் அற்புத அனுபவங்களையும் அடுத்தடுத்த விதிகளில் அறியவிருக்கிறோம்.

 

அவற்றுள், நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் நினைவில் நிறுத்தவேண்டிய அதி முக்கிய விதியை, அடுத்த பகுதியில் சுவைக்கலாமா? 

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

10 கருத்துகள்:

  1. சிறப்பான விதி.  புத்திசாலி ஒருவனுக்கு பெரும்பாலும் தானே கைவந்துவிடும் இந்த விதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ஐய்யா.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. உலக அளவில் இவ்வகையான மனிதர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்.

    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார். தரமாண இராஜ ஆலோசகர்கள் மிகக் குறைவே.
      தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. இந்த விளையாட்டு மிகவும் பிடித்துள்ளது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. விளையாட்டு பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐய்யா.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.

      நீக்கு
  4. இந்த விதி வாசித்ததும் எனக்கு டக்கென்று நினைவுக்கு வந்தவர் சாணக்கியர்... ஆனால் கதையில் அவரது கதாபாத்திரம் பற்றி வாசித்த வகையில் அவரது செயல்பாடுகள் எனக்கு உறுத்தலாக இருந்தது.

    இதில் நல்லதே சொல்லப்பட்டிருக்கிறது.

    இந்த விதி நல்ல விதி....manipulations அதுவே நல்லதாக இருந்தால், நீங்கள் கீழே இவ்விதிக்கு எதெது தேவை என்று கொடுத்திருப்பவற்றைக் கொண்டு இருந்தால் நல்ல செயல்பாடுகள் நடக்கும். அதே அந்த manipulations குறுக்குவழியில் சுய தேவை சார்ந்ததாக இருந்தால் அவ்வளவுதான்... அதீத புத்திக்கூர்மை அதாவது செஸ் விளையாட்டு போல தேவைப்படும் ஆனால் நல்ல மூவாக இருக்க வேண்டும்...புத்திசாலித்தனத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமே.

    //மிகக் கடினமான உழைப்பாளியை விட, மிகச் சாதுரியமான உழைப்பாளிக்கே இங்கு மரியாதை மிக அதிகம்.//

    யதார்த்தம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம், நூலின் அனைத்து விதிகளும் அப்படியே.
      அதனால்தான் நூல் குறித்த அறிமுகத்தில், நெருப்பை சுவையாக சமைக்கவும் உபையோகிக்கலாம், உலகையே அழித்தொளிக்கவும் பயன்படுத்தலாம் என பொருள் படும்படி கூறியிருந்தேன்.
      தவறான வழியில் பயன்படுத்த எத்தனிப்பவர், தன்னையும் சேர்த்தே காயப்படுத்திக்கொள்வார்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  5. சாதுர்யமான உழைப்பாளிக்கே இங்கு மரியாதை இருக்கும் .
    இந்த விதி நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....