செவ்வாய், 3 செப்டம்பர், 2024

தினம் தினம் தில்லி - Bharat Darshan Park


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் தில்லி வரிசையில் இந்த வாரம் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  நாம் தினம் தினம் இது தேவையில்லை என்று விட்டெறியும் பொருட்கள் எத்தனை எத்தனை.  வீடுகளை விட்டு விடுங்கள், பொதுவாகவே பெரிய பெரிய அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நகர நிர்வாகம், மாநகராட்சி என பெரிய பெரிய அலுவலகங்கள் தேவையில்லை என்று ஒதுக்கும், இது பயன்பாடுக்கு ஒத்து வராது என்று Scrap என ஒதுக்கிவிடும் பொருட்கள் எத்தனையோ உண்டு. அதிலும் குறிப்பாக இரும்புக் கம்பிகள், பலகைகள் என சில விஷயங்கள் மீண்டும் பயன்படுத்தலாம் என்றாலும் அதை பயன்படுத்தாது Scrap Yard-இல் சில காலங்கள் போட்டு வைத்து விட்டு அடி மட்ட விலைக்கு விற்று விடுவதே தானே எல்லா இடங்களிலும் வழக்கம்.  நம் நாட்டில் இப்படி பயன்படுத்தப்படாமல் இருக்கும் இரும்பு போன்றவை டன் கணக்கில் இருக்கலாம்! அதில் சிலர் கொழுத்த லாபமும் பார்த்துக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் உன்னித்து கவனித்தோம் என்றால் பல கோடிகள் புரளும் இடமாக இந்த பழைய பொருட்கள் வியாபாரம் இருக்கிறது.  கbபாடி வாலா என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பழைய பொருட்கள் வாங்கும் ஒரு நபர் கோடீஸ்வரராக இருப்பதை சில நாளிதழ்களில் நீங்களும் படித்திருக்கலாம்! 


சரி எதற்கு இன்றைக்கு இந்த Scrap Yard குறித்த தகவல்கள் இன்றைக்கு?  Scrap என ஒதுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டே ஒரு சிறப்பான தீம் பார்க் உருவாக்க முடியும் என்று சமீப வருடங்களாக தலைநகர் தில்லியின் மாநகராட்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.  எங்களது முந்தைய பதிவொன்றில் இப்படி ஒரு தீம் பார்க் குறித்து எழுதி இருக்கிறோம். உங்களுக்கு நினைவில்லை எனில் இங்கே சென்று படிக்கலாம்/பார்க்கலாம்.  இப்போது நகரத்தில் வேறு சில இடங்களிலும் இந்த மாதிரியான தீம் பார்க் விஷயங்கள், தேவையில்லாத பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட மாதிரிகள் அழகாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  அப்படி புது தில்லியின் பஞ்சாபி bபாக்g பகுதியில் உருவாக்கப்பட்ட ஒரு தீம் பார்க் தான் Bபாரத் Dதர்ஷன் பார்க்! தலை நகர் தில்லியின் தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் உருவாக்கிய இந்தப் பூங்காவில், தேவையில்லாத உலோகப் பொருட்கள் கண்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 21 பிரபலமான இடங்களின் மாதிரி  உருவங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் கட்டிடக்கலை அற்புதங்களை ஒரே இடத்தில் பார்க்க வசதியாக இந்தப் பூங்கா அமைந்திருப்பதாக மாநகராட்சி தகவல் தருகிறது. 


பூங்காவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 21 நினைவுச்சின்னங்கள் உள்ளன, இவை அனைத்தும் உலோக குப்பைகளால் மீண்டும் உருவாக்கப்பட்டன. இந்த பூங்கா இந்திய அரசாங்கத்தின் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழே Reuse, Reduce, and Recycle என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அர்த்தமுள்ள கலை மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த சில கலைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலம் மக்களின் வாழ்க்கையைத் தொடுவதற்கான ஒரு கருவியாக இந்தப் பூங்காவினை அமைத்ததாக இந்தப் பூங்காவினை அமைத்திருக்கும் மாநகராட்சி தனது பக்கத்தில் பூங்கா அமைத்ததன் நோக்கமாக சொல்கிறது.  பூங்காவின் உள்ளே நடைபாதை வசதி, ஒரு சிறு உணவகம், பார்வையாளர்களுக்கான வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.  வாரத்தின் ஆறு நாட்கள் (திங்கள் தவிர்த்து) இந்தப் பூங்கா, காலை 10 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கிறது.  பூங்காவின் உள்ளே செல்வதற்கு நுழைவுக் கட்டணம் உண்டு என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

 










பூங்காவிற்கு உள்ளே செல்ல நான்கு மணி நேரத்திற்கு 100 ரூபாய் கட்டணம்.  மாலை நேரங்களாகவோ (ஆறு மணிக்குப் பிறகு) அல்லது சனி/ஞாயிறு நாட்களில் எல்லா நேரங்களிலும் நான்கு மணி நேரத்திற்கு கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கிறார்கள்.  நுழைவுக் கட்டணம் சற்றே அதிகம் என்று தோன்றினாலும், பூங்காவினை பராமரிக்க ஆகும் செலவு இந்த வகையில் வசூலாகிவிடும் என்பதால் கட்டணம் அதிகம் என்று சொல்லத் தேவையில்லை.  சிறுவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு கட்டணம் குறைவு.  உள்ளுக்குள்ளே உணவகமும் இருப்பதால் தொடர்ந்து வேலைகளுக்காக அலைந்து திரியும் குடும்பங்களுக்கு இங்கே சென்று வருவது ஒரு நல்ல பொழுதுபோக்கு.  சமீபத்தில் ஒரு நாள் நானும் இங்கே சென்று வந்தேன்.  அழகாகவே நிறுவியிருப்பதோடு, சிறப்பாகவே அதனை பராமரித்தும் வருகிறார்கள்.  பழைய இரும்பு கொண்டு என்னவெல்லாம் இங்கே நிர்மாணித்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நம் தமிழகத்தின் பாரம்பரிய ஆலயமான மதுரை மீனாக்ஷி ஆலயம், மும்பையின் கேட்வே ஆஃப் இண்டியா, ஹம்பியில் இருக்கும் தேர், ஜெய்ப்பூரின் ஹவா மஹல், தில்லியின் குதுப்மினார், பூரியின் ஜகன்னாத் மந்திர், ஹைதையின் கோல் கும்பஜ் என வரிசை நீள்கிறது. 


பகல் நேரத்தில் பார்க்க சாதாரணமாக இருக்கும் இந்த உருவங்கள், இரவில் விளக்கொளியில் அட்டகாசமாக வண்ண வண்ண விளக்குகள் உபயத்தில் அட்டகாசமாக இருக்கிறது. குடும்பத்துடன் செல்வதென்றால் மாலை நேரத்தில் சென்று இரண்டு விதங்களிலும் - விளக்கு இல்லாமலும் விளக்கொளியுடனும் பார்த்து வரலாம்.  மேலே சொல்லி இருக்கும் உருவங்கள் தவிர சாஞ்சி ஸ்தூபா, பத்ரிநாத் ஆலயம், கஜூரோஹா ஆலயம், படுத்திருக்கும் புத்தர், த்வாரகாதீஷ் ஆலயம் போன்ற உருவங்களும் தேவையில்லாத இரும்புப் பொருட்களைக் கொண்டு அற்புதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.  குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடமாக இந்த பாரத் தர்ஷன் பார்க் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.  நான் பகல் நேரத்தில் சென்று வந்தேன் என்பதால் அந்த நேரத்தில் எடுத்த படங்கள் சிலவற்றை இங்கே சேர்த்திருக்கிறேன். இரவு நேரத்தில் இங்கே எடுக்கப்பட்ட படங்களாக இந்தப் பதிவில் சேர்த்திருப்பவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.  தில்லி வரும் வாய்ப்பு இருந்தால் இந்த இடத்திற்குச் சென்று உலா வருவதோடு இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் அற்புதமான இடங்களுக்குச் செல்லாமலேயே அந்த இடங்களுக்குச் சென்று வந்ததாகக் காண்பித்துக் கொள்ள படங்களும் எடுத்துக் கொள்ளலாம்!   வேறு ஒரு பதிவில் தில்லி குறித்த தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

3 செப்டம்பர் 2024


14 கருத்துகள்:

  1. மிக அருமையாகச் செய்திருக்கிறார்கள்.

    பாலக்காட்டிலும் வேஸ்ட் பொருட்களை வைத்து இதுபோன்ற இடம் உள்ளது என்றாலும் கலைநயம் குறைவு.

    வாசகம் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. எல்லாமே செமையா இருக்கு. ரொம்ப ரசித்தேன். நீங்கள் சொல்லியிருப்பது போல ஆமாம் ப்ராமரிப்புக்கு வேணுமே. கட்டணம் கூடுதல் என்று தோன்றினாலும்...

    அங்கு ஒரு Stay Home இல் (குருகிராமம் பகுதி) கூட அலங்காரங்கள் பழைய உடைந்த ஆட்டோ, தொங்கு விளக்குகள் டார்ச் லைட், உடைந்த க்ரில் கேட் இப்படி பல சாமான்கள் வைத்து மிக மிக அழகாகச் செய்திருந்தாங்க , விழுந்த மரத்துண்டுகள் மேசையாக, உட்காரும் திண்டாக என்று பல அழகா வைத்திருந்தார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவங்களையும் இங்கே குறிப்பிட்டது நன்றி. புதிதாக ஒரு இடம் குறித்தும் தெரிந்து கொள்ள முடிந்தது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. இந்த மாதிரி ஒரு தீம் பார்க் நிஜாமுதின் ரயில் நிலையம் அருகில் பார்த்த நினைவு. இந்த பார்க் அதைவிட அருமையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜாமுத்தீன் அருகே இருக்கும் இந்த மாதிரி பூங்கா குறித்தும் முன்னர் எழுதி இருக்கிறேன். அதற்கான சுட்டியும் இந்தப் பதிவில் கொடுத்து இருக்கிறேன் இராமசாமி ஜி. இந்த இடமும் அழகாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. மிகச் சிறப்பாக இருக்கிறது.  அழகிய படங்கள் வாயிலாக எங்களுக்கு சொல்லி உள்ளீர்கள்.  கருப்பு தாஜ்மஹால்!  எல்லா படைப்புமே அபாரம்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. எல்லா படங்களும் நன்றாக உள்ளது. இன்றைய வாசகமும் அருமை. தில்லி மாநாகராட்சி உருவாக்கிய பூங்கா, அவற்றில் கலையம்சம் நிரம்பிய பொருட்கள் அனைத்தையும் கண்டு களித்தேன். இப்படி பழையதைக் கொண்டு அனைத்தையும் நன்றாக, செவ்வனே, திறம்பட உருவாக்கியவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நிறைய கலைப் பொருட்கள் மனதை கவர்ந்து பிரமிக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. வாசகம் உண்மை.
    //கbபாடி வாலா என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பழைய பொருட்கள் வாங்கும் ஒரு நபர் கோடீஸ்வரராக இருப்பதை சில நாளிதழ்களில் நீங்களும் படித்திருக்கலாம்! //

    ஆமாம், ஊர்களில் பார்த்தும் இருக்கிறோம்.
    பழைய பொருட்களால் உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க பூங்கா பார்க்க அழகு.
    விளக்கு ஒளியில் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....