அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஆசிரியர் தின வாழ்த்துகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று
சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி
காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்
ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்
ஸ்ரீ ரத்னேஷ்வர் மஹாதேவ் மந்திர்
தம்பதிகள் ஜாக்கிரதை - நாரதரின் சாபம்
இத்தனை பதிவுகளாக வாரணாசி நகரில் சுமார் ஒன்பது நாட்கள் தங்கியிருந்து அங்கேயிருக்கும் பல இடங்களுக்குச் சென்று வந்ததில் கிடைத்த அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்தேன். எந்த ஒரு விஷயமும் முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும். ஒவ்வொரு நாளும் எந்த வித திட்டமும் இல்லாமல் கால் போன போக்கில் சுற்றி வந்து, ஆலயங்கள், படித்துறைகள், உணவுக்கான இடங்கள் என நிறைய விஷயங்களை ஒரு உள்ளூர்வாசி போலவே அனுபவிக்க முடிந்தது. வாரணாசியிலிருந்து புறப்பட வேண்டிய நாள் நெருங்க, நெருங்க, அடடா, ஒன்பது நாட்கள் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோமே ஆனாலும், ஒன்பது நாட்கள் வெகு சீக்கிரமாகவே முடிந்து விட்டது போன்ற உணர்வு வந்துவிட்டதே, இன்னும் சில நாட்கள் இங்கே இருக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் மனதுக்குள் தோன்றியது. ஆனாலும் எல்லா நல்ல விஷயங்களும் என்றேனும் ஒரு நாள் முடிந்து தானே ஆகவேண்டும். எனது இந்தப் பயணத்தில் கடைசி சில நாட்கள் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது. கடைசி இரண்டு நாட்கள் உடல் நிலையும் கொஞ்சம் மந்தமாகவே இருந்தது.
அதீத குளிர் காற்று உடலை வருத்த மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. புறப்பட வேண்டிய நாளுக்கு முந்தினம் எங்கேயும் செல்லாமல் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு தங்குமிடத்திலேயே படுத்திருந்தேன். ஒரு நாள் முழுவதும் இப்படியே இருந்தாலும் உடல் நிலையில் அதிக முன்னேற்றம் இல்லை. மாலை ஆனதும் ஜூரமும் சேர்ந்து கொள்ள தூங்கவே முடியவில்லை. இரவு உணவுக்குப் பிறகு படுத்துவிட்டாலும் உறக்கமில்லை. ஆனால் எப்போது உறங்கினேன் என்று தெரியாமல் உறங்கியிருக்கிறேன். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருந்து தயாராகி புறப்பட்டு ஆறு மணிக்கு புறப்படும் வந்தே பாரத் விரைவு வண்டியை பிடிக்க வேண்டும் என்று திட்டம். இந்தப் பயணத்தில் காசி தமிழ் சங்கமத்தில் அலுவல் சம்பந்தமாக பங்குகொண்ட மற்றுமொரு நண்பரும் அவரது இல்லத்தரசியும் நான் செல்லும் அதே இரயிலில் தான் செல்ல இருந்தார்கள் என்பதால் நாங்கள் மூன்று பேருமாக தங்குமிடத்திலிருந்து இரயில் நிலையம் செல்ல திட்டமிட்டிருந்தோம்.
அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து தயாராகிவிட்டார்கள். நானும் தயாராகி இருப்பேன் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்துவிட நானோ எனது அறையில் நல்ல உறக்கத்தில் - ஜூர மாத்திரைகள் தந்த உறக்கத்தில்! காலை 04.45 மணிக்கு கதவைத் தட்டி, “ரெடியா?” என்று கேட்டபோது தான் எனக்குத் தெரிந்தது - நான் நன்கு உறங்கிவிட்டது! அவசர அவசரமாக தயாராகி (குளிக்காமல் தான்!) ஐந்து மணிக்கு உடமைகளுடன் புறப்பட்டு விட்டேன். எங்களுக்கு வாய்த்த ஓட்டுநர் காலை நேர காய்கறி மார்க்கெட் வழியே வண்டியைச் செலுத்தி எங்கள் மூவருக்கும் அதிக பதற்றத்தினை உண்டாக்கினார். ஒரு வழியாக இரயில் நிலையம் அருகே சென்று இறங்கியபோது 05.50 மணி. கொஞ்சம் வேகவேகமாக நடக்க வேண்டியிருந்தது. என்னிடம் ஒரு முதுகுச் சுமை மட்டுமே - ஆனால் நண்பரிடம் இரண்டு பெரிய பெட்டிகள் மற்றும் சில கைச்சுமைகள். பெட்டிகளை இழுத்துக் கொண்டு, உடல் நிலை சற்றே மெத்தனமாக இருந்தாலும் நடைமேடைக்குச் சென்று சேர்ந்தேன். நல்ல வேளையாக நாங்கள் எங்களது இருக்கைகளில் அமர்ந்த சில நொடிகளில் வண்டி புறப்பட்டது.
உணவு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் எனக்கு தேவையாக இருக்கவில்லை. மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளத் தேவையிருந்ததால் அதற்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டேன். மதியம் இரண்டு மணிக்குள் புது தில்லி இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். இரயில் பயணத்தில் பெரும்பாலும் சக பயணிகளையும் அவர்களது சேட்டைகளையும் கவனிப்பது வழக்கமாக இருந்தாலும் இந்தப் பயணத்தில் எதையும் கவனிக்காமல் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். தில்லி வந்ததும் நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஒரு ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தேன். அடுத்த நாள் அலுவலகத்திற்குச் செல்லும் வரை ஓய்வு தான். உணவு கூட வெளியில் தான் சாப்பிட்டேன். அடுத்த நாள் அலுவலகம் சென்று திரும்பும்போதே ஜூரம் உடலை அனத்தியது. மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தாலும் உடல் நிலை சரியாகவில்லை. அதன் பிறகு தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்து தக்க மருந்துகள் எடுத்துக் கொண்டு கொஞ்சம் சரியானதும் புறப்பட்டு திருச்சிக்குச் சென்று விட்டேன். அங்கே இல்லத்தரசியின் கவனிப்பில் உடல் நலம் திரும்பியது. இந்த விஷயங்கள் குறித்து முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன்.
ஒரு வழியாக ஒன்பது நாட்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களின் நினைவுகளோடு இந்தப் பயணத்தில் உங்கள் அனைவரையும் இந்தப் பதிவுகள் வழி அழைத்துச் செல்ல முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. பயணத்தின் முடிவு கொஞ்சம் பயமுறுத்தி இருந்தாலும், மொத்தத்தில் சிறப்பாகவே அமைந்தது. பயணத்தில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து இருந்தது சிலருக்கேனும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எப்போதும் போல பயணங்கள் அமைந்தால் வேறு சில தொடர்கள் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பிறகு சுற்றுலாவாக எங்கேயும் செல்லவில்லை. வீட்டு சூழல்கள் காரணமாக தமிழகத்திற்கு தான் இரண்டு முறை வந்து திரும்பியிருக்கிறேன். இதோ அடுத்த தமிழகப் பயணமும் அவசியமாக இருக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எல்லாம் சரியானபடி அமைந்தால் தமிழகம் வரும்போது தமிழகத்தில் இருக்கும் சில பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்குச் செல்லும் எண்ணமுண்டு. அப்படி வாய்ப்பு அமைந்தால் அந்த இடங்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை இங்கே பயணம் - எனது பயணங்கள் - குறித்த கட்டுரைகள் வராது!
தொடர்ந்து வேறு ஒரு பயணத்தொடரில் - பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால்! - சந்திக்கிறேன். பயணம் நல்லது - ஆதலினால் பயணம் செய்வீர்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
6 செப்டம்பர் 2024
நல்ல ஒரு தொடர். சோதனை போல உடல் நலமில்லாமல் போனது துரதிருஷ்டம். துணையின் துணையுடன் மீண்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅற்புதமான தொடர்..காசி செல்ல நினைப்பவர்கள் இத்தொடரை படித்துச் சென்றால் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி.
நீக்குநல்ல தொடர். நிறைய கோவில்கள் பற்றித் தெரிந்துகொண்டேன். அலைச்சலினால் வந்த காய்ச்சலாக இருந்திருக்கும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இந்த வாரணாசி தொடர் நன்றாக சென்றது. நிறைய கோவில்கள், அதைப்பற்றிய செய்திகள், விபரங்கள் என நிறைய தெரிந்து கொண்டோம். நடுநடுவில் நான் படிக்காமல் விட்டுப் போன பகுதிகளையும் நான் ஃப்ரீயாக இருக்கும் போது படிக்கிறேன்.
அங்கிருந்து கிளம்பும் போது தங்கள் உடல்நிலை சரியில்லாமல் போனது வருத்தமே. ஜூரம் வந்து விட்டால், மேற்கொண்டு செய்யும் பயணங்கள் சுவாரஸ்யம் அளிக்காது. நல்லவேளை மருத்துவமனைக்குச் சென்று கொஞ்சம் சரியானவுடன் விடுமுறை எடுத்ததோடு மட்டுமின்றி ஊருக்குச் சென்று உடல்நிலையை முழுதுமாக குணமாக்கி கொண்டீர்கள். அந்த விபரமும் தங்கள் மனைவி மூலமாக இங்கு படித்துள்ளேன். எல்லாம் ஒரு சோதனையான காலகட்டங்கள்தான்.!
மேற்கொண்டு வரும் தங்களின் பயணத் தொடர்களைப் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குஇந்தத் தொடர் வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பயண அனுபவங்கள் அருமை!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஅலைச்சல், காலநிலை, தொடர்ந்து வெளி உணவு என்று பல காரணங்கள் இருந்திருக்கலாம் ஜி. அச்சமயமே உங்கள் உடல் நிலை குறித்து சொல்லியிருந்ததும் நினைவுண்டு. ஊருக்கு வந்து ஆதியின் கவனிப்பில் நன்றாகத் தேறி வந்ததும் நினைவிருக்கு.
பதிலளிநீக்குஎன்றாலும் இப்படியான பயணங்கள் அமைவது சிறப்பான விஷயம். அதுவும் பல கோயில்கள் அதிகம் யாரும் பார்த்திராத கோயில்கள் என்று பல தகவல்கள் கொடுத்திருக்கீங்க. அருமையான தொடர். உங்களுக்கும் இந்தப் பயணம் மனதிற்குத் திருப்தியாகவும், எப்போதும் நினைத்துப் பார்த்து அசை போட்டு மகிழவும் உதவியாக இருக்கும் எ ன்பதில் சந்தேகமே இல்லை.
கீதா
பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமையான விவரமான தொடர்.காசிக்கு நானே போய்விட்டு வந்ததுபோல் ஒரு உணர்வு. உடல்நிலை பாதித்தது என்பது வருத்தமாக இருந்தாலும் எல்லாம் பார்த்து முடித்த பின்னே அது நிகழ்ந்தது என்பது சற்று ஆறுதல்.
பதிலளிநீக்குவிஜி.
பதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி விஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
உடல் நலக் குறைவோடு பயண முடிவு நெகிழ்வான பதிவு , உடல் நலம் கவனம்
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.
பதிலளிநீக்குபூரண நலம் கௌதமன் ஜி. தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.