வியாழன், 5 செப்டம்பர், 2024

ஆசிரியர் தினம் - வாழ்த்துகள் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட எத்தனை எத்தனை ஆலயங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



5 செப்டம்பர் 1888 அன்று பிறந்த டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் - நம் தாய் திருநாட்டின் முதலாம் துணை ஜனாதிபதி, ஜனாதிபதி, பாரத ரத்னா பட்டம் பெற்றவர், அறிஞர், தத்துவவாதி - என்று பல வகைகளில் புகழ் பெற்றவர். சில பதிவுகள் முன்னர் நாம் பார்த்த பனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயாவின் இரண்டாம் Vice Chancellor (முதலில் இருந்தவர் பண்டிட் மதன் மோகன் மால்வியா அவர்கள்) ஆகவும் இருந்திருக்கிறார்.  அவர் முதன் முதலாக ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவரைச் சந்தித்த அவரது மாணாக்கர்கள் அவரது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்டபோது, ”இந்த நாளை எனது பிறந்த நாள் என்று கொண்டாடாமல், அனைவருக்கும் கல்வியறிவு தந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக, “ஆசிரியர் தினம்” ஆகக் கொண்டாடுங்கள்” என்று கேட்டுக் கொண்டாராம்! என்னே ஒரு பெருந்தன்மை!


நெய்வேலி நகரில் எங்கள் வீடு இருந்த சாலையின் பெயர் முதலில் திருச்சி சாலை என்று தான் இருந்தது. பிறகு அந்த சாலையின் பெயர் மாற்றினார்கள் - என்ன பெயர் தெரியுமா? டாக்டர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் சாலை! ஒரு கூடுதல் தகவலும் இங்கே சொல்லலாம் எனத் தோன்றுகிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் நாள் எது தெரியுமா? இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் செப்டம்பர் 5-லிருந்து சரியாக ஒரு மாதம் கழித்து அக்டோபர் ஐந்தாம் தேதி! ஆசிரியர்களை கௌரவிக்கவும் கல்வி மேம்பாட்டிற்கான ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், 1994-ஆம் ஆண்டு UNESCO ஆரம்பித்து வைத்த இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்கிறது.  பள்ளி அல்லது கல்லூரியில் படிக்காதவர்களுக்கு கூட, ஆசிரியர் தினம் என்பது அவர்களின் வழிகாட்டிகளுக்கு நன்றி தெரிவிக்கவும், ஆசிரியர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய நல்ல மாற்றங்களை நினைவு கூர, ஒரு சிறந்த வாய்ப்பாகும்.  இந்த சிறந்த நாளில் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லும் விதமாக ஒரு பதிவு வெளியிடுகிறார் - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


ஆசிரியர் தின வாழ்த்துக்கள்:


ஆச்சர்யப்படுத்தும் குணநலன் ஆசிரியரிடமே காணலாம்.


காரில் போகும் மாணவன் கதவைத் திறந்து அழைத்தாலும் மறுதலித்து கால்நடையாகவே பயணிக்கும் எளிமை!


தன் சிறு குடும்பமோ பெரும் குடும்பமோ தன் சொற்ப வருமானத்தை ஏழை மாணவனுக்கும் பகிரும் தயாளம்!


பழைய மாணவனைப் பார்த்து நீ வந்திருக்கும் உயரம் என்னால் என ஒருபோதும் காட்டிக் கொள்ளாத அடக்கம்!


தன் பிள்ளைக்கும் ஊரார் பிள்ளைக்கும் வித்யாசம் பாராட்டாத தன்மை!


ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்கு வாழ்வியலைக் கற்றுத்தரும் அனைவரும் நம் ஆசிரியரே!


தர்மம், பணிவு, மரியாதை முதல் சமையல் வரை பெற்றோர்;

வாகனம் ஓட்ட, தைரியம் ஊட்ட சகோதரன்;

ஊக்கம், தோழமை நண்பர்கள்;


எறும்பிலிருந்து யானை வரை 

தாயிலிருந்து வாயில் காப்பான் வரை

கற்றது ஏராளம்; அது தந்தது தாராளம்!


அடித்துச் சொன்னாலும் பாடமே. அணைத்துச் சொன்னாலும் பாடமே.


கற்பித்தோர் அனைவரும் ஆசிரியரே. 


அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻


அனைத்தையும் ஆட்டுவிக்கும் எல்லாம் வல்ல ஜகத்திற்கே குருவான மஹாபெரிய குருவுக்கு அனந்த கோடி நமஸ்காரம்🙏🏻🙏🏻🙏🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

5 செப்டம்பர் 2024


4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ஆசிரியர் தினத்தை நினைவு கூர்ந்த தாங்கள் பதிவு அருமை. சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் எழுத்தும் நன்றாக உள்ளது. ஆம். ஒவ்வொரு பருவத்திலும் நமக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தருபவர் நம் போற்றுதலுக்குரிய ஆசிரியரே. அனைவருக்கும் ஆசிரிய தின வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் தின வாழ்த்துகள்!

    நான் அடிக்கடி சொல்வது (நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்!) கற்பிக்கும் அனைவரும் ஆசிரியர்களே! அதாவது அதுஒரு வழிப்போக்கனாக, யாசிப்பவராக இருந்தாலும் சரி அவர்களும் நமக்கு ஏதோ ஒரு வகையில் பாடம் கற்பிக்கிறார்கள்! இந்த உலகம், இயற்கை அனைத்தும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பர்களே.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....