திங்கள், 9 செப்டம்பர், 2024

பண்டிகைகள் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



படம்: கோ-பைலட் உருவாக்கித் தந்த படம்...

பட்டுப்பாவாடை சரசரக்க ஜிமிக்கி மாட்டல் என்று மிடுக்காக அலங்கரித்துக் கொண்டு, தன்னைத் தானே சுற்றிச் சுற்றி கீழே உட்கார்ந்தால் புஸ்ஸென்று பாவாடை குடை போல் விரிந்திருக்கும்! அதைப் பார்ப்பதில் ஒரு ஆனந்தம்! திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருந்தது ஒரு காலம்!


வரலக்ஷ்மி பூஜை என்றால் அம்மா தடபுடலாக ஏற்பாடு செய்வாள்! மர ஸ்டூல் ஒன்றை மண்டபம் போல் மாவிலைத் தோரணம், வாழைக்கன்றுடன் அலங்கரிப்பதும், பின்னணியில் குண்டு பல்பு ஒன்றை பொருத்தி வெளிச்சம் தருவதும், அதில் அம்பாளை அமர வைப்பதுமாக இருக்கும். அப்பம், வடை, பாயசம், கொழக்கட்டை, சுண்டல் என்று நைவேத்தியங்களுக்காக மிகவும் சிரத்தையாக செய்து ஜமாய்ப்பாள்!



படம்: கோ-பைலட் உருவாக்கித் தந்த படம்...

பட்டுப்பாவாடையுடன் குங்குமச்சிமிழை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கம் வீடுகளுக்குச் சென்று தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பது என் பொறுப்பு! வீட்டிற்கு வருபவர்களும் “நீங்க கூப்பிடவே இல்லைன்னாலும் நாங்க வருவோம் மாமி!” என்று அன்போடும் உரிமையோடும் பழகிய மனிதர்கள் சூழ்ந்து இருந்தது ஒரு காலம்!


திருமணமான புதிதில், அம்மா கொண்டாடிய நிகழ்வுகளை நினைத்து பார்த்து, இருபது வயது பெண்ணாக “இப்போ நானே பூஜை பண்ணனும்னா என்ன பண்றது என்று பயந்திருந்த போது, “ஏன் இதுக்கெல்லாம் கவலைப்படற! நான் தான் கூட இருக்கேனே! நான் கூடமாட எல்லாம் பண்ணித் தரேன்! நாம ஜோரா பூஜை பண்ணிடலாம்! என்ன! என்று என்னவர் தைரியம் தந்தார்!


அம்மா பண்ணினான்னு நிறைய எல்லாம் பண்ண வேண்டாம்! நாம ரெண்டு பேரு தானே! நம்மளால எவ்வளவு சாப்பிட முடியும் சொல்லு! பாயசமோ சர்க்கரைப் பொங்கலோ ஏதோ ஒரு பண்ணு போறும்! மனசார பூஜை பண்ணி பாலோ பழமோ ஏதாவது வெச்சுக் கூட நைவேத்யம் பண்ணலாம் தெரியுமா! இழுத்து விட்டுக்காத! இப்படி இனிக்க இனிக்க பண்டிகைகளை கொண்டாடியது ஒரு காலம்!


ஆல் இன் ஆல் அழகுராணின்னு சொல்லிட்டு எல்லாத்துக்கும் இன்னொருத்தர எதிர்பார்த்துண்டு இருக்க முடியுமா! வருஷா வருஷம் நானே தான் பூஜை பண்றேன்! புஸ்தகம் தான் இருக்கே! அதப் பார்த்து மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை பண்ணேன்! அவ காலேஜுக்கு போயிட்டா! சாப்பிட்டாலும் ஒரு வடை எடுத்துப்பா! 


உங்க வீடு எப்பவுமே க்ளீனாவே இருக்கே! நாள்பூரா சுத்தம் பண்ணிட்டே இருப்பீங்களா! அடைசலும் எதுவும் இல்ல! ரெண்டு பேர் தானே! அதான் போல! அவர் இன்னுமா அங்க இருக்கார்! இங்க வரவே முடியாதா! வருஷம் ரொம்ப ஆயிடுச்சில்ல! எப்படித்தான் இருக்கீங்களோ! இப்படியான மனிதர்களுடன் மகிழ்வுடன் கொண்டாடுவதும் ஒரு காலம்!


நாள்கிழமையும் பண்டிகைகளும் தவறாது வந்து கொண்டே தான் இருக்கின்றன! மக்களிடையே கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும்  கூட தொற்றிக் கொண்டு காலம் கடந்து பயணிக்கின்றன! ஒவ்வொரு காலகட்டத்திலும் உடன் இருந்த மனிதர்களும் அவர்களின் மனப்பாங்கும் செய்கைகளும் கூட  மனதில் ஒட்டிக் கொண்டு பயணிக்கிறது! 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

9 செப்டம்பர் 2024


14 கருத்துகள்:

  1. சிறப்பான செய்திகள்...

    நலம் வாழ நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  2. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாங்கள் கடந்த வெள்ளியன்றுதான் வரலக்ஷ்மி விரதம் கொண்டாடினோம்.  மருமகள் வந்த முதல் வ. வி என்பதால் தட்டாமல் செய்ய வேண்டும் என்றும் செய்தோம்.  நீங்கள் சொல்லி இருக்கும் கொண்டாட்டங்கள், அலங்காரங்கள் இங்கும் நடந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை சார். மருமகளின் தலை நோன்பு சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. படம் வரைய அதென்ன கோ பைலட் ஆப்.." AI யில் வரைவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை சார்...:) என்னவரின் உபயம்..:)

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. Copilot app மைக்ரோ ஸாஃப்ட் ? முதலில் Meta AI ஐய் தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன் அப்புறம் தெரிந்தது.

    வரலக்ஷ்மி பூஜை சிறப்பாக நடந்தது படங்கள் நல்லாருக்கே!!! கோ பைலட் நல்லா எடுத்து தருகிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோ பைலட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை..:)

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

      நீக்கு
  7. நல்ல வாசகம். பதிவு அருமை.
    எளிமையாக மனதுக்கு மகிழ்ச்சி தர கூடிய பண்டிகைகள் இப்போது அதிக ஆடம்பரமாக
    மாறி வருவதை பார்க்க முடிகிறது. காலம் மாறி கொண்டே இருக்கிறது நாம் கவனித்து கொண்டு உடன் பயணிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா. பாரம்பரியம் மறைந்து ஆடம்பரம் தான் எங்கும் தென்படுகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....