செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அரச மரத்தடியில் - மஸ்தூர் சௌக் - நடை நல்லது - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு மூன்றாம் பகுதி! 


அரச மரத்தடியில் - 26 ஆகஸ்ட் 2024:


எனது வீட்டின் அருகே இருக்கும் சாலையின் பெயர் மந்திர் மார்க் என்பது. இந்த சாலையில் தான் பிரபல Bபிர்லா மந்திர், காளி Bபாரி (காளி கோவில்), புத்தர் கோவில், வால்மீகி மந்திர் என பல வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. சாலையின் இருமருங்கிலும் பெரிய பெரிய அரச மரங்கள் (ஹிந்தியில் பீப்பல் கா பேட்d) சாலைக்கு அழகு சேர்க்கின்றன. அரச மரத்திற்கு இந்த ஊர் மக்களும் அதிக மரியாதை செலுத்துவது வழக்கம். 


பண்டிகை நாட்களில் அரச மரத்தைச் சுற்றி வந்து சிவப்பு மஞ்சள் (குங்குமம் மற்றும் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரில் நனைத்து காயவைக்கப்பட்ட நூல்கள்) வண்ண நூல்களைச் சுற்றி வருவார்கள். அடிமரத்தில் தங்களிடம் வைத்திருக்கும் லோட்டாவிலிருந்து நீர் வார்ப்பதும் உண்டு. பண்டிகை நாட்கள் என்றில்லாமல் மற்ற நாட்களில் காலை நேர நடையின் போது கொஞ்சம் தானியம் எடுத்துவந்து மரத்தடியில் போடுவதும் மண்பாண்டங்களில் தண்ணீர் விட்டு மற்ற உயிரினங்களுக்கு என வைப்பதும் உண்டு. 


அதைப்போலவே தானியங்களுக்கு பதிலாக ஒரு சிலர் வீட்டிலிருந்து வரும்போதே ஒரு கைப்பிடி அளவு கோதுமை மாவு எடுத்துக்கொண்டு வந்து அரசமரத்தடியில் தூவிவிட்டு செல்வார்கள்…… எறும்பு போன்ற சிற்றுயிர்களும் சாப்பிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். ஏதோ ஒரு விதத்தில் மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்துவது என்பதை இன்னும் கடைபிடிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி. அவர்களைப் பார்த்து நானும் இப்படி கொஞ்சம் கோதுமை மாவு எடுத்துச் சென்று அரச மரத்தடியில் போடுவது உண்டு. இன்றைக்கும் அப்படியே ஆயிற்று…… 


இந்த அவசர உலகத்தில் இன்னும் இதையெல்லாம் கடைபிடித்து வருகின்றனர் என்பதே நல்ல விஷயம் தானே….. உங்கள் எண்ணம் என்னவோ? சொல்லுங்களேன் :)


மஸ்தூர் சௌக் - 27 ஆகஸ்ட் 2024:


வடக்கில் உள்ள மாநிலங்கள் அனைத்திலும் உள்ள பெரிய ஊர்களில் மஸ்தூர் சௌக் அல்லது லேபர் சௌக் என்ற பெயரில் சில சாலை சந்திப்புகள் அழைக்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் காலை வேளையில் இந்த மாதிரி மஸ்தூர் வேலை செய்யும் உழைப்பாளிகள் - கொத்தனார், சித்தாள், பிளம்பர் என அனைத்து உழைப்பாளிகளும் இந்த இடத்தில் வந்து சேர்ந்து விடுவார்கள். யார் வீட்டில் இந்த மாதிரி வேலைகளுக்கு ஆள் தேவையோ அவர்கள் இங்கே வந்து அவர்களுக்கான கட்டணத்தை பேசி அழைத்துச் செல்வார்கள். 


இப்படி கிடைக்கும் வேலையாட்கள் உண்மையாகவே அவர்கள் சொல்லும் வேலைக்கு தகுந்தவர்களா, திறமை உள்ளவர்களாக இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு நமக்கு விடை அவர்களது வேலையைப் பார்த்த பின்னர் தான் தெரியும் என்பது இதில் உள்ள பெரிய சவால். அதனால் சின்னச் சின்ன வேலைகளுக்கு அழைத்துச் செல்லலாமே தவிர பெரிய வேலைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாது. 


இன்றைய காலை நடையில் வீட்டின் அருகே அப்படி அமைந்துள்ள லேபர் சௌக் வழியாகச் செல்லும்போது எனக்கும் அவர்களது சேவை தேவை போல என நினைத்துக் கொண்டு என்னை சூழ்ந்து கொண்டார்கள். இது ஒரு பெரிய போட்டி. ஆட்கள் வந்தவுடன் பாய்ந்து சென்று கிராக்கி பிடிக்கவேண்டும். இல்லை என்றால் அன்றைக்கு வேலை இருக்காது…. வேலை இல்லை என்றால் சம்பாத்தியமும் இருக்காது என்பது நிதர்சனம். இப்படியானவர்களின் வாழ்க்கையும் எப்படியோ ஓடிக்கொண்டிருக்கிறது…… 


ஒவ்வொரு நாளும் நடைப்பயனத்தில் சந்திக்கும் மனிதர்களும் அவர்களது வாழ்க்கை நிலையும் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை என்று உணர வைப்பவை….. இது குறித்த உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்களேன்……


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 செப்டம்பர் 2024


11 கருத்துகள்:

  1. அன்றாடங்காய்ச்சிகள் என்று சொல்லப்படுபவர்களின் வாழ்க்கை கஷ்டமானதுதான்.

    உயிரினங்களுக்கு உணவளிப்பது... வளாகத்தில் புறாத் தவல்லை என ஷாஃப்ட்களில் வலையிட்டாலும் எல்லோருக்கும் புறாத் தொல்லை. அதனால் அடுக்குமாடியின் முழுப் பகுதிக்கும் நெட் போட்டார்கள். உள்ளே இருக்கும் பத்துப் பதினைந்து புறாக்கள் போகமாட்டேன் என்கிறது. அந்தப் புறாக்கள் பட்டினி கிடக்குமே என்று குடியிருப்பின் சிலர் ரொம்பவே வருந்தியது மனதைத் தொட்டது. பிற உயிரினங்களுக்காக்க் கவலைப்படுபவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மற்ற உயிரினங்களுக்கு உணவளிப்பசது நல்ல பாராட்டத்தக்க செயல்.  தாகத்துக்கு தண்ணீர் வைப்பதே பெரிய செயல்.  

    ஒரு ஆட்களை தேவைக்கேற்ப அழைத்துச் செல்ல முடியும் என்றால் முதலில் சிறு வேலைகளுக்கு அழைத்துச் சென்று பேசி பார்த்து என்னென்ன வேலை தெரியுமோ அதை அவர்களிடம் வாங்கி அவர்கள் தொடர்பு என்னை  உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. மும்பையில் புறாக்களுக்காகவே தானியங்கள் வாங்குவோர் வழங்குவோரைப் பார்க்கலாம்.இங்கு புறா ஜனத்தொகை ஜாஸ்தி.இப்போது பல இடங்களில் புறாக்களுக்கு தானியம் இடாதீர்கள் என்று பலகை வைத்திருக்கிறார்கள்.அவற்றால் மக்களுக்கு சுவாசக் கோளறுகள் அதிகரிப்பதால்!இப்போதுதான் புரிகிறது நம் முன்னோர் ஏன் காக்கைக்கு உணவிடுகிறார்கள் என்று.நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போடுவதும் இங்கு அதிகம்.மனிதாபிமானம், பிற உயிரிடம் இரக்கம் அவசியம்.அங்கு எறும்புகளுக்கு கோதுமை மாவு, தெற்கில் அரிசி குருணை! மகாபெரியவா சொல்லியிருக்கிறார் சனிக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஒரு பிடி அரிசிக் குருணையை அரச மரத்தடியில் அதைச் சுற்றித் தூவினால் முன் ஏழு ஜென்ம பாபமும் கழியும் என்று.தர்மம் செய்யணும் என்பதற்காக இப்படி பாபம் கழியும் என்று சொல்லி செய்ய வைப்பதுதான் இந்து தர்மம்.

    பதிலளிநீக்கு
  4. அரசமரம் விடயம் நல்ல தகவல் ஜி. இப்படி அன்றாடம் வேலை பிடிப்பவர்கள் கூட்டம் அபுதாபியிலும் உண்டு

    அவர்கள் பெரும்பாலும் பாக்கிஸ்தானி, பங்களாதேஷிகள்.

    பதிலளிநீக்கு
  5. பண்டிகை நாட்களில் அரச மரத்தைச் சுற்றி வந்து சிவப்பு மஞ்சள் (குங்குமம் மற்றும் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரில் நனைத்து காயவைக்கப்பட்ட நூல்கள்) வண்ண நூல்களைச் சுற்றி வருவார்கள்.//

    எங்க வீட்டருகிலும் மரங்களில் இந்த நூல் சுற்றி மரத்தின் அடியில் இறைவன் ஃபோட்டோக்கள் வைத்து இருப்பார்கள். பண்டிகை தினங்களில் ஊதுபத்தி மணக்க பூக்கள் போட்டு விளக்கு ஏற்றி வைக்கிறார்கள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மற்ற நாட்களில் காலை நேர நடையின் போது கொஞ்சம் தானியம் எடுத்துவந்து மரத்தடியில் போடுவதும் மண்பாண்டங்களில் தண்ணீர் விட்டு மற்ற உயிரினங்களுக்கு என வைப்பதும் உண்டு. //

    இதுவும் நம் வீட்டருகில் நிறைய உண்டு. மிக நல்ல விஷயம் நம்மைச் சுற்றி இருக்கும் எல்லா உயிரினங்களும் இந்தப் பிரபஞ்சத்தில் உயிர்கள்தானே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அதைப்போலவே தானியங்களுக்கு பதிலாக ஒரு சிலர் வீட்டிலிருந்து வரும்போதே ஒரு கைப்பிடி அளவு கோதுமை மாவு எடுத்துக்கொண்டு வந்து அரசமரத்தடியில் தூவிவிட்டு செல்வார்கள்…… எறும்பு போன்ற சிற்றுயிர்களும் சாப்பிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். ஏதோ ஒரு விதத்தில் மற்ற உயிர்கள் மீது அன்பு செலுத்துவது என்பதை இன்னும் கடைபிடிக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி. //

    மிக மிக நல்ல விஷயம்.

    //அவர்களைப் பார்த்து நானும் இப்படி கொஞ்சம் கோதுமை மாவு எடுத்துச் சென்று அரச மரத்தடியில் போடுவது உண்டு. இன்றைக்கும் அப்படியே ஆயிற்று…… //

    பாராட்டுகள் ஜி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. லேபர் சௌக் - ஒரு வகையில் நல்ல விஷயம்....ஆனால் பாருங்கள் இவர்களின் நிலையை. மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்றாடம் வேலை கிடைத்தால்தான் வாழ்க்கை எனும் நிலை. இதற்கு அரசு ஏதேனும் வழி செய்யலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தினமும் அரச மரம் சுற்றி வழிபடுவது உடம்புக்கும் மனதிற்கும் மிக நல்லது. அதுவும் காலை 9 மணிக்குள் மரத்தை பிரதட்சணம் செய்ய வேண்டும் என பெரியவர்கள் சொல்லி, அவ்விதம் நான் முன்பு செய்து வந்தேன்.

    அரச மரத்திற்கருகே பறவைகளுக்கென தானியங்கள் போடுவதும், ஏனைய சிறு ஜீவராசிகளுக்கென உணவுகள் வழங்குவது மிகப் பெரிய புண்ணிய செயலாகும். தாங்களும் அவ்விதம் வழங்கி வருவது கண்டு மகிழ்வெய்தினேன்.

    நம் வீட்டு வேலைகளுக்கேற்ப அங்கிருக்கும் ஆட்களை தேர்வு செய்து அழைத்துப் போதல் நல்லது. அவர்களும் நல்லவர்களாக, அந்த வேலைககளை திறம்பட செய்பவர்களாக அமைந்து விட்டால் மிகவும் நல்லது. நடைப்பயிற்சி மிகவும் நல்லது.தொடர்ந்து செய்து வாருங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவிடுவது அதனுடைய இயல்பான உணவு தேடிச் செல்லும் நகர்வினை பாதிக்கும் என அமெரிக்காவில் பொது இடங்களில் பெயர்ப்பலகை வைத்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  11. நாம் பறவைகளுக்கு தண்ணீர் , உணவு, எறும்புகளுக்கு உணவு, என்று வைப்பது நல்லதுதான்.
    ஆனாலும் ரமணி சார் சொல்வது போல தான் ஆராய்ச்சிளார்கள் சொல்கிறார்கள்.
    அவைகளின் இயல்பான உண்வு தேடி செல்லும் பழக்கத்தை பாதிக்கும் என்பதும் உண்மைதான்.

    ஆனால் அவைகளின் இடத்தை நாம் எடுத்து கொண்டோம், ஏரி, குளங்களை தூர்த்து விட்டோம். விவசாய இடங்கள் குறைவு அவை நெடுந்தூரம் உணவு , நீர் தேடி பயணிக்க வேண்டியது உள்ளது.
    அது போலவே வேலை ஆட்களும் நவீன இயந்திரங்கள் வந்த பின் கைவேலை செய்பவர்கள் நிலை மோசம்.
    வேலை இல்லாமல் கஷ்டபடுவது உண்மை.
    உங்கள் சிந்தனைகள் போலவே எனக்கும் ,அவர்களுக்கு தினம் வேலை கிடைத்து குடும்ப கஷ்டம் தீர வேண்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....