அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பண்டிகைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
கடந்த சில நாட்களாக தினமும் முக நூலில் பதிவுகள் எழுதி வருகிறேன். எது குறித்து என்றால் தினமும் காலை/மாலை வேளைகளில் நடைப்பயிற்சி செய்து திரும்பும்போது கிடைக்கும் அனுபவங்கள் குறித்து! அந்த முகநூல் இற்றைகள் ஒரு தொகுப்பாக இங்கேயும் வெளியிட விருப்பம்! அந்த வரிசையில் இதோ இன்றைக்கு முதல் பகிர்வு.
நடை நல்லது - 24 ஆகஸ்ட் 2024:
ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இன்றைக்கு காலையில் கொஞ்சம் நடந்து சென்று வந்தேன். பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் நண்பர் துவாரகநாதன் அவர்கள் இருக்கும்வரை காலை ஐந்து மணிக்கு புறப்பட்டு தால்கட்டோரா பூங்காவிற்கு நடந்து சென்று வருவோம். கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தினமும் காலை வேளையில் நடந்து கொண்டு இருந்தோம். அவர் வேறு இடத்திற்குச் சென்று விட, தனியாகச் செல்வதில் சுணக்கம் வந்து காலைநேர நடை நின்றே போனது…… :(
இன்று அதிகாலை நான்கு மணிக்கே விழித்துவிட்டேன். என்னதான் படுத்துப் புரண்டாலும் உறக்கம் இல்லை. சரி இன்றைக்கு கொஞ்சம் நடந்து வருவோம் என்று தோன்ற தயாராகி புறப்படும்போது காலை ஐந்தரை. நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி என்பதால் வீட்டருகே இருக்கும் Bபிர்லா மந்திரில் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. காலை நேரத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. வெளியில் நின்றபடியே லட்சுமிநாராயணனை தரிசிக்க முடியும் என்பது இங்கே ஒரு வசதி. தரிசித்து ஒரு வணக்கம் போட்டு அப்படியே அருகில் இருக்கும் புத்தர், காளி என வரிசையாக அமைந்திருக்கும் வழிபாட்டுத் தலங்கள் அனைத்திலும் வெளியே இருந்தபடி வணக்கம் வைத்து தொடர்ந்தது நடை.
எங்கள் வீடு இருக்கும் பகுதிக்கு அருகேயே Ridge என அறியப்படும் வனப்பகுதி இருப்பதால் குரங்கு மயில் போன்ற உயிரினங்கள் நடமாட்டம் உண்டு. ஏதோ மரங்களில் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும். பல்வேறு பறவைகளின் ஒலிகளைக் கேட்டபடியே இன்றைக்கு ஒரு நீண்ட நடை. வீடு திரும்பும் வழியில் பால் வாங்கிக்கொண்டு திரும்பியாயிற்று. இன்றைய காலை நடை மொத்தம் மூன்றரை கிலோமீட்டர்…… கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும் என்று எண்ணம். இன்னும் இந்த நடையில் கிடைத்த அனுபவங்களை ஒவ்வொரு தினமும் எழுத எண்ணம் - பார்க்கலாம்!
உயர்வும் தாழ்வும் - நடை நல்லது - 24 ஆகஸ்ட் 2024:
நான் நடந்து செல்லும் பாதையில் இருக்கும் ஒரு பெரிய அரசு மருத்துவமனை Dr.RML Hospital என அறியப்படும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை. 24 மணி நேரம் இயங்கும் மத்திய அரசின் சுகாதாரத் துறை கீழ் உள்ள சிறப்பான மருத்துவமனை. எப்போதும் நோயாளிகள் இருந்தவண்ணமே இருக்கிறார்கள். வடக்கின் பல மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வருவதால் எப்போதும் கூட்டம் தான். அதற்குத் தகுந்தது போல நோயாளிகள் உடன் வருபவர்களும்…..
அத்தனை பேரும் தனியறைகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் அல்ல. அதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் உடன் வருபவர்களும் அவர்களுடன் தங்க முடியாது. மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்துகொண்டும் கிடைத்த இடத்தில் உறங்கிக் கொண்டும் இருப்பதை எனது நடைப்பயணத்தில் பார்க்க முடியும். அரசால் இவர்கள் அனைவருக்குமான வசதிகளை, செய்து தர இயலாது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. இப்படியானவர்களுக்கு என சில வசதிகள் உள்ளன என்றாலும் அவை போதுவதில்லை. ஒரு நோயாளி உடன் நான்கு பேர் வந்தால் என்ன செய்வது…….
இது இப்படி இருக்க, நேர் எதிரே சில பெரிய அரசு குடியிருப்புகள்…… நம் நாட்டில் ஓடும் நதிகளின் பெயர்களில் (கங்கா, காவேரி, சிந்து, கோமதி) என பெரிய பெரிய குடியிருப்புகள்….. அவை யாருக்கானது தெரியுமா? பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் இருக்கும்போது தங்குவதற்கானது. இருப்பவை குறைவாக இருப்பதால் பக்கத்தில் இன்னும் பல குடியிருப்புகள் (20 மாடிகளுக்கும் மேல்) கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே நடக்கும்போது ஏதேதோ எண்ணங்கள் மனதில் வந்து போகும். வசதிகளும் வாய்ப்புகளும் எல்லோருக்கும் ஒரு போல அமைவதில்லை என்பது நிதர்சனம்…….
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
10 செப்டம்பர் 2024
தால்கட்டோரா பூங்கா உற்சாகம் தரக்கூடிய ஒரு இடம். நடைபயிற்சியை தொடருங்கள் சார். டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த பிறகு அசைபோட தேவைப்படும் அருமையான அனுபவங்கள் அது.
பதிலளிநீக்குஎல்லோருக்கும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகள் அமைவதில்லை உண்மைதான்.
தொடர்ந்து எழுதுங்கள் சார் 🙏
நாம் இருந்த இடத்தை பற்றி படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
எல்லோரையும் விடுங்கள். ஒரு தாய் மக்களே ஒரே நிலையில் இருப்பதில்லை.
பதிலளிநீக்குவாசகம் நன்று. பயணம் போல நடைப்பயிற்சியும் நன்று.
நடைப் பயிற்சி நிஜமாகவே ரொம்பவே புத்துணர்ச்சி தரும் ஒன்று. அதை அனுபவித்து நடப்பவர்களுக்கு!
பதிலளிநீக்குநல்ல அனுபவங்கள் சுற்றி நோக்கினால் கிடைக்கும். உங்களிடமிருந்து நிறைய அனுபவங்கள் வரும்!
எல்லோரும் ஒரே நிலையில் இருப்பதில்லைதான்.
எனக்கும் தினமும் நடைப்பயிற்சியின் போது கிடைக்கும் அப்போது மனம் பதிவு எழுதுவது போல் நிறைய எழுதும்...எழுத நினைத்ததுண்டு ஆனால் வீட்டுக்கு வந்ததும் மற்ற வேலைகள் என்பதால் அப்படியே கரைந்துவிடும்.
வாசகம் நன்று.
கீதா
அதிகாலை காலை நடை சுகம்தான் எழுந்தால்! சிலு சிலு வென ஊதக் காற்று காது மடல்களைத் தழுவ பேப்பர்காரன் பால்காரன் அவசரங்களைப் பார்த்துக்கொண்டே வாசலில் நீர் தெளித்து கோலம் போடும் முதியோர்களையும்(இளம் யுவதிகள் இங்கே கோலம்.போடுகிறார்கள்)பார்ப்பது பரவசம்.நீங்கள் சொன்னது போல் ஆஸ்பத்திரியில் ஆரோக்யம்,பணம்,இடம் எல்லாம் பற்றாக்குறை.மன க்கவலை மட்டுமே நிறை.ஆனால் கொடிக் கணக்கில் செலவழித்து சிலை! எத்தனை முரண்பாடு!உண்மையாக மக்களிடம் குனை இருந்தால்.அவர்களுக்கு அடிப்படை வசதி குடுத்து அவர்கள் சிரிப்பில் இறைவனைக் காண்பர்!
பதிலளிநீக்குவிஜி.
பதவியும், பணமும்தான் இங்கு வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்கிறது ஜி
பதிலளிநீக்குஇதைப் படிக்கும் இன்றும், கடந்த இரண்டு நாட்களும் எனது நடைப்பயணமும் நின்று போயிருக்கிறது. சமயங்களில் இப்படிதான்! இன்னொன்று, நீண்ட நடைபயிற்சியாக முதலிலேயே ஆரம்பித்தால் சோர்ந்து போகும் என்று குறைந்த தூரமே நடக்கிறேன். அதுவே தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஅரசு ஆஸ்பத்திரி இப்போதெல்லாம் இலவச சிகிச்சை என்பதை விட்டு விட்டன. வித்தியாசமாக கொள்ளை அடிக்கிறார்கள். சென்னையில் ஒரு அரசு மருத்துவ மனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் நோயாளிகளை கவனித்துக் கொள்ள இருப்பவர்கள் தங்க ஒரு இடம் ஏற்பாடு செய்யலாமே என்று சொல்லி சென்றிருக்கிறார்,
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிவு அருமை.
நடைப்பயிற்சி நல்லதுதான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நடைப்பயிற்சி மேற்கொளளல் சிறந்ததுதான்.
வானளாவ கட்டிடங்கள் எங்கும் வந்து விட்டன.
/இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே நடக்கும்போது ஏதேதோ எண்ணங்கள் மனதில் வந்து போகும். வசதிகளும் வாய்ப்புகளும் எல்லோருக்கும் ஒரு போல அமைவதில்லை என்பது நிதர்சனம்……./
உண்மை. எனக்கும் அப்படித்தான் தோன்றும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இடை இடையே உங்கள் முகநூல் பக்கம் படிக்கிறேன்.
பதிலளிநீக்குஇங்கு தொகுத்து வழங்குவது நல்லது.
நடைபயிற்சி தொடர்ந்து செய்தால் உடல் நலத்துக்கு நல்லது. தொடருங்கள்.
உங்கள் நடைபயிற்சி மூலம் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது அருமை.