வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கதம்பம் - ரயில் சிநேகம் - ரசனை - கேரளத்து மரச்சீனி கறி - பிள்ளையார் சதுர்த்தி - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பேருந்து பயணம் - செயலி மூலம் பயணச் சீட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ரயில் சிநேகம் - 6 செப்டம்பர் 2024:


நேற்றைய ஆசிரியர் தினத்தில் நான் கற்று வரும் மூன்று வகுப்புகளின் ஆசிரியர்களுக்குமே தனிப்பட்ட முறையில் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்! ஸ்பெஷலாக சமஸ்கிருத ஆசிரியருக்கு சமஸ்கிருதத்திலேயே நான்கு வரிகளும் எழுதி பகிர்ந்து கொண்டேன்! 


பகவத் கீதா வகுப்பில் நான் இரண்டாம் நிலைக்கு சென்று விட்டதால் முதல் நிலையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் இப்போது மாறிவிட்டார். உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் பங்கேற்கும் குழுவில் சிறு பிள்ளை போல் ‘நான் உங்களை மிஸ் பண்ணுவேன் மேம்’ என்று மெசேஜ் செய்தேன்…:) இப்போது நினைத்துப் பார்த்தால் புன்னகைக்கத் தான் வைக்கிறது..:)


நம் வாழ்வில் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே ரயில் சிநேகம் போல தான் அடுத்த ஸ்டேஷன் வந்தால் இறங்கித் தான் ஆக வேண்டும் என்று மனதுக்கு நன்கு தெரிந்தாலும் சிறுபிள்ளைகள் வாஞ்சையுடன் அம்மாவின் முந்தானையைப் பற்றிக் கொண்டே பின்னாடியே வருவார்களே! அதுபோல தான் ஆத்மார்த்தமாக ஒருசிலரிடம் பற்று வைத்து  விடுகிறோம்..:)


ரசனை  - 6 செப்டம்பர் 2024:


சாலையில் போவோர் வருவோரை எல்லாம் ஜன்னலில் வேடிக்கை பார்த்தபடியே ஒரு பிளாஸ்டிக் சேரில் காலை நன்கு மடித்து வைத்து அமர்ந்து கையில் ஒரு பிஸ்கட்டும் மற்றொரு கையில் தேநீரும் வைத்துக் கொண்டு சூடான தேநீரை ‘ஒரு கடி ஒரு குடி’ என்று சொல்வார்களே! அதுபோல ரசித்து ருசித்ததெல்லாம் பசுமையான நினைவுகளில் ஒன்றாக மாறிவிட்டது…:)


எதையுமே கொதிக்க கொதிக்க சாப்பிடத் தான் எனக்கு பிடிக்கும்! நாக்கு பொத்து போக வேண்டும்..:) விபரம் தெரிந்த பின் நான் ரசித்து ருசித்து சாப்பிட்டதெல்லாமே அம்மாவோடு முடிந்து விட்டது..! பிறகு எல்லாமே ஒரு ஓட்டம் தான்! அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்! இல்லையென்றால் அந்தப் பண்டத்தை அடுத்த வேளைக்கு வைக்க முடியாது! அதனால் தீர்க்க வேண்டும்! இந்த இரண்டே ஆப்ஷனுக்குள் முடிந்து விடும்…:)


கேரளத்து மரச்சீனி கறி - 6 செப்டம்பர் 2024:



கோவையில் இருந்தவரை அம்மா அடிக்கடி செய்வாள்! அங்கெல்லாம் பழைய பேப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை எடைக்கு போட்டால் மரவள்ளிக்கிழங்கு தான் தருவார்கள்! மாலைநேரத்தில் அதை வேகவைத்து பள்ளியிலிருந்து வந்ததும் எங்களுக்கு சூடாக சாப்பிடத் தருவாள். இல்லையென்றால் ஒருநாள் சமையலுக்கு ஆச்சு என்று காய்கறிகளுக்கு பதிலாக கிழங்கை தேங்காய் சேர்த்த கறியாக பண்ணுவாள்!


இந்த வாரச் சந்தையில் பார்த்ததும் வாங்கி வந்தேன்! இன்று காலை சமையலுடன் அதையும் சுத்தம் செய்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வைத்தேன். தேங்காயெண்ணெயில்  தாளிப்புடன் காரத்துக்கு மிளகாயும் கிள்ளிப் போட்டு கிழங்கையும் சேர்த்து பிரட்டி தேங்காயும் சேர்த்து இறக்கினேன். சுவையான மரச்சீனி கறி தயார்! இன்றைய காலை உணவாகவே இதை தான் எடுத்துக் கொண்டேன்…:)


பிள்ளையார் சதுர்த்தி - 7 செப்டம்பர் 2024:



கணேஷா! கணேஷா! என்று நம்ம வீட்டில்  எல்லாவற்றுக்கும் நான் இவரிடம் தான் முறையிடுவேன்! எங்களுக்கு துணையாக, வழிகாட்டியாக எப்போதுமே உடன் வரும் குழந்தை! காரணமில்லாமல் காரியமில்லை! அவருக்குத் தெரியும் யாருக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று! எல்லாரையும் நல்லபடியா வெச்சிருப்பா! 


நல்லதே நடக்கட்டும்!


எல்லாம் நன்மைக்கே! என எடுத்துக் கொள்கிறேன்!


இன்று கொழக்கட்டை, அரிசி தேங்காய் பாயசம், சுண்டல் என எளிமையான நைவேத்தியம் தான் கணேஷாவுக்கு செய்ய முடிந்தது! கால்(ஆர்த்ரைட்டீஸ்) ஒத்துழைக்கவில்லை! சுறுசுறுப்பு குறைந்து விட்டது! மகள் தான் எனக்கு உடனிருந்து உதவினாள்!


******


ரோஷ்ணி கார்னர் - ஓவியம் - 8 செப்டம்பர் 2024:


பிள்ளையார் சதுர்த்திக்காக மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

27 செப்டம்பர் 2024


27 கருத்துகள்:

  1. என்னதான் தூரத்தில் இருக்கும் ஆசிரியராயினும் சட்டென ஒரு பாசம் வந்து விடுகிறது!

    ருசிக்க முடியாமல் அழைக்கும் கடமைகள்...  சிரமம்தான்.    ஆனாலும் ருசித்துப் புசிப்பதே சிறந்தது.

    மரவள்ளிக்கிழங்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கும் ஒன்றா, தெரியவில்லை.  வெவ்வேறு எனில் நான் ச.வ கிழங்குதான் ருசித்திருக்கிறேன்.  அதுவும் சமைக்காமல் சும்மா அப்படியே வேகவைத்து.

    பிள்ளையார் சதுர்த்தி கொண்டாட்ட படத்தில் கொழுக்கட்டை இலலாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ரோஷ்ணியின் ஓவியம் டாப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு வேறு. மரவள்ளியை குச்சிக்கிழங்கு எனவும் சொல்வார்கள். குச்சி குச்சியாக சிப்ஸ் போட்டு பாக்கெட்டில் கிடைக்கும். பொதுவா சர்க்கரைவள்ளிக்கிழங்கு சிப்ஸ் வெளியில் கிடைக்காது. நான் கயாவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் விளாம்பழத்தையும் விட்டுவிட்டேன்.

      நீக்கு
    2. // குச்சி குச்சியாக சிப்ஸ் போட்டு பாக்கெட்டில் கிடைக்கும். //


      ஓ... ஆமாம், பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    3. ஸ்ரீராம் நெல்லை சொல்லியிருப்பது போல் இரண்டும் ஒன்றில்லை. மரவள்ளிக் கிழங்கை எங்க ஊர்ல மரச்சீனிக் கிழங்கு என்போம். மரச்சீனி அப்பளம் செம டேஸ்டா இருக்கும். நான் வீட்டில் செய்ததுண்டு இரு வருடங்கள் முன் வரை.

      கீதா

      நீக்கு
    4. சர்க்கரை வள்ளிக்கிழங்கும் மரவள்ளிக்கிழங்கும் வேறு வேறு..! வேகவைப்பது என்பதே சமைப்பது தானே சார். இரண்டுமே வேகவைத்து அப்படியே சாப்பிடலாம். தாளிப்பதும் அதை வெவ்வெறு ரெசிபியாக மாற்றி ருசிப்பதும் நம் விருப்பம் தானே! மஹாசிவராத்திரிக்கு நானே கூட சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்து நிவேதனம் செய்திருந்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    5. பனங்கிழங்கைத் தான் குச்சிக்கிழங்கு என்று எங்கள் ஊர் கோவையில் சொல்வோம் நெல்லை சார்.

      நீக்கு
    6. ஆமாம் கீதா சேச்சி. மரவள்ளியை மரச்சீனி என்போம். மரச்சீனி அப்பளம் எனக்கு மிகவும் பிடித்தது.

      நீக்கு
  2. கால் ஆர்த்ரைடீஸ் என்றால் முழங்காலா இல்லை பாதமா? எனக்கு பாத வலி வந்து ஓராண்டு சிரம்ப் பட்டேன். கோவில்களுக்கு வெறும்காலோடு செல்வதால் அதிகமாகும் என்று டாக்டர் சொன்னார். அப்போது ஆரம்பித்த எம்சிஆர் செப்பல் இப்போதும் என்னைவிட்டு அகலவில்லை. ஷீ, செப்பலில் ஹீல் கப் (200 ரூ ஆன்லைன்) உபயோகிக்கிறேன்.

    மரச்சீனி கறி நான் ஹோட்டல்களில் சுவைத்திருக்கிறேன். வீட்டிற்கு இருமுறை வாங்கிவந்தும் செய்யாமல் வீண்டித்திருக்கிறேன். விருப்பமான கறி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பாஸ் சில வருடங்களாக  சோரியாசிஸ் ஆர்த்ரைட்டிஸினால் அவதிப்படுகிறார்.

      நீக்கு
    2. எனக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்த்ரைட்டீஸ் என்பது மூட்டு தேய்மானம் சார். எனக்கு ஒன்றரை வருடங்களாக இதனால் தான் நடப்பதிலும், படி ஏறுவதிலும் வலி ஏற்படுகிறது.

      மரச்சீனி கறி ஹோட்டல்களில் கிடைக்கிறதா!!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. ரோஷ்னிக்கு ஓவியத் திறமை நன்கு கைகூடுகிறது. கோணம், அளவுலாம் சரியாக வருகிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. வாசகம் மற்றும் அனைத்தும் அருமை.
    உடல் நலத்தைப்பார்த்து கொள்ளுங்கள்.
    பிள்ளையார் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்.
    ரோஷ்ணி வரைந்த பிள்ளையார் மிக ருமை.
    ஆசிரியரை மிஸ் பண்ணுவது இயல்பு, இப்போது நீங்கள் மாணவிதானே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா! நான் இப்போது மாணவி என்பதால் தான் இந்த ஏக்கம் ஏற்படுகிறது என்று தோன்றுகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. வாசகம் அருமை.

    ஆன்லைன் வகுப்பு, ஆசிரியர்களும் மாறுகிறார்கள் என்றாலும் கூட ஆசிரியர்கள் தினத்தில் வாழ்த்தியது நல்ல விஷயம். ஆசிரியர்களைப் பொருத்து நாம் bonded ஆகிவிடுகிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். அவர்களின் அணுகும் முறையும், அன்பும் தான் காரணம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. உங்கள் ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனைக்கு வழி பாருங்கள். இப்போது நிறைய வழிகள் இருக்கின்றன மாத்திரை மருந்த்து இல்லாமலே தீர்வுகள்.

    ரோஷ்ணி வரைந்த பிள்ளையார் க்யூட்!

    மரச்சீனிக் கிழங்கு கறி - ஆஹா....எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஊரில் அடிக்கடி செய்வோம். அதன் பின் சென்னை மக்களுக்கு இது பழக்கமே இல்லை. ஆனால் நம் வீட்டில் செய்வதால் பழகினாங்க! பிடித்திருந்தது. ஆனால் எப்போதாவதுதான் செய்வேன். Starch இருப்பதால், உடல் எடை கூடும் என்பதாலும், நீங்கள் சொல்லியிருப்பது போல் அது மட்டுமே உணவாகச் சாப்பிடுவேன் வேறு எதுவும் சாப்பிடாமல். அதுவும் அளவாக. ஆனால் எளிதில் ஜீரணம் ஆகும்.

    கறியும் செய்யலாம் புழுக்கும் செய்யலாம். ஊரில் இருந்த வரை சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள புழுக்கு செய்துவிடுவார்கள். வீட்டில் இருக்கும் பழைய சாமான்கள் போட்டு கிழங்கு வாங்கி சமாளிப்பாங்க கூட்டுக் குடும்பத்தை. புழுக்கு உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால் இங்க சொல்லலை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அன்று காலை உணவாகவே இதை மட்டும் தான் எடுத்துக் கொண்டேன். ஆமாம் பழைய சாமான்களை போட்டு கிழங்கு வாங்கி பயன்படுத்தியது ஒரு காலம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    இன்றைய கதம்பம் பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமையாக உள்ளது.

    ஆசிரியர் தினத்தில் நீங்கள் கற்று கொள்ளும் சமஸ்கிருத மொழியிலேயே ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் சொன்னது சிறப்பு. அவர்களுக்கும் சந்தோஷமாக இருந்திருக்கும்.

    தங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றதற்கு மகிழ்ச்சி. நம் "பிள்ளை" யார் எளிதாக எதைத் தந்தாலும் ஏற்றுக் கொள்வார். தங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.விநாயகர் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைக்க நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    தங்கள் மகள் ரோஷிணிக்கு வரைந்த பிள்ளையார் ஓவியம் மிக நன்றாக உள்ளது. ரோஷிணிக்கு எங்கள் அன்பான வாழ்த்துகளை தெரிவியுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "தங்கள் மகள் ரோஷிணி வரைந்த" என்று வர வேண்டும். தட்டச்சு பிழையால். தவறுதலாக வருகிறது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. மகள் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கு மிக்க நன்றி.

      தங்களின் வருகைக்கும் பதிவு குறித்த கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  8. இன்றைய வாசகம் சிறப்பு.

    கதம்பம் வழக்கம் போல அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  9. எங்க வீட்டில் வாரத்துக்கு ஒருநாள் காலை உணவு மரவள்ளிக் கிழங்கு தாளிச்சதுதான். வாடீ ஏன் கப்பக் கிழங்கேன்னு பாடிக் கிட்டே சந்தோஷமா சாப்பிட வேண்டியதுதான். இங்கே கிலோ 50 ரூபாய். இப்போதெல்லாம் ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம், கிழங்கு என்ற குரல் காணக்கிடைப்பதில்லை!

    ரோஷ்ணியின் படங்கள் நன்கு மெருகேறியிருக்கின்றன. அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா...ஹா. இங்கே 40 ரூ என்று கிழங்கு வாங்கிய நினைவு சார். அம்மா பண்ணித் தந்த போது மாவாக மசிந்த கிழங்கு இங்கே எத்தனை விசில் வைத்தாலும் கல் போலேயே இருக்கின்றது. ஏனென்று தெரியவில்லை?

      மகள் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்கும் தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்து சார்.

      நீக்கு
  10. ஆசிரியர்கள் ஆம் அவர்களுடைய தாக்கம் வாழ்வில் எப்போதும் நம்முடன் இருக்கும். ஒரு வேளை நம் தோழர்களின் முகம் மறந்தாலும் சில ஆசிரியர்களின் முகம் மட்டும் மனதில் பதிந்துவிடும். அவர்கள் வார்த்தைகள் செயல்கள் என்று பலதும்.

    எங்கள் ஊரில் வீடுகளில் இது மரவள்ளிக் கிழங்கை =கப்பா= என்று சொல்வதுண்டு. இது காலை உணவாகவும் சாப்பிடுவோம்.

    ரோஷ்ணியின் ஓவியம் - நன்றாக வரைந்திருக்கிறார். பாராட்டுகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். ஆசிரியர்களின் முகம் எத்தனை வருடமானாலும் மனதில் நிற்கும்.

      ஆமாம் சார். கேரளத்தில் 'கப்பா' என்று தான் சொல்வார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....