அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
மந்திர திறவுகோல் - 2 செப்டம்பர் 2024:
மனது! இதைப் பற்றிய சிந்தனைகள் எப்போதும் நம்மிடையே சுழன்று கொண்டே தான் இருக்கும்! யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ ஒவ்வொருவரும் அவரவரின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும்! அது தான் நம்மை நெறிதவறாமல் வாழவும் வைக்கும்!
ஒரு புதையல் பெட்டகம் போல் எடுக்க எடுக்க வற்றாத செல்வம் போல் பலவித விஷயங்களின் கோப்பாக தென்படும் மனதுக்கும் அழுத்தம் என்பதும் கூடிக் கொண்டே சென்றால் நல்லது அல்ல! வேலைப்பளு, குடும்பச்சூழல் என்று பல காரணங்களால் இந்த அழுத்தம் கூடிக் கொண்டே செல்கிறது!
நேற்றைய பொழுதில் அலைபேசியில் சற்று நேரத்தை கடத்திய போது ஒரு குறிப்பிட்ட காணொளி என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது! அந்த காணொளியை மீண்டும் ஒருமுறை கூட பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன்! என்னை சிரிக்க வைக்க உதவிய அலைபேசி தான் அந்தக் காணொளியிலும் பேசு பொருளானது!
தன்னுடைய அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வீட்டு வாசலை பெருக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணி நேரம் போவது தெரியாமல், தான் எங்கிருக்கிறோம் என்பது அறியாமல் சாலையெல்லாம் பெருக்கி புறநகர் ரயிலில் ஏறி இன்னொரு இடத்திற்குச் சென்று அங்கும் பெருக்கி துடைப்பம் தேய்ந்து தன்னுடைய வீடு என நினைத்து இன்னொரு ஊரில் முழிப்பதாக காண்பித்திருந்தார்கள்…:))
இது எதுவுமே நிஜம் இல்லையென்று இந்த மனதிற்குத் தெரிந்தாலும் சற்று நேரம் எல்லாவற்றையும் மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன் அல்லவா! அது தான் நம் மனதிற்கான மந்திர திறவுகோல்! இனிமையான கானங்களோ, நெருக்கமான ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதாலோ, வாய் விட்டு சிரிப்பதாலோ மனதில் உள்ள அழுத்தமும் குறைகிறது!
மனதை லேசாக வைத்துக் கொள்வதெல்லாம் மகான்களுக்கே உரியது! நம் மனதிற்கான மந்திர திறவுகோல் எது என்பதை தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த செயல்களை செய்து மனது என்னும் புதையல் பெட்டகத்தினை சிதைந்து போகாமல் பத்திரப்படுத்துவோம்! அதன் அழுத்தத்தை குறைப்போம்!
******
குடும்பம் ஒரு கதம்பம் - 2 செப்டம்பர் 2024:
அவள்: மறுப்பு, இறப்பு, பிறப்பு, வெறுப்பு…
நான்: சூப்பர்! பருப்பு இதில வருமா கண்ணா??
அவள்: இல்லம்மா! அது சின்ன ‘ரு’..! அதுல என்னென்ன வரும்னு சொல்லலாமா!! ம்ம்ம்..!
அப்புறம் அம்மா! இன்னைக்கு எங்க தமிழ் மேம் வேலு நாச்சியாரோட தோழி ‘குயிலி’ பத்தி சொன்னாங்க!
நான்: ஆமா கண்ணா! சுதந்திர போராட்டத்துல ஈடுபட்ட அவங்கள பத்தி நான் படிச்சிருக்கேன்! நெருப்புல விழுந்திடுவாங்க இல்லையா!
அவள்: ஆமாம்மா! ஆயுதக் கிடங்கை அழிச்சிட்டு தானும் அதுல உயிர்த்தியாகம் செஞ்சிடுவாங்களாம்!
நான்: படிச்சது ஞாபகம் இருக்கு கண்ணா!
அவள்: நான் இன்னைக்கு தாம்மா தெரிஞ்சுகிட்டேன்!
கல்லூரியில் நேற்றைய பொழுதில் நிகழ்ந்த கதைகளை பேசிக் கொண்டே வாரச்சந்தைக்கு சென்று கொண்டிருந்தோம்.
அதோ பாரு கண்ணா! அங்க ஒரு மேடு இருக்கா! அத கவனிக்காம போய் ஒருநாள் விழ போய்ட்டேன்! அப்பா கூட வந்தா முன்னாடியே சொல்லிடுவா! கீழ பார்த்து வா! அங்க மேடு இருக்கு! சட்டுன்னு தெரியாதுன்னு….! அப்பா! அப்பா தான்!
நீ சொன்னியா??
அப்பா தி க்ரேட்! டே! டே! டே… இதுங்க லவ்ஸு தாங்க முடியலடா….:)
ஏய்…!!! எங்களையே கலாய்க்கிறியா…:)) இரு! இரு! இன்னைக்கு பேசும் போது அப்பாட்ட சொல்றேன்!
காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்…சரி! காய்கறியெல்லாம் எடுத்து வெச்சுட்டு ராத்திரிக்கு என்ன டிபன் பண்ணலாம்னு சொல்லு கண்ணா??
எதையாவது பண்ணும்மா! எனக்கு எழுதற வேலை இருக்கு! நான் அத பார்க்கிறேன்!
அப்படியா! நான் மத்தியானமே படிச்சுட்டேன்! எழுதியும் பார்த்துட்டேன்! சரி! ஸ்லீப்பிங் டோஸ்(பொங்கல்) பண்ணிடவா கண்ணா! சட்னி அரைச்சிடறேன்!
ஓகேம்மா!
குக்கர வெச்சிட்டேன்! அப்பாக்கும் பேசிடணும்! ஆஃபீஸ்ல இருந்து வந்துட்டாளா தெரியல! என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை நெருங்கிய நொடி என்னவரிடமிருந்து அழைப்பு வரவும்….:)
டே டே! இதுங்க தொல்ல தாங்க முடியலடா! என்னா டெலிபதி…:))
அவள் எங்களை கலாய்க்க தொடங்கிவிட்டாள்…:)
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
18 செப்டம்பர் 2024
நீங்கள் சொல்லும் காணொளி நானும் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குநான் சிரித்த ஒரு காணொளி..
ஒருவர் தனது நண்பர்கள் குழுவில் பதிவிடுகிறார்... "குடித்தால் போதையில் ஒன்றும் தெரியாது என்பீர்களே.. நேற்று நான் பார்ட்டி முடிந்து சரியாக ஊபர் போட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
பல லைக்ஸ், ஆட்டின்களுக்கு பிறகு ஒரு தகவல்..
"ப்ரோ.. நேற்று பார்ட்டியே உங்கள் வீட்டில்தானே நடந்ததது? ஊபர் பிடித்து எங்கே சென்று இறங்கி இருக்கிறீர்கள்?"
உங்களுக்கும் ரோஷ்ணிக்கும் நடந்த உரையாடல் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஉண்மையிலேயே உங்கள் இருவருக்கும் டெலிபதி தொடர்பு இருக்கிறதுதான் போல...
மந்திர திறவு கோல் அருமை நீங்கள் சொன்னது எல்லாம். நிறைய செய்திகள் இப்படி சிரிக்க வைக்கிறது நம்மை.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதும், ஸ்ரீராம் சொன்னதும் சிரிக்க வைக்கிறது.
நீங்களும், ரோஷ்ணியும் உரையாடியது அருமை.
நினைத்தேன் வந்தாய் என்று வெங்கட் அழைப்பு வாழ்க!
வெங்கட் வந்து இருக்கார் என்று நினைக்கிறேன்.
இந்த காணொளி நானும் கண்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குஆதி நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் காணொளியை நானும் கண்டிருக்கிறேன். என்னை அதிகம் சிரிக்க வைப்பவை வடிவேலு படங்களுடன் வரும் மீஸ்தான்! நம் மக்களுக்கு அசாத்திய நகைச்சுவை உணர்வு என்று எண்ண வைக்கும்!
பதிலளிநீக்குகீதா
ரோஷ்ணி - ஆதி - உரையாடலை ரசித்தேன். சுவாரசியம்.
பதிலளிநீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிவு அருமை.
/யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ ஒவ்வொருவரும் அவரவரின் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தான் வாழ வேண்டும்! அது தான் நம்மை நெறிதவறாமல் வாழவும் வைக்கும்! /
உண்மையான வார்த்தைகள்.
தாங்கள் குறிப்பிட்டஅந்த காணொளியை அறிந்து நானும் மனம் விட்டு சிரித்தேன். சிரிப்பு மனதின் பாரத்தை குறைக்க வல்லது.
தாங்களும், ரோஷிணியும் பேசிய உரையாடல் சுவாரஷ்யமாக இருக்கிறது. தாயும், மகளும் இப்படி மனம் விட்டு நெருக்கமாக பழகுவது நல்லதுதான். நல்ல நட்புணர்வு உங்கள் இருவருக்குமிடையே இப்படியே என்றும் நிலைத்திருக்க வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிரிப்போடு.சிந்திக்கவும் செய்த காணொளி.. நானும் பார்த்து இரசித்துச் சிரித்திருக்கிறேன்
பதிலளிநீக்கு