சனி, 14 செப்டம்பர், 2024

காஃபி வித் கிட்டு - 202 - ஹிந்தி dhதிவஸ் - டாம்பீகம் - நிழல் விளையாட்டு - முக்தி துவாரகா - எண்ணங்கள் - வாட்டர் பேக்கட் - தனிமை - Bபிஜ்லி மஹாதேவ் மந்திர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தன்னம்பிக்கை மனிதர்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த நாள் இனிய நாள் : ஹிந்தி dhதிவஸ்



என்னதான் ஹிந்தி தெரியாது போடா என்று அரசியல் ஜல்லி அடித்தாலும், இப்படிச் சொல்பவர்களில் பலர் ஹிந்தியில் பேசக் கூடியவர்களே.  இது குறித்து அதிகம் பேச வேண்டியதில்லை என்றாலும், இன்றைக்கு இது குறித்து பேசலாம் - ஏனெனில் இன்றைக்கு தான் ஹிந்தி dhதிவஸ் கொண்டாடப்படுகிறது.  1949 ஆம் ஆண்டில் இதே நாளில், இந்திய அரசியலமைப்பின் வரைவின் போது தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்த இந்திய அரசியலமைப்பு சபை ஒப்புக் கொண்டது. ஹிந்தியை ஊக்குவிக்கவும், இந்த முடிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் 1953 ஆம் ஆண்டில் ஹிந்தி dhதிவஸ் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கு போட்டிகள் வைத்து பரிசும் கொடுப்பது வழக்கம். 


******

 

இந்த வாரத்தின் தகவல்: தேவையற்ற டாம்பீகம்…



தங்களிடம் அதிக அளவில் பணம் இருந்தால் அவற்றை வெளியில் எல்லோருக்கும் காண்பிக்கும்படி பகட்டாக சிலர் உலவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  தேவையற்ற டாம்பீகம் தான் என்றாலும் பலருக்கும் இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. சமீபத்தில் படித்த ஒரு செய்தி வியக்க வைத்தது என்பதை விட இப்படி ஒரு டாம்பீகம் - காட்சிப்படுத்துவது தேவையா என்ற கேள்வியையும் எழுப்பியது எனக்குள்! செய்தி இது தான் - பூனேவைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமலா திருப்பதி பெருமாள் தரிசனத்திற்கு வந்திருந்த போது சுமார் 25 கிலோ - ஆமாம் கிலோ தான்! - அளவில் தங்க நகைகள் அணிந்து வந்திருக்கிறார்கள்! நம் ஊர் கணக்குப்படி 25000 கிராம் - அதாவது 3125 பவுன் நகைகளை அணிந்து வந்திருக்கிறார்கள்! இப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்றாலும், இது தேவையற்றது என்பதே எனது எண்ணம் - உங்கள் எண்ணம் என்ன சொல்லுங்களேன்! செய்தியை படிக்க நினைத்தால் கீழே உள்ள சுட்டி வழி செய்தியை படிக்கலாம்!


Pune family visits Tirumala wearing 25 kg gold, X asks ‘Why this show-off in front of God’ | Trending - Hindustan Times


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி : நிழல் விளையாட்டு…


நிழல்களை வைத்தே கலைக்கண்ணோடு பல ஓவியங்களை காண்பவருடன் பேச வைக்கிறார் வின்செண்ட் Bபால் என்ற கலைஞர்.  சிறு வயதில் கைகளைக் கொண்டு நிழலில் மான், நாய் போன்ற உருவங்களை வரவழைத்தது உண்டு என்றாலும் இது போன்று முயற்சி செய்ததில்லை. இந்த ஓவியம்/காணொளியின் பின்னே எத்தனை உழைப்பு, கற்பனை இருக்கும் என்று எண்ணும்போதே பிரமிப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒரு காணொளி மட்டும் இங்கே தந்திருக்கிறேன். அவரது பக்கத்தில் இது போன்ற காணொளிகள் நிறைய இருக்கின்றன.  முடிந்தால் நேரம் எடுத்து சிலவற்றையேனும் பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியைப் பார்ப்பதில் சிரமங்கள் இருந்தால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


Power of Shadowology ✨✨ (youtube.com)


******


பழைய நினைப்புடா பேராண்டி : முக்தி துவாரகா


2015-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - முக்தி துவாரகா - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


பஞ்ச் துவாரகா பயணத்தில் நாங்கள் முதன் முதலாக பார்த்தது சோம்நாத் கோவில் தான் என்றாலும் பஞ்ச் துவாரகா என அழைக்கப்படும் இடங்களில் முதலாவதாக பார்த்தது முக்தி துவாரகா என அழைக்கப்படும் இடம் தான். சோம்நாத் அருகிலேயே இருக்கிறது.  ”[B] பால் கா தீர்த் எனவும் அழைக்கப்படும் இவ்விடத்தில் தான் கிருஷ்ணாவதாரத்தின் முடிவும் நிகழ்ந்தது என்பதும் நம்பிக்கை.


மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள். கௌரவர்கள் தோல்வி அடைந்தார்கள்.  துரியோதனன் உள்ளிட்ட காந்தாரியின் 100 மகன்களும் உயிரிழந்தார்கள். தான் உயிருடன் இருக்கும்போதே தனது 100 மகன்களையும் இழந்துவிட்ட காந்தாரி கிருஷ்ணனுக்கு சாபம் கொடுத்தாளாம்....  சாபம் கொடுப்பது பலருக்கும் பிடித்த விஷயம் போல!


”கண்ணா எனது 100 மகன்களையும், நான் உயிருடன் இருக்கும்போதே கொன்றாய். புத்திரசோகத்தில் சொல்கிறேன்... எவ்விதம் எனக்கு புத்திரன் ஏதுமின்றி செய்தாயோ, அதுபோலவே உன் கண் முன்பாகவே உன் இனம் அழிந்துபட காண்பாய்”


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் : வாட்டர் பேக்கட்


இந்த பாடல் சமீபமாக ரீல்ஸ், ஷார்ட்ஸ் என பலவற்றிலும், பல மாநிலத்தவர்களாலும் பிரபலமாக பயன்படுத்தப்படும் பாடலாக இருக்கிறது. அவர்களது பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெண்டிங் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது.   பாடல் குறித்து தேடியபோது தான் தெரிந்தது புதிதாக வெளிவந்திருக்கும் ராயன் படப்பாடல் என்று.  பாடல் காணொளியுடன் பார்க்கும்போது பிடிக்கவில்லை என்றாலும், பாடலை மட்டும் கேட்க ஏனோ பிடித்தது! ஒரு வேளை பல இடங்களில் கேட்டுவிட்டதால் பிடித்திருக்கலாம். விரும்பினால் நீங்களும் கேட்டுப் பாருங்களேன் யூவில்! Achamass என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் பார்த்தேன் - ஒரு முதியவரும் மூதாட்டியும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். ரசிக்க முடிந்தது - இது தேவையா என்று தோன்றினாலும், வயது அதிகமானாலும் வாழ்க்கையை ரசிக்கிறார்கள் என்ற கோணத்திலும் இதைப் பார்க்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை :  தனிமை…


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக கல்யாண்ஜி அவர்களின் கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு! தனிமை பல சமயங்களில் பிடித்தமானதாக இருக்கலாம்! உங்களுக்கு தனிமை பிடிக்குமா சொல்லுங்களேன்!


தனியாக சீட்டு விளையாடுபவர்களை

தனியாக சமைத்துச் தனியாக சாப்பிடுகிறவர்களை

தனியாக பழைய பாடல்கள் கேட்பவரை

தனியாக மது அருந்துகிறவர்களை

தனியாக அமர்ந்து நூலகங்களில் வாசிப்பவர்களை

தனியாக உலர்சலவையகங்களுக்கு வருபவர்களை

தனியாக நகராட்சிப் பூங்காவில் அமர்ந்திருப்பவர்களை

தனியாக தேவாலயங்களில் பிரார்த்திப்பவரை

தனியாக கிளிஜோஸ்யம் பார்ப்பவரை

தனியாக அரசமர இலையை அவதானிக்கிறவரை

தனியாக நின்று காக்கை கொத்தி இழுக்கும்

பெருச்சாளியின் திறந்த வயிற்றைக் காண்கிறவரை

தனியாக இருக்கும் அவர் பக்கம் உருண்டுவரும்

விளையாட்டுப் பந்தை எடுத்து வீசாதவர்களை

தன்னுடைய கால்பக்கம் நிழற்குடையில் ஒதுங்கும்

நாய்க்குட்டியைக் குனிந்து பார்க்காதவர்களை

ஒன்றும் செய்ய முடியாததற்கு வருத்தப்படாதீர்கள்.

அவர்கள் தேர்ந்தெடுத்த தனிமையில் 

அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.

அவர்களின் தீவைச் சுற்றியே இருக்கிறது

அத்தனை திசைகளிலும்

நம் கடல்.


    - கல்யாண்ஜி


******


இந்த வாரத்தின் ஆலயம் :  Bபிஜ்லி மஹாதேவ் மந்திர்



ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லூ-மணாலி குறித்து உங்களில் பலர் அறிந்திருக்கலாம். எனது பக்கத்தினை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நான் அந்த இடங்களுக்குச் சென்று வந்தபின்னர் எழுதிய பயணக் கட்டுரைகளும் நினைவில் இருக்கலாம். மணாலியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஆலயம் தான் இந்த Bபிஜ்லி மஹாதேவ் மந்திர்! இதில் முதல் வார்த்தைக்கு அர்த்தம் மின்னல்! வாம்மா மின்னல் என்று அழைக்கப்படும் மின்னல் பெண் அல்ல! நிஜமான மின்னல்! பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் மீது மின்னல் தாக்கி, லிங்கம் பல துண்டுகளாக உடைகிறது என்றும் அதன் பின்னர் அங்கே இருக்கும் பூசாரி உடைந்த லிங்கத்தின் பாகங்களை வெண்ணெய் கொண்டு மொத்தமாக சேர்த்து வைத்த சில நாட்களுக்குப் பின்னர் எந்த வித சேதமும் தெரியாமல் முழு சிவலிங்கமாக மாறிவிடும் என்பது தான் இந்த ஆலயத்திற்கான பெயர் காரணம்! எத்தனை எத்தனை ஆலயங்கள் நம் நாட்டில்.  இந்த ஆலயம் வரை ஒரு குறு ட்ரெக்கிங் சென்று வர முடியும் என்பது கூடுதல் தகவல். 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

14 செப்டம்பர் 2024


9 கருத்துகள்:

  1. ஹிந்தி தினம் - தகவல்;  ஆடம்பரப்பிரியர்கள், விளம்பரப்பிரியர்கள்! ; காணொளி- ரசனை;  ராயன் காட்சி எரிச்சலாய் இருந்தாலும் பாடலை ஓரளவு ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய கதம்பம் நன்று. ரசித்தேன்.

    டாம்பீகம் என்பது ஆளாளுக்கு வேறுபடுகிறது. அடுத்தவர்களின் இயலாமையை எண்ணச் செய்துவிடுவதாக நம் டாம்பீகம் இருந்துவிடக் கூடாது. நான் உன்னைவிடப் பெரியவன் என்பதை எல்லோரும் அவரவற்கு இயன்ற வித்த்தில் காண்பிக்கின்றனர் என்றே எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. பலர் ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சிலர் இப்படி டாம்பீகத்தை காட்டிக்கொள்கிறார்கள். பிறர் கவனத்தை ஈர்ப்பதும் இதில் உள்ளது.
    காணொளி அருமை.
    பிஜ்லி பகவான் ஆச்சரியமான தகவல்👍
    கவிதை அருமை 👏

    பதிலளிநீக்கு
  4. வாசகம் நன்று.

    இன்று இந்தி தினமா!! ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எழுத வாசிக்க வரும். பேசத்தான் கொஞ்சம் சமாளிக்கும் வகையில் அம்புட்டுத்தான்,

    டாம்பீகம் - இந்தச் செய்தி நானும் பார்த்தேன். விளம்பரப்படுத்திக்கறாங்க தங்ககிட்ட இவ்வளவுஇருக்குன்னு....அது சரி பயமில்லை போல! இப்படிச் சிலரைப் பார்க்க முடியும். உடை நடையில் மட்டுமல்ல பேச்சிலும் சிலர் ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவையற்றதுதான்....நான் நினைத்தது இதுதான் "இப்படியான மனிதர்கள் வளர்வதில்லை" என்று அந்த லிஸ்டில் இவர்கள் என்று/.

      கீதா

      நீக்கு
  5. நிழல் விளையாட்டு காணொளியை ரசித்தேன்...தலைப்பு பார்த்ததும் கைவிரல்கள் வைத்து நிழல் உருவங்கள் செய்வோமே சின்ன பிள்ளையா இருக்கறப்ப அப்படியோ என்று நினைத்தேன் ஆனால் காணொளி ரொம்ப வித்தியாசம் செம க்ரியேட்டிவிட்டி!

    வாட்டர் பாக்கெட் பாட்டு ராயன் படமா....ஆமாம் ரீல்ஸ் நிறைய போடுறாங்க மக்கள்!! ட்ரெண்டிங்க் பாடல்....ஹாஹாஹா..இப்படி இன்னும் ரெண்டு பாட்டு கூட நிறைய ரீல்ஸ் வந்துச்சு பாடல் மறந்து போச்சு...

    பழைய பாட்டு கண்மணி அன்போடு கூட வந்துச்சு..அதெப்படி இப்படி பல இடங்களில் வெவ்வேறு இடங்களில் இருக்கறவங்க எல்லோரும் ஒரே மாதிரி ஸ்ரெப்ஸ் போட்டு ரீல்ஸ் போடுறாங்கன்னு ஆச்சரியம் ஒரு பக்கம் மக்களுக்கு நிறைய நேரம் இருக்கு போல என்றும் தோன்றியது.

    பழைய நினைப்புடா - வாசித்திருக்கிறேனோ....பார்க்கிறேன்.

    கல்யாண்ஜி அவர்களின் கவிதை நன்று.

    Bபிஜ்லி மஹாதேவ் மந்திர்.// சென்றிருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எத்தனை எத்தனை அற்புதங்கள் நிறைந்த கோவில்கள்! முழுவதும் பார்க்க ஓர் வாழ்நாள் போதாது! உலாவரும் நகைக் கடைகள் கேரளாவில் நகைக் கடை உரிமையாளர்கள் வீட்டுத் திருமணங்களில் சகஜம்.பணம் பகட்டு! யாரோ ஒரு தம்பதிகள் தங்கள் திருமணத்தை பல்லாயிரம் பேருக்கு (ஏழைகளுக்கு)உணவளித்து கொண்டாடினார்கள் என்று ஒரு news படித்தேன்.அவர்கள் என்றும் மனதில் நிற்பார்கள்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  7. பதிவு அருமை.
    நிழல் விளையாட்டு காணொளி அருமை.
    பாட்டு கேட்டேன், படம் பார்த்து நொந்து போனேன்.
    படம் இல்லாமல் பாடல் போட்டது நல்லது.
    நகை கடையாக கோவிலுக்கு, சரஸ்வதி சபதம் படத்தில் வரும்
    "ஆடை, அணிகலன் ஆடம்பரத்தை ஆண்டவன் விரும்புவது இல்லை" பாடல் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  8. புனே மக்களின் நகை பற்றி முன்பே படித்திருந்தேன். படித்தபோதே என்கருத்தும் நீங்கள் கூறிய கருத்துத்தான்.

    தனிமை கவிதை நன்று.சிந்திக்க வைக்கும்.
    பில்லி மகாதேவ் மந்திர் உங்கள் பகிர்வில் கண்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....