சனி, 21 செப்டம்பர், 2024

காஃபி வித் கிட்டு - 203 - அமைதி - நாக்(dh)த்வார் யாத்ரா - DiyCam - வாவ்! நாற்காலிகள் - இருப்பு - எங்கே போனது மனிதம் - விசில்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நகர்வலம் வருவோம் வாங்க பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த நாள் இனிய நாள் : அமைதி



1981-ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் 21 செப்டம்பர் தினம் International Day of Peace என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் அகிம்சையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது! கூடவே இந்த தினம், தேசிய தேநீர் தினம், அல்சைமர் தினம் என்றெல்லாமும் கொண்டாடப்படுகிறது என்பது இன்றைய தினத்தின் சிறப்பு. 


******

 

இந்த வாரத்தின் தகவல்: நாக்(dh)த்வார் யாத்ரா…



ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் (சாவன் கி மஹினா) மத்திய பிரதேசத்தின் அடர் வனங்கள் இருக்கும் பச்மடி பகுதியில் இருக்கும் ஒரு நாக்தேவ் ஆலயம் நோக்கி ஒரு யாத்ரா செல்வது மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேசத்தில் பிரபலமாக இருக்கிறது. அடர் வனங்கள், மழை, மலைப்பிரதேசம் என கடுமையான யாத்திரையாக இது கருதப்படுவதோடு, இதற்கு வருடத்தின் ஒரு சில தினங்கள் மட்டும் - நாகபஞ்சமி சமயத்தில் மட்டுமே வனத்துறையினர் இங்கே செல்ல அனுமதி தருகிறார்களாம்.  மிகவும் கடுமையான யாத்திரையாக இது கருதப்படுகிறது.  ஒரு சில காணொளிகள் யூட்யூபில் இருக்கின்றன.  முடிந்தால் பாருங்கள்.  இந்தத் தகவல் தெரிந்த போது காணொளிகளைத் தேடி பார்த்தேன். கடுமையான யாத்திரையாகவே தெரிந்தது. 


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : DiyCam…


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக உங்கள் பார்வைக்கு - ஒரு ஸ்பை கேமரா விளம்பரம்.  ஹிந்தியில் தான் விளம்பரம் இருக்கிறது என்றாலும் ஆங்கில சப்டைட்டில் இருக்கிறது என்பதால் ஹிந்தி தெரியாதவர்களும் புரிந்து கொள்ளலாம்.  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியைப் பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.


Diycam Wireless IP Security Camera : Ek Naya Nazariya #diycam (youtube.com)

 

******


பழைய நினைப்புடா பேராண்டி : வாவ்! நாற்காலிகள்


2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வாவ்! நாற்காலிகள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நாற்காலிகளில் தான் எத்தனை வகை. இறைவனின் படைப்பில் இத்தனை இத்தனை வேறுபாடுகள்! அது என்ன நாற்காலிகளை இறைவன் படைத்தானா? எனக்குத் தெரிந்து நாற்காலிகளை தச்சர்கள் தானே செய்வார்கள் என்று கேட்கக் கூடாது!  


இந்த ”நாற்காலி” எனும் சொற்பதத்தினை விலங்குகளுக்குப் பயன்படுத்திய துளசி டீச்சருக்கு பாராட்டுகள்! அந்த சொல்லை நானும் அவருக்கு மனதில் நன்றி சொன்னபடியே சுட்டு விட்டேன்!


நாற்காலிகளை படம் பிடிப்பதெற்கென்றே ஒரு சிலர் பல தினங்கள் காடு மலைகளில் காத்திருந்து, இன்னல்கள் பல அடைகிறார்கள்.  அப்படி காத்திருந்து அருமையான படங்களை தங்களது காமிராக்களில் சிறைபிடித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  அப்படி பிடிக்கப்பட்ட படங்களை இந்த வருடத்தின் Wildlife Photographer of the Year போட்டிக்கு அனுப்பி இருந்தார்களாம். வந்திருந்த 41000 புகைப்படங்களில் இறுதிச் சுற்றுக்குச் செல்ல 50 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.  அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் புகைப்படம் எடுப்பதில் கத்துக்குட்டியான எனக்கும் மகிழ்ச்சி! எப்படி இவ்வளவு சிறப்பாய் படம் எடுக்கிறார்கள் என ஆச்சரியம்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : இருப்பு


முகநூலில் படித்து, ரசித்த கோடங்கி என்பவர் எழுதிய கவிதை ஒன்று - உங்கள் பார்வைக்கும், ரசனைக்கும்!



இருப்புன்னு

சொன்னா

இது ஒன்னுதான்

இப்போதைக்கு

             கையிருப்பு.

எல்லாம் 

வந்தாங்க

வளர்ந்தாங்க

             போனாங்க.

வறுமையிலும்

பெருமையிலும்

வந்தது வந்தபடி

இப்ப வரைக்கும்

இருப்பா இருக்கிறது

      இது ஒன்னுதான்.

எதுக்கு 

போறீங்க

எங்க போறீங்க

ஏன் போறீங்கன்னு

இதுவரை 

அவள் கேட்டதில்லை

இருந்தபோதும்

இல்லாதபோதும்

இதேபோல

நம்பித்தான்   

             தூங்குகிறாள்.

இனிமேலும்

அவள் தூங்கி

நான் இருக்க

         விருப்பமில்லை.

நானில்லாமல்

அவளும்

தூங்கிப்

             பழகவில்லை.

சிறு சிறு 

தூக்கங்கள்

எப்படியோ

வரட்டும் போகட்டும்

அந்தப்

பெருந்தூக்கம் 

                   வரும்போது

இரண்டு

பேருக்கும்

சேர்ந்தே வரட்டும்.

அதைத்தான் 

நாங்கள்

கடவுளிடம்

       வேண்டுகிறோம்..!


******


இந்த வாரத்தின் வேதனை :  எங்கே போனது மனிதம்…


சமீபத்தில் படித்த ஒரு செய்தி - மனதுக்கு வேதனை அளித்த செய்தி - கங்கையின் பிரவாகையில் மாட்டிக்கொண்ட ஒருவரை காப்பாற்றுவதற்கு, அவரது நண்பர்களிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டு - அதுவும் டிஜிட்டல் பேமெண்ட் - பெறும் வரை அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல் இருந்த ஒரு மனிதர்! பணம் வந்தால் தான் தண்ணீருக்குள் இறங்குவேன் என இருக்க, அதற்குள், தண்ணீருக்கும் மாட்டிக்கொண்ட அந்த மனிதர் இறந்தே போய்விட்டார்.  எங்கே போய்விட்டது மனிதம்? இந்த அழகில் இருக்கிறது மனிதம் - படிக்கும்போதே வேதனை தந்த ஒரு நிகழ்வு. செய்தியை படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்!


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது :  விசில்



ஒரு கல்லூரியின் வகுப்பில் ஒரு பேராசிரியர் சீரியசாக பாடம் எடுத்து கொண்டு இருந்தார்! அவர் ஒயிட் போர்டில் எழுதி கொண்டு இருக்க ஒரு துடுக்கு மாணவன் விசில் அடித்தான்.


அவர் எழுதுவதை நிறுத்தி விட்டு யார் விசில் அடித்தது என்று கேட்க ! யாரும் உண்மையை சொல்ல வில்லை.


அப்பொழுது பேராசிரியர் இத்துடன் இந்த பாடம் முடிகிறது, ஆனால் இன்னும் வகுப்பு முடிய நேரம் இருப்பதால் உங்களுக்கு என் அனுபவ கதையை சொல்கிறேன் கேளுங்கள் என்றார்.


நேற்று நான் வீட்டில் தூங்கலாம் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த போது தூக்கம் வர வில்லை, சரி காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு வரலாம், நாளை நேரம் இருக்காது என்று நினைத்து பெட்ரோல் போட சென்றேன்.


பெட்ரோல் போட்டு விட்டு மெதுவாக வரும்போது வழியில் ஒரு அழகான பெண் நின்று கொண்டு இருக்க சரி உதவி செய்யலாம் என்று நினைத்து பேச அவர் சொன்னார் சார் நான் வீட்டுக்கு போய் கொண்டு இருக்கேன் ஆட்டோ டாக்ஸி எதுவும் வர வில்லை என்று சொல்ல , நான் சரி உங்களுக்கு உதவுகிறேன் என்று அந்த பெண்ணை அவர்களின் வீட்டில் ட்ராப் செய்தேன்.


வண்டியில் இருவரும் நிறைய பேசினோம். அந்த பெண்ணிற்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. வீடு வந்ததும் அந்த பெண் என்னை நேசிப்பதாக சொல்ல நானும் அவளை நேசிப்பதாக சொல்லி நான் பேராசிரியராக கல்லூரியில் வேலை செய்கிறேன் என்று நம் கல்லூரியின் பெயரை சொன்னேன். இருவரும் எங்கள் ஃபோன் நம்பரை பரி மாறி கொண்டோம்.


அப்பொழுது அவர் சொன்னார் என் தம்பியும் உங்கள் கல்லூரியில் இந்த வகுப்பில் தான் படிக்கிறான் அவனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்று அன்புடன் சொன்னார். அதற்கு நான் அவன் பெயரை சொல்லு என்று கேட்க! அதற்கு அவர் பெயர் எதற்கு அவன் தான் வகுப்பில் சூப்பரா விசில் அடிப்பான் என்றார்.


அப்பொழுது வகுப்பில் எல்லாருடைய பார்வையும் ஒரே மாணவன் பக்கம் திரும்ப !


அந்த மாணவன் அசடு வழிந்து கொண்டு எழுந்திருக்க!


பேராசிரியர் சொன்னார்!


நான் முனைவர் பட்டம் காசு கொடுத்து வாங்க வில்லை! படித்து வாங்கினேன் ! Human Psychology என்றார்!



******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

21 செப்டம்பர் 2024


13 கருத்துகள்:

  1. பேராசிரியர் புத்திசாலித்தனம்தான் முதலில் கவர்கிறது.   

    அடுத்து கோடாங்கிபியின் கவிதை. 

    விளம்பரம் பின்னர் .பார்க்கவேண்டும். 

    பழைய பதிவு சென்று அந்த அருமையான புகைப்படங்களை மறுபடி ஒருமுறை ரசித்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வாசகம் மற்றும் அனைத்து பகுதிகளும் அருமை.
    பணம் கொடுத்தால் தான் காப்பாற்றுவேன் என்ற செய்தி வருத்தம் அளித்தது.
    விளம்பர காணொளி நெகிழ வைத்து விட்டது .

    //இரண்டு

    பேருக்கும்

    சேர்ந்தே வரட்டும்.

    அதைத்தான்

    நாங்கள்

    கடவுளிடம்

    வேண்டுகிறோம்..!//

    வயதான இணையர்களுக்கு இப்படி கிடைத்தால் வரம் தான்.

    பேராசிரியர் அனுபவ கதை விசில் அடித்த மாணவனை வெட்கபட வைத்து விட்டது.
    "வாவ் நாற்காலி" பழைய பதிவு படங்கள் எல்லாம் அருமை.




    பதிலளிநீக்கு
  3. ஹ்யூமன் சைகாலஜி பகுதி என்னைக் கவர்ந்தது

    பதிலளிநீக்கு
  4. பல நீர்வீழ்ச்சிகளின் அருகே, தண்ணீரில் குதிப்பவரை உள்ளே மாட்டிவிட்டு இறக்கச் செய்து சடலத்தை மீட்க பேரம் பேசும் கும்பல்கள் தமிழகத்தில் அதிகம். அதனை நினைவுபடுத்தியது கங்கைக் கரைக் கார்ரின் கதை

    பதிலளிநீக்கு
  5. பழைய நாற்காலி ரசிக்க வைத்தது.

    கவிதை சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
  6. வாசகம் நன்று.

    ஓ அமைதி தினமா? ம்ம்ம்ம் நல்ல விஷயம் ஆனா கடைப்பிடிக்கணுமே!!.

    நாக்(dh)த்வார் யாத்ரா ஆஹா போட வைக்கிறது. காணொளிகள் பார்க்க வேண்டும்... நாகபஞ்சமி குறித்து ஏதோ ஒரு சீரியல் வந்ததோ? ஒரு வித அமானுஷ்ய சீரியல் அப்படி ஒரு நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பேராசிரியர் புத்திசாலி அனுபவத்தைச் சொல்கிறேன் என்று அவர் ஆரம்பித்ததுமே புரிந்துவிட்டது....சைக்காலஜி!!!!! அவர் விசில் அடித்த மாணவனைத் தெரிந்து கொள்ள எப்படி கையாளப் போகிறார் என்பது...ரொம்ப பிடிச்சது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோடங்கி கவிதை மனதைத் தொட்டது. அருமையான கவிதை. அவர்களின் கவிதை இது போன்று ஒன்று முன்பும் பகிர்ந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மனிதம் பகுதியில் இரு விஷயங்களைப் பார்க்கலம. ஒன்று முக்கியமான ஒன்று அந்த டைவர் உடனே செயல்படாமல் பணத்தில் குறியாக இருந்தது. மிக மிக மோசமான ஒன்று மனிதம் அற்ற செயல்பாடு...இப்படி கோயம்புத்தூர் பகுதியில் இடம் பெயர் மறந்துவிட்டது அங்கு இப்படி பணம் பறிப்பதற்காகவே ஆற்றில் நீந்துபவர்களின் கால்களை தண்ணீருக்கடியில் சென்று இழுப்பது பாறைகளில் சிக்க வைப்பது என்று.

    கங்கை நிகழ்வில் செய்தியில் சிங்க் அவர்கள் செல்ஃபி எடுத்த்த வேளை என்று இருக்கு....இப்படியான பிரவாகமாக ஓடும் நதியில் குளிக்கும் போது செல்ஃபி தேவையா? அதுவும் படித்த்து பெரிய பொசிஷனில் இருப்பவர்களே இப்படிச் செய்வது...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விதம் விதமான நாற்காலிகள் இந்தச் சொல்லும் படங்களும் பார்த்த நினைவு....இருந்தாலும் போய் பார்ப்போம் என்று பார்த்தால் நல்ல நினைவு நாலுகால்களை விடுவனா....அத்தனையும் மீண்டும் பார்த்து ரசித்தேன் ...உங்கள் வரிகளும். கொடில காயப் போட்ட குட்டி குரங்கார் செம க்யூட்!!!! கடைசிப்படமும் செம ஷாட்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. விளம்பரம் மனதை நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது ஜி.

    எப்படி எலலம் உணர்வுபூர்வமாக யோசிக்கறாங்க ஒரு விளம்பரத்துக்கு என்று பல விளம்பரங்கள் சிந்திக்க வைக்கின்றன அதில் இதுவும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கவிதை மனதை தொட்டது. அது போல் விசில் கதை மிகவும் ரசித்தேன். நல்ல டெக்னிக் மாணவர்களை எப்படிக் கையாண்டால் சமாளிக்கலாம் என்ற மனோதத்துவம்.

    குறும்படம் போன்ற விளம்பரம் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....