செவ்வாய், 24 செப்டம்பர், 2024

தங்கச்சிலை மனிதன் - மழையும் தில்லியும் - நடை நல்லது - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு நான்காம் பகுதி! என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


தங்கச்சிலை மனிதன் - 28 ஆகஸ்ட் 2024:



அலுவலக நாட்களில் காலை நேரம் சற்றே தாமதமாக எழுந்துவிட்டால் தினசரி நடை செல்வதில் பிரச்சனைகள் வந்துவிடுகிறது. அப்படியான நாட்களில் மாலை நேரம் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் உள்ள கனாட் பிளேசில் இறங்கி வீடு வரை நடப்பதுண்டு. அப்படி நடக்கும்போது காலை வேளையில் நடக்காததை ஈடு செய்துவிடமுடியும் என்பதோடு இன்னும் நிறைய காட்சிகளையும் பார்க்க முடியும். அப்படி அடிக்கடி பார்க்கும் ஒரு விஷயம் தான் தங்கச் சிலை மனிதன்….


உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜ்நீஷ் தில்லியில் தங்கி பல வேலைகளைச் செய்து அதில் பிரச்சினைகளைச் சந்தித்தவர். பிறகு தனக்குள் இருக்கும் கலைஞனை வெளிப்படுத்தும் விதமாக தங்க வண்ண உடை, உடம்பு முழுவதும் தங்க வண்ணம் பூசிக்கொண்டு சிலை போலவே நிற்க ஆரம்பித்து விட்டாராம். இப்படி நிற்கும் இவருடன் படம் எடுத்துக்கொள்ளும் பலர், இவர் தனக்கு முன்னால் வைத்திருக்கும் டப்பாவில் காசு போட்டுச் செல்வதை நம்பியே இருக்கிறார். தானாக வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் முன்னூறு நானூறு ரூபாய் வரை சம்பாதித்து விடுகிறாராம். 


திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கும் இவர் வாழ்க்கை இப்படி சிலை மனிதனாக உருவெடுப்பதில் வரும் பணத்தை நம்பி தான் இருக்கிறது. இணையத்தில் இவர் குறித்த தகவல்களை இவராகவே ஒரு யூடியூப் சேனல் மூலமும் பதிவு செய்திருக்கிறாராம். நாளிதழ்கள் போன்றவற்றிலும் இவர் குறித்த கட்டுரைகள் உண்டு. இவருக்கும் வாழ்க்கை ஓடுகிறது. எனது சிறு வயதில் படித்த விஜிபி சிலை மனிதன் குறித்த தகவல்கள் நினைவுக்கு வந்தன - அவரின் வேஷமும் இவரின் வேஷமும் மாறுபட்டு இருந்தாலும் செயல் ஒன்றே…..


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்லாமல் சொல்கிறார் இந்த தங்கச் சிலை மனிதன்…..



மழையும் தில்லியும் - 29 ஆகஸ்ட் 2024:




அதிகாலையிலிருந்தே தலைநகரில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதனால் இன்றைய காலை நடை அம்பேல்! நான் தொடர்ந்து நடக்கலாம் என நினைத்தாலும், இயற்கை சதி செய்கிறது. ஆனாலும் எப்போதும் போல நேரத்தில் எழுந்து விட்டேன். வீட்டின் பால்கனியில் நின்று மழைப்பொழிவை ரசித்துக் கொண்டிருந்தேன்.  தலைநகரில் மழைப்பொழிவின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. முன்பெல்லாம் மழை என்பது ஒன்றிரண்டு நாள் மட்டுமே இருப்பதாக இருக்கும்! பெரிதாக மழைப்பொழிவு கிடையாது. அப்படியே பொழிந்தாலும் அதிக பட்சம் பத்து பதினைந்து நிமிடங்கள் தான். ஆனால் சமீப வருடங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு இருக்கிறது. அதனால் அதன் உடனான பிரச்சனைகளும் இருக்கின்றன.  


சரியான அளவில் பாதாள சாக்கடைகள் பராமரிக்கப்படாமல், பிளாஸ்டிக் கழிவுகள் அடைபட்டுக் கொண்டு ஒரு மணி நேர மழைப்பொழிவிலேயே சாலையெங்கும் வெள்ளக்காடு. முன்பெல்லாம் மிண்டோ ப்ரிட்ஜ் என அழைக்கப்படும் இரயில் பாதையின் கீழ் மட்டுமே தண்ணீர் தேங்கி பேருந்துகள் வாகனங்கள் மாட்டிக்கொள்ளும்! இப்போது இப்படியான இடங்கள் அதிகமாகிவிட்டது.  அதிலும் இந்த ஊர் பேருந்து/வாகன ஓட்டுனர்கள் கொஞ்சம் முரட்டு முட்டாள் வகையைச் சேர்ந்தவர்கள்! தங்கள் திறமை மீதும் வாகனத்தின் செயல் திறன் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்பதால் இடுப்பளவு தண்ணீரில் கூட வாகனத்தைச் செலுத்தி தண்ணீர் நிரம்பி இருக்கும் பகுதியை கடந்துவிடலாம் என முயற்சி செய்வார்கள் - விளைவு மாட்டிக் கொண்டு அப்புறம் வாகனத்தில் இருப்பவர்களை காப்பாற்ற வேண்டியிருக்கும். 


இன்றைக்கும் அப்படியான சூழல் தான். கொஞ்சம் மழை நின்ற வேளையில் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு சில அடிகள் நடக்க வேண்டியிருக்கும் என்பதால் புறப்பட்டு விட்டேன் - அலுவலகத்தின் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இறங்க மழை வலுத்தது! பத்து பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு தான் அலுவலகத்திற்குள் நுழைய முடிந்தது! பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது ஒரு வீடற்றவர் தன்னிலை மறந்து அரைகுறை உடையில் பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்! அவருக்கு யார் குறித்த கவலையும் இல்லை. வேட்டியை அவிழ்த்து போர்த்திக் கொண்டிருந்தார் - உடலின் பெரும்பாலும் துணியில்லை! சாலையில் விழுந்து தெறிக்கும் தண்ணீர் திவலைகள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்த நபர் மீதும் தெளித்துக் கொண்டிருந்தது! அவர் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் அல்லது மயக்கத்தில்.  யாருக்கும் அவரை எழுப்பவும் மனதில்லை. நிறைய போதை ஆசாமிகள் இங்கேயும் உண்டு என்பதால் எனக்கும் தயக்கம். இவர்களைப் போன்றவர்களிடம் போதைப் பழக்கம் அதிகம் உண்டு - அது குறித்து பிறகொரு பதிவில் எழுதுகிறேன். 


என்னதான் தேசத்தின் தலைநகர் என்றாலும் இங்கேயும் நிறைய பிரச்சனைகள் உண்டு.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டபடியே தனது வேலையைத் தொடர்கிறது இயற்கையும். 


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 செப்டம்பர் 2024


11 கருத்துகள்:

  1. தாய்வானில் இதுபோல தங்க, வெள்ளிபெயின்ட் அடித்துக்கொண்டு இயந்திரம்போல் நின்று யாசகம் வாங்குபவர்கள் இருந்தனர். படங்களுடன் விரைவில் பகிர்கிறேன். இந்த மாதிரி யோசனைகள் சீனாவில்தான் உதித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. தங்கச்சிலை மனிதன்...  இதுவும் ஒருவகை உழைப்புதான்.  பாவம்.   என்னத்துக்காகுமோ...

    மழை நாட்கள் உற்சாகத்தையும் சிரமத்தையும் ஒருங்கே தரக்கூடியது!

    பதிலளிநீக்கு
  3. கடவுள் வேடங்களில் காந்தி வடிவத்தில் வருவதில்லையா அது மாதிரிதான்...

    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
  4. இன்றைய புகைப்பட வாசகம் சிறப்பு ஜி.

    தங்க மனிதனின் வாழ்க்கை போல எல்லா நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. எனது சிறு வயதில் படித்த விஜிபி சிலை மனிதன் குறித்த தகவல்கள் நினைவுக்கு வந்தன - //

    எனக்கும் விஜிபி சிலை மனிதன் தான் நினைவுக்கு வந்தது. ஆனால் பாவம் இல்லையா? அசையாமல் சிலை போல நாள் முழுவதும் நிற்பது என்பது எவ்வளவு கடினம் இல்லையா? உடம்பு வலிக்காதோ? அதுவும் இப்படி பெயின்ட் எல்லாம் அடித்துக் கொண்டால் உடம்பில் தோலில் ரசாயனம் படியாதோ? முகம் வேறு பெயின்ட் அடிக்கும் போது கண் எல்லாம்...... பாவம். வாழ்க்கையை ஓட்ட உழைப்பு!

    இன்றைய வாசகம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இப்படி கடவுள் வேஷம் போட்டு - அந்தந்த சீசனுக்கு ஏத்தாப்ல, அம்மன், முருகன் என்று, ஆனால் இங்கு பெரும்பாலும் ராமர் ஆஞ்சனேயர் தான் போட்டு தெருத்தெருவாக வருவாங்க பெரும்பாலும் அவங்க ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு முறை ராமர் சீதா செட்டாக அதான் புகைப்படங்களில் பார்த்திருப்போமே அப்படி, ராமர் சீதை லஷ்மணன், ஆஞ்ச்நேயர் இப்படி வந்து தெரு முனையில் அல்லது நடுவில் அலல்து வீட்டின் முன் அப்படியே நிற்பார்கள் ஆஞ்சு கீழே உட்கார்ந்து ராமரை வணங்கி இருப்பது போல்....ஆனால் பைசா கேட்க மாட்டார்கள். ஆஞ்சு வேஷம் போட்டிருப்பவர் ராம நாம பாடல்களைப் பாடியபடி இருப்பார். சில சமயம் ராமரே தன் பாடல்களைப் பாடிக்கொண்டு ஜெய் bபோலோ ஹனுமானு கி என்று பாடிக் கொண்டு செல்வார்!!! பாவமாக இருக்கும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தங்கச்சியை மனிதன்.. பாவம்..! உடல் முழுவதும் தங்க கலரில் வர்ணம் பூசிக் கொண்டு அதற்கேற்ற உடைகளும் அணிந்த வண்ணம், ஓரிடத்தில் சிலை மாதிரி நிற்பதென்பது கடினம்தான். அவருடைய நிலை பரிதாபந்தான். ஆனால், இது அவராகவே அவர் வாழ்க்கைக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டது. என்ன செய்வது..!

    /எனது சிறு வயதில் படித்த விஜிபி சிலை மனிதன் குறித்த தகவல்கள் நினைவுக்கு வந்தன - /

    எனக்கும்..நானும் எப்போதோ ஒரு தடவை சென்னையிலிருக்கும் போது அங்கு சென்ற போது அந்த சிலை மனிதரை பார்த்திருக்கிறேன்.

    இப்போது சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு செல்லும் போது உடல் முழுக்க வெள்ளி கலரில் பெயிண்ட் அடித்துக் கொண்டு காந்திஜி மாதிரியான வடிவில் ஒரு மனிதரை கண்டேன்.

    எங்குமே மழை வெள்ளமாகாமல் பெய்யும் வரை நல்லதுதான். தங்கள் நடைப்பயிற்சி தினமும் தொடர வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. நாட்டின் தலைநகரிலும் இந்தப் பிரச்சனைகள் இருப்பதுதான் இன்னும் வருத்தம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வயிற்றுப் பிழைப்புக்காக பல மணி நேரங்கள் வேஷம் போட்டு நிற்பது கொடுமை.யாராவது பார்த்து வேலை வாய்ப்பளிக்கலாம். மழையை ஜன்னல் வழியாக ரசிக்கலாம்.மற்றபடி உடம்புக்கு கெடுதல். பார்த்துக் கொள்ளவும்.
    Viji

    பதிலளிநீக்கு
  10. வாசகம் அருமை.
    தங்கச்சிலை மனிதன் போல நியூயார்க் சென்று இருந்த போது நிறைய பேர் இப்படி
    சுதந்திரதேவி சிலை வேஷம் போட்டு தங்கம், பச்சை, வெள்ளை வண்ண பெயிண்ட் செய்து கால் கடுக்க நின்று யாசகம் பெறுகிறார்கள்.
    அழகர் திருவிழாவிற்கு கடவுள் வேஷம் அணிந்து யாசகம் பெறுவார்கள்.
    எப்படியோ உணவுக்கு தேடி கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  11. மழையால் நடை தடை பெற்றாதால் மழையால் ஏற்படும் கஷ்டங்களை சொன்னீர்கள்.
    மழையும் வேண்டி இருக்கிறது. மழை நேரத்தில் அலுவலகம் சென்றபோது பார்த்த காட்சிகள் எல்லா நாடுகளிலும் இப்படியான மனிதர்கள் இருக்கிறார்கள்.
    இங்கேயும் வீடு இல்லாதவர்கள் பாதைகளில் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து உலகை மறந்த நிலையில் இருப்பார்கள் சிகரெட் புகைத்து கொண்டு. கையில் ஒரு அட்டையில் வீடு இல்லை என்று எழுதி வைத்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....