வியாழன், 26 செப்டம்பர், 2024

பேருந்து பயணம் - செயலி மூலம் பயணச் சீட்டு - நகர் வலம் இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மறக்க முடியாத பாடகர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


சென்ற வாரம் நகர்வலம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியது நினைவில் இருக்கலாம்.  அந்த வரிசையில் இன்றைக்கு இரண்டாம் பதிவு! தலைநகரில் தில்லி பேருந்துகளுக்கான பயணச் சீட்டுகள் வாங்க இருக்கும் செயலி குறித்து பார்க்கலாம்!


செயலி வசதிகள்


நகர்வலம் தொடர்கிறது. சமீபத்தில் ஒரு ஞாயிறு அன்று மாலை நேரத்தில் எனது வேலைகளை முடித்துக் கொண்டு (வேறென்ன மத்தியானத் தூக்கம் தான்!) நகர்வலம் புறப்பட்டேன்.  எங்கள் ஊர் பேருந்துகளில் ஒரு வசதி - பயணச் சீட்டை நடத்துனரிடம் சென்று வாங்க வேண்டிய அவசியமில்லை! அவர் எப்படியிருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து வரப்போவதில்லை! நாம் தான் போய் வாங்க வேண்டும்.  அவர் பயணச்சீட்டை இரண்டு இடங்களில் சிறிய துண்டை (ஸ்டேஜ் எண்) கிழித்து கீழே போட்டுவிட்டு தருவார் - அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் சின்னச் சின்ன காகிதத் துண்டுகள் எப்போதும் பார்க்க முடியும்.  அந்தச் சீட்டை வாங்கிக் கொண்டு நம்மிடம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொலைந்தால், பயணச் சீட்டு பரிசோதகர் வந்துவிட்டால் நமக்குத் தொல்லை! இரு நூறு ரூபாய் நோட்டுகள் நமக்கு நஷ்டமாகலாம்!  ஆனால் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வசதி - செயலி மூலம் பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள முடியும் என்பது. 




One Delhi மற்றும் Chatr என இரண்டு செயலிகள் உண்டு. அதனை நம் அலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டுவிட்டால் அதன் மூலமாகவே நாம் பயணச் சீட்டுகள் வாங்கிக் கொள்ளலாம்.  பேருந்தின் நான்கு இலக்க பதிவு எண்ணை உள்ளீடு செய்தோ அல்லது பேருந்தில் பல இடங்களில் ஒட்டி வைத்திருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்தோ அந்தப் பேருந்தின் வழித்தடம் உள்ளீடு செய்து எங்கேயிருந்து எங்கே செல்ல வேண்டும் என்பதையும் உள்ளீடு செய்தால் கட்டணம் எவ்வளவு என்று திரையில் தெரியும்.  அந்தக் கட்டணத்தினை Gpay போன்ற செயலிகள் மூலமோ, வங்கியின் இணைய தளங்கள் மூலமோ செலுத்திவிட்டால், நமது அலைபேசியிலேயே பயணச் சீட்டு கிடைத்துவிடும்.  பயணச் சீட்டு பரிசோதகர் வந்தால் அதைக் காண்பித்தால் போதுமானது! பேருந்தின் வழித்தடம் என்ன, எங்கேயிருந்து எங்கே செல்கிறோம் போன்ற அனைத்து தகவல்களும் நமது அலைபேசியிலேயே தெரிந்து விடும். 


இந்த விஷயத்தில் இன்னுமொரு வசதி - லாபம் என்று கூட சொல்லலாம்! எந்த பயணச் சீட்டு வாங்கினாலும் 10 சதவீத கழிவு உண்டு - உதாரணத்திற்கு 10 ரூபாய் கட்டணம் என்றால், செயலிகள் மூலம் வாங்கும்போது நாம் ஒன்பது ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டியிருக்கும்! ஒரு ரூபாயில் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று தோன்றினாலும், ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும் நல்லது தானே - சிறுதுளி பெருவெள்ளம் என்று சும்மாவா சொன்னார்கள்? தொடர்ந்து ஒன்பது முறை பத்து ரூபாய் பயணச் சீட்டு செயலி மூலம் ஒன்பது ரூபாய்க்கு வாங்கிப் பயணித்தால், பத்தாம் முறை பயணிப்பது இலவசம் ஆகிறது இல்லையா?  


செயலிகளில் கிடைக்கும் இன்னுமொரு வசதி - எங்கே செல்ல வேண்டுமென்றாலும், இந்தச் செயலி மூலம் பேருந்துகளின் தகவல்களை பெற முடியும்.  நாம் இருக்கும் இடத்தினை செயலியாகவே தெரிந்து கொள்ள (அலைபேசியில் Location On ஆக இருக்கும் பட்சத்தில்!) போகும் இடத்தினை உள்ளீடு செய்தால், அந்த இடத்திலிருந்து என்ன பேருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும், மாற வேண்டுமென்றால் எத்தனை பேருந்துகள் மாற வேண்டியிருக்கும், தொலைவு என்ன, எத்தனை நேரம் ஆகும் என பல தகவல்கள் நமக்குக் கிடைத்து விடுகின்றன.  வரப்போகும் பேருந்து எத்தனை நிமிடங்களில் வரும், எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடிகிறது.  


இதெல்லாம் நல்ல வசதி தானே?  இந்த செயலி மூலம் தில்லி மெட்ரோ பயணத்திற்கும் சீட்டு வாங்க முடியும் என்பது கூடுதல் தகவல்! 


தொடர்ந்து வலம் வருவோம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 செப்டம்பர் 2024


7 கருத்துகள்:

  1. நல்ல தகவல்.  சென்னையிலும் கூட இப்படி இருக்கிறதோ என்னவோ..  பேருந்தில் பயணித்து ரொம்ப நாட்களாகி விட்டன.  கொரோனாவுக்கு முன் பேருந்தில் பயணித்தது.

    பதிலளிநீக்கு
  2. அது சரி, குறைந்த அளவு தூரம் சொல்லி ப.சீ வாங்கி நீண்ட தூரம் பயணம் செய்தால் அதைத் தடுக்க ஏதும் வழிகள் உண்டா?  எப்போதாவது செக்கிங்கில் மாட்டினால்தானே?

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    நகர்வலம் , மற்றும் பயண சீட்டு விவரங்கள் பயனுள்ளதாக இருக்கும் பயணம் செய்பவருக்கு.

    பதிலளிநீக்கு
  4. நல்ல வசதி. ஆமாம் தில்லிக்கு வேறு ஒரு நிகழ்விற்காக வந்த போது இந்த ஆப் உதவியது. மெட்ரோ, பேருந்து என்று உதவியாக இருந்தது. நல்ல தகவல்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல் ஜி. நானும் அறிந்தேன் ஆனால் பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை போன முறை தில்லி சென்ற போது.

    இங்கும் பங்களூரில் பேருந்தில் இப்படி செயலி மூலமாகவே எடுத்துவிடலாம். பாஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் பாஸ், ஒருவாரம், ஒரு மாதம் என்று. ஒரு நாள் பாஸ் 70 ரூ. எந்த இடத்திலும் ஏறி எந்த இடத்திலும் இறங்கலாம் அந்த நாள் முழுவதுக்கும். பேருந்தில் காசு கொடுத்து பெற்றால் பேருந்தில் ஏறியதும் ஆதார் எண் காட்டி பெற்றுவிடலாம். அதில் குறிப்பிட்டுக் கொடுத்துவிடுவார் நடத்துநர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. செயலி மூலம் பயணச்சீட்டு பெறுதல் நல்ல வசதிதான். காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தில்லி பேருந்தின் வழி முறைகள், செயலி மூலம் எப்படி நாம் சில சலுகைகளை பெற்று, பயன் பெறலாம் என்ற விவரித்து சொன்னது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    /ஒரு ரூபாயில் என்ன கிடைத்துவிடப் போகிறது என்று தோன்றினாலும், ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும் நல்லது தானே - சிறுதுளி பெருவெள்ளம் என்று சும்மாவா சொன்னார்கள்?/

    உண்மை. இதையே நம் பெற்றோர்கள் சொல்லித் தரும் போது நாம் அதை உணர்ந்து செயல்பட்டோம். ஆனால் இன்றைய இளைய தலைமுறைகளுக்கு நாம் என்னவோ கஞ்சத்தனமாக பேசுவது போல் தோன்றுகிறது. காலங்கள் மாறி விட்டது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....