வெள்ளி, 20 செப்டம்பர், 2024

நகர்வலம் வருவோம் வாங்க…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நிறுவனத்தின் பொன்விழா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நகர்வலம்



1991 - ஆம் ஆண்டு நிலக்கரி நகரம் நெய்வேலியிலிருந்து தேசத்தின் தலைநகரம் தில்லிக்கு வந்து சேர்ந்த போது வடக்கு மொழியான ஹிந்தியில் ஒரு அக்ஷரம் கூடத் தெரியாது. மொழியும் தெரியாது, ஊரும் தெரியாது, இங்கே உள்ள மனிதர்களின் பழக்க வழக்கங்களும் தெரியாது. வந்து சேர்ந்த நாட்கள் - ”திக்குத் தெரியாத காட்டில்” என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தமும் உணர்வு பூர்வமாக தெரிந்து கொண்ட நாட்கள் அவை.


அப்போது அறை நண்பராக இருந்தவர் ஒரு வழியைக் காண்பித்தார் - அது இங்கே இருக்கும் பேருந்துகளில் நாள் முழுவதும் ஒரு தினப்படி பாஸ் எடுத்துக் கொண்டு எந்த பேருந்தில் வேண்டுமானாலும் ஏறலாம், அங்கிருந்து அதே பாஸ் மூலம் வேறு பேருந்தில் ஏறி பயணம் செய்யலாம், நாள் முழுவதும் இப்படி தில்லியைச் சுற்றி வரும் வசதி உண்டு,  அதில் பயணம் செய்து பல புதிய அனுபவம் பெறலாம் என்பது தான் அந்த வழி. பல வித மனிதர்களைக் காண்பதோடு புதிய இடங்களையும் பார்க்கலாம் என்று சொல்லித் தந்தார்.


அப்படியான அனுபவத்தைப் பெற ஒரு சுப யோக சுப தினமாக, விடுமுறை நாளான ஞாயிறு அன்று வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டேன். காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டது, இரவு வீடு திரும்பும் போது நேரம் இரவு ஒன்பது. மொழி தெரியாமல், ஒரு அசட்டு தைரியத்தில் ஊர் முழுக்க இப்படி பல விடுமுறை நாட்களில் தில்லி நகரைச் சுற்றி வந்திருக்கிறேன். அப்படி சுற்றியதில் தில்லி நகரில் உள்ள பல இடங்களைப் பார்த்ததோடு புதிது புதிதான பல அனுபவங்களைப் பெற முடிந்தது. 


அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் பேசியதிலிருந்தும் இப்படிச் சுற்றியதிலிருந்தும் கிடைத்த இன்னுமொரு பலன் இந்த ஊரின் மொழியைக் கற்றுக் கொண்டது. இப்படியான நகர்வலங்கள் நிறைய அனுபவங்களைத் தந்தது.  விடுமுறை நாட்களில் வீட்டில் அடைந்து கிடைப்பதற்கு பதிலாக மீண்டும் நகர்வலம் வரலாம் என்று ஒரு யோசனை….. :) நகர்வலங்களில் கிடைக்கும் அனுபவங்களை அவ்வப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


நஷ்டத்தில் DTC:


DTC - Delhi Transport Corporation என்ற பெயரில் இயங்கி வரும் தில்லி நகர பேருந்து நிறுவனம் பல வருடங்களாகவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதற்கான காரணம் என்று பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒன்று குறைவான கட்டணம் - இதைச் சொன்னால் சிலர் என்னிடம் வம்புக்கு வரலாம்! இருந்தாலும் பரவாயில்லை சொல்கிறேன் - இங்கே குறைந்த பட்ச பயணச் சீட்டு ஐந்து ரூபாய், அதிக பட்சம் பதினைந்து ரூபாய் - இந்தக் கட்டணங்கள் சாதாரண பேருந்துகளுக்கு! அதுவே குளிரூட்டப்பட்ட பேருந்துகளாக இருந்தால் குறைந்த பட்சம் பத்து ரூபாய், அதிக பட்சம் இருபத்தி ஐந்து ரூபாய்.  தில்லியின் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கும் இந்த பேருந்துகளில் சிலவற்றின் மொத்த பயணிக்கும் தூரம் நம் மாநிலத்தில் அடுத்த ஊருக்குப் போகும் அளவு தூரம்! உதாரணத்திற்கு 729 எனும் பேருந்து எண் மோரி Gகேட் பேருந்து நிலையத்திலிருந்து காபஷே(டா)ரா பார்டர் என்கிற இடத்திற்கு மொத்த தூரம் சுமார் 28 கிலோ மீட்டர் - கிட்டத்தட்ட 45 நிறுத்தங்கள் இடையே உண்டு. சாதாரண பேருந்தில் இதற்கான கட்டணம் ரூபாய் பதினைந்து மட்டுமே! குளிரூட்டப்பட்ட பேருந்து எனில் 25 ரூபாய்! இதே அளவு தொலைவிற்கு நம் ஊரில் வாங்கும் கட்டணம் எவ்வளவு என்பதை நீங்கள் சொல்லுங்களேன்!



குறைவான கட்டணம் என்றாலும் பலர் பயணச் சீட்டு வாங்குவதில்லை. அவ்வப்போது பயணச் சீட்டு பரிசோதகர் பிடித்தாலும் 200 ரூபாய் தண்டம் கட்டிவிட்டு ஒன்றுமே ஆகாதது போல நடையைக் கட்டுவார்கள். இப்படி என் அலுவலகத்திலும் ஒரு நபர் இருந்தார். இப்படிச் செய்வதற்கு அவர் சொன்ன காரணம், தொடர்ந்து பல முறை பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தாலும் இது வரை ஒன்றிரண்டு முறை மட்டுமே பரிசோதகர்களிடம் மாட்டியிருப்பதாகவும் எப்படியிருந்தாலும் எனக்கு லாபம் தான் என்றும் சொல்வார். 


சென்ற வாரம் இப்படி நகர்வலம் வந்த போது ஒரு பேருந்தின் நடத்துனர் பாஸ் என்று சொன்னவர்களிடம் அதனைக் காண்பிக்கச் சொல்ல, ஒருவரின் பாஸ் 2023 - இல் காலாவதி ஆனது தெரிந்தது. இன்னொருவர் காண்பித்தது மூன்று நாட்கள் முன்னர் காலாவதி ஆனது - அவர் நடத்துனரிடம் சண்டை போடுகிறார் - உங்க அப்பன் வீட்டு காசா போகுது? டிக்கெட் வாங்காம விடேன் என்று…. கூடவே பக்கத்தில் இருந்த ஒருவரின் வாதம் - பொம்பளைங்க எல்லோருக்கும் இலவசம்….. எங்கள்ட்ட மட்டும் காசு கேளு என்று….. பொதுவாக DTC நடத்துநர்கள் அவர்கள் இருக்கையிலிருந்து நகர மாட்டார்கள். டிக்கெட் வாங்க வேண்டுமென்றால் பயணி தான் அவரிடம் செல்ல வேண்டும். அவ்வப்போது பயணச் சீட்டு வாங்கிக்கோங்க என்று குரல் கொடுப்பதோடு சரி! வித்தியாசமாக ஒரு சில நடத்துநர்கள் இப்படி பாஸ் என்று சொல்பவர்களிடம் கேட்டு திட்டு வாங்கிக் கொள்வதுண்டு அல்லது சண்டை போடுவார்கள். பெரும்பாலும் ஏமாற்றுவதை ஒரு தொழிலாகவே சில பயணிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல முறை பார்த்திருக்கிறேன்.


என்னதான் நஷ்டத்தில் இருந்தாலும் புதிதாக கடன் வாங்கி புதிய மின்சாரப் பேருந்துகளை இயக்குகிறது DTC! இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், பணி ஓய்வு பெறும் பல தொழிலாளிகளுக்கு தர வேண்டிய பல பலன்கள் நிலுவையில்…… சில மாதங்கள் சம்பளம் தரவே கஷ்டப்படுகிறார்கள்! 


DTC நஷ்டத்தை நானும் ஒரு விதத்தில் அதிகமாக்குகிறேன் - எனது நகர்வலத்தினால்!


தொடர்ந்து வலம் வருவோம்…..


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

20 செப்டம்பர் 2024


10 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான ஷேர். ஃபேஸ்புக்கிலும் படித்தேனோ?

    பதிலளிநீக்கு
  2. நானும் 1972இல் ஹிந்தி தெரியாமல் டெல்லியில் பாடு பட்டது நினைவில் வந்தது. இந்தியன் ஏர்லைன்ஸ் வேலைக்கு எழுத்து பரீட்சை, aptitude test, நேர்முகம், என்று மூன்று நாள் தேர்வு. கரோல் பாகில் wea வில் லாட்ஜ். parliament ஸ்ட்ரீட்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகம், மற்றும் பஹதூர் ஷா ஜாபெர் மார்கில் IBM அலுவலகம் என்று மாறி மாறி பரீட்சை இடங்கள். ஷேர் ஆட்டோ போல் ஷேர் பட் பட். கடைசி சுற்றில் நீக்கப்பட்டேன். ஆனால் பயணப்படி 140*2 கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் நான் சென்ற வெளிநாடுகளில் பஸ், ரயில் பாஸ் எடுத்து ஊர்்சுற்ற ரொம்பவும் பிடிக்கும். குறைந்த செலவில் பல இடங்களைப் பார்க்கலாம்.

    அனைவருக்கும் யாராவது எதையாவது இலவசமாகத் தந்துகொண்டே இருக்கவேண்டும். இந்திய மனநிலை இது.

    பதிலளிநீக்கு
  4. வாசகம் அருமை நான் முகநூலில் இந்த பதிவை படித்தேன்.
    நகர் வலம் அருமை. மொழி கற்றுக் கொள்ள உதவியது மற்றும் பல அனுபவங்களை தந்த நகர் வலம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. நகர் வலம் அருமை.குறைவாக கட்டணம் இருந்தும் அதையும் வாங்காமல் பயணம் செய்வது நம் மக்களுக்கே உரிய குணம்.அது வேறு எங்கோ பிடுங்கிக் கொள்ளும் என்பது தெரியாத அறியாமை.மஹா பெரியவாளை பார்க்க வந்த ஒருவர் railways வேலை செய்பவர்.அடிக்கடி வருவார். மஹா பெரியவா அவரிடம் கேட்டாராம் எப்படி வர என்று.பாஸ் இருக்கிறது என்று இவர் சொன்னதும் எவ்வளவு தடவை அதை use செய்யமுடியும் என்று மஹா பெரியவா கேட்க 3 முறை அதில் endorsement வாங்கினால்.
    ஆனால் அதில் ticket checker இடம் கான்பிக்காமல் அதாவது endorsement வாங்காமல் இருந்தால் பல முறை உபயோகிக்கலாம் என்று இவர் சொல்லியிருக்கிறார்.அதற்கு மஹா பெரியவா சொன்னாராம்.அப்படி railways ஐ ஏமாற்றி இங்கு நீ அடிக்கடி வரவேண்டாம் என்று!
    ஒருவரை ஏமாற்றுவது என்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் சூனியம்! திரும்பி வந்தே தீரும்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  6. நாம் அரசியல்வாதிகளை திருடர் என்று முத்திரை குத்தி விடுகிறோம்.

    மக்களில் பெரும்பாலானோர் இப்படித்தான் நேர்மை என்பது நமது இரத்தத்தில் ஊறிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஓ! 1991 என்றால் உங்களுக்கும் தில்லிக்குமான தொடர்பு நீண்ட 33 வருடங்கள் இல்லையா! அப்படி என்றால் அந்த அளவு உங்கள் மனதிற்கு அன்யோன்யமான நகரம் தில்லி இல்லையா?! ஒரு விதத்தில் கொடுப்பினைதான்.

    தற்போது பொதுப்போக்குவரத்துக் கழகங்கள் எல்லாம் பெரும்பாலும் நஷ்டத்தில்தான் ஓடுகின்றன. அது மக்கள் சேவைக்காக என்பதால் இப்போதும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. ஜி! நீங்க 1991? நான் வேலையில் சேர்ந்திருந்தால் 1987 ல் இருந்திருக்கும். ஆனால் வாழ்க்கை திசைதிரும்பிவிட்டது.

    இங்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ 5, அதிக பட்சம் என்றால், குளிரூட்டப்பட்ட பேருந்தில் செல்ல 25 ரூபாய், சாதாரண பேருந்தில் அதே தூரம் 15-20 க்குள். பேட்டரியில் ஓடும் பேருந்தானாலும். தெற்கு பெங்களூரில் இருந்து வடக்கு பெங்களூர் செல்ல 2 மணி நேரம் ஆகும். பெண்களுக்கு இலவசம்.

    பெண்களுக்கு இலவசம் என்பதை நீக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. நஷ்டத்தில்தான் இயங்குகிறது போக்குவரத்து. பல பணியாளர்களுக்கும் ஊதியமே இடையில் இல்லை. அல்லது தாமதம் என்று பல புகார்கள் இருக்கின்றன. ஆனால் புதியதாக நிறைய இறக்குகிறார்கள். இங்கும் பேருந்து வசதிகள் பரவாயில்லை. நன்றாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

    மக்களிடம் நேர்மை என்பது பிறவியிலேயே வர வேண்டும் இலவசம் என்பதற்குப் பழகிவிடுகிறார்கள் மக்கள். முன்பெல்லாம் அரசன் நல்லவனாக இருந்தால் மக்கள் நல்லவர்களாக இருப்பார்கள் என்ற சொல் உண்டு அது அப்போது அரசர்கள் ஆண்டதால், இப்போது ஜனநாயகம் என்பதால் மக்கள் நேர்மையாக இருந்தால் கண்டிப்பாக நல்ல தலைவர்களை உருவாக்கலாம். ஏனென்றால் மக்கள் கையில்தானே ஓட்டு! மக்கள் அதாவது நாம் நம் உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.

    நம் நாட்டில் அபராதம் என்ற ஒன்று இருந்தால்தான் மக்கள் பயப்படுகிறார்கள் என்று நினைத்தாலும் அதையும் டபாய்க்கும் மன நிலை இருந்தால் எப்படி முன்னேறும்? நேர்மை என்பது நம்மோடு வர வேண்டும். அது பெற்றோரின் வளர்ப்பில் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    தில்லியில் தாங்கள் பேருந்தில் நகர்வலம் வந்த செய்திகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது. குறைந்த கட்டணத்திற்கு நாள் முழுவதும் பேருந்தில் பயணித்தது சிறப்பு. இங்கும் நாங்கள் வந்த புதிதில் அப்படி நான்கைந்து பேருந்துகள் ஏறி, இறங்கி ஆங்காங்கே சென்ற நினைவை தங்கள பதிவு மீட்டுத் தந்தது. இப்போதும் இங்கும் பேருந்தில் பல சௌகரியங்கள் உள்ளன. ஆனால் நாங்கள்தான் செல்வதில்லை. குழந்தைகள் மெட்ரோ வசதியாக உள்ளதென அதில் (அலுவலகத்திற்கு கூட) பயணிக்கிறார்கள்.

    ஏமாற்று பேர்வழிகள் எங்கும் இருப்பது வருத்தத்துக்குரிய செயல்தான். அவர்களை எந்த சூழலிலும், எதிலும் மாற்ற இயலாது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நகர் வலம் மூலமாக மொழியைக் கற்றுக் கொள்ள முடிந்தது சிறப்பு. மீண்டும் நகர்வலம் தொடரட்டும். இவ்வளவு நஷ்டத்தை DTC சமாளித்து இயங்குவது வியப்பே. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் சரியாகக் தரப்பட வேண்டுமல்லவா? குறைந்த கட்டணத்தைக் கூட கொடுக்காமல் மக்கள் ஏமாற்றுவது வருத்தமே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....