அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அனுபவங்கள் பலவிதம் - தொடர் முடிவு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த நாள் இனிய நாள் : விநாயகர் சதுர்த்தி
இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி… அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லதையே நல்க எனது பிரார்த்தனைகள்.
******
இந்த வாரத்தின் தகவல்: தாடிக்கென்று ஒரு தினம்…
******
இந்த வாரத்தின் முகநூல் இற்றை : குறை…
முகநூலில் படித்து ரசித்த இற்றை ஒன்று உங்கள் பார்வைக்கும்! சந்த்யா சங்கர் என்பவர் இப்படி எழுதி இருந்தார்! அவர் சொல்லி இருப்பது குறித்த உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாலு பேர் நம்மள குறை சொன்னா நம்மகிட்ட குறை இருக்குனு அர்த்தமில்லை.
அந்த நாலு பேருக்கு வேற வேலை இல்லைனு அர்த்தம்.!
******
பழைய நினைப்புடா பேராண்டி : நாளைக்கு உனக்கும் இந்நிலை வரலாம்.....
2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நாளைக்கு உனக்கும் இந்நிலை வரலாம்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
சில நாட்கள் முன்னர் மயிலாடுதுறை சென்றபோது பேருந்தில் இப்படி நிறைய விஷயங்கள், பேருந்தில் அலறிக் கொண்டிருக்கும் பாடல்களைத் தாண்டி காதில் விழுந்த வண்ணம் இருந்தது. ஒன்று மட்டும் மனதில் தங்கி விட்டது! பக்கத்து இருக்கையில் கணவன் – மனைவி, ஒரு கைக்குழந்தை..... குழந்தைக்கு புட்டிப் பால் கொடுத்தபடியே அவர்கள் பேசிக் கொண்டிருக்க, நானும் மற்றவர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தோம் – என் வேலை வேடிக்கை பார்ப்பது! சாலையில் பயணிக்கும்போது ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் அப்படி ஒரு சுகம் – இப்பவும் ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கிறது – சிறுபிள்ளை மாதிரி!
பக்கத்து இருக்கையில் இருந்து கேட்ட மனைவியின் குரல் ”அத்திப்பழம் சிவப்பா, இந்த அத்தை மக சிவப்பா” பாடலையும் தாண்டி என் காதில் விழுகிறது – மனைவி தனது கணவனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் – “அறைஞ்சுடுவேன் அறைஞ்சு – என்னா நினைச்சுட்டு இருக்கே!” அறைஞ்சுடுவாரோ என பேருந்தில் இருந்த பலரும் திரும்பிப் பார்த்தார்கள் – என்னையும் சேர்த்து தான்! நல்ல வேளை பேருந்தில் அடி வாங்கவில்லை – எப்படியும் வீட்டுக்குப் போனால் நிச்சயம் கிடைத்திருக்கும் – இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க பேருந்து தொடர்ந்து பயணித்து பேருந்து நிலையம் வந்து தான் நின்றது! – அதற்கும் திட்டு கிடைத்தது – ”ஸ்டாப் வந்துடுச்சான்னு பார்க்க மாட்டியா!”
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : குஷி…
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்(?) ஆக சமீபத்தில் பார்த்த காணொளி ஒன்று - இது விளம்பரமா இல்லை ஏதும் குறும்படமா இல்லை தனியாக எடுக்கப்பட்ட காணொளியா தெரியாது! ஆனாலும் பார்க்க பிடித்திருந்தது. பாருங்களேன் இந்தப் பெரியவரின் சேட்டையை! 🙂 Men will be Men விளம்பர வரிசை நினைவுக்கு வருகிறதா உங்களுக்கும்!
https://www.facebook.com/watch/?v=2702500099930468
******
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : ஈஸ்வர அனுக்ரஹம்…
சமீபத்தில் சொல்வனம் தளத்தில் படித்து ரசித்த ஒரு சிறுகதை. மூலக் கதை தெலுகு மொழியில் பொத்தூரி விஜயலட்சுமி என்பவர் எழுதியது. தமிழாக்கம் ராஜி ரகுநாதன் அவர்கள். கதை மனதைத் தொடும் விதத்தில் இருந்தது. ஒரு சிறு பகுதி கீழே. முழு கதையையும் படிக்க சுட்டியும் கீழே தந்திருக்கிறேன்.
”எங்கே போக வேண்டும், சார்?” என்று டிரைவர் கேட்டபோது, “கிருஷ்ணா நதிக் கரையோடு எங்கு மக்கள் கூட்டம் இல்லையோ அங்கே அழைத்துச் செல். இரவு வரை சும்மா அப்படிச் சுற்றி வருவோம். நீ விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்” என்றான் கிஷோர்.
டிரைவர் தலையாட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான். வானிலை சுகமாக இருந்தது. பசுமையான வயல்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. கிஷோரின் மனம் காற்றில் மிதந்தது. நடுவில் ஒரு சிறிய ஊரில் நிறுத்தி சைவ விடுதியில் வெந்தயத் தோசை தின்று காபி குடித்தான். சாலை அருகில் இருந்த குளத்தில் பிள்ளைகள் நீச்சல் அடிப்பதை வண்டியை நிறுத்திப் பார்த்து ரசித்தான்.
அவர்கள் உற்காகமடைந்து, “சார், நீங்கள் காசு கொடுத்தால் நாங்கள் தாமரைப் பூ பறித்துத் தருவோம்” என்றார்கள். “சரி” என்றான். அவர்கள் நதியில் குப்புறக் குதித்து பறித்து வந்த போது மறுக்காமல் எல்லாப் பூக்களையும் வாங்கினான்.
மேலும் படிக்க…
ஈஸ்வர அனுக்ரஹம் – சொல்வனம் | இதழ் 324 | 11 ஆக 2024 (solvanam.com)
******
இந்த வாரத்தின் ஆலயம் : Bபீம்லத் மஹாதேவ் மந்திர்
ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் இருக்கும் ஒரு அழகான அருவி Bபீம்லத்… அருவி இருக்கும் பகுதியின் அருகிலேயே அமைந்திருக்கும் ஒரு ஆலயம் Bபீம்லத் மஹாதேவ் மந்திர். பெயரை பார்க்கும் போதே மஹாபாரத பீமனுக்கும் இந்த இடத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கும் என உங்களுக்குத் தோன்றினால், உங்கள் முதுகை நீங்களே சபாஷ் சொல்லி தட்டிக் கொள்ளுங்கள். நாட்டை இழந்து வனவாசிகளாக நாடோடிகளாக திரிந்த போது இந்த இடத்தின் வழி பாண்டவர்கள் சென்றபோது அவர்களுக்கு மிகுந்த தண்ணீர் தாகம் எடுக்க, Bபீமன் தனது காலின் பலம் கொண்டு பூமியைத் தாக்க அங்கே ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அருவி உண்டானதாம். அந்த அருவி நீரைக் கொண்டு தங்களது தாகத்தினை தீர்த்துக் கொண்டார்கள் என்பது நம்பிக்கை. இன்றைக்கும் இந்த இடத்தில் Bபீம்லத் என்ற பெயரில் ஒரு அருவி இருக்கிறது. அதே போல அருவியின் அருகே ஒரு சிவாலயமும் அமைந்திருக்கிறது. அருவியில் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களும் தண்ணீர் வரத்து இருக்கும் என்றும் தெரிகிறது. வாய்ப்பு அமைந்தால் அங்கே சென்று வரலாம். ராஜஸ்தானின் பிரபலமான மாவட்டமான கோட்டா (பல பயிற்சி நிறுவனங்கள் இருக்கும் இடம்!) அருகே இருக்கிறது இந்த இடம். தில்லியிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவு!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
7 செப்டம்பர் 2024
இந்த மாதிரி ஜடை போட்ட தாடி எல்லாம் வைத்துக் கொள்வதில்லை என்றாலும் நானும் குறுந்தாடிவாலாதான்! இப்போது சற்று மாறுபட்ட தாடியுடன் காட்சியளித்து மகன்களுக்கு மகிழ்ச்சியையும், மனைவி, பெரியவர்களுக்கு கடுப்பையும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குவேற மாதிரி படிச்சிருக்கேன்...
ஊர்ல நாலுபேர் நாலுவிதமா ஏசறாங்கன்னா என்ன அர்த்தம்?
அந்த நாலுபேருக்குள்ள ஒத்துமை இல்லைன்னு அர்த்தம்!
காணொளி : வயசானாலும் வாலிபம் போகலை!
பீம்லத் சுவாரஸ்யம்.
இரண்டாம் படத்தில் உள்ளவரையோ இல்லை அவரைப் போன்றவரையோ நான் துபாயில் பார்த்திருக்கிறேன். தன்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள பத்து திர்ஹாம் என்றார். தூரத்திலிருந்து படம் எடுத்தேன். முடிந்தால் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குஇதுபோல நீளமான நகங்கள் (2-3 அடி நீளம்), பெரிய தாடி, தலைமுடி என அலைபவர்களைக் கண்டு எனக்குப் பரிதாபமாக இருக்கும்.
பதிலளிநீக்குவிநாயகர் cute ஆக இருக்கிறார்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் வாழ்த்துகள் ஜி
கீதா
அந்த தளம் சென்று கதையை வாசித்து மனம் கசிந்தேன். அருமையான கதை, இப்போது பள்ளியில் அந்தந்த சொற்பொழிவு பற்றி நடக்கும் அரசியலும் நினைவுக்கு வந்ததது. இந்நேரத்தில் இந்தக் கதை வாசிக்கக் கிடைத்தது தற்செயல்தான்.
பதிலளிநீக்குதாடி தினம்!! ஹாஹாஹாஹா
பதிலளிநீக்குஅதே ஜி பலருக்கும் குறிப்பாக வீட்டில் பெரியவர்களுக்குப் பிடிப்பதில்லை என்றால் இப்போதைய தலைமுறையினர் விரும்புகிறார்கள்.
தாடி தினம் என்றதும் மீசை தினம் இல்லையா என்று நம் கில்லர்ஜி நினைவுக்கு வந்தார்
இரண்டாவது படம் ஹாஹாஹாஹா என்னவோ போல்தான் இருக்கு.
நம்ம ஸ்ரீராமும் கூட அப்பப்ப மாற்றி மாற்றி தாடி எல்லாம் வளர்ப்பார்...ஸ்டைலிஷாக!!! ஆ அவர் இதைப் பார்ப்பாரே!!! அதனால என்ன!!!
கீதா
குறை - பற்றிய இற்றை பிடித்திருக்கு
பதிலளிநீக்கு//என் வேலை வேடிக்கை பார்ப்பது! சாலையில் பயணிக்கும்போது ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பதில் அப்படி ஒரு சுகம் – இப்பவும் ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கிறது – சிறுபிள்ளை மாதிரி!//
ஹாஹாஹாஹா இந்த லிஸ்டில் நானும்! இப்பவும் ஜன்னல் இருக்கைக்கு அலைவேன்.
கீதா
ராஜா காது -.....மேட்டர் வாசிச்சது போல இருக்கிறதே.... நிழலாக மனதில்னு...ஆமா சரிதான்னு அங்கு போய் பார்த்ததும் தெரிந்தது.
பதிலளிநீக்குஅந்தக் கோபக்காரப் பெண்மணி - கல்லுக்குள் ஈரம் போலத் தெரிந்தது. ஆனால் என்ன மன உளைச்சலோ?
குஷி - விளம்பரப் படம் போன்று தெரியவில்லை...(ஆனா இப்பலாம் விளம்பரமும் கூடக் குறும்படம் போலதான் எடுக்கறாங்க!!) அழகான ஒரு படம்...அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....வயது!!? யதானவர் ஏன் அப்படி ஐஸ்கீரிமை கோட்டில் வைக்கிறார் என்பது அவர் அந்தப் பெண்மணியைப் பார்ப்பதற்கென்றே செய்து கொள்கிறார் என்று தோன்றுகிறது! அரசித்தேன்...
பின்னணிப் பாடல் அருமை! வாசந்தி ராகம் என்று தோன்றுகிறது கடைசியில் முடிக்கும் போது!
கீதா
பொத்தூரி விஜயலக்ஷ்மி குறித்து சமீபகாலத்தில் அறிந்தேன் அறியப்பட்ட எழுத்தாளர் என்றும் தெரிந்தது. இவருடைய மற்றொரு மொழிபெயர்ப்புக் கதையை வாசித்து அதைப் பற்றி எழுத நினைத்துக் குறிப்புகளும் எடுத்து வைத்திருந்தேன். சொல்வனத்தில் இக்கதையை வாசித்ததும் மனம் நெகிழ்ச்சியடைந்துவிட்டது. கண்ணில் நீர் துளிர்த்தது, அருமையான கதை.
பதிலளிநீக்குகீதா
ராஜஸ்தான் பீம்லத் அருவி! எனக்கும் ஒரு ஷொட்டு போட்டுக் கொண்டேன்!!!!!! வாய்ப்பு கிடைத்தால் கிடைத்தால் னு நிறைய இடங்களை லிஸ்டில் வைத்திருக்கிறேன்! இப்ப இதுவும் சேர்ந்துவிட்டது!
பதிலளிநீக்குகீதா
பதிவு அருமை
பதிலளிநீக்குதாடிதினம் படம் நன்றாக இருக்கிறது
பிள்ளையார் அழகு பிள்ளையார் சதுரத்தி வாழ்த்துகள்