சனி, 28 செப்டம்பர், 2024

காஃபி வித் கிட்டு - 204 - பொதி தோசை - Gun Salute - தஹி கே ஷோலே - ஏலச் சந்தை - Dodital - Funzoa - புளியமரத்தாள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று காலை வெளியிட்ட கதம்பம் பதிவினையும் மாலையில் வெளியிட்ட ஸ்துமாரி (Stumari) - உலக சுற்றுலா தினம் பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ராஜா காது கழுதை காது : பொதி தோசை 



உங்களில் யாருக்கேனும் பொதி தோசை என்ற தோசை வகை தெரியுமா?  கேட்கும்போதே, தோசையை பொதிந்து (பொட்டலம் கட்டி) தருவதால் பொதி தோசையோ என்று தோன்றியது எனக்கு! விஷயம் அதுவல்ல!


சமீபத்தில் ஒரு நகர்வலத்தின் போது ஒரு தென்னிந்திய உணவகத்தின் பெயர் பார்த்து, சற்றே அவசரப்பட்டு அல்லது அல்ப ஆசைப்பட்டு அதில் சாப்பிடலாம் என்று நுழைந்தேன். அ(நொ)ந்த அனுபவம் பிறிதொரு சமயம் நகர்வலம் பதிவாக எழுதுகிறேன்.  அங்கே ராஜா தனது காதைத் தீட்டி வைத்திருந்த போது கேட்டது…


”ஒரு பொதி தோசை மற்றும் மைசூர் மசாலா தோசை” என்று ஹிந்தியில் கடைக்காரரிடம் சொன்னார் ஒரு வட இந்தியர்!


கேட்ட எனக்கும், கடை வைத்திருந்த இளைஞருக்கும் (இவர் குறித்தும் நகர்வலப் பதிவின் போது எழுதுகிறேன்!) என்ன கேட்கிறார் என்று புரியவில்லை!  அங்கே கிடைக்கும் உணவு வகைகளின் பட்டியலில் கை வைத்து காண்பித்த போது தான் புரிந்தது - அவர் கேட்டது பொடி தோசை! ஆங்கிலத்தில் Podi என்று எழுதியிருப்பதை தான் அவர் பொதி தோசை என்று கேட்டிருக்கிறார் என்பது!


******

 

இந்த வாரத்தின் தகவல்: Gun Salute…



எனது மத்தியப் பிரதேச பயணக் கட்டுரை ஒன்றில் Bபுந்தேல்கண்ட் பகுதியின் ஓர்ச்சா என்ற நகரில் இருக்கும் ராமர் கோவில் குறித்து எழுதி இருக்கிறேன். நினைவில் இல்லை என்றாலோ, படித்திருக்காவிட்டாலோ இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.  இந்தக் கோவிலில் ஒரு வழக்கம் உண்டு - அது ராமரை தங்களது ராஜாவாக வணங்குவது - ராஜா ராம் மந்திர் என்ற பெயரிலேயே இக்கோவிலை அழைக்கிறார்கள். இங்கே தினமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் துப்பாக்கியுடன் தினம் தினம் Guard Changing Ceremony வழக்கத்தினை கடைபிடிக்கிறார்கள். இணையத்தில் சில காணொளிகளும் உண்டு - விருப்பம் இருந்தால் தேடிப் பாருங்களேன்! இது போல ஒரு நிகழ்வு இந்தியாவில் வேறு எந்த ஆலயத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை! உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்!


******


இந்த வாரத்தின் உணவு : தஹி கி ஷோலே…



தலைநகர் தில்லியின் INA Colony பகுதியில் பண்டிட் ராம் ஷரன் ஷர்மா என்ற பெயரில் ஒரு சிறு உணவகம் இருக்கிறது.  மிகவும் பழமையான கடை என்பதோடு இங்கே கிடைக்கும் ஒரு உணவு மிக மிகப் பிரபலம்.  அந்த உணவின் பெயர் தஹி கி ஷோலே! இதில் பல வகைகள் உண்டு. பலரும் இந்தக் கடையை நாடிச் சென்று சாப்பிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது எந்த ஊர் உணவு என்றோ, எப்படி இருக்கும் என்றோ தெரியவில்லை. அந்தப் பக்கம் நிறைய முறை சென்றிருந்தாலும், நண்பர்கள் இது குறித்துப் பேசி அறிமுகம் செய்திருந்தாலும், ஏனோ இது வரை அதனை உண்டு, சுவை எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்கத் தோன்றவில்லை. அப்படி உண்டால் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்கிறேன். இப்போதைக்கு தகவலும், படமும் மட்டும் இந்த காஃபி வித் கிட்டு பதிவின் ஒரு பகுதியாக!

 

******


பழைய நினைப்புடா பேராண்டி : நெய்வேலியின் ஏலச் சந்தை.....



2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நெய்வேலியின் ஏலச் சந்தை..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நெய்வேலியில் மூன்று நாட்களில் வார சந்தை உண்டு – செவ்வாய் கிழமை அன்று வட்டம் பத்தொன்பதிலும், வியாழன் அன்று வட்டம் மூன்றிலும், ஞாயிறன்று திடீர் குப்பத்திலும் சந்தை உண்டு. காய்கறி மட்டுமல்லாது, அசைவ பதார்த்தங்களும், பழ வகைகளும் எல்லாமே மலிவாக கிடைக்கும். இப்போதைய நாட்கள் போல வீட்டின் அருகிலேயே காய்கறிக் கடைகளோ, தள்ளு வண்டிகளோ நெய்வேலியில் கிடையாது.  காய்கறிகள் வாங்க வேண்டுமென்றால் சந்தைக்குத் தான் செல்ல வேண்டும்.


நாங்கள் இருந்த பதினொன்றாம் வட்டத்திலிருந்து செவ்வாய் சந்தைக்குச் செல்ல நெய்வேலியின் பேருந்தில் எனக்குத் தெரிந்து பதினைந்து பைசா கொடுத்திருக்கிறேன் [1990-களில் இருபத்தி ஐந்து பைசா]. அப்பா, அம்மா ஐந்து பைசாவிற்குச் சென்றிருப்பதாகச் சொல்வார்கள். அதுவும் சில சமயங்களில், ஒரு கையில் அக்காவைப் பிடித்துக் கொண்டு, வயிற்றில் என்னையும் சுமந்து கொண்டு, ஐந்து பைசா மிச்சம் பிடிக்க மறு கையில் காய்கறி பையைச் சுமந்தபடி அந்த நீண்ட தூரத்தினை நடந்தே வருவாராம்.....


சந்தையில் பல சந்துகள், ஒவ்வொரு சந்திலும் காய்கறிக் கடைகள், கடைசி சந்துகள் மீன், கருவாடு போன்ற அசைவ வகைகளுக்கு.  அதைத் தாண்டி மளிகை வகைகளான புளி, மிளகாய், போன்றவற்றிற்கு. அம்மா ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டு, காய்கறிப் பையை தோளில் மாட்டிக்கொண்டு மறு கையால் மூக்கை மூடிக்கொண்டு மீன், கருவாடு சந்தினைத் தாண்டி புளி வாங்க ஓடியது இன்னும் நினைவில்........


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!


******


இந்த வாரத்தின் சுற்றுலா தகவல் : Dodital



உத்திராகண்ட் மாநிலத்தில் Dodital என்ற பெயரில் அற்புதமான இடம் ஒன்று இருக்கிறது. உத்திராகண்ட் மாநில மக்கள் இந்த இடத்தில் தான் நமது செல்லப் பிள்ளையார் - உள்ளூர் பாஷையில் கணேஷ் ஜி பிறந்ததாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஒரு அழகான ஏரியும் இங்கே அமைந்திருக்கிறது.  இந்த இடத்திற்கு சில தனியார் அமைப்புகள் ட்ரெக்கிங் வசதிகளையும் வைத்திருக்கிறார்கள்.  சுமார் 22 கிலோ மீட்டர் நடந்து சென்றால் அங்கே இருக்கும் ஏரிக்குச் சென்று சேர்ந்து விடலாம்! இங்கே இருக்கும் அஸ்ஸி கங்கா எனும் ஆறு கங்கோத்ரியில் பாகீரதியுடன் சங்கமிக்கிறது என்பதும் கூடுதல் தகவல். இந்த இடத்திற்குச் சென்றால் அழகான ஏரி, மலையேற்றம் என சிறப்பான அனுபவங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.  முடிந்தால், உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் சென்று வரலாம்! இல்லை என்றால் இந்த இடம் குறித்து காணொளிகள் மூலமேனும் பார்த்து ரசிக்கலாம்!


******


இந்த வாரத்தின் ரசித்த காணொளி:  Funzoa…



ஆசிரியர் தினம் சமயத்தில் ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது! அன்றைய தினம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.  Funzoa என்ற பெயரில் உள்ள யூ தளத்தில் டெட்டி பியர் பொம்மை பாடுவதாக நிறைய காணொளிகள் இருக்கின்றன.  அவற்றில் ஒன்று ஆசிரியர் தினம் குறித்தது.  பாடல் ஹிந்தியில் இருக்கிறது என்றாலும் ரசிக்க முடிகிறது. பாருங்களேன்!


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்!


Teacher Teacher | Happy Teacher's Day Song | Funzoa Mimi Teddy | Dedication to Teachers | Funzoa (youtube.com)


******


இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது :  புளியமரத்தாள்



சொல்வனம் பக்கத்தில் படித்த ஒரு சிறுகதை இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது பகுதியாக! கிராமத்து சொல்வழக்கு, நடுநடுவே இருக்கும் குறும்பும், குசும்பும் என மிகவும் அலாதியானது.  இப்படி ஒரு சொல்லாடல்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படித்த ஒரு சிறுகதை - புளியமரத்தாள். வசந்தி முனீஸ் என்பவர் எழுதிய இந்தச் சிறுகதை எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கலாம். கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


புளியமரத்தாள் – சொல்வனம் | இதழ் 326 | 08 செப் 2024 (solvanam.com)


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 செப்டம்பர் 2024


1 கருத்து:

  1. இந்த வாரக் கதம்பம் நன்று.

    தலைப்பைப் படித்ததும், குழந்தை மழலைச் சொல்லில் பொடி தோசை கேட்கிறது போலிருக்கு என்று நினைத்துக்கொண்டேன்.

    தஹி கி ஷோலே, சங்கு போன்ற தோற்றத்தில் உள்ள சமோசா மால் தயிர் அபிஷேகம் செய்திருப்பார்களோ? வட இந்திய தயிர்வடை தென்னிந்தியா (தமிழகம்) போல்ல்லாமல் ஜீனி சேர்த்திருப்பார்கள். நீங்கள் சாப்பிட்டுப் பார்த்துச் சொன்னால்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....