புதன், 11 செப்டம்பர், 2024

கதம்பம் - ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து - திருவரங்கம் - வாரச்சந்தை - டெடிகேஷன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ஸர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து - 26 ஆகஸ்ட் 2024:






வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தநம்!

தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்க்ருதம்!


வஸுதேவருக்கும் தேவகிக்கும் மட்டுமல்ல 'கிருஷ்ணா' என்றாலே எல்லோருக்கும் பரமானந்தம் தான்! அவனது லீலைகளையும் விஷமங்களையும் இன்றெல்லாம் மனம் மயங்கி கேட்டுக் கொண்டிருக்கலாம்!


எனக்கு இது வேண்டும்! அது வேண்டும்! என்று பிரார்த்தித்துக் கொள்வதைக் காட்டிலும் அவனிடம் சரணாகதி அடைந்து விட்டால் நமக்கு என்ன தர வேண்டும் என்பதை அவன் பொறுப்பில் பார்த்துக் கொள்ள மாட்டானா!! 


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


நம்ம வீட்டு குட்டி கிருஷ்ணனுக்காக திரட்டுப்பாலும், தேன்குழலும், பால் பேடாவும், அப்பமும், அவல் பாயஸமும் செய்து அர்ப்பணம் செய்தேன். மகள் அழகாக கோலமிட்டு க்ருஷ்ணனின் பிஞ்சு பாதங்களையும் வரைந்திருக்கிறாள்! 


******


திருவரங்கத்து இற்றைகள் - 27 ஆகஸ்ட் 2024:



நேற்றைய பொழுதில் வீட்டில் கோகுலாஷ்டமிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டே ஒரு தகவலுக்காக மனம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது! இன்றைய நாளில் அந்த தகவல் கிடைத்தால் பொருத்தமாக இருக்குமே!!! ஸ்பெஷலாக இருக்குமே! 


இரவு தான் அந்த தகவல் எனை வந்து சேர்ந்தது! கீதை வகுப்பில் சேர்ந்து இரண்டு அத்தியாயங்களை வெற்றிகரமாக கற்று உச்சரிப்புத் தேர்விலும் இன்று வெற்றி பெற்று சான்றிதழும் பெற்றிருக்கிறேன் என்ற தகவல் தான் அது! முதல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சென்று விட்டேன்!


இன்றைய நாளில் அதற்கான விழாவில் என்னைக் குறித்தான அறிமுகத்துடன் வகுப்பை பற்றிய என் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் ஓங்கி ஒலிக்கும் குரலில் திருவாசகத்தில் சிவபுராணமும் என்னால் சொல்ல முடிந்தது என்பதும் ஒரு மகிழ்ச்சி. 


******


வாரச்சந்தை - 27 ஆகஸ்ட் 2024:


பிழிய பிழிய சாறு!

ஒன்பது பேருக்கு சோறு!


எலுமிச்சை விற்பவரின் குரல் இது! தட்டு 20ரூ. இஞ்சி, பச்சை மிளகாய், நெல்லிக்காய் என்று எல்லாமே இப்படி தட்டில் போட்டு தான் விற்பனை செய்வார்கள். எலுமிச்சை ஒரு தட்டு எடுத்துக் கொண்டேன். அதில் ஐந்தாறு பழங்கள் இருந்தன!


வாம்மா! என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டாப்ல இருக்கு! எடுத்துக்கோ தாயி! ஒரு தட்டு போதுமா? 


தோட்டத்து காய்கறிக்கா! ஒரு காய் நல்லா இல்லேன்னாலும் காசத் திரும்ப தந்துடறேன்! இப்படி மற்றொரு வியாபாரியின் குரல்! இவரிடம் உள்ள காய்கறிகள் நன்றாகவும் இருக்கிறது என்பதால் தொடர்ந்து வாங்கி வருகிறேன். இம்முறை ஃபோட்டோவும் எடுத்தேன்…:)


வியாபாரிகள் இப்போது ஒரு சில ஹிந்தி வார்த்தைகளும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்! வடக்கிலிருந்து வந்து வசிப்பவர்களும் இங்கு இருக்கிறார்கள்! பொதுவாக ‘ஜி’ போட்டு அழைப்பதும் ஆங்கிலத்தில் விலையைச் சொல்வதுமாக இருக்கிறார்கள்.


*******


ரோஷ்ணி கார்னர் - 27 ஆகஸ்ட் 2024:


அம்மா! உனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பறேன் பாரு! அத உனக்காகவே நான் டெடிகேட் பண்றேன்! என்றாள் மகள்!


ஹா…ஹா..ஹா. 


ஒவ்வொருத்தரா கேட்பேன் என்று நான் கற்று வரும் வகுப்புகளில் சொன்னாலே உடனே நான் தயாராகி விடுகிறேன். ..:)


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

11 செப்டம்பர் 2024


16 கருத்துகள்:

  1. இரண்டு அத்தியாயங்களை வெற்றிகரமாக முடித்ததல்லாமல் உச்சரிப்புத் தேர்விலும் வெற்றி பெற்றிருப்பதற்கு முதல் வாழ்த்து.  கிருஷ்ண ஜெயந்தியை அழகாக கொண்டாடி இருக்கிறீர்கள்..  இரண்டாவது வாழ்த்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. காய்கறிக கடைகளை பார்ப்பதே ஒரு ஆனந்தம்.  பசுபசுவென காய்கறிகளை கடைகளில் பார்த்ததுமே சமைத்து சாப்பிட்ட மகிழ்ச்சி கிடைக்கும்.  என்னென்ன சமைக்கலாம் என்று மனம் திட்டமிடும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.எனக்கு சமைப்பதை விட காய்கறிகள் வாங்கப் பிடிக்கும்!அதுவும் புதினாவைப் பார்த்தால் வாங்கி வந்துவிட்டு அது வாட ஆரம்பித்த பிறகு அவசரமாக தொகையல் செய்வதுண்டு.
      விஜி

      நீக்கு
    2. உண்மை தான் சார். எனக்கும் ஃப்ரெஷ்ஷான காய்கறிகளையும், பழங்களையும் கீரைகளையும் பார்த்தாலே மனதில் ஒரு உற்சாகம் தோன்றிவிடும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    3. ஆமாம் விஜிக்கா. நானும் புதினா பச்சைபசேல் என்று கிடைத்தால் வாங்கி விடுவேன். இரண்டொரு நாளில் சமைத்து விடுவேன்.

      நீக்கு
  3. Congrats Adhi for successful completion of 2nd level. கோலம், கிருஷ்ணர் பாதம்,பிரசாதம் பிரமாதம்!
    விஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நிலையில் தான் தேர்ச்சி பெற்றுள்ளேன் அக்கா. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜிக்கா.

      நீக்கு
  4. ஆதி உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! கீதை வகுப்பில் இரண்டு அத்தியாயங்கள் முடித்து முதல் நிலையிலிருந்து அடுத்த நிலை சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் சூப்பர். எனக்கு பசுமையான காய்கறிகளை பார்த்தாலே மனம் உற்சாகம் பெற்று விடும். எல்லாவற்றையும் வாங்கி சமைச்சிடலாம் என்று தோன்றும். கூடவே மனதில் ஒரு மெனு ஓடும்! அதுவும் நாட்டு புடலங்காய் அதாங்க நீளமாக இருக்குமே நீங்க போட்டு இருக்குற படத்துல கூட அது இருக்கு....அந்த புடலங்காய் மிகவும் பிடிக்கும் அதை எங்கு கண்டாலும் உடனே வாங்கி விடுவேன். அந்த புடலங்காயில் உள்ள சுவை குட்டைப் புடலங்காயில் அவ்வளவாக இருப்பதில்லை.

    நாட்டு காய்கள் தோட்டத்துக் காய்கள் என்று எங்கு கண்டாலும் மனம் பரப்பர க்கும் வாங்கிவிட..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீளமான புடலங்காயை சிறுவயதில் சிவகங்கையில் நிறைய பார்த்திருக்கிறேன். மாலை போட்டு தோளில் போட்டுக் கொண்டு போவார்கள். அவற்றை கல்லு கட்டி வளர்ப்பார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. //கீதை வகுப்பில் சேர்ந்து இரண்டு அத்தியாயங்களை வெற்றிகரமாக கற்று உச்சரிப்புத் தேர்விலும் இன்று வெற்றி பெற்று சான்றிதழும் பெற்றிருக்கிறேன் என்ற தகவல் தான் அது! முதல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு சென்று விட்டேன்!//

    நல்ல தகவல், வாழ்த்துகள்.
    கிருஷ்ணஜெயந்தி விழா படங்களும், பிரசாதங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. ஹிந்தி வகுப்பின் அடுத்த நிலைகளுக்கு சென்றதற்கு வாழ்த்துகள்.
    கிருஷ்ண ஜயந்தி விழா பிரசாதங்கள் நன்றாக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....