வெள்ளி, 27 செப்டம்பர், 2024

ஸ்துமாரி (Stumari) - உலக சுற்றுலா தினம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய மாலை வணக்கம். இந்த நாளில் இன்றைய இரண்டாம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பேருந்து பயணம் - செயலி மூலம் பயணச் சீட்டு பதிவினையும் இன்று காலை வெளியிட்ட கதம்பம் பதிவினையும் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்தப் பதிவினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியும் காணொளியை பார்க்கலாம். 


Stumari - WTD24 (youtube.com)


சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது. 








இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.  


நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம்.


பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

27 செப்டம்பர் 2024


பின்குறிப்பு:  இன்றைய பதிவில் வெளியிட்டு இருக்கும் படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.  இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படும் இடமான Georgia-வில் இருக்கும் சுற்றுலா தளங்கள் சில! 


14 கருத்துகள்:

  1. ஆமாம் இன்று சுற்றுலா தினம். நானும் சில இடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன் குறிப்பாக காட்டில் பயணம் எங்கெல்லாம் புலிகள் பார்க்க முடியும் என்றும் இன்னும் சில இடங்கள் போகிறேனோ இல்லையோ இதிலாவது இப்படி பார்த்து ஏக்கத்துடன்!!!....

    //வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான். வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. //

    டிட்டோ ஜி! எனக்கு எந்தப் பொருளும் கூட வேண்டாம் என்பேன். அதாவது எனக்கு நகைகளோ, பெரிய விலையில் உடைகளோ கூட...ஆனால் சுற்றிப் பார்க்க என்றால் மனம் துள்ளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் சுற்றுவதில் உங்களுக்கும் ஆர்வம் உண்டு என்பதில் மகிழ்ச்சி. பெரும்பாலும் எனக்கும் பொருட்கள் மீதான ஆர்வத்தை விட சுற்றுலாவின் மீது தான் ஆர்வம் அதிகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி
      கீதா ஜி.

      நீக்கு
  2. வாசகம் சூப்பர்.

    சமீப வருடங்களில் சுற்றுலா செல்ல முடியவே இல்லை. இந்த ஏப்ரலில் கூட மகனும் நானும் ஸ்பிட்டி, Dharamshala குடும்பமாகச் சென்று வரலாம் என்று திட்டம் போட்டோம். ஆனால் நிறைவேறவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      விரைவில் உங்களுக்கும் ஒரு சுற்றுலா சென்று வர வாய்ப்பு அமையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளேன்.

    /நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்?/

    ஆம், நம்மைச் சுற்றி நம் அருகாமையிலேயே பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன.

    உங்களது சலிக்காத பயண ஆர்வம் எப்போதும் என் பாராட்டுக்குரியதாக இருந்து வருகிறது. தொடருங்கள். சுற்றுலா தின வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்களும் சுற்றுலா செல்ல ஆரம்பித்து இருப்பதில் மகிழ்ச்சி. அதனால் தான் அற்புதமான சில ஆலயங்களையும், அதன் சிறப்புகளையும் உங்கள் பதிவு/படங்கள் வழி தெரிந்து கொள்ளமுடிந்தது ராமலக்ஷ்மி.

      நம்மைச் சுற்றிச் சுற்றி எத்தனையோ இடங்கள்…. அவற்றையேனும் பார்த்துவிடவேண்டும்.

      சுற்றுலா மீது எனக்கு இருக்கும் ஆர்வம் - தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உங்களுக்கும் சுற்றுலா தின வாழ்த்துக்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை.
    பயணம் செய்வது மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி கிடைக்கும். அதுவும் இயற்கைஎழில் கொஞ்சும் இடங்களை பார்ப்பது அதிக மகிழ்ச்சியை தரும்.


    //பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது. //

    ஆமாம், நம் நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது, நம் வாழ்நாள் போதாது அவ்வளவு இருக்கிறது.

    நீங்கள் முடிந்த போது எல்லாம் பயணம் செய்யுங்கள், அருமையான பதிவுகளை தாருங்கள் படங்களுடன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      பாரதத்தில் இருக்கும் இடங்களை பார்க்கவே நம் வாழ்நாள் போதாது - உண்மை.

      முடிந்தபோதெல்லாம் பயணிப்போம். அதுவே எனது ஆசையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இருக்கும் இடத்தைவிட்டு வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என்று பயணப்பட எனக்கு ஆசை உண்டு. தமிழகத்திலேயே, இந்தியாவிலேயே நிறைய பயணிக்கலாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் வாய்ப்பு வராமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது. ஆதலினால் எல்லோரும் பயணிக்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு அமையும்போதெல்லாம் பயணிக்க வேண்டும் - அதுவே நல்லது. பிறகு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ…

      உங்களது பயண ஆர்வமும் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. காணொளி பார்க்க பிரம்மாண்ட அழகாய் இருக்கிறது.  அன்றாடம் இருக்கும் கவலைகளிலிருந்து விடுபட்டு சில நாட்களாவது இதுமாதிரி சுற்றுலாக்களில் குதூகலமாய் இருந்தால் சிறப்புதான்.  ஏனோ அதை நான் பழகவே இல்லை.

    இதோ இங்கு போகவேண்டும், அதோ அங்கு போக வேண்டும் என்று மனதளவில் திட்டம் போட்டுவிட்டு ஏதேதோ காரணங்களால் போக முடியாமல் போய்விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். சுற்றுலாக்கள் நம் மனதினை பலப்படுத்த நல்லதொரு தீர்வு. முடிந்த போதெல்லாம் சுற்றுலா செல்லுங்கள்.

      பல சுற்றுலா திட்டங்கள் திட்ட அளவிலேயே நின்று விடுகின்றன என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயமே.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. படங்களும் வெகு அழகு.  இணையத்திலிருந்து எடுக்கபப்ட்டது என்று தெரிகிறது.  சுற்றுலா செல்வதில் நீங்கள், துளசி  டீச்சர், நெல்லை ஆகியோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். ஆமாம் அவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

      துளசி டீச்சர், நெல்லை உடன் என்னையும் சேர்த்து இங்கே குறிப்பிட்டு இருப்பதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....