புதன், 4 செப்டம்பர், 2024

வாரணாசியில் ஒன்பது நாட்கள் - எத்தனை எத்தனை ஆலயங்கள் - பகுதி இருபத்தி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட தினம் தினம் தில்லி - Bharat Darshan Park பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை மனதைத் தொட்ட ஒரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாரணாசி பயண ஆசை குறித்தும் எப்படி அந்த ஆசை நிறைவேறியது என்றும் பயணத்தினைக் குறித்து எழுதத் தொடங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை படிக்காமல் விட்டிருந்தால் கீழேயுள்ள சுட்டிகள் வழி பதிவினை படித்துவிடுங்களேன்!


ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் - பயணத் தொடர் - பகுதி ஒன்று


வந்தே பாரத் பயணம்


இரயில் அனுபவங்கள்


காசி தமிழ் சங்கமம்


ஹிந்தி அவஸ்தை


கங்கைக்கரை படகோட்டிகள்


கங்கையில் படகு உலா


கங்கைக்கரை படித்துறைகள்


மேலும் சில படித்துறைகள்


சந்த்(th) ரவி(d)தாஸ் Gகாட் - தேவ தீபாவளி


Bபனாரஸ் ஹிந்து விஷ்வவித்யாலயா


புதிய காசி விஸ்வநாத் மந்திர்


சிறிது வயிற்றுக்கும்


கால பைரவர் கோவில்


காசி விஸ்வநாதர் கோயில்


வரம் தரும் வாராஹி கோயில்


மல்லிகார்ஜுன மஹாதேவ் மந்திர்


காசியில் ஜோதிர்லிங்க கோவில்கள்


ஸ்ரீ கர்த்மேஷ்வர் மகாதேவ் மந்திர்


பஞ்ச்க்ரோஷி யாத்ரா


சாரநாத் - சில தகவல்கள்


விருந்தினர்களுடன் ஒரு பயணம்


அயோத்யா ஜி


வீராங்கனா ராணி லக்ஷ்மிபாய்


மகாகவி பாரதியார் இல்லம்


ஸ்ரீ ரத்னேஷ்வர்  மஹாதேவ் மந்திர்


தம்பதிகள் ஜாக்கிரதை - நாரதரின் சாபம்


காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான காசி, காசி விஸ்வநாதர், காசி விசாலாக்ஷியுடன் பக்தர்களுக்கு அருள் புரியும் இந்தத் தலத்தில் எத்தனையோ ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.  பல ஆலயங்கள் காலப் போக்கில் அழிந்து விட்டன என்றாலும் இப்போதும் இருக்கிற ஆலயங்கள் அனைத்தையும் தரிசித்து விடுவது என்பது முடியாத காரியம்.  இந்தப் பயணத்தில் இங்கே ஒன்பது நாட்கள்  தங்கியிருந்தாலும், இது வரை பார்க்காத சிறப்பான ஆலயங்கள் உண்டு. அப்படி சில ஆலயங்கள் குறித்து தெரிந்திருந்தாலும், என்னால் இந்தப் பயணத்தில் அவற்றுக்குச் செல்ல முடியவில்லை.  மீண்டும் எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால், ஈசன் அழைத்தால், அந்த ஆலயங்களுக்கும் சென்று வர வேண்டும்.  அப்படி பார்க்காத ஆலயங்களில் ஒரு சில ஆலயங்கள் குறித்த சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்! 



படம்: இணையத்திலிருந்து...


படம்: இணையத்திலிருந்து...

ஸ்ரீ சாரங்க் நாத் மஹாதேவ் மந்திர் - இந்த ஆலயத்திற்கு ஒரு சிறப்பு உண்டு - அது என்னவென்றால், இங்கே ஒரு சிலலிங்கமாக இல்லாமல் கர்பக்கிரஹத்தில் இரண்டு சிவலிங்கங்கள் ஒன்றையடுத்து ஒன்றாக அமைந்திருக்கின்றன.  முந்தைய பதிவொன்றில் சாரநாத் குறித்துப் பார்த்தோமல்லவா, அந்த சாரநாத் பகுதியில் தான் இந்த ஆலயமும் அமைந்திருக்கிறது.  ஒரு சிவலிங்கம் சிவபெருமானுக்கானது என்றால் மற்றொன்று சிவபெருமானின் மனைவியான பார்வதியின் சகோதரரான சாரங்கநாத் அவர்களுக்கானது.  அதாவது சிவபெருமானின் சாலே சாஹப் அவர்களுக்கான ஆலயம் என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள். சிவபெருமானின் சசுரால் (மாமனார்/மாமியார் வீடு) என்றும் இந்த ஆலயம் அமைந்திருக்கும் சாரநாத் பகுதியை உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள்.  இந்தப் பகுதியில் இருக்கும் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருப்பது - ஒவ்வொரு வருடமும் சாவன் கா மஹினா என்று அழைக்கப்படும் ஆடி மாதத்தில், சிவபெருமான் தனது ஆலயமான காசி விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தனது சசுரால் ஆன சாரநாத் பகுதிக்கு வந்து தங்குகிறார் என்பதாகும். அதனால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் இங்கே பெருமளவில் வந்து இங்கே இரட்டை லிங்கங்கள் வடிவில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மற்றும் சாரங்கநாத் ஆகியோரை வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கே அமைந்திருக்கும் சாரங்கநாத் குண்ட் (குளம்)-இல் குளித்து, இரட்டை லிங்கங்களை வழிபட்டால் எல்லா வித தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் தீரும் என்பதும் ஒரு வித நம்பிக்கை. 



படம்: இணையத்திலிருந்து...

ஸ்ரீ தண்டபாணி மந்திர், காசி: காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் கால பைரவர் ஆலயம் அருகிலேயே அமைந்திருக்கும் இந்த ஆலயம் குறித்தும் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு விஷயம் தெரியுமா, வாரணாசி நகருக்கு வரும் பக்தர்கள் எப்படி கால பைரவரின் அனுமதியைப் பெற வேண்டுமோ, அதே போல காசி விஸ்வநாதரை தரிசிக்கும் முன்னர் ஸ்ரீ தண்டபாணியையும் தரிசித்து அனுமதி பெற வேண்டும்.  காசி நகரின் நிர்வாகியாக சிவபெருமானாலேயே நியமனம் செய்யப்பட்டவர் தண்டபாணி - ஹரிகேஷா என்று அழைக்கப்பட்டவர் சிவபெருமானின் அருளால் தண்டபாணியாக ஆனார்.  காசி மாநகருக்கு வருபவர்களிலும், நகரில் வசிப்பவர்களிலும் நல்லவர்களை காப்பதோடு, தீயவர்களை அவரிடம் இருக்கும் டண்டா (தண்டம் - கோல்) வைத்து தண்டிப்பவரும் இந்த தண்டபாணி தான்.  தண்டபாணி மந்திர் அளவில் சிறியது தான் என்றாலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.  இதுவரை காசி நகருக்கு சென்றபோதெல்லாம் இந்த ஆலயத்திற்கு நான் சென்றதில்லை. அடுத்த முறை என ஒன்று வாய்த்தால் இந்த ஆலயத்திற்கும் சென்று வர வேண்டும்.  இந்த ஆலயம் மற்றும் தண்டபாணியின் வரலாறு குறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் இந்தத் தளத்தில் நிறைய தகவல்கள் (ஆங்கிலத்தில்) இருக்கிறது. பார்த்து தெரிந்து கொள்ளலாம்.



படம்: இணையத்திலிருந்து...


படம்: இணையத்திலிருந்து...

ஸ்வர்வேத் மஹாமந்திர், உம்ராஹா, வாரணாசி: இது ஒரு வழிபாட்டுத் தலம் என்று சொல்வதை விட தியான மண்டபம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். அது மட்டுமல்லாது இது ஒரு பழமையான இடம் அல்ல! சென்ற வருடம், அதுவும் எனது இந்தப் பயணம் நடந்த டிசம்பர் 2023 மாதத்தில் தான் இந்த இடம் திறப்புவிழாவே நடந்தது.  ஆனால் இந்த இடம் சமீப காலங்களில் அதிக அளவு பிரபலம் அடைந்து வருகிறது.  ஒரே சமயத்தில் 20000 பேர் இங்கே தியானம் செய்ய முடியும் என்பதும், ஏழு அடுக்கில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டிடம் என்பதும் இது குறித்து சொல்லலாம்.  சமீப நாட்களில் நிறைய பயணிகள் இங்கே சென்று வருகிறார்கள்.  எனது பயணத்தின் போது என்னால் இங்கே சென்று வர முடியவில்லை. இந்த இடம் குறித்த மேலதிகத் தகவல்கள், அமைத்தது யார், எவ்வளவு செலவு ( மலைக்கவைக்கும் செலவு - 1000 கோடி என்று தகவல்கள் சொல்கின்றன!) போன்றவற்றை இணையத்தில் தேடினால் நிறையவே கிடைக்கிறது.  மேலும் காணொளிகளும் நிறையவே இருக்கின்றன.  முடிந்தால் கீழே உள்ள காணொளியை பாருங்களேன். பார்க்கும்போதே மலைப்பாக இருக்கிறது.


இப்படியான இன்னும் நிறைய ஆலயங்கள் இங்கே இருக்கின்றன.  பல ஆலயங்கள் பழமையானதும் கூட.  எல்லா ஆலயங்களையும் பார்த்துவிடுவது முடியாத காரியம்.  வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.  மேலும் தொடர்ந்து இந்தப் பயணம் குறித்து வரும் சில பகுதிகளில் பார்க்கலாம். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

4 செப்டம்பர் 2024


20 கருத்துகள்:

  1. தண்டம்=கோலை என்று சொல்லாமல் கோல் என்று சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். மாற்றி விட்டேன்.

      நீக்கு
  2. மாமியார் வீட்டுக்கு வரும் சிவபெருமான் தகவல் சுவாரஸ்யம்.  சாவன் கா மஹினா என்று ஆடி மாதத்தைதான் அழைப்பார்கள் என்பது தெரியாமல் இரண்டு நாட்களுக்குமுன் அதிகாலை எழுந்து வந்ததும் தாகம் எடுத்து தண்ணீர் குடிப்பது போல மிலன் பாடலை கேட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இப்படி ஆரம்பிக்கும் ஹிந்தி பாடல்கள் உண்டே ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. தண்டபாணி தெய்வம் என்றால் முருகன் இல்லையோ...   ஆனாலும் அவர் கோவில் ஆர்ப்பாட்டமான ஆடம்பரமான இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரில் முருகன். இங்கே இப்படி வேறாக! நம் ஊர் முருகன் இங்கே கார்த்திக் என்பதாகவே அறியப்படுகிறார்! முருகன் என்றால் இங்கே தெரியாது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. தண்டபாணி மந்திருக்குப் போன ஞாபகம் இல்லை. முடிந்தால் அக்டோபரில் மறக்காமல் செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சென்று வாருங்கள் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. அட! சிவனும் மாமியார் வீட்டுக்கு அதுவும் ஆடி மாசம் போவதுண்டா!!!

    பார்வதியின் சகோதரரான சாரங்கநாத்//

    விஷ்ணுவைத்தான் அப்படிச் சொல்றாங்களோ?!

    தண்டபாணி மந்திர் - தகவல்கள் பார்த்துக் கொண்டோம் ஜி.

    ஸ்வர்வேத் மஹாமந்திர், உம்ராஹா, வாரணாசி: // இதைப் பற்றிய தகவல்களும் சுவாரசியம். இக்கோயிலின் - தியானமண்டபம் படம் சூப்பரா இருக்கு. ஜெய்ப்பூர் மஹால் போல. உள்ளே எப்படி இருக்குமோ? பார்க்கும் ஆவல் வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானை சிற்பங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. காணொளியின் கடைசிப் பகுதியில் உள் பகுதி பார்க்க முடிகிறது தியான ஹால் கூட்டமாக இருக்கிறதே. அமைதியாக இல்லாமல் மொபைலோடு எல்லோரும் இருப்பதும் தெரிகிறது...

      கீதா

      நீக்கு
  7. நீ போன கோவில்களுக்கே நாங்கள் போகவில்லை! போகாத கோவில்களுக்கு... hmm.எங்களையும் கூட்டிண்டு போவதனால் சரி.எல்லா தகவல்களும் அருமை.
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வாரனாசியில் நீங்கள் செல்லாத கோவிலானாலும், அதைப்பற்றிய நிறைய தகவல்களை திரட்டித் தந்தமைக்கு நன்றி.

    கோவில்களின் தகவல்கள் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. இரட்டை சிவலிங்கங்கள் கதை தெரிந்து கொண்டேன். அடுத்த தடவை தாங்கள் இங்கு செல்லும் போது, பார்க்காத பல கோவில்களின் தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்க சிவபெருமானை பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். தொடர்ந்து பதிவுகளை ரசிக்க வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. ஆடி மாதசோமவாரத்தில் பார்வதி தேவி தாய்வீடு செல்லும் திருவிழா சமயம் காசிக்கு ஒரு தடவை சென்று விட்டு கூட்டத்தில் மாட்டிக் கொண்ட அனுபவம் உண்டு.
    ஊர் முழுவதும் விழா கோலம் மக்கள் கூட்டம் பார்த்தோம்.கோவிலில் மிகவும் தள்ளு முள்ளு.
    காசி போகிறேன் என்று யாரவது சொன்னால் ஆடி மாதம் திங்கள்கிழமை போகாதீர்கள் என்பேன்.

    காலபைரவர் கோவில் அருகில் உள்ள முருகன் கோவில் போனது போல நினைவு இல்லை.

    காணொளி அருமை. படங்கள், நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....