வெள்ளி, 10 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – பத்ராது – மலைப்பாதையும் ரம்மியமான நதியும்


Gகாட்டி ரோட்

பத்ராது – பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? மும்தாஜ் அவர்களிடம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் என்னென்ன பார்க்கலாம் என்று கேட்ட போது Gகாட்டி ரோட் பார்க்கலாமா எனக் கேட்டார். அது என்ன Gகாட்டி ரோட் – வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையைத் தான் Gகாட்டி ரோட் என அழைக்கிறார்கள். கூடவே அங்கே ஒரு நதியும் அனல் மின் நிலையமும் இருக்கிறது. அழகான இடம். ராஞ்சி நகரிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இடம். சரி போகலாம் என புறப்பட்டு விட்டோம்.







கிட்டத்தட்ட பதினைந்து கிலோமீட்டர் வளைந்து நெளிந்து செல்லும் பாதை – பறவைப் பார்வையில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கும் இந்தப் பாதை ஆபத்தானதும் கூட. சில வருடங்களுக்கு முன்னர் தான் இந்தப் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது – மலைகளைக் குடைந்து பாதை அமைத்ததோடு இரண்டு பக்கங்களிலும் மரங்களையும் நட்டு வைத்திருக்கிறார்கள். பச்சைப் போர்வை கொண்டு போர்த்திய காட்சிகளை இணையத்தில் பார்க்க முடிகிறது. எங்களை அழைத்துச் சென்ற ஓட்டுனர் மும்தாஜ் ஓரிடத்தில் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி வளைந்து நெளிந்து செல்லும் பாதையை புகைப்படம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். மிகவும் அழகான பாதை. அருணாச்சலப் பிரதேசம் செல்லும் போதும் இப்படியான பாதைகள் பார்த்தோம் என்றாலும் அதற்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் உண்டு.




ஓடம் நதியினிலே... ஒருவன் மட்டும் தனிமையிலே...


அழகான ஆபத்து என்பது இந்தப் பாதைக்கும் பொருந்தும். மழைக்காலங்களில் பாதையில் சில இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்படுவதும், பாதையின் ஓரங்களில் ஒழுங்கான தடுப்பும் இல்லாததால், கொஞ்சம் ஏமாந்தால் பல அடி தூரம் கீழே உருண்டு உருண்டு விழ வேண்டியிருக்கும். பலர் தங்களது காரிலும், பைக்கிலும் இந்த மலைப் பாதையில் ஜாலி ட்ரைவ் எனச் செல்கிறார்கள். சில சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது என்றாலும் இந்தப் பாதையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்தப் பாதை வழியே சென்றால் பத்ராது பகுதியை ஒரு மணி நேரத்தில் அடைந்து விடலாம் – இரயில் பாதை வழி சென்றால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆகும் என்பதும் இம்மலைப் பாதையை பலரும் விரும்பக் காரணம்.  


இந்தப் படகு காதலர்களுக்கு மட்டும்!


எங்கள் படகோட்டி...


வளைந்து நெளிந்து செல்லும் பாதையிலிருந்து பத்ராது பள்ளத்தாக்கு முழுவதையும் பார்க்க முடியும் என்பதால் இந்தப் பாதை ஓரங்களில் வண்டியை நிறுத்தி பார்த்துச் செல்பவர்கள் அதிகம். அப்படி நிற்கும் இடங்களில் சில உழைப்பாளிகள் கடை விரித்து பொருட்களை விற்பனை செய்வதும் நடக்கிறது. அப்படி பாதை ஓரமாக இருந்தாலும் இங்கே வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது. நாங்களும் சில நிமிடங்கள் நின்று அங்கே காட்சிகளைப் பார்த்து ரசித்து கொஞ்சம் படங்களும் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் பத்ராது அணை அமைந்திருக்கும் இடம். அணை வரை செல்ல அனுமதி வேண்டும் என்பதால் அணைக்கான தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் இடத்திற்குச் சென்று சேர்ந்தோம்.



படகிலிருந்து படகுத் துறை...





நான்கு பக்கமும் தண்ணீர்.....



கிட்டத்தட்ட 80 சதுர மைல் அளவு பரப்பளவில் தண்ணீர் சேமித்து வைத்திருக்கிறார்கள். எதற்காக என்றால் இப்பகுதியில் இருக்கும் பத்ராது அனல் மின் நிலையத்தின் பயன்பாட்டிற்காக. நல்கார்னி நதியின் நீர் வரத்து மற்றும் அனல்மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியில் மலைகளிலிருந்து விழும் அருவி நீரையும் இங்கே சேமித்து வைத்திருக்கிறார்கள். மிகவும் அருமையான நீர் நிலையாகக் காட்சி தருகிறது. இந்த நீர் நிலையில் படகுத்துறை ஒன்றும் அமைந்திருக்கிறது. நீங்கள் விரும்பினால் படகுச் சவாரி செய்யலாம். நீர் நிலை வழியே அணைக்கு சற்று அருகே வரை சென்று திரும்பலாம். நாங்கள் அங்கே சென்றபோது ஏதோ ஒரு படக்குழு அங்கே படம் பிடித்துக் கொண்டிருந்தது. பொதுவாகவே பீஹார்/ஜார்க்கண்ட் மாநில படங்கள் பார்க்க முடியாதவை! போஜ்புரி, நாக்புரி போன்ற பாஷைகளில் எடுக்கப்படும் படங்களை பார்க்காமல் இருப்பது சுகம்! பெரும்பாலானவை இரண்டாம் தர கவர்ச்சிப் படங்கள் தான்!


ஓடத்திலிருந்து நீர்நிலையின் பிரம்மாண்டம்....


இயற்கை எழிலை ரசித்தபடியே ஒரு பயணம்...


நாங்கள் சென்ற போதும் ஏதோ டிங்க்சிக் டிங்க்சிக் பாடல் ஒன்றை ஓட விட்டு படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள். படகுத் துறையில் இருக்கும் மற்ற படகுக் காரர்களை நதியில் செல்லக் கூடாது என சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி மீன் வலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். மீன் பிடிப்பது மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளை படகில் அழைத்துச் செல்வதும் தான் அவர்களுக்குத் தொழில் என்றும் இன்று அத்தனை மீனும் சிக்கவில்லை. படகு செலுத்தவும் இவர்கள் தடுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பிறகு எங்களை படகில் பயணிக்கிறீர்களா என்று கேட்க, படகுப் பயணத்தில் அத்தனை விருப்பம் இல்லை என்றாலும் அவர்களுக்காக பயணம் செய்தோம்.



அமைதியான நதியினிலே ஓடம்....




படப்பிடிப்புக் குழுவினர்.... 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படகை ஒரே ஒரு படகோட்டி செலுத்த நானும் நண்பரும் படகில் சென்று வந்தோம். எந்தவித பாதுகாப்புச் சாதனங்களோ, Safety Jacket-ஓ இல்லாத படகுப் பயணம்! எதாவது விபத்து என்றால் அவ்வளவு தான்! சில சமயங்களில் இப்படித்தான் எதையும் யோசிக்காமல் முடிவு எடுத்து விடுகிறோம். ஒன்றும் ஆகாது என்ற அசட்டு தைர்யம்! ஒன்றும் ஆகவில்லை என்பதால் தான் இன்றைக்கு இங்கே அங்கே சென்று வந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இப்படியான பயணங்கள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! அல்லது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்! நாங்கள் படகோட்டியிடம் பேசிக் கொண்டே, இயற்கைக் காட்சிகளையும் ரசித்தும், படங்கள் எடுத்துக் கொண்டும் வந்தோம்.


படகுகளிலும் சினிமா ஷூட்டிங்... தயாராகும் படகுகள்...


என்னவொரு ஒய்யாரப் படுக்கை....


அழகான சூழல், கடந்து வரும் Gகாட்டி ரோட் போன்றவற்றை பார்த்து ரசிக்க, ராஞ்சி நகர் பக்கம் சென்றால் முயற்சிக்கலாம். பெரும்பாலான ராஞ்சி வாசிகள், குளிர் காலத்தில் இந்த பத்ராது பகுதிக்கு வந்து செல்கிறார்கள். காலையில் புறப்பட்டால், மாலை வரை இங்கே உல்லாசமாக இருந்து வீடு திரும்புகிறார்கள். நல்லதொரு இடம். இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படங்களையும் நீங்கள் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பதிவு/படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். ஜார்க்கண்ட் உலாவில் வேறு ஒரு இடம் பற்றிய தகவல்களோடு மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    முதல் படமே அட்டகாசமாக இருக்கிறது.இந்தப் படம் முன்னரே இங்க பகிர்ந்திருக்கீனளோ? பார்த்தது போல் இருக்கிறது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. மிக அழகான இடமாகத் தெரிகிறது வெங்கட்ஜி.

    தண்ணீர் ஏரி எப்படி அழகாகச் சேமித்து வைத்திருக்கிறார்கள். பார்க்கவே ரம்மியமாக இருக்கிறஹ்டு.

    ஓ அந்த அலங்காரப் படகு படத்துக்காக போலும்.

    ஓடம் ஓட்டிச் செலும் படம் ரொம்பவே அழகாக இருக்கிறது.

    பாவம் படகோட்டி அவரது ஒரு நாள் வருமானம் இப்படியான சினிமா ஷூட்டிக்ங்க காரர்களால் தடைபடுகிறது. காம்பன்சேஷன் கொடுப்பார்களோ?

    படங்கள் அத்தனையும் மிக அழகு. மிகவும் ரசித்தோம் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரம்மியமான சூழல்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. நம் ஊர் ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்கும் போது நீர் நிறைந்து காணப்படும் நதியைப் பார்ப்பது மகிழ்ச்சி.
    பசுமையான மரங்கள் இருபுறமும் நடுவில் பாதை மிக அருமை.

    பாதுகாப்பான பயணம் செய்யுங்கள் அதுவே நல்லது.
    அனைத்து படங்களும் அழகு.

    //டிங்க்சிக் டிங்க்சிக் பாடல் //

    படித்ததும் சிரிப்பு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊர் ஏரி குளங்கள் - :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    வளைந்து நெளிந்து சேரும் சாலைகள் அழகு. ஜோடிப்பாம்புகள் இணைந்து ஓடுவது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைப் பார்வையில் இன்னும் நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஆபத்தான சாலை என்றாலும் நின்று நிதானமாக ஒரத்துக்குச் செல்லாமல் வரும் வழியில் வண்டிகள் வந்தால் நின்று சாலை நடுவிலேயே பயணம் செய்தால் பாதுகாப்பாக இருக்குமோ என்னவோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. //ஏதோ டிங்க்சிக் டிங்க்சிக் பாடல் ஒன்றை ஓட விட்டு படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள்.//

    ஹா... ஹா... ஹா... நல்ல வர்ணனை! ஆனால் ஹிந்திப் படங்களுக்கான படப்பிடிப்பும் இங்கு நடந்திருக்கும் இல்லையா? அது ஒய்யாரப்படுக்கையாக இருந்திருக்காது. கேமிரா கோணம் பார்த்துக்கொண்டிருந்திருந்திருப்பார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி பட படப்பிடிப்பு பெரும்பாலும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. வளைந்து நெளிந்து செல்லும் பாதையையும், பிரமாண்ட நீர்நிலையையும் அழகாக படம்பிடித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அழகான இடங்கள். வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும், பிரம்மாண்டமான நீர்நிலையும் காண்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. படகு படங்கள், ஓவ்வொன்றுக்கும் வர்ணனை செய்த விதங்களையும் ரசித்தேன். படகில் செல்லும் போது பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சென்று வந்த பின்தான் இந்த அசட்டு துணிச்சலை நாம் உணர்வோம். உண்மைதான்..!

    இயற்கை எழில் கொஞ்சம் இடங்களை படங்களாக தந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  10. இம்மாதிரிதான் சிருங்கெரி போகும் வழியில் ஆகும்பே எனும் இடட்தில் மலை அழகக் கண்டு ரசிக்க என்றெ வசதியாக கட்டி வைத்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. அழகான நீர்நிலைகளை பார்த்தாலே மனசு சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஜார்கண்ட் - ஜோர்கண்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. பரந்து விரிந்த ஏரியும் பச்சைப்பசேலென இயற்கை சூழலும், வளைந்து செல்லும் பாதையும் பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  13. மலைப்பாதையும் படகுப் பயணமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  14. மலைப்பாதையின் படங்கள் ரம்யமாக இருக்கின்றன. உங்கள் படகு பயணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் அப்படி பயணம் செய்த பல படகு சவாரிகள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா.

      நீக்கு
  15. அழகான நீர் நிலைகள். தண்ணீர் இருந்தாலே மனதுக்கு மகிழ்ச்சி தான். படகில் எந்தவிதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் பயணித்தது திகிலைத் தான் கொடுத்தது. நாங்களும் படகு சவாரிகள் செய்திருக்கோம், பாதுகாப்புகளுடன்! நவ பிருந்தாவனில் தான் படகுப்பயணம் ஆபத்தாக மாறிப் பின்னர் ஒரு வழியாகக் கரைக்கு வந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....