ஹூண்ட்ரூ அருவி...
ஜார்க்கண்ட்
மாநிலத்தில் மலைப்பகுதிகள் அதிகம் என்பதால் அருவிகளும் அங்கே நிறைய உண்டு.
அருவிகள் நிறைய என்பதால் ராஞ்சி நகரை அருவிகள் நகரம் என்றும் அழைப்பதுண்டு. சில அருவிகள்
ராஞ்சி நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவிலும், சில அருவிகள் சற்றே தொலைவிலும்
இருக்கின்றன. எங்கள் பயணத்தின் போது நாங்களும் சில அருவிகளுக்குச் சென்று பார்த்து
ரசித்து வந்தோம். நாங்கள் சென்ற சமயத்தில் தண்ணீர் வரத்து அத்தனை அதிகம் இல்லை
என்றாலும் சுமாராக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகம் இருந்தால் இன்னும் அதிகமாக
ரசிக்க முடியும். ஆனால் அந்த அருவிக்குச் சென்று பார்ப்பதே ஒரு உற்சாக அனுபவம் –
படிகளில் கீழே இறங்கிச் சென்று பார்த்து வர வேண்டும்!
ராஞ்சி - புருலியா நெடுஞ்சாலை...
ஹூண்ட்ரூ அருவிக்குச் செல்லும் கிராமிய சாலை....
எழில் கொஞ்சும் கிராமியப் பாதை....
ராஞ்சி
நகரிலிருந்து புருலியா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில கிலோமீட்டர் பயணித்து
பிறகு ஹூண்ட்ரூ செல்லும் கிளைச் சாலையில் பயணிக்க வேண்டும். மொத்தமாக சுமார் 45
கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். மும்தாஜ் அவர்கள் ஒரு நல்ல ஓட்டுனர்.
சிறப்பாக வாகனத்தினைச் செலுத்தினார். பீஹார் மாநிலத்திலிருந்து பிரிந்த
ஜார்க்கண்ட் மிகவும் அதிக அளவில் மட்டுமல்லாது மிகவும் சிறப்பாக முன்னேற்றம்
கண்டிருக்கிறது. சிறப்பான சாலைகள், வசதிகள் என அனைத்திலும் முன்னேற்றம். சீரான
சாலை என்பதால் நல்ல வேகத்தில் சென்று விட்டார் மும்தாஜ். கிராமங்கள் வழியே
செல்லும் பாதை என்றாலும் நல்ல பாதையாகவே இருந்தது. ஹூண்ட்ரூ அருவிக்குச் செல்ல
வேண்டும் என்றால் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும்! அதாவது படிகள் வழியே இறங்க வேண்டும்!
இயற்கைச் சூழலில் செயற்கைப் படிகள்.....
அதிகமில்லை லேடீஸ் &ஜெண்டில்மேன்...
மொத்தமே 745 படிகள் தான்...
படிகள் என்றால்
கொஞ்சம் நஞ்சம் படிகள் அல்ல! மொத்தம் 745 படிகள்! இத்தனை படிகள் இறங்கிச் செல்வது
கூட அத்தனை கஷ்டம் இல்லை! அருவியின் அழகை ரசித்து விட்டு அங்கிருந்து திரும்பி
வரும்போது 745 படிகள் ஏறி வர வேண்டும்! சராசரியாக ஒரு மாடிக்கு 15 படிகள் என்று
வைத்துக் கொண்டால் சுமார் 50 மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏறிச் செல்லும் அளவு!
படிகளில் இறங்கிச் சென்று அருவியைப் பார்ப்பதில் இருக்கும் மகிழ்ச்சி மீண்டும் படி
ஏறி வர வேண்டும் என நினைத்தால் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூட சொல்ல
வைக்கும்! ஆனால் சுமார் 322 அடி [98 மீட்டர்] உயரத்திலிருந்து கீழ் நோக்கி விழும்
அருவியைக் காண இந்தக் கஷ்டத்தினை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்! இப்படியான
அருவிகள், மலைப் பகுதியின் ரம்மியமான காட்சிகள் போன்றவற்றை பார்க்க வேண்டும்
என்பதற்காக எத்தனையோர் பேர் வருகிறார்கள். இவ்வளவு தூரம் வந்து விட்டு படிகள் இறங்கி,
ஏறமாட்டேன் என்று சொல்வது சரியல்லவே. எந்த ஒரு விஷயத்தினையும் அனுபவிக்க
வேண்டுமென்றால் சில கஷ்டங்களையும் சேர்த்தே அனுபவிக்க வேண்டியிருக்கும்.
சற்றே தொலைவிலிருந்து ஹூண்ட்ரூ அருவி..
இந்தியாவின் உயரமான
அருவிகள் பட்டியலில் 34-ஆம் இடத்தினைப் பிடிக்கும் இந்த ஹுண்ட்ரூ அருவி, ராஞ்சி
பகுதியில் முதலாம் இடத்தினை பிடிக்கும் அருவி. சுபர்ணரேகா ஆற்றின் பாதையில்
இருக்கும் இந்த அருவி மழைக்காலதில் தான் நிறைய தண்ணீர் வரத்துடன் இருக்கும். மார்ச்
முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இங்கே நீர் வரத்து அதிகம் இருக்கும். மற்ற
மாதங்களில் குறைவான நீர் வரத்து தான். நாங்கள் சென்ற நவம்பர மாதத்தில் அத்தனை நீர்
வரத்து இல்லை! அருவி விழும் இடத்தில் ஒரு குளம் போல அமைந்திருக்க அங்கே சென்று
பலரும் குளிக்கிறார்கள். பாறைகள் மிகுந்த பகுதி என்பதால் கவனம் தேவை. சிலர் மிதவை
ஒன்றில் அருவி வரை சென்று குளித்து திரும்புகிறார்கள்.
பாதையில் நடந்து செல்லும் ஒரு முதியவர்..
பார்வையில் தீர்க்கம்.....
மரத்திலும் கைவண்ணம்...
தம்பி என்னடா பார்த்துட்டு இருக்கே!
நாங்கள் அரை
மணி நேரத்திற்கு மேல் அங்கே இருந்து சில பல படங்களை எடுத்துக் கொண்டு, இயற்கை
எழிலை ரசித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். ஆஹா 745 படிகள் ஏற வேண்டுமே என
நினைக்கும்போதே மலைப்பு தான். ஆனாலும் ஏறித்தான் ஆக வேண்டும். மும்தாஜ் வேறு
எங்களுக்காகக் காத்திருப்பார். படிகள் வழியே பயணித்து மேலே சென்று மதிய உணவு
சாப்பிட்ட பிறகு அடுத்த இடம் நோக்கி பயணிக்க வேண்டும். அதனால் ஆங்காங்கே நின்று
நிதானித்து, பொறுமையாக படிகளில் ஏறி வந்தோம். நாங்கள் கீழிருந்து மேலே ஏறி
வரும்போது எதிரே அருவி பார்க்கக் கீழே இறங்குபவர்கள் இன்னும் எவ்வளவு படிகள் கீழே
போக வேண்டும் என்று கேட்டபடியே சென்றார்கள். இறங்குவதற்கு அவ்வளவு கஷ்டம் இல்லை.
மேலே ஏறி வருவது தான் சிரமம் என்று சொல்லியபடியே மேலே ஏறி வந்தோம்.
சின்னச் சின்னதாய் பூக்கள்....
அம்மாவின் புடவையில் பாதி மறைந்து
வெட்கத்துடன் எட்டிப் பார்க்கும் சிறுவன் .
வழியெங்கிலும்
மலைப்பகுதி மக்கள் அமர்ந்து பெரிய கோடாலி போன்ற உளியால் மரங்களில் அழகிய
சிற்பங்களையும், பூக்களையும், பொருட்களையும் செய்து கொண்டிருந்தார்கள். சிலர்
சின்னச் சின்னதாய் கொட்டகை போட்டு கடை நடத்துகிறார்கள். தேநீர், குளிர் பானங்கள்,
எலுமிச்சை ஜூஸ் போன்றவையும் கிடைக்கிறது. சில கடைகளில் நல்ல வியாபாரம் – குறிப்பாக
மேலே ஏறி வருபவர்கள் தண்ணீர் தாகத்திற்கு இந்தக் கடைகளில் அமர்ந்து எதையாவது
அருந்திய பின்னரே மேலே ஏறுகிறார்கள். அப்படியே மரத்தினால் ஆன பொருட்களையும்
வாங்கிக் கொள்கிறார்கள். சிறுவர்களையும் உழைப்பாளிகளையும் படம் பிடித்துக்
கொண்டேன். இயற்கை அழகையும் தான். அப்படியே ஆங்காங்கே நின்று நிதானித்து ஒரு வழியாக
745 படிகளையும் ஏறி மேலே வந்தால் மும்தாஜ் எங்களுக்காகக் காத்திருந்தார்.
இன்னும் ஒரு கைவண்ணம்...
பருப்புச் சுண்டலோ?
மிகவும்
ரம்மியமான இந்த ஹுண்ட்ரூ அருவிக்கு ராஞ்சியிலிருந்து நிறைய பேர் சனி, ஞாயிறு
கிழமைகளில் வந்து நேரத்தினை போக்குகிறார்கள். நல்ல இடம். ராஞ்சி நகரிலிருந்து
அருகிலேயே இருக்கிறது என்பதால் ஒரு நாள் பயணமாக இங்கே வரலாம். சிலர்
குடும்பத்துடன் இங்கே வந்து, அருவியில் குளித்து, சமைத்துச் சாப்பிட்டு மாலையில்
வீடு திரும்புகிறார்கள். நல்லதொரு இடம். ராஞ்சி பக்கம் சென்றால் அங்கே செல்லலாம்!
போகிற போக்கில் ஒரு ஹிந்தி வார்த்தையும் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன்.
அருவிக்கு ஹிந்தியில் என்ன பெயர் தெரியுமா? ஜர்ணா அல்லது ஜல்ப்ரபாத்!
நாளை மீண்டும்
சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஹூன்ட்ரூ அருவி ஆஹா! நான் நெட்டில் படத்தில் பார்த்து வியந்து ரசித்ததுண்டு. ஜார்கண்டில் நிறைய அருவிகள் இல்லையா. இதை நெட்டில் பார்த்ததும் போய்ப் பார்க்க வேண்டும் என்று லிஸ்டில் போட்டு வைத்துக் கொண்டுள்ளேன் ...வயதாகும் முன்
படம் செமையா இருக்கு பதிவு வாசிக்கிறேன்.
கீதா
மாலை வணக்கம் கீதாஜி...
நீக்குஇந்தியாவிலேயே இப்படி பல இடங்கள் உண்டு. வயதாகும் முன்னர் பார்த்து விட வேண்டும் என பல இடங்களை பட்டியல் இட்டு வைத்திருக்கிறேன் நானும்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓ அருவிக்கு ஹிந்தியில் ஜர்ணா என்றும் உண்டு என்பதை அறிகிறேன் ஜி. ஜல்பிரபாத் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅருவியின் படங்கள் செமையா இருக்கு ஜி. மிதவையில் எப்படி நின்று கொண்டே பயணிக்கிறார்கள்? ரிஸ்க் இல்லையா?
கீதா
ஜர்ணா என்ற வார்த்தை உங்களுக்குப் புதிதா... மகிழ்ச்சி.
நீக்குமிதவையில் நின்றபடி பயணம் - கொஞ்சம் அல்ல அதிகமான ரிஸ்க் தான் - ஆனால் அதிலும் ஒரு த்ரில் இருக்கிறது!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
மிதவையை தள்ளிச் செல்ல ஆள் யாரேனும் இருப்பார்களோ?
பதிலளிநீக்குஜார்கண்ட் பிஹாரிலிருந்துப் பிரிந்ததால் தப்பித்து நன்றாக முன்னேறி இருக்கிறது. பிரிந்தது நல்லதுதான்.
ராஞ்சி அருவிகள் நகரம் என்று நெட்டில் பார்த்ததுண்டு. செல்லும் வழி மிக மிக அழகாக இருக்கிறது ஜி.
மரத்தில் ஒரு மரம் கைவேலைப்பாடு சூப்பர். மரத்தின் கலர் கொண்டே பூக்கள்!.
வயதாகும் முன் இந்த அருவிக்குச் சென்று விட வேண்டும் ஹா ஹா ஹா ஹா....
முதியவரின் பார்வை தீர்க்கமாகத்தான் இருக்கிறது என்றால் அப்பையன்கள் படமும் அழகு. எல்லாப்படங்களும் மிக அழகு ஜி!
படிகள் அழகாகக் கட்டப்பட்டிருக்கின்றன. நல்ல காலம் படிகள் ஒவ்வொன்றிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ரொம்ப ஆழமாக இல்லை என்று தோன்றுகிறது படத்தைப் பார்க்கும் போது.
கொல்லி ஹில்ஸ் ஆகாயகங்கை அருவிக்கும் இறங்கித்தான் செல்ல வேண்டும். படிகள் இத்தனை கிடையாது இதில் பாதிதான் இருக்கும் ஆனால் படிகள் இறங்கவும் ஏறவும் கொஞ்சம் இடைவெளி அதிகம் என்பதால் சிரமமாக இருக்கும்...
கீதா
கொல்லி ஹில்ஸ் - எனக்கும் அங்கே சென்று வர ஆசை உண்டு - ஒரு முறை திட்டமிட்டு போக முடியாமல் போனது! இன்று கூட என் கல்லூரித் தோழிகளில் மூன்று பேர், அவர்களது பள்ளித் தோழிகளுடன் - 31 பெண்கள் மட்டும் - கொல்லி மலைக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்று இருக்கிறார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!
விட்ட பதிவுகளையும் வாசிக்கிறேன் ஜி
பதிலளிநீக்குகீதா
முடிந்த போது வாசியுங்கள் கீதாஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
குட்மார்னிங். அருவிக்குச் செல்லும் கிராமிய சாலை கவர்கிறது.
பதிலளிநீக்குமாலை வணக்கம் ஸ்ரீராம். கிராமியச் சாலைகள் என்னையும் கவர்ந்தன.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஹூண்ட்ரூ... அதென்ன அப்படி ஒரு பெயர்? படங்கள் அழகு. அருவியை விட சுற்றுப்புறங்களை அதிகம் படம் பிடித்திருக்கிறீர்கள். அனைத்தையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஹூண்ட்ரூ பெயர்க் காரணம் - எனக்கும் தெரியாது ஸ்ரீராம். அருவியை விட சுற்றுப்புறங்களை அதிகம் பிடித்திருக்கிறேன் என்பது உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படத்திலேயே பார்த்துக்கறேன் இந்த அருவியை! ஹிஹி, சித்ரகூடம் போனப்போ ஹனுமான் கோயில் இருக்கும் மலைக்கு ஆயிரத்துக்கும் மேல் படிகள் என்பதால் எங்களை ஏற விடாமல் தடுத்துட்டாங்க! எங்களாலும் முடிஞ்சிருக்குமா சந்தேகமே! அங்கே தான் துளசிதாசர் ராம்சரித்ரமானஸ் எழுதினாராம். மனசாலே பார்த்துக் கொண்டோம். அது போல் இதையும் பார்த்துக்கறோம். :))))
பதிலளிநீக்குபடத்திலேயே பார்த்துக்கறேன் இந்த அருவியை - ஹாஹா... அதான் நல்லது. படிகளில் இறங்கி ஏறுவது கொஞ்சம் சிரமம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
கிராமியப் பாதைகள் சுத்தமாக இருப்பதைப் பார்த்தால் நம்ம பக்கத்தை நினைத்து வெட்கம் வருகிறது. படங்கள் அழகு. அம்மாவின் முந்தானையில் மறைந்திருக்கும் சிறுவன் அழகு! அருவிப் படம் மிக மிக அற்புதம். இயற்கைதான் தன்னிடம் எத்தனை ரகசியங்கள், அற்புதங்களை ஒளித்து வைத்திருக்கிறது!
பதிலளிநீக்குகிராமியப் பாதைகள் அங்கே வெகு அழகு. நம் ஊரிலும் இப்படியான பாதைகள் உண்டு. முன்னேற்றம் என்ற பெயரில் பலவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
கொல்லிமலையில் அருவிக்குப் போய்க் குளித்து, திரும்ப ஏறி வருவதற்குள் பட்ட கஷ்டத்தை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
பதிலளிநீக்குஉணவு போஹா இல்லையா?
போஹா இல்லை.
நீக்குஉங்கள் கொல்லிமலை அனுபவம் - :( நானும் போக நினைத்து போக முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
as usual
பதிலளிநீக்குyour one of the best in travelogue and travel photography
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குஇயற்கையை ரசிக்க சிரமப்படலாம்...
இயற்கையை ரசிக்க சிரமப்படலாம்! அதே தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகழகான படங்களுடன் புதிய இடத்தை அறிந்து கொண்டேன்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குவிரல்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் முதன் முதலாக வாக்களித்திருப்பானோ!?...
பதிலளிநீக்குஹாஹா... வாக்கு அளிக்கும் வயது அவனுக்கு இன்னும் வரவில்லை துரை செல்வராஜூ ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்களுடன் பதிவும் தகவல்களும் சிறப்பு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஇயற்கையை ரசிக்க சில சிரமங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும் போல் உள்ளது.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அழகு.
மரசீவலில் மலர்கள் மரத்துண்டு பூ தொட்டி கை வேலை அருமை.
குழந்தைகள் சிரிப்பு அருமை.
மேலே உள்ள படத்தில் தன் விரலகளை பார்த்து கொண்டு வருவதைப் பார்த்தால் 'கொக்கே கொக்கே பூ போடு' என்று கேட்டு இருப்பானோ? பூ வந்து விட்டதா ! என்று விரல் நகங்களை பார்க்கிறான் போலும்.
//கொக்கே கொக்கே பூ போடு...// சிறு வயதில் விளையாடிய விளையாட்டு - எத்தனை ஆர்வம் அப்படி விளையாடுவதில் இருந்தது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
அருமையான உலா. புகைப்படங்கள் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. அருவிக்கு இணையான இந்தி சொல்லை சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅழகு. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியைப் போல இருந்தாலும் அதைவிட அமைதியானது போல உள்ளது. படிகளும் குறுகிய உயரத்துடன் இருப்பதால் ஏறவும் இறங்கவும் கொஞ்சம் கடினம் குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅமைதியான இடம் தான் பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமிக மிக அழகான படங்கள். அத்தனைப் படங்களும் மிக அழகு. அருவிக்கு செல்லும் பாதைகளும், இயற்கையின் வனப்பும் அழகு கொஞ்சுகிறது. அருவியை காண கீழே இறங்கிச் செல்லும் படிகள், மீண்டும் என்னை சரணடைந்து நீங்கள் மறுபடியும் ஏற வர வேண்டும் எனக்கூறுவது போல ஒரு தோற்றம். ஆனால் நீங்கள் கூறுவது போல சிரமத்தைப் பார்த்தால் இயற்கையை ரசிக்க இயலாது. என்னால் இங்கெல்லாம் செல்ல முடியாதெனினும் தங்கள் பதிவின் மூலம் ரசிக்கும் வாய்ப்புக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிரமம் பார்த்தால் இயற்கையை ரசிக்க இயலாது என்பது உண்மை கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான அருவி. இயற்கையின் அழகை என்ன வென்று சொல்வது. உங்கள் வயதில் நீங்கள் போய்ப் பார்க்க வேண்டிய இடம்தான் வெங்கட்.
பதிலளிநீக்குமுட்டி தேய்ந்தபிறகு ஏறுவது நடக்காத காரியம். விடாப்பிடியாக இறங்கி ஏறி எங்களுக்கும் படங்கள் அளித்திருக்கிறீர்கள்.
அருவி நீர்ப் பகுதியில் குளிப்பவர்கள் இகக் கவனமாக இருக்க வேண்டும்.
பச்சைப் பசேல் என்றூ கிராமப் பாதைகள் மிகவும் மனதைக் கவர்கின்றன.
நன்றி.
முடிந்த போதே சென்று வந்து விட வேண்டிய இடங்கள் தான் வல்லிம்மா...
நீக்குகிராமியப் பாதைகள் ரொம்பவே பிடித்திருந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருவி மிக அழகாக இருக்கிறது ஆனால் படிகளைப் பார்க்கும் போதுதான் பிரமிப்பாக இருக்கிறது. படங்கள் வழக்கம் போல் அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குநீர் வீழ்ச்சிகளை கீழே இருந்துஅண்ணாந்து பார்ப்பது மேலிருந்து கீழே விழுவதைப் பார்ப்பது என்றுஇரண்டு விதமுண் நான் இரண்டு விதமாகவும் கண்டு ரசித்திருக்கிறேன் கேரளத்தில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கூறுகிறேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு