புதன், 8 மே, 2019

ஜார்க்கண்ட் உலா – ரஜ்ரப்பா – சின்னமஸ்திகா தேவி கோவிலும் அருவியும்


பைரவி ஆறு தாமோதர் ஆற்றில் சங்கமிக்கும் காட்சி...

ரஜ்ரப்பா – இந்தப் பெயரை இது வரை நீங்கள் கேட்டதுண்டா? இந்தப் பெயரில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு அழகிய இடம் இருக்கிறது. இன்றைய பதிவின் மூலம் நாம் இந்த அழகான இடத்திற்குத் தான் செல்லப் போகிறோம். ரஜ்ரப்பா – இந்த இடம் இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் ஒரு இடம் – கூடவே ஒரு மிகச் சிறப்பான கோவிலும் இங்கே அமைந்திருக்கிறது. வாருங்கள் இந்த ரஜ்ரப்பா பற்றி பார்க்கலாம்!



கிராமங்களுக்கு உள்ளே பயணித்த பாதை...


 வைக்கோல் போர்கள் இப்படியும் வைக்கலாம்!...

ஹுண்ட்ரூ அருவியிலிருந்து புறப்பட்டு வழியில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு இந்த ரஜ்ரப்பா நோக்கி பயணித்தோம். ஆனால் வழியில் ஒரு பிரச்சனை காரணமாக நாங்கள் செல்ல வேண்டிய இடமான ரஜ்ரப்பா சென்று சேர்வதே சந்தேகம் ஆனது. நாங்கள் சென்று கொண்டிருந்த அதே சாலையில் முதல் நாள் இரவு ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆளை அடித்த வண்டி நிற்காமல் போய்விட, அடிபட்டவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றிருக்கிறார்கள். அடுத்த நாள் மதியம் அடிபட்டவர் இறந்து விட, அவரது உடலை எடுத்துக் கொண்டு வந்து அடி பட்ட சாலையில் நடுவே ஒரு கயிற்றுக் கட்டிலில் போட்டு சாலையை மறித்து விட்டார்கள். விபத்தினை ஏற்படுத்திய வண்டியை பிடித்து, அந்த ஓட்டுனருக்கு தண்டனை தரும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்று தகராறு.


பச்சைப் பசேலென... காய்கறித் தோட்டம்...



ரஜ்ரப்பா கோவில் வளாகத்தில்...


இந்த இடத்தில் தான் எங்கள் ஓட்டுனர் மும்தாஜ் அவர்களின் திறமையும் நீண்ட அனுபவமும் கை கொடுத்தது. இந்த வழியே பயணிக்க முடியாது என்று தெரிந்ததும், கிராமங்கள் வழியே பயணித்து, பிரதான சாலையை மீண்டும் அடையலாம் என்று சொல்லி சில கிலோமீட்டர்கள் வந்த பாதையிலேயே திரும்பி கிராமத்து வழியே எங்களை அழைத்துச் சென்றார். அந்த மாதிரி சென்றதில் இன்னுமொரு லாபம். ஜார்க்கண்ட் நகரின் பல பாரம்பரிய கிராமங்களை எங்களால் பார்க்க முடிந்தது. கிராமங்களில் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், உருளை போன்றவற்றை பயிரிடுவதையும், வைக்கோல் போர் வீடுகளின் மேலே அமைத்திருப்பதையும், கிராமிய வீடுகளையும் பார்க்க முடிந்தது. ஒரு கார் மட்டுமே பயணிக்க முடியும் பாதையில் எதிரே எந்த வாகனமும் வந்து விடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் சென்றது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்! எங்களுடன் முதல் நாள் வந்த ஓட்டுனரான குல்தீப் வந்திருந்தால் – அந்த சாலையிலேயே நின்று கொண்டிருந்திருப்போம்!


கோவில் கோபுரம் - வடக்கிற்கும் தெற்கிற்கும் வித்தியாசம்...


தேவிக்கு உகந்த செம்பருத்தி மாலை...


ரஜ்ரப்பா – சோட்டா நாக்பூர் என அழைக்கப்படும் பகுதியில் ராம்கட்[ர்] மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு அழகிய இடம் தான் இந்த ரஜ்ரப்பா. தாமோதர் மற்றும் பைரவி ஆகிய இரண்டு ஆறுகள் இங்கே சங்கமிக்கின்றன. தாமோதர் ஆறு சிவபெருமானாகவும், பைரவி நதி பார்வதியாகவும் இங்கே சங்கமிக்கிறார்கள் என்பது இப்பகுதி மக்கள் நம்பிக்கை. இந்த இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தான் ரஜ்ரப்பா கோவில் அமைந்திருக்கிறது. பிரதான கோவிலாக சின்னமஸ்திகா தேவியின் கோவில் அமைந்திருக்கிறது. இந்த வலைப்பூவினை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு, முன்பு ஒரு சமயம் எழுதிய ஹிமாச்சலப் பிரதேசத்தின் சின்னமஸ்திகா தேவி கோவில் பற்றிய விஷயங்கள் நினைவு இருக்கலாம். அப்பதிவுகளை படிக்காதவர்கள் இங்கேயும் இங்கேயும் படிக்கலாம்!


தாமோதர் ஆற்றில் படகுக் குழாம்...


தாமோதர் ஆற்றில் படகுப் பயணம்...


சரி இப்போது ரஜ்ரப்பா கதைக்கு வருவோம். இந்த இடத்திற்கு பெயர் ஏன் ரஜ்ரப்பா என வந்தது என்பதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட ராஜாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை. சின்னமஸ்திகா தேவியை பிரார்த்தித்து குழந்தை பாக்கியம் பெற்றதாகச் சொல்கிறது இத்தலத்தின் புராணம். சரி அதற்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்பதற்கு முன்னரே சொல்லி விடுகிறேன். ராஜாவின் பெயர் ரஜ், ராணியின் பெயர் ரப்பா! ராஜா-ராணியின் பெயரை இணைத்து இந்த இடத்திற்கே ரஜ்ரப்பா என்ற பெயர் வந்தது என்று கதை! 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இப்பகுதி மக்கள் இந்தக் கோவிலைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் 51 சக்தி பீடங்கள் பற்றிய கதையும், சக்தி பீடங்களாகக் கருதப் படும் கோவில்களும் மாறி விடுவதாகத் தோன்றுகிறது.


தாமோதர் ஆற்றில் படகில் பயணிக்கும் நண்பர்...


அதே படகில் நானும்!...


ஆதி பராசக்தியின் 10 மஹாவித்யா ரூபங்களில் இந்த சின்னமஸ்திகா ரூபமும் ஒன்று. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலுக்கு, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. நாங்கள் சென்ற போது பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. இப்பகுதி மக்களுக்கு சின்னமஸ்திகா தேவி மீது பூரண நம்பிக்கை. கல்யாணம், குழந்தைகளுக்கு மொட்டை அடிப்பது, தங்கள் புதிய வாகனங்களுக்குப் பூஜை செய்வது போன்ற அனைத்திற்கும் இங்கே தான் வருகிறார்கள். எந்த வித விபத்தும் ஏற்படாமல் இருக்க இங்கே வந்து பூஜை செய்வார்களாம். மனோகாம்னா மந்திர் என்ற பெயரிலும் இக்கோவில் அழைக்கப்படுகிறது – பக்தர்கள் நினைத்ததை நடத்தித் தருபவள் இந்த சின்னமஸ்திகா தேவி என்பதால் இப்பெயர்.


தாமோதர் ஆற்றில் மாலை நேரக் காட்சி...



பாறைகளுக்கு நடுவே படகுப் பயணம் - படகோட்டி காதில் ஒயர் சொருகி இருக்க யாருடனோ பேசிக் கொண்டே வந்தார்...


கோவிலில் நிறைய கூழாங்கற்கள் சிகப்புக் கயிற்றில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்தது. எதற்காக இந்த மாதிரி? தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற வேண்டிக்கொண்டு பைரவி ஆற்றிலிருந்து ஒரு சிறு கல்லை எடுத்து, அதை சிகப்பு நூலில் கட்டி அதனை சின்னமஸ்திகா தேவியின் சிலை அருகே கட்டி வைக்கிறார்கள். நினைத்த விஷயம் நடந்த பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்து அந்தக் கல்லை அவிழ்த்து மீண்டும் நதியில் சேர்க்கிறார்கள். கூடவே சின்னமஸ்திகா தேவிக்கு பலி கொடுப்பதும் உண்டு! இந்தப் பகுதியில் அதிக அளவில் இருக்கும் சந்தால் என்ற பழங்குடி மக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தாமோதர் நதிக்கரையில் தான் திதி கொடுக்கிறார்கள். இறந்தவர்களின் அஸ்தியும் இங்கே கரைப்பது அவர்களது வழக்கமாக இருக்கிறது. அவர்களது ஆத்மா இங்கே தான் அமைதியடைகிறது என்பது அவர்களது நம்பிக்கை.


பைரவி ஆறு தாமோதர் ஆற்றில் சங்கமிக்கும் காட்சி...



தனது மணாளனுடன் சங்கமிக்க எத்தனை ஆசை பைரவிக்கு....


மஹாவித்யா என அழைக்கப்படும் பத்தில் மீதமுள்ள ஒன்பது ரூபங்களுக்கும் இங்கே கோவில் உண்டு. சரி கோவில் பற்றி பார்த்தோம். இந்த இடத்தில் சங்கமிக்கும் இரண்டு ஆறுகள் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாமா? தாமோதர் ஆறு – சிவபெருமானின் ரூபம் என்று சொன்னேன். அதைப் போலவே பைரவி ஆறு பார்வதி தேவியின் ரூபம். பைரவி ஆறு மேலேயிருந்து கீழ்நோக்கி இறங்கி வந்து ஒரு அருவி போல விழுந்து தாமோதர் ஆற்றில் கலக்கிறது. அந்தக் காட்சி வெகு அழகாக இருக்கிறது. கோவிலுக்குப் பின்புறம் தான் இந்த இரண்டு ஆறுகளும் சங்கமிக்கும் பகுதி இருக்கிறது. இந்த இடத்தில் சில படகுகளும் இருக்கின்றன. படகில் ஒரு சுற்று சுற்றி வர முப்பது ரூபாய் வாங்குகிறார்கள். பைரவி ஆறு அருவியாக விழும் இடத்தின் அருகே படகைச் செலுத்தி நம் மீது சில நீர்த்துவாலைகள் விழும்படிச் செய்ய நம் மனதிலும் ஆனந்தம் பொங்குகிறது.


பைரவி ஆறு தாமோதர் ஆற்றில் சங்கமிக்கும் காட்சி...


மிகவும் அழகான சூழலில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சின்னமஸ்திகா தேவியையும் அங்கே அமைந்திருக்கும் மிகப் பெரிய சிவலிங்கத்தினையும் வழிபட்டு அங்கிருந்து ராஞ்சி திரும்பினோம். மறக்கமுடியாத ஒரு பயணமாக இந்த ரஜ்ரப்பா பயணம் அமைந்தது எங்களுக்கு. மீண்டும் வேறு ஓர் இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் வரை காத்திருங்கள்.

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    இந்த அருவியையும் நெட்டில் நான் பார்த்திருக்கிறேன்...நேற்று பெயர் நினைவில் டக்கென்று வரவில்லை உங்களிடம் சென்றீர்களா என்று கேட்க நினைத்து விட்டுவிட்டேன்...

    அழகான அருவி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. மிக் மிக அழகான இடம் வெங்கட்ஜி! ஹையோ செமையா இருக்கு. கண்டிப்பா பார்க்கணும் நேரில்.

    படங்களும் செமையா எடுத்திருக்கீங்க பாறைகளின் இடையில் பயணிப்பது ஹொக்கேனக்கல் நினைவு வருது. அங்கு பாறைகள் அதிகம் உயரமும் அதிகம்.

    இந்த அருவியைன் படங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு. சின்னமஸ்திகா கோயில் பற்றியும் அறிந்து கொண்டோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. கிராமத்து வீடுகளும் காய்கறித் தோட்டங்களும் பார்க்க அழகாக இருக்கிறது.

    ஊரே பசுமையாகவும் இருக்கிறது. காய்கள் தோட்டம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது ஜி!

    நல்ல காலம் கிராமங்கள் ஊல் வழியே போகும்படி ஆனது இல்லைனா இதை எல்லாம் பாத்திருக்க முடியாது இல்லையா...வீடுகள் அழகாக இருக்கிறது என்றாலும் மக்கள் பாவம் என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. ரஜ்ரப்பா பெயர் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். குட்மார்னிங்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. //ஹுண்ட்ரூ அருவியிலிருந்து புறப்பட்டு வழியில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சாப்பிட்ட பிறகு//

    என்ன மாதிரி உணவகம்? என்ன உணவு என்று சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்திய உணவு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. மும்தாஜின் சாமர்த்தியம் சிறப்பு. அதனால் எங்களுக்கும் அந்த ஊர் வழக்கங்கள் சில தெரிகிறது - உங்கள் படங்கள் வாயிலாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. கல்லைக்கட்டி அவிழ்ப்பார்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேறியபிறகு சரி, தாங்கள் கட்டிய கல் எது என்று எப்படித் தெரியும் அவர்களுக்கு?

    மிகவும் சுவாரஸ்யமான இடம், தகவல்கள். படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லில் அடையாளம் ஏதும் வைப்பார்கள் என நினைக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. அழகான படங்கள். அருமையான பதிவு. ரஜ்ரப்பா என்னும் பெயரும் தாமோதர் நதியோடு பைரவி சங்கமம் ஆவது குறித்தும் இப்போது தான் கேள்விப் படுகிறேன். சின்னமஸ்தா பற்றித் தெரியும். கல்கத்தா சென்றபோது சின்னமஸ்தா தேவியின் கோயிலைத் தேடிக் கொண்டு சென்றோம். கண்டுபிடிக்க முடியலை. எங்கள் ஓட்டுநருக்கும் தேடிச் சென்று காட்டும் மனநிலை இல்லை. கோயில் படங்களும், கிராமியப் பாதையும் கறிகாய்த் தோட்டங்களும் அழகு. இம்மாதிரிக் கறியாய்த் தோட்டங்களை குஜராத்தில் நிறையப் பார்த்திருக்கேன். சும்மாவே காய்களைப் பறித்துக் கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கூட இக்கோயில் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. நதியும் சூழலும் அருமை. இதுபோன்று பயணிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்தான். ஊரைப்பற்றிய பெயர்க்காரணம் அறிந்து வியந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. அருவி, ந்திகளின் சங்கம்ம் அருமை... இந்த மாதிரி பிரயாணத்தின்போது அருவியில் குளிக்கலாம் எனத் திட்டமிடுவீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் அருவிகளில் குளிப்பதில்லை. ஒன்றிரண்டு முறை குளித்த அனுபவம் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. இடமும் படங்களும் வெகு அழகு ....

    பல நாள் ஊர் சுற்றலுக்கு பின் இன்று தான் வலைப்பக்கம் வர முடிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  12. படங்கள் அனைத்துமே அழகிய காட்சி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  13. அழகிய அருவியும், அமைதியான நதியும், கிராமப்புறக் காட்சிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  14. அருமையான இடம்.கண்டு ரசித்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. சென்ற பதிவில் இருந்த அருவியை விட இது இன்னும் அழகாக இருக்கிறதே நிறைய தண்ணீருடன். படிகளும் இல்லை. அழகான இடம். கோயில் பற்றிய விவரங்களும் சிறப்பு. கிராமத்து வீடுகள் மற்றும் காய் தோட்டம் வெகு அருமை. படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  16. அழகான படங்கள்...

    அருமையான தகவல்கள்...

    அருவி ஆகா....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. பைரவி ஆறு தாமோதர் ஆற்றில் சங்கமிக்கும் காட்சி மிக அருமை.

    கிராம வீடுகள், திண்ணை திண்ணையில் அமர்ந்து இருக்கும் பெரியவர் எல்லாம் நம் தமிழ்நாட்டு கிராம் போல் இருக்கிறது.
    வைக்கோல் வைக்கும் வீடு அழகு.
    படகு சவாரி, கோவில் அனைத்தும் அழகு.
    பார்க்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் விவரிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....