சனி, 14 மே, 2022

காஃபி வித் கிட்டு - 150 - பயணம் - நந்தாதேவி ராஜ் ஜாதா யாத்ரா - ”சார், போஸ்ட்!” - சொற்கள் - தினம் தினம் தில்லி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

PATIENCE AND SILENCE ARE TWO POWERFUL ENERGIES; PATIENCE MAKES YOU MENTALLY STRONG! SILENCE MAKES YOU EMOTIONALLY STRONG.

 

******

 

பயணம் குறித்த எண்ணங்கள்:  



சரயு நதிக்கரையில்....  அயோத்யா ஜி!
 

சென்ற காஃபி வித் கிட்டு பதிவில் சொன்னது போல, ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நான்கு நகரங்களுக்குப் பயணம் செய்து வந்தேன்.  நைமிசாரண்யம், அயோத்யா ஜி, வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் (அலஹாபாத்) என ஒரு வாரம் பயணம்.  பயணத்தில் மொத்தமாக மூன்றே பேர் - நான், நண்பர் மற்றும் அவரது இல்லத்தரசி!  மிகச் சிறப்பான பயணமாக அமைந்தது - நின்று நிதானித்து சில இடங்களைப் பார்க்க முடிந்ததோடு நல்ல பல அனுபவங்களையும் தந்ததாக இந்தப் பயணம் அமைந்தது.  பயணம் குறித்து இங்கே எழுதவில்லை என்றாலும் முகநூலில் பயணத்தின் போதும், அதன் பின்னரும் அவ்வப்போது எழுதி வந்தேன்.  இங்கேயும் பயணம் குறித்து எழுதுவதா இல்லை அப்படியே விட்டு விடுவதா ?  பயணம் குறித்த  தகவல்கள் ஒருவருக்கேனும் பயனுள்ளதாக அமைந்தால் நல்லதே!  என்ற குறிக்கோள் தான் இன்னமும் எழுதத் தூண்டுதலாக இருக்கிறது! 

 

******

 

இந்த வாரத்தின் தகவல் - நந்தாதேவி ராஜ் ஜாதா யாத்ரா :




 

உத்திராகண்ட் மாநிலத்தின் CHசமோலி பகுதியில் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ஒரு யாத்ரா நந்தாதேவி ராஜ் ஜாதா யாத்ரா! இந்த யாத்ராவினை மேற்கொள்பவர்கள் சுமார் 280 மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.  பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த யாத்ராவில் உத்திராகண்ட் மாநிலத்தின் அனைத்து மக்களும் ஈடுபாடுடன் பங்குகொள்வார்கள்.  கடைசியாக 2014-ஆம் ஆண்டு இந்த யாத்ரா நடந்தது. அடுத்த யாத்ரா இன்னும் நான்கு ஆண்டுகளில்!  இந்த யாத்ரா குறித்த சில காணொளிகள் யூட்யூபில் உண்டு.  சுமார் பத்தொன்பது நிமிடம் ஓடக் கூடிய இந்த காணொளி சிறப்பாக இருக்கிறது.  முடிந்தவர்கள் பார்க்கலாம்! இந்த யாத்ராவில் நான்கு கொம்புகளைக் கொண்ட காடு (KHADU) எனும் விலங்கினை அலங்கரித்து யாத்ராவின் போது அழைத்துச் செல்வார்கள்.  நந்தாதேவியில் அலங்கரிக்கப்பட்ட சிலையுடன் செய்யும் இந்த யாத்ரா பத்தொன்பது இடங்களில் வழியில் நின்று செல்லும்.  மிகவும் கடினமான யாத்ரா - வழியில் மலையேற்றம் மட்டுமல்லாது, பனிச்சிகரங்கள்,  ஹிந்தியில் Bugyal என அழைக்கப்படும் புல்வெளிகள், மலைப்பகுதிகள், ஆறுகள் என பல பகுதிகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஆனாலும் நந்தா தேவி மீது இருக்கும் பக்தியும் அன்பும் இந்தப் பாதையைக் கடப்பதில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  முடிந்தால் அடுத்த யாத்ராவில் கலந்து கொள்ள ஆசை! முடிந்தால் மேலதிகத் தகவல்களோடு தனிப்பதிவாகவே எழுதுவேன்!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: சார், போஸ்ட்!

 

2010-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சார், போஸ்ட்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

நாங்கள் நெய்வேலியில் வட்டம் (Block) பதினொன்றில் இருந்த போது அந்தப் பகுதி முழுவதற்கும் ஒரே ஒரு அஞ்சல்காரர் தான். அவர் பெயர் வீரமணி. தினமும் சைக்கிளில் வந்து எல்லோரது அஞ்சல்களையும் அவரவர்களிடம் ஒப்படைப்பார். தெரு முனையில் அவரின் சைக்கிள் மணியோசையை கேட்டவுடனே நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வருவோம். அவ்வப்போது எங்களிடம் வீட்டில் உள்ள எல்லா நபர்களின் பெயரையும் சொல்லி விசாரிப்பார். இதைப் போன்றே அனைத்து வீடுகளிலும். அந்த அளவிற்கு எல்லோரையும் பற்றி அவருக்குத் தெரிந்து இருந்தது.

 

என்னுடைய அப்பா, சனிக்கிழமைகளில் அவரை பார்க்கும் போது அவர் கடிதம் ஏதும் தரவில்லையெனில் அவரைப் பார்த்து, Nobody has written a letter? என்று கேட்பது வழக்கம். அப்போது, இன்று ஒரு தபாலும் இல்லை என்று சொல்லாமல், நாளைக்குத் தருகிறேன் என்று சிரித்தபடியே செல்வார்.

 

அவருக்கு சிறு வயதிலேயே காது கேட்பதில் ஏதோ பிரச்சனை இருந்ததால் காதில் ஒரு கருவியை மாட்டிக்கொண்டு, சிரித்த முகத்துடன் எல்லோரையும் விசாரித்தபடி செல்லும் அவரின் உருவம் இன்னமும் என்னுள்ளிருந்து மறையவில்லை.

 

தற்போதோ, பக்கத்து வீட்டில் யார் குடியிருக்கிறார்கள், அவர்களது வீட்டில் உள்ள நபர்கள் எத்தனை, அவர்களது பெயர் என்ன, என்பது போன்ற ஒரு விஷயமும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - இன்று ஒரு தகவல் :


 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - சொற்கள்:

 

சொற்கள்

 

பேசி முடித்த ஒவ்வொரு வேளையிலும்

புதிரானதொரு துக்கம் அழுத்துகிறது

என் சொற்களே

தன் நோக்கத்திற் கெதிராய்ச்

செயல்பட்டுவிட்ட மாதிரி

முதன் முதலில் தோன்றிய சொல்

நான் ஆக இருந்தது

அதை அழிக்க எனத் தோன்றின

ஆயிரம் சொற்கள்

தோன்றிக்கொண்டே இருந்தன

சொற்களின் ரணகளக் கூச்சல்

அனைத்தும் அழிந்தன ஒருபோது

ஒலியிலாச் சொல்லொன்று

ஒளிர்ந்தபோது

ஆனந்தமானது அவ்வேளை

நல்லவேளை

என் பேச்சை அவிழ்த்துவிடும்

நபர் யாரும் இல்லை

பறவைகளின் ஒலிகளில் சொற்களில்லை

பரிதியின் பொன்னில் சொற்களில்லை

அந்தக் காலைக் குளிர்விரலில் சொற்களில்லை

மரங்களின் அசையும் பச்சை நாவுகளில்

மேகங்களின் ஒளிரும் மெல்லிய நகர்வில்

சொற்களில்லை ஆனால்

இருந்தது ஓர் உரையாடலின் கனி

கட்டித் தழுவி முத்தமிட்டோ

காலில் விழுந்தோ

நான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிடுகிறேன்

நீ ஒவ்வொரு முறையும் சிலுவையிலேறி

ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழுகிறாய்.



  • தேவதேவன்

 

******

 

இந்த வாரத்தின் செய்தி - தினம் தினம் தில்லி :



 

முகநூல் பக்கத்தில் தினம் தினம் தில்லி என்ற தலைப்பில் சில நாட்களாக தில்லி குறித்த சில தகவல்களை எழுதி வருகிறேன்.  தொடர்ந்து எழுத முடியாவிட்டாலும் இதுவரை 20 நாட்கள் எழுதி விட்டேன்.  பார்க்க வேண்டிய இடம், உணவு, தகவல்கள் என பல விஷயங்களை மாற்றி மாற்றி எழுதி வருகிறேன்.  ஐம்பது நாட்களாவது தொடர்ந்து எழுத எண்ணம்.  எழுதி முடிந்த பிறகு, முடிந்தால் மின்புத்தகமாகவும் வெளியிட வேண்டும்.  நண்பர்களுக்கு விருப்பமிருந்தால் இங்கேயும் ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன்.  அப்படி எழுதிய ஒரு விஷயம் தலைநகரின் பழைய தில்லி பகுதியில் இருக்கும் ஓல்ட் ஜலேபி வாலா என்ற கடை பற்றியது! அங்கே கிடைக்கும் ஜலேபியும், பச்சைப் பட்டாணி சமோசாவும் மிகவும் பிரபலம்! 1884-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கடை அது! 

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

28 கருத்துகள்:

  1. முகநூலில் பயணத்திகளையும் தில்லி பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும் படித்து வருகிறேன்.  புத்தகமாக போடுவது நல்லது.  இங்கும் போடடால் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் வாசித்து மகிழ்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணச் செய்திகளையும்

      நீக்கு
    2. முகநூல் கணக்கு இல்லாதவர்கள் இங்கே பகிர்ந்தால் படிக்கலாம். விரைவில் உத்திர பிரதேச பயணம் குறித்த தொடர் ஆரம்பிக்க இருக்கிறது ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    3. பயணச் செய்திகளையும், போட்டால் என்றே படித்தேன். :) மீள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. படங்கள் மிகவும் அழகாக தெளிவாக இருக்கிறது ஜி.

    தபால்காரரின் பதில் நன்று.

    இன்று ஒரு தகவல் வாக்கியங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. பயணம் அருமை... தகவலும், கவி வரிகளும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு எப்போதும் போல் நன்றாக உள்ளது.

    தங்களின் பயண எண்ணங்களாக இங்கும் அனைத்தையும் தெரிவியுங்கள். நாங்கள் அங்கெல்லாம் பயணங்கள் செய்ய முடியாவிடினும் உங்களது பயண அனுபவங்களை ரசித்துப் படிப்போம் .

    இந்த வாரத்தின் தகவல் நன்றாக உள்ளது காணொளியும் சென்று பார்த்து வந்தேன். நந்தா தேவி யாத்திரைக்கு மக்கள் உற்சாகமாக செல்வதை பார்க்க முடிந்தது.

    தபால் பதிவும் தங்களது பழைய பதிவுக்கும் சென்று வந்தேன். நன்றாக எழுதி உள்ளீர்கள். தபால் காரின் சேவையே மகத்தானது. அவரை நீங்கள் நினைத்தவுடன் தபால்காரர் திரு வீரமணி அவர்களின் பெயருக்கேற்ப கொரியர் கொண்டு வந்து தந்தவரின் பெயரும் ஒத்து இருந்தது வியப்புத்தான்.

    நீங்கள் ரசித்த வாட்சப் நிலைத்தகவல், கவிதை அனைத்தையும் நானும் ரசித்தேன்.

    முக நூலில் பகிர்கின்றவற்றை இங்கும் எழுதுங்கள். படித்து ரசிக்க நாங்களும் ஆவலாக உள்ளோம். இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. தங்களது வருகைக்கும் பதிவின் பகுதிகள் குறித்த விரிவான கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. நந்ததேவி யாத்ராவைப் பற்றிய செய்திகள் பிரமிப்பு.. அருமை..

    வீட்டில் உள்ளவர்களைப் பற்றி அன்புடன் விசாரிக்கும் தபால்காரர்.. அந்த காலம் எல்லாம் வருமோ இனிமேல்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கில் நந்தா தேவி யாத்திரை பிரபலம். இது போன்ற பல உலாக்கள், திருவிழாக்கள் அங்கே உண்டு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  6. காஃபி வித் கிட்டுவில் பகிர்ந்த அனைத்தும் அருமை.
    நந்தா தேவி யாத்திரையில் கலந்து கொண்டு நிறைய படங்களுடன் பகிருங்கள்.
    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. அயோத்தி பயணம் எழுதுங்கள். நந்தா தேவி யாத்திரை சென்று எழுதுங்கள். சார் போஸ்ட் பல நினைவுகளை எழுப்புகிறது. மனிதர்களையும் மனிதத்தை யும் நிறையவே இழந்துவிட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயோத்யா பயணம் விரைவில் வெளிவரும். பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி. உங்கள் பயணமும் சிறப்பாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

      நீக்கு
  8. வெங்கட்ஜி நான் முகநூலில் இல்லை. எனவே நீங்கள் இங்கு பகிர முடிந்தால் பகிருங்கள் எழுதுங்கள் ஜி. பயணம் என்றால் எனக்குக் கசக்குமா என்ன!!! இப்போது சென்று வந்த பயணம் பற்றியும் தினம் தினம் தில்லி அங்கிருந்து அப்படியே இங்கு பகிரலாம் இல்லையா? மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டி இருக்காதுதானே அப்படி என்றால் அதையும் இங்குப் பகிருங்கள்.

    ஜலேபி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சுவை சுவை! மிகவும் பிடிக்கும். வட இந்திய ஜலேபி மிகவும் பிடிக்கும். ஆனால் இனிப்பு !!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயோத்யா பயணம் குறித்த தொடர் விரைவில் வெளிவரும் கீதா ஜி. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  9. நந்தா தேவி யாத்திரை பிரமிப்பாக இருக்கிறது அதே சமயத்தில் வாய்ப்பு கிடைத்தால் செல்லவும் ஆசை வருகிறது. ஆச்சரியமான புதிய விஷயம் தெரிந்துகொண்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்குமா செல்ல!! ? காணொளி பார்க்கிறேன் ஜி, குறித்துக் கொண்டுவிட்டேன்.

    சார் போஸ்ட் வாசித்துவிட்டு வருகிறேன்.

    நிலைத்தகவலில் உதட்டிற்கு உண்மை என்பதை விட நாவிற்கு உண்மை என்றிருந்தால் நன்றாக இருக்குமோ? ஏனென்றால் சும்மா சொல்றாங்க எல்லாம் உதட்டளவில்தான் என்று சொல்வது உண்டு இல்லையா அதனால் மனதில் அப்ப்டித் தோன்றியது.

    அனைத்தும் ரசித்தேன் ஜி

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தா தேவி யாத்திரை பிரமிப்பானது தான் கீதா ஜி. பார்க்கும் போதே மனதுக்குள், அங்கே செல்லும் ஆசை வந்துவிடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. காணொளி பார்த்தேன். அங்கும் சாமியாடல் இருக்கிறது, ஒவ்வொரு இடத்திலும் நின்று பூஜித்து, பஜனை என்று அருமை. தென்னகத்திலும் சுவாமி இப்படி ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் போகும் போது நடப்பது போன்று ஆனால் நந்தாதேவி யாத்திரை மலையேற்றம். அருமை. அந்தக் கொட்டுச் சத்தம் சாமியாடல் எல்லாமே...இத்தனை தூரம் பிரமிப்பு. ஏரி (ஒரு பக்கம் மிதமான சூடு மற்றொரு பக்கம் குளிர்ந்த தண்ணீர்....ஆச்சரியம். அந்த மலைச்சிகரம் வாவ்! விளக்கமும் தெளிவாக இருக்கிறது. ரொம்ப ரசித்துப் பார்த்தேன் ஜி. மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
    3. காணொளி பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. சாமியாடல், உலா, மலையேற்றம் என ஒவ்வொரு விஷயமும் பார்த்து ரசிக்க தக்கதே. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. இப்படியும் யாத்திராவா என திகைக்க வைக்கிறது. நிலைத் தகவல் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. காஃபி வித் கிட்டுவில் மிகவும் பிரமிக்க வைத்த விஷயம் நந்தா தேவி யாத்திரை. காணொளியைக் காண்கிறேன்.

    ஆமாம் முன்பெல்லாம் கடிதப் போக்குவரத்தும் தபால்காரரும் ஒரு பிரத்யேகமான உறவுப்பாலத்தை வளர்த்தார்கள். இப்போது அதற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது என்னதான் உடனுக்குடன் பரிமாற்றங்கள் வாட்சப் மூலம் நடந்தாலும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தா தேவி யாத்ரா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. உங்கள் Facebook ID என்ன சார். நீங்கள் facebooklum எழுதுகிறீர்கள் என்று இப்பொழுதுதான் தெரியும். Friend request அனுப்பு கிறேன். உங்கள் எழுத்தை தினமும் ப்ளாக்கில் படிக்கிறேன். Facebookலும் படிக்க ஆசைப்படுகிறேன். Accept செய்யுங்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் அதிகம் எழுதுவதில்லை pudukairavi. எனது முகநூல் பக்கத்திற்கு சுட்டி கீழே ..

      https://www.facebook.com/venkataraman.nagarajan.7

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....