அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
DON’T GAIN THE WORLD AND LOSE YOUR SOUL,
WISDOM IS BETTER THAN SILVER OR GOLD.
******
ருபின் பாஸ் குறித்து இது வரை சில பகுதிகள் வெளியிட்டு இருக்கிறேன். முதல் பகுதி இங்கே!
இரண்டாம் பகுதி இங்கே!
மூன்றாம் பகுதி இங்கே!
நான்காம் பகுதி இங்கே!
ஐந்தாம் பகுதி இங்கே!
ஆறாம் பகுதி இங்கே!
பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!
*****
எங்கள் பயணத்தின் ஏழாம் நாள், நாங்கள் அதிகாலையில் எழுந்து, காலை 05.30 மணியளவில் ரோங்டி காட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தூரமுள்ள சாங்லாவுக்கு புறப்பட்டோம். இந்தப் பாதையில் பயணிப்பது கொஞ்சம் சுலபமானது மட்டுமல்லாது அழகான புல்வெளிகள் வழியாகச் செல்லும் பாதை. இறங்குமுகமாகச் சென்ற இந்த பாதையில் ஆங்காங்கே, மேய்ப்பர்களின் சில குடிசைகளைக் காண முடிந்தது. செல்லும் வழியில், நாங்கள் காலை 7.00 மணியளவில், மேய்ப்பர்களின் குடிசைகளில் ஒன்றின் அருகில் நின்று காலை தேநீர் அருந்தினோம். தொடர்ந்து பயணித்து நாங்கள் அதே பாதையில் மேலும் சென்று, சாங்லா பள்ளத்தாக்கைப் பார்த்தபடி, பைன், தியோதார் மற்றும் ஓக் மரங்கள் நிறைந்த காடுகளுக்குள் நுழைந்தோம்.
கின்னர் கைலாஷ் மலைத்தொடர்களின் உயரமான சிகரங்களை நேருக்கு நேர் பார்த்த போது, அந்த காட்சி எங்களை மிகவும் வசீகரிக்கும் விதமாக இருந்தது. காலை 9.15 மணியளவில், எங்கள் குழு அழகான சாங்லா பகுதிக்குள் நுழைந்து, காலை 9.30 மணியளவில் சாங்லா பாலத்தைக் கடந்தோம். பாஸ்பா நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில காட்சிகளை படங்களாகவும் எடுத்தோம். சாங்லாவின் புகழ்பெற்ற நாக் கோயிலையும் நாங்கள் வழியில் கண்டோம்.
நாங்கள் காலை 10.15 மணியளவில் அந்தப் பகுதியில் வாகனங்கள் பயணக்கூடிய சாலையை அடைந்தோம். அங்கிருந்து சுமார் 260 கி.மீ தொலைவில் இருந்த உத்திராகண்ட் மாநிலத்தின் மோரி எனும் பகுதிக்குச் செல்ல வாடகைக்கு வாகனம் அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வாடகை வாகனத்தில் பயணித்தால், அன்று மாலைக்குள் எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த மோரி பகுதிக்குச் சென்று விடலாம் என்பதால் இந்த முடிவு. சாங்லாவிலிருந்து ராம்பூர் வரை ஒரு வாடகை வாகனமும், அங்கிருந்து மோரி பகுதிக்கு ஒரு வாகனமும் என வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இறுதியாக, இரவு 8.45 மணியளவில் நாங்கள் மோரியை சென்று அடைந்து, இரவு உணவை முடித்துக் கொண்டு நீண்ட பயணத்தினால் ஏற்பட்ட களைப்பினைப் போக்கிக் கொள்ள ஓய்வெடுத்துக் கொண்டோம்.
எங்கள் பயணத்தின் எட்டாம் நாள் காலை 5.00 மணியளவில் மோரியில் இருந்து புறப்பட்டோம். மோரியில் இருந்து எங்களின் பயணப் பாதையில் மேல்நோக்கிச் செல்ல, மழை பெய்ய ஆரம்பித்தது. பல இடங்களில் மழைநீர் ஓடைகள் திடீரென தோன்றி சாலையில் உருண்டோடியது. ஒரு இடத்தில், தண்ணீரின் ஆர்ப்பரிப்பு மிகவும் வலுவாக இருந்ததால் நாங்கள் எங்கள் வாகனத்தினை 15 நிமிடங்கள் நிறுத்தி, மழை மற்றும் ஓடையின் வேகம் தணிந்தவுடன் அந்தப் பகுதியைக் கடந்தோம். ஆனால் அந்தப் பகுதியைக் கடந்து சற்றே தொலைவில் இருக்கும் புரோலா எனும் இடத்தினை அடைந்தபோது, ஒப்பீட்டளவில் மழை இல்லாமல் வறண்டிருந்தன. காலை 11.30 மணியளவில், நாங்கள் விகாஸ்நகர் பகுதியை அடைந்தோம். மேலும் பயணித்து Pபோண்டா சாஹிப்பைக் கடந்து ஹரியானாவின் யமுனாநகருக்குள் நுழைந்தோம். மாலை 5.30 மணியளவில், அவரவர் வீடுகளை வந்தடைந்தோம்.
மிகவும் கடினமான சூழ்நிலையில் அமைந்த இந்தப் பயணம் எங்களின் மறக்கமுடியாத மலையேற்றப் பயணமாக இருந்தது. உத்தராகண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேச கிராமங்களின் கலவையான இந்த பாதையில் நாங்கள் கண்ட பசுமையான புல்வெளிகள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஹிமாச்சலப் பகுதியில் இந்த பாதையில் பயணித்து, சாங்லா பள்ளத்தாக்கை அடையும் வரை கண்ட இயற்கை மற்றும் இயற்கைக்காட்சிகள் ஆகியவற்றின் நினைவுகள் மற்றும் அனுபவங்கள் மறக்க முடியாதவை. இந்தப் பயணம் எங்களுக்குத் தந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. இந்தப் பயணம் குறித்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்! பயனுள்ளதாகவும் அமைந்தால் மகிழ்ச்சியே! மீண்டும் ஒரு பயணம் குறித்த தகவல்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை….
நட்புடன்
ப்ரேம் Bபிஷ்ட்
******
நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
சுவாரஸ்யமான அனுபவங்கள். அங்கேயே குடிசை கட்டி வாழும் மேய்ப்பர்களின் வாழ்க்கை, நாம் பார்க்கும் எந்த விஞ்ஞான வசதிகளும் இல்லாமல், அதே சமயம் சந்தோஷமாக இருப்பார்கள், இல்லை?
பதிலளிநீக்குவசதிகள் இல்லையென்றாலும் நிறைவான வாழ்க்கை தான் ஸ்ரீராம். Contended Life! எனது பயணங்களில் இம்மாதிரி இடங்களில் சில நாட்கள் இருந்தாலும் நன்றாகவே இருந்த நாட்கள். நமக்கு தான் தேவைகள் அதிகரித்து விட்டன என்று தோன்றும்.
நீக்குநேற்றைய பதிவு நீங்கள் பார்க்கவில்லையோ?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மலை பயணம் அருமை. படங்களும் அருமை.இயற்கை காட்சிகள் மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க கூடியது. பயணம் இனிமையாக இருந்து இருக்கிறது.
பதிலளிநீக்குபயணம்/பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா. பயணங்கள் இனிமையானவையே! அதுவும் சரியான குழு/துணை இருந்தால்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.
குடிசைவாசிகளின் வாழ்க்கையே உயர்ந்தது.
பதிலளிநீக்குபயண அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜி
குடிசைவாசிகளின் வாழ்க்கை - அதிக தேவையின்றி இருப்பதை வைத்து இன்பமாக வாழும் நபர்கள். பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
சுவாரஸ்யமான அனுபவங்கள்! அழகிய புகைப்படங்கள்!
பதிலளிநீக்குபயண அனுபவங்களும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.
நீக்குமழை நீர் சாலையில் ஓடிய படமோ அது? எங்கு என்ன இருக்கும் பள்ளம் இருக்கும் என்றே அறிய முடியாத அளவு பாய்ந்திருக்கிறது.
பதிலளிநீக்குபயணம் கடினமான பயணம் என்றாலும் பல காட்சிகள் நண்பர்களுக்கு மனதை வசீகரித்தது போல எங்களுக்கும், பகிர்ந்து கொண்ட படங்கள், விவரங்கள் மூலம் மனதை வசீகரித்துவிட்டன. அருமையான பயணம். நண்பர்களின் வேறு மலையேற்றப் பயணங்களையும் முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் ஜி. மிக்க நன்றி வெங்கட்ஜி!
கீதா
மழை நீர் சாலையில் ஓடிய படம் தான். இது போன்ற இடங்களில் வாகனத்தில் கடக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக கடக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் தடுமாறினாலும் அதலபாதாளத்தில் சென்று விட வாய்ப்புண்டு கீதா ஜி.
நீக்குநண்பர்களின் பயணங்கள் குறித்த பதிவுகள் தொடரவே ஆவல். அடுத்த பயணக் கட்டுரைகள் எந்த பயணம் குறித்து என விரைவில் சொல்கிறேன். படங்களும் தொடரலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
இமாச்சல்பிரதேசம் சென்ற போதும் சரி பிற மலைப்பகுதிகளுக்குச் சென்ற போதும் சரி அங்கிருக்கும் வீடுகள், அவர்களின் தொழில்கள் எல்லாம் என்னை வியப்பூட்டியதுண்டு. அதுவும் இமயமலைப்பகுதிகளில் படத்தில் உள்ளது போன்ற வீடுகளில் வசிப்பவர்களின் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி வேறு எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்களே நாமோ எதை எல்லாமோ வேண்டி ஒடி பல கவலைகளுக்குள்ளாகிறோமே என்று நினைத்ததுண்டு.
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் பார்க்க வாசிக்கத் தூண்டும் பயணக் குறிப்புகள் படங்கள்!
பாஸ்பா நதி, ஒடை, அந்தச் சிறிய வீடு இருக்கும் படம் என்று எல்லாமே மனதை கட்டிப் போடுகின்றன. ரசித்து வாசித்தேன் ஜி
கீதா
இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் இருப்பதை விட்டு மேலும் மேலும் தேடிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை தான். பயணங்களில் மட்டுமாவது நிம்மதியாக இருக்க முடிகிறது இப்போது. பயணக் குறிப்புகளும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நண்பர் ப்ரேம் அவர்களின் தொடர் மிகவும் சுவாரசியமாக இருந்தது. படங்கள் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தன. மலையேற்றம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. வாழ்த்துக்கள் 💐
நீக்குநன்றி 🙏
நண்பர் ப்ரேம் அவர்களின் பயணத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரங்கராஜன் ஜி. தொடர்ந்து வலைப் பதிவுகளை படித்து கருத்துகளை தெரிவிக்கும் உங்களுக்கு நன்றி.
நீக்குஆகா...! என்னதொரு அழகான இயற்கை...! இதுவல்லவோ வாழ்வு...!
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி தனபாலன்.
நீக்குஇனிமையான அணுபவங்கள். நன்பரின் வேறு பயண அணுபவங்களையும் இயலும்போது பகிருங்கள்.
பதிலளிநீக்குமுடிந்த போது நண்பரது பயண அனுபவங்கள் தொடரும் அரவிந்த். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குமிகவும் சுவாரிசியமான அனுபவங்கள். ஆசிரியரின் அழகான பதிவு அவருடன் பயணித்ததுபோல் இருந்தது.
பதிலளிநீக்குஇந்தத் தொடர் வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி இராமசாமி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பயண கட்டுரை. தங்கள் நண்பர்களின் பயணம் இனிதாக முடிந்தற்கு மிக்க மகிழ்ச்சி. படங்களும், பயணத்தின் விவரிப்பும் நன்றாக உள்ளது.
பயணத்தில் ஓரிடத்தில் மேலே முன்னேறி செல்ல முடியாத அளவுக்கு ஓடையில் கடும் வெள்ளநீர்ப் பெருக்கும், அதைக்கடந்து செல்லும் பாதையில் மழை நீரின்றி வறட்சியுமாக இயற்கையின் விந்தையே ரசனைக்குரியது இல்லையா?
பயணத்தில் நாங்களும் உடன் பயணித்த நிறைவை தந்தது தங்கள் பகிர்வு. இது போல் வேறு ஒரு பயணப் பகிர்விற்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பயணம் குறித்த இந்தத் தொடர் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நீக்குபடங்கள் அழகு என்றால் பயணக் குறிப்புகளும் அவர்கள் ரசித்து சென்றிருப்பது தெரிகிறது. இயற்கையோடு ஒன்றி இருப்பது என்பதற்கு ஈடு இணை இல்லைதான். அருமையான மலையேற்றத் தொடர் இனிமையாக நிறைவுற்றிருக்கிறது.
பதிலளிநீக்குஎங்கள் பகுதியும் மலை சார்ந்த பகுதி என்பதால் மரங்களும், மலைகளும் நதிகளும் தான் சுற்றிலும். பொருளியலோடு கிட்டத்தட்ட இயற்கை சார்ந்த வாழ்க்கைதான்.
என்றாலும் இமயமலைப்பகுதி அது இன்னும் பிரம்மாண்டம்.
துளசிதரன்
பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகளும், படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துளசிதரன் ஜி.
நீக்குமிகவும் சிரமமான பயணத்தில் எங்களையும் அழைத்துச் சென்றீர்கள் இனிய காட்சிகள் பலவும் நேரிடையாக காண்பதுபோல கண்டு களித்தோம் மிக்க நன்றி .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மாதேவி.
நீக்கு