சனி, 21 மே, 2022

காஃபி வித் கிட்டு - 151 - OPS உடன் பயணம் - Gகங்Gகோத்ரி - யோகக்காரன்டா நீ - ராஜா காது - அப்பாவின் ஈருருளி - அம்மாவை அழையுங்கள் - பகை

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்… பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பார்க்காதீர்கள்.

 

******

 

Odd Man Out - நடிகரும் அரசியல்வாதியும்:  

 

பயணங்களில் சில பிரபலங்களை பார்க்க முடிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் தாடி பாலாஜி என்ற திரை/சின்னத் திரை நடிகரையும் அதிமுக பிரமுகர், முன்னாள் முதல்வர் OPS  என்று சுருக்கமாக அழைக்கப்படும் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் பார்க்க முடிந்தது.  OPS அவர்கள் என்னுடன் விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை பேருந்திலும், பிறகு விமானத்திலும் ஒன்றாகவே பயணித்தார் என்றாலும் என்னால் அவரை ஒரு சக பயணியாக மட்டுமே பார்க்க முடிந்தது.  ஆனால் பலரும் இந்த பிரபலங்கள் உடன் selfie எடுத்துக் கொள்ளவும் அவர்களுடன் ஒரு வார்த்தையாவது பேசிவிடவோ துடிப்பதை கவனிக்க முடிந்தது.  என்னைத் தாண்டி, விலகிக் கொள்ளுங்கள் என்று கேட்டு அவருடன் சென்று பேசினார் ஒருவர்.  முதல் வரிசையில் அமர்ந்த ஒருவர், பலரைக் கடந்து, கடைசி வரிசையில் அமர்ந்த முன்னாள் முதல்வருடன் படம் எடுத்துக் கொண்டார்!  இருந்தவர்களில் நான் மட்டும் தான் யார் வந்தால் எனக்கென்ன என்று பயணித்தேன்! அவர் யாராக இருந்தால் என்ன, நாம் நம் பயணத்தினை செய்வோம் என்று இருப்பது தவறா? 

 

******

 

இந்த வாரத்தின் காணொளி - Gகங்Gகோத்ரி - ப்ரேம் Bபிஷ்ட் :

 

அலுவலக நண்பர் திரு ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் மலையேற்றப் பயணம் குறித்த இரண்டு தொடர்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  மேலும் சில பயணங்கள் குறித்த தகவல்கள் இங்கே தொடராக வர இருக்கிறது. அதற்கு ஒரு முன்னோட்டமாக அவர் சமீப நாட்களில், அவரது YOUTUBE பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி ஒன்றின் சுட்டி இங்கே! கீழே காணொளியும் இணைத்திருக்கிறேன்.  கீழே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் மேலே உள்ள சுட்டி வழியும் பார்க்கலாம்.  இணைத்திருக்கும் காணொளி Gகங்Gகோத்ரி - Gகோமுக்(kh) - (tha)தபோவன் பயணம் குறித்தது - இந்த மலையேற்றத்தினையே இது வரை நான்கு முறை மேற்கொண்டு இருக்கிறார் நண்பர் ப்ரேம்! 16 நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளி என்றாலும் பார்க்க, ரசிக்க முடியும். பாருங்களேன்.  


  

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ”யோகக்காரண்டா நீ!”

 

2010-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ”யோகக்காரண்டா நீ!” - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

''என்னய்யா ஒரு ஏ.சி. கூட இல்லாம எப்படி தூங்கறே நீ?'' அப்படீன்னு நம்மைப் பார்த்து ஒரு எருமை கேட்டா எப்படி இருக்கும்? ஏன் கேட்காது? அது ஏ.சி. யில இல்லே தூங்குது? ,

 

ஆமாம். ஹரியானா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் பலர் தாங்கள் வைத்திருக்கும் எருமைகளுக்கென பெரிய வீடு கட்டி அதில் ஏ.சி. பொருத்தி அவற்றை அதில் தங்க வைத்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் வெட்ட வெளியில் படுத்து நட்சத்திரத்தை எண்ணுகிற பலரை நீங்கள் காணலாம்.

 

இங்கு நாள் ஒன்றுக்கு 35 லிட்டர் பால் கொடுக்கும் எருமைகள் கூட இருக்கின்றன. ஆகவே இவற்றுக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள். ராம நாராயணன் குரங்கு, யானை போன்ற விலங்குகளுக்குத்தான் உடை அணிவித்தார். இங்கோ எருமைகளுக்குக் கூட உடை அணிவிக்கின்றனர். எருமைகளுக்குக் குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவற்றின் மேல் சாக்கினால் ஆன உடையைத் தைத்து போர்த்தி விடுகிறார்கள்.

 

நம் ஊரில் காளை மாடுகளைத் தான் மாட்டு வண்டியில் பூட்டி வாகனங்கள் ஓடுவதைக் காண முடியும். இங்கே மாட்டு வண்டியில் எருமையைக் கட்டித் தான் ஓட்டுகின்றனர். வயல்வெளிகளில் ஏரோட்டுவதற்கு தற்போது நிறைய கருவிகள் வந்துவிட்டாலும், இங்கே முதலில் எருமைகளைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர்.

 

முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

ராஜா காது கழுதைக்  காது - எல்லோரும் நல்லவரே :

 

குடியிருப்பு வளாகம் ஒன்றில் நுழைந்தபோது, ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்ட ஒரு பெண்மணியின் குரல்….

 

எல்லோருமே நல்லவங்க தான்! அவங்க அவங்க சூழல் தான் அவங்களை கெட்டவங்களா மாத்திடுது! அதனால் யாரையும் கெட்டவங்கன்னு நினைச்சு ஒதுங்கக்கூடாது பார்த்துக்கோ!

 

சரியாகவே சொல்லி இருக்கிறார் அந்தப் பெண்மணி. சூழல் எதையும் செய்ய வைக்கும்!  

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - அப்பாவின் ஈருருளி:

 

முகநூலில் கவி கிறேஸ் என்று நட்பு வட்டத்தில் ஒருவர் இருக்கிறார்.  ஈழத்தைச் சேர்ந்தவர்.  காதல் கவிதைகள் நிறைய எழுதுகிறார் என்றாலும், அவற்றை விட ஈழம் குறித்தும் மற்ற விஷயங்கள் குறித்தும் எழுதும் கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன.  அப்படி ரசித்த ஒரு கவிதை இதோ உங்களுக்காக. 

 

அப்பாவின்  ஈருருளி....


 

அப்பாவின் 

ஈருருளியை பார்க்கும் 

போதெல்லாம்

அந்த அழகான பயணங்கள் 

கண்முன்னே வருகின்றது.....

வயதான 

பொழுதிலும் 

என்னை வடிவாக 

அமர வைத்து 

ஊர் சுற்றி காட்டிய 

தருணங்கள் 

இன்று எத்தனை ஊர்களுக்கு 

சென்றாலும் 

அவருடன் பயணித்த 

அந்த ஈருருளி 

பயணம்  போல

எனக்கு இன்று   இருப்பதில்லை....


கவி கிறேஸ்

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த குறும்படம் - ZUNI :

 

சமீபத்தில் ஒரு ஹிந்தி மொழி குறும்படம் பார்த்தேன்.  அம்மா இருக்கும் பொது அவர் அலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் பிறகு பேசுகிறேன் என்று நம்மில் பலரும் சொல்வதுண்டு.  அப்படிச் சொல்லும் ஒரு பெண் இந்தக் குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரம்!  அம்மாவாக வரும் மூதாட்டி ஏற்கனவே பார்த்து ரசித்த ஒரு மூதாட்டி - பத்மினி சர்தேசாய். அவர் வரும் விளம்பரங்களும் குறும்படங்களும் நான் மிகவும் ரசித்துப் பார்ப்பவை. பாருங்களேன். 

 

மேலே உள்ள காணொளி வழி பார்க்க முடியவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

AWARD Winning Hindi Short Film - ZUNI (The Untold Truth of Every Family) Ft. Divya Dutta | BB Films

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நிலைத்தகவல் - பகை :

 

படுத்தே இருப்பவனுக்கு பாய் பகையாகும்; பேசியே திரிபவனுக்கு வாயே பகையாகும்; பாயைச் சுருட்டினால் ஆரோக்கியமாக வாழலாம்! வாயைச் கிறுக்கினால் ஆனந்தமாக வாழலாம். 

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

26 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.

    அவர்கள் வி ஐ பிக்களாக இருந்து விட்டுப் போகட்டும்.   நீங்கள் நீங்கலாக இருந்தது சிறப்பு.

    எருமையின் அருமை தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

    சூழல் பற்றி சரியாய்த்தான் சொல்லி இருக்கிறார்.

    சைக்கிள் கவிதை ரசனை.

    நிலைத்தகவலையும் ரசித்தேன்.  காணொளிகள் பின்னர்தான் காணவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும், பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இந்தவார காபி வித் கிட்டு நன்று. நேற்றுதான் கங்கோத்ரி கோமுக் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சவாலான பயணங்கள். பிரபலங்களுடன் பயணிப்பது, நாம் தொந்தரவு செய்யாமல் இருப்பது... அனுபவம் உண்டு. அதற்குக் காரணம் கூச்சமாகவும் இருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நெல்லைத்தமிழன். கூச்சம் எதற்கு? இது போன்றவர்களை தொந்தரவு செய்யவேண்டிய அவசியமும் இல்லை - அவர்களும் சாதாரண மானிடர்கள் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  3. இன்றைய வாசகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது காரணம் எனது கொள்கையை போல....

    என்னால் சக பயணியாக பார்க்க முடிந்தது இப்படி அனைவரும் இருந்தால் பிரபலம் என்ற வார்த்தை அழிந்து போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. பிரபலங்களை சக மனிதர்களாக பார்த்தால் போதும் - அதே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  4. ஈருருளி பயணம் உட்பட அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதிவு அருமை.
    காணெளிகள் அருமை.கங்கோத்ரி கோமுக் காணொளி அருமை.
    அம்மாவின் அழைப்பு காணொளி மிக அருமை. நேரம் ஒதுக்கவேண்டும் அம்மாவுடன் பேச என்று ஒவ்வொருவரும் நினைக்க தூண்டும் காணொளி.
    நடித்தவர்கள் எல்லோரும் அருமையாக நடித்து இருந்தார்கள்.
    வாசகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை மகிழ்ச்சி அளித்தது கோமதிம்மா. காணொளிகள் பார்த்து அவை குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  6. வாசகம் மிக அருமை.

    இருந்தவர்களில் நான் மட்டும் தான் யார் வந்தால் எனக்கென்ன என்று பயணித்தேன்! அவர் யாராக இருந்தால் என்ன, நாம் நம் பயணத்தினை செய்வோம் என்று இருப்பது தவறா? //

    ஹைஃபைவ்!!! வெங்கட்ஜி! குடோச்!!! இதேதான். தவறே இல்லை. என்ன வி ஐ பியாக வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நாமாகவே இருப்போம்.
    எங்கள் வீட்டிலும் இப்படிப் பிரபலமானவர்களோடு ஒரு செல்ஃபி எடுப்பது பேசுவது நடக்கும் நான் ஆட் வுமன் அவுட்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பிரபலம் குறித்த எண்ணங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் சரியானது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மேலும் சில பயணங்கள் குறித்த தகவல்கள் இங்கே தொடராக வர இருக்கிறது. //

    ஆஹா மகிழ்ச்சி. அவரது காணொளிகளைப் பார்த்துக் கொண்டே வருகிறேன் நேரம் கிடைக்கும் போது. அங்கு கருத்தும் போடுவதுண்டு.

    //அதற்கு ஒரு முன்னோட்டமாக அவர் சமீப நாட்களில், அவரது YOUTUBE பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளி ஒன்றின் சுட்டி இங்கே! //

    இதுவும் பாதி பார்த்து வைத்திருக்கிறேன், ஜி. எனக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  8. ராகாககா - உண்மைதான். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!

    ஈருருளி கவிதை நல்ல ரசனையான கவிதை.

    குறும்படம் பார்த்து அழுதுவிட்டேன். என் அம்மாவின் நினைவு. கிட்டத்தட்ட இதே போன்று 22 வருடங்களுக்கு முன் ...அம்மா என்னோடு பேச நினைத்து பேசினார், என்னை அழைக்கச் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். நான் அழைக்க ஃபோன் பழுதாகி இருந்திட, அழைத்தாலும் அவருக்குச் செவி கேட்காது. சில நாட்களில் அவரே இல்லை, ஒரு பதிவு கூட இதை எழுதிய நினைவு.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா காணொளி குறித்த தங்கள் கருத்துரை - சில சமயங்களில் இப்படித்தான் - நம் கையில் ஒன்றும் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. கருத்துகள் வந்ததா ஜி? ஒரு கருத்து இட்டு வந்து அடுத்த கருத்து பதியும் போது முதலில் இட்டது காணாமல் போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கள் வந்திருக்கின்றன கீதா ஜி. சில சமயங்களில் Spam என நினைத்து அதுவாகவே அதற்கான பகுதியில் கொண்டு சேர்த்து விடுகிறது. புதிய கருத்துரை பெட்டி வந்தபிறகு இது அடிக்கடி நடக்கிறது.

      நீக்கு
  10. காணொளி பற்றி போட்டக் கருத்து காணாமல் போய்விட்டதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி குறித்த கருத்துரையும் வந்திருக்கிறது கீதா ஜி. அதனுடன் பகிர்ந்த மற்ற கருத்துரைகளும்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  11. எருமை பற்றிய புகழ் பதிவை ரசித்து வாசித்தேன். கடைசில சொன்னீங்க பாருங்க ஹாஹாஹாஹா...அந்த வரிகளை மிகவும் ரசித்தேன்.

    அங்கு பப்பு அண்ணாச்சியின் ராமராஜன் பத்தி சொல்லியிருக்கும் கருத்து பார்த்து சிரித்துவிட்டேன்....முடிலப்பா சாமி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எருமை குறித்த பதிவும், அதில் அண்ணாச்சியின் கருத்துரையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. அங்கேயும் சென்று படித்ததமைக்கு நன்றி.

      நீக்கு
  12. எருமை பற்றிய செய்திகள், காணொளி சிறப்பு.
    சைக்கிள் கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....