திங்கள், 9 மே, 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - சுனில் மிட்டல் - பயத்தை வெற்றி கொண்டவரின் நுட்பங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TIME, POWER, MONEY AND BODY MAY NOT COOPERATE EVERY TIME IN LIFE, BUT GOOD NATURE, GOOD UNDERSTANDING, SPIRITUAL PATH AND TRUE SPIRIT WILL ALWAYS COOPERATE IN LIFE.

 

******

 

அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ்திருவரங்கத்திலிருந்து….

 

******

 

சுனில் மிட்டல் (Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு): பயத்தை வெற்றி கொண்டவரின் நுட்பங்கள்.



 

'பணக்காரன் நேரத்தில் முதலீடு செய்கிறான், ஏழை பணத்தில் முதலீடு செய்கிறான்' என்பது வாரன் பஃபெட் அவர்களின் புகழ் பெற்ற கூற்று. 

 

இக்கூற்று, பங்குகளில் முதலீடு செய்பவர்களை விட தொழிலதிபர்களுக்கே கச்சிதமாகப் பொருந்துவது இயல்பு. 

 

விலை மதிப்பற்ற நேரத்தை, பயனுள்ள முறையில், பொறுமையாக முதலீடு செய்யும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞரால் கூட, எண்ணற்ற வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழிலதிபராக மாற முடியும் என்பதற்கு உலகெங்கும் பல உதாரணங்கள் உண்டு. 

 

அவ்வாறே, சராசரி நடுத்தர வர்க்க இந்திய இளைஞர், தனக்கென்று ஒரு பிஸினஸ் சாம்ராஜ்யத்தை ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டமைத்துக்கொண்ட அபூர்வமான வெற்றிச் சரித்திரமே, எழுத்தாளர் திரு என். சொக்கன் அவர்களின் "சுனில் மிட்டல், (Airtel வெற்றியாளரின் சாதனை வரலாறு)" நூல்.  நூலுக்கான சுட்டி கீழே!

 

சுனில் மிட்டல்: ஏர்டெல் (Airtel) நாயகரின் வெற்றிக் கதை. இந்தியத் தொலைதொடர்புத் துறையின் வளர்ச்சிக் கதையும்தான்... (Tamil Edition) eBook : N. Chokkan, என். சொக்கன்: Amazon.in: Kindle Store

 

பாதுகாப்பான மாத சம்பளம் வாங்குவோருக்கே அதிக மரியாதை வழங்கப்படும் நம் சமூகத்தில், ஒரு தொழில் அதிபர் உருவாகி வெற்றியடைவதில் உள்ள சவால்களை எதார்த்தமாக எடுத்துக்காட்டியிருப்பதே இந்நூலின் தலையாய அம்சம் ஆகும். 

 

அதிலும், வியாபாரம் தொடர்பான எந்த பட்டமும் பெறாத திரு சுனில் மிட்டல் அவர்கள், இன்றைய பெரிய "MBA" பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாகவே  மாறிய அதிசயத்தை, படிப்படியாகக் காட்டியிருப்பது வாசிப்பை சுவாரசியமாகவும், ஊக்கமூட்டுவதாகவும் மாற்றியுள்ளது. 

 

"லூதியானாவில், சைக்கிள் உதிரி பாகங்கள் தயாரிப்பவராக ஒரு சிறு தொழிலைத் தொடங்கிய இவர், எந்த ஒரு தொழில்நுட்பப் பின்னணியும், நிதி ஆதாரமும்  இன்றி, எப்படி சிக்கல் மிகுந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தை உருவாக்கி நடத்துகிறார்?" என்ற கேள்வியோடு இப்புத்தகத்தைப் படிப்போர், மனித மேலாண்மை குறித்த எண்ணற்ற உத்திகளை நடைமுறை உதாரணங்களோடு தெரிந்துகொள்ளலாம். 

 

தொழிலதிபர்கள் ஆக விரும்பும் எவரும் எதிர்கொள்ளும் தோல்வி குறித்த பயத்தை, இவர் தம் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அக்கறை மிகுந்த தம் நண்பர்களிடமிருந்து எதிர் கொண்டிருக்கிறார். 

 

அத்தகைய பயத்தை வெற்றிகொள்ளத் தேவையான அதன் மூல காரணத்தை அறிதல், தம் தனித்திறமையையும் பலவீனங்களையும் உணர்தல், எதிர்கால சாத்தியங்களுக்கு ஏற்ப தம்மைத் தயார்நிலையில் வைத்தல் போன்ற வியாபார அடிப்படைகளை, பீடெல் பட்டன் ஃபோன்கள் தயாரிப்பு, தொலைத்தொடர்பு உரிமம் பெறுதல் உள்ளிட்ட இவர் வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம். 

 

வியாபாரம் செய்வோருக்குத் தேவையான தம் காலத்திற்காகப் பொறுமை காத்தல், சரியான நேரத்தில் துரித முடிவை எடுத்து வாய்ப்பை தம் வசமாக்குதல், இலாபத்தை மறு முதலீடு செய்து தொழில் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துதல் போன்ற வியாபாரச் சூத்திரங்கள், இந்நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. 

 

வியாபாரத் தந்திரங்களுக்கும் அப்பால், தோல்விகளுக்குத் தாமே பொறுப்பேற்றல், வெற்றிக்கான வெகுமதிகளைத் தம் குழுவிற்கே பகிர்ந்தளித்தல், கூட்டணி நிறுவனங்களைக் கண்ணியமாக நடத்துதல் உள்ளிட்ட மனித மேலாண்மை உக்திகளுக்கும் பஞ்சமே இல்லை. 

 

வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்க வேண்டிய இச்சூழலில், திறமையான தொழிலதிபர்களின் குணாதிசயங்களை இளைஞர்களும் அறியச் செய்யவல்ல இந்நூலை, கிண்டிலில் வாசித்துப் பயனடையலாம். 

 

இந்நூலோடு, தேடுபொறி உருவாக்குவதில் தொடங்கி உலகம் முழுவதையும் ஆளும் கூகிள், பொழுது போக்காகத் தொடங்கி உலகையே இணைத்த ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் என். சொக்கன் அவர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இச்சுட்டியில் வாசிக்கலாம். 

 

Amazon.in: என். சொக்கன் / N.Chokkan: Kindle Store

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

******

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து… 

20 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான பகிர்வு.  தொழிலதிபர்கள் புத்தகங்கள் படித்து அறிவுசேர்த்து வெற்றி பெறுவதில்லை.  வாழ்க்கைப் பயணத்தில் அடுத்தடுத்த அவர்களின் முயற்சி அவர்களை புதிய பாதைகளுக்கு அழைத்துச் செல்கிறது. இவர்களை பற்றிய புத்தகங்கள் இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்.  நன்றி அர்விந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா.
      வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு பாடம்தான்.
      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விர்க்கும் மநம் நிறைந்த நன்றிகள் ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. விமர்சனம் சிந்திக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம். அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
  5. //அதிலும், வியாபாரம் தொடர்பான எந்த பட்டமும் பெறாத திரு சுனில் மிட்டல் அவர்கள், இன்றைய பெரிய "MBA" பல்கலைக்கழகங்களில் ஒரு பாடமாகவே மாறிய அதிசயத்தை, படிப்படியாகக் காட்டியிருப்பது வாசிப்பை சுவாரசியமாகவும், ஊக்கமூட்டுவதாகவும் மாற்றியுள்ளது. //

    அனுபவங்கள் கற்றுத் தருவதை விடச் சிறந்த ஆசிரியர் எதுவுமில்லை. அப்படிக் கற்பதை சரியான பாதையில், சமயோசிதமாக விதைக்கும் போது வாழ்க்கைப் பாதையில் முன்னேறலாம். இதற்கு ஏட்டுக் கல்வியை விட அனுபவக் கல்விதான் சிறந்தது.

    அது போல மனித மேலாண்மை என்பது என்னதான் புத்தகத்தில் படித்தாலும் யதார்த்தம் வேறு. எனவே சமயோசிசம், அனுபவம், கணிப்பு இவை ரொம்ப முக்கியம்

    இது இதற்கு மட்டுமல்ல, எல்லா துறைக்கும் பொருந்தும்.

    நல்ல வாசிப்பு மற்றும் புத்தகம் பற்றிய விமர்சனமும் அரவிந்த், வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  6. மிகவும் அருமையான பதிவு. சுனில்மிட்டின் வாழ்க்கை வரலாறு எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க னன்றி ராமசாமி ஐய்யா.

      நீக்கு
  7. நல்லதோர் நூல் பற்றிய விமர்சனம் நன்று.

    பதிலளிநீக்கு
  8. என்னுடைய நூலைப்பற்றிய சுவையான அறிமுகத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், பயன் மிக்க படைப்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் Naga Chokkanathan ஐய்யா.
      மேலும் பல பயனுள்ள நூல்களை தங்களிடமிருந்து ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....