அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
HONEST RELATIONS ARE LIKE “WATER”! NO COLOUR, NO SHAPE, NO SPACE BUT STILL
VERY IMPORTANT FOR “LIFE”.
******
இந்த வாரத்தின் தகவல் - தலைநகர் தில்லி - ரஜாய் மற்றும் (DH)துனி :
குளிர் காலம் என்பதால் வட இந்தியாவில், இரவு நேரங்களில் கம்பளிப் போர்வைகள் மட்டும் இருந்தால் போதாது. ரஜாய் எனப்படும் தடிமனான Quilt அத்தியாவசியமான ஒரு விஷயம்! அதைத் தயாரிப்பதற்கு பஞ்சு தேவை. முன்பெல்லாம் இலவம் பஞ்சு அல்லது பருத்திப் பஞ்சு கொண்டு தயாரித்து வந்தார்கள் என்றாலும் தற்போது செயற்கை பஞ்சு கொண்டு தயாரிக்கிறார்கள். பஞ்சை ரஜாய் உள்ளே அடைப்பதற்கு முன்னர் அதனை பக்குவப்படுத்த வேண்டியிருக்கும். நம் ஊரில் மெத்தை/தலையணை தயாரிப்பதற்கு முன்னர் பஞ்சை ஒரு அறையில் போட்டு ஒரு நீண்ட தடி கொண்டு பஞ்சை அடிப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். ஆனால் இங்கே அப்படி தடி கொண்டு அடிப்பதில்லை. பஞ்சை பதப்படுத்த ஒரு வித உபகரணத்தினை பயன்படுத்துவார்கள். அதன் பெயர் (DH)துனி. அதனை பயன்படுத்துபவர்கள் அதிலிருந்து ஒரு வித ஒலியை எழுப்பியபடி வீடுக்ள் இருக்கும் பகுதிகளில் சுற்றி வருவார்கள். இந்த மாதிரி செய்வது உங்களில் பலருக்கு புதிய தகவலாக இருக்கலாம்! எங்கள் பகுதியில் இப்படி ஒருவர் வந்தபோது எடுத்த காணொளியை இணைத்திருக்கிறேன் - பாருங்களேன்!
******
பழைய நினைப்புடா பேராண்டி : மேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மேகத்தினைத் துரத்தியவன் – சுஜாதா - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
அன்பழகன் – நண்பர்களுக்குச் சுருக்கமாய் ’கன்”. வயது கட்டிளம் காளை ஆகிய 18! வேலை என்று ஒன்றும் கிடையாது. அம்மா அப்பா, கூடப் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. தற்போது இருப்பது தூரத்து ஒன்று விட்ட சித்தப்பா வீட்டில். வேலை என்று ஒன்றும் இல்லாததால், சித்தப்பா வீட்டில் சமையலுக்கு காய்கறி வாங்கி வருவது, சுத்தம் செய்து நறுக்கிக் கொடுப்பது, சுற்று வேலைகள் செய்வது, கடைகண்ணிகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது எல்லாமே அன்பான அன்பு தான். மொத்தத்தில் சம்பளமில்லா வேலைக்காரன்.
சித்தப்பா விநாயகம் பணி புரிவது ஒரு கூட்டுறவு வங்கியில், சித்தி தனம் அரசாங்க அலுவலகத்தில். தன்னுடைய சொந்த செலவுகளுக்கு – அதான் சிகரெட் பிடிப்பது போன்றவற்றிற்கு பொருட்கள் வாங்கும்போது கமிஷன் அடிப்பது தான் வழி. ஒவ்வொரு மாதமும் 100-150 ரூபாய் சம்பாதிக்க பிரம்மபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் சமயத்தில் சுலபமாய் பணம் சம்பாதிக்க வழி சொல்லித்தருவதாய் புதிய கேரக்டர் அறிமுகம். அது – மாணிக்கம். சொல்லித் தரும் வழி சித்தப்பா பணி புரியும் வங்கியில் கொள்ளை அடிப்பது.
மாணிக்கம் அன்பழகனிற்கு போதையை அறிமுகம் செய்து வைத்து, கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து வங்கியில் இருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் தெரிந்து கொள்கிறார். பாதுகாப்பு வசதிகள் பற்றித் தெரிந்த பிறகு அதை மீறி எப்படி கொள்ளை அடிப்பது என திட்டம் தீட்டுகிறார்கள். நடுவே புதியதாய் சித்தியின் தங்கை ரத்னா என்றொரு கேரக்டரும் விறுவிறுப்பாக உள்ளே நுழைகிறார்.
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!
******
இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை: பயணம்
முகநூல் நண்பர் குணா அமுதன் குறித்து முன்னரேயும் இங்கே எழுதி இருக்கிறேன். சமீபத்தில் பயணம் குறித்த ஒரு நிழற்படத்தினை பகிர்ந்து இருந்தார். பயணம் எனக்கும் பிடித்த விஷயம் என்பதால் இந்த நிழற்படத்தினை மிகவும் அதிகமாக ரசிக்க முடிந்தது. நான் ரசித்த நிழற்படத்தினை நீங்களும் ரசிக்க இங்கே பகிர்ந்து இருக்கிறேன். படத்திற்கான எல்லா புகழும் குணா அமுதன் அவர்களுக்கே!
Travel
is the best way to learn!
******
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - விழி :
சொல்வனம் தளத்தில் சமீபத்தில் படித்து ரசித்த கவிதை ஒன்று - கு. அழகிரிசாமி அவர்களின் எழுத்தில், உங்கள் பார்வைக்கு. இன்னும் நிறைய கவிதைகள், குறுங்கதைகள், சிறுகதைகள் அந்தத் தளத்தில் உண்டு. முடிந்தால் படித்துப் பார்க்கலாமே!
உறைந்து போய் அச்சத்தில்
ஒளிந்து நோக்கும்
ஒரு குழந்தையின் விழி போல்
ஒளிந்து நோக்கியது, தான்
ஒளிந்து நோக்குவது எனக்குத்
தெரியுமென்று தெரியாது
கொடியிடுக்கில் ஒரு
குண்டு மல்லி.
சும்மா உறைந்திருக்கலாம் அது.
சூசகமாய்ச்
சொன்னது:
’விட்டு விடு
என்னை.’
கொய்தேன் முதலில் அதை-
கொடியின் விழியை-
கொய்த விழியில்
தெரிந்தேன்
உடலாய்
நான்.
கு. அழகர்சாமி
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் - தேவதாரு பூத்த காலம் :
சமீபத்தில் கேட்டு ரசித்த ஒரு மலையாளப் பாடல் - தேவதாரு பூத்த காலம்! நீங்களும் கேட்டு ரசிக்கலாமே!
மேலே உள்ள காணொளியை காண இயலாவிடில், கீழே உள்ளே சுட்டி வழி யூட்யூப் தளத்தில் நேரடியாகவும் காணலாம்.
******
இந்த வாரத்தின் கதை மாந்தர் - பிறந்த நாள் :
அலுவலகத்தில் ஒரு பெண் - இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி வருகிறார் - ஒன்பது மாதத்திற்கும் மேலாகி விட்டது. மருத்துவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம் என்று சொல்கிறார்கள். அதிக நாட்கள் என்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். ஆனாலும் இன்னமும் அலுவலகம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு ஒரு காரணம் சொன்னார் - முதல் குழந்தை ஜனவரி ஒன்றாம் தேதி தான் பிறந்ததாம் - இரண்டாவது குழந்தையும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி பிறந்தால் மகிழ்ச்சி உண்டாகுமாம்! என்ன முடிவோ? தாயும் சேயும் நலமாக இருந்தால் மகிழ்ச்சியே! மேலே உள்ள படம் முகநூலில் பார்த்தபோது இந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது!
******
இந்த வருடத்தின் முடிவு - 2022-லிருந்து 23 :
பார்த்து ரசித்த கார்டூன் - நீங்களும் பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
அனைத்து பகுதிகளும் அருமை...
பதிலளிநீக்குஅனைத்துப் பகுதிகளும் அருமை.
பதிலளிநீக்குபதின்மகாலத்தில் தடிகொண்டு பஞ்சை அடித்து, அறை முழுவதும் பஞ்சு பறந்தது நினைவுக்கு வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு பிரச்சனைகளைக் கொண்டுவராமல் இருக்கும் என நம்புவோம்
மேகத்தைத் துரத்தினவன் வெளியானபோதே சுடச்சுட வாங்கிப் படித்திருக்கிறேன், வைத்திருக்கிறேன். புகைப்படம் அருமை. கவிதை ரசித்தேன். பாடல் இப்போது கேட்க முடியாது. 2023 நல்லபடியாய் இருக்க வேண்டுமே இறைவனே...
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள் ஜி
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகவிதை, பாடல் தேவதாரு காணொளி எல்லாம் அருமை.
துனியில் இருந்து வரும் த்வனியில் இருந்தே துனிவாலா வருகிறார் என்று தெரிந்து கொள்ள முடியும்.
பதிலளிநீக்குதேவதாரு பாடல் எளிமையான இசை அருமை. பல வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட இதே ட்யூனில் அம்மன் பஜனை பாடல் இயற்றி நண்பர் பாடியது நினைவு வருகிறது.
புத்தாண்டை நம்பிக்கையுடன் வரவேற்போம்.
புத்தாண்டு காட்டூன் :)
பதிலளிநீக்குபயத்தில் புத்தாண்டு ஓடப்போகிறது ஹா...ஹா.
துனிவாலா வை பார்க்க வேண்டும் என்று ஓர் ஆசை எழுகிறது. ஊரில் இருந்தப்பவும் அதன் பின்னும் கூட பஞ்சு அடித்திருக்கிறேன் மூக்கிற்குள் எல்லாம் தூசி புகுந்து...
பதிலளிநீக்குமேகத்தினைத் துரத்தியவன் - குறித்துக் கொண்டிருக்கிறேன். உங்களின் அந்தப் பதிவை வாசித்தேன்...தலைவர் பற்றிச் சொல்லணுமா...
தேவதாரு பாடல் கேட்டிருக்கிறேன்...இப்பவும் கேட்டேன்...கானடா ராகத்தில் ஒரே மெட்டில்.....காதல் தோல்வி என்பதால் கானடா ராகமோ?!!!!
அம்மா அப்பா, குழந்தை மூவருமே ஒரே பிறந்த தேதி...ஆச்சரியம்...அலுவலகப் பெண்ணிற்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்கட்டும்.
கவிதையை ரசித்தேன்
புத்தாண்டு வாழ்த்துகள் ஜி! இந்த வருடம் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் நம்பிக்கையுடன் புத்தாண்டிற்குள் அடி எடுத்து வைப்போம்.
கீதா
ஒவ்வொரு நாளும் சொல்ல நினைத்து விட்டுப் போனது....வாசகங்கள் அருமை
பதிலளிநீக்குகீதா