செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THERE IS NO ENEMY OUTSIDE OUR SOUL; THE REAL ENEMIES LIVES INSIDE US - ANGER, PRIDE, GREED AND HATE; AVOID THEM ALL AND ENJOY A PEACEFUL LIFE.

 

******

 

யாரிவள் தொடரின் பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.



 

இந்தத் தொடரை எழுதலாம் என்று நினைத்த போது தலைப்பு என்ன வைப்பது என்று யோசனையாக இருந்தது! ஆதியின் கதையை ஆதியாக இல்லாமல் பொதுவில் ஒரு மனுஷியாக அதாவது வேறொருவளாக சித்திரிக்க நினைத்தே துவங்கினேன்! அதனால் யார்+இவள் = யாரிவள்!!

 

இவள் பிறந்தது முதல் அவளின் வாழ்க்கை, உணர்வுகள், கனவு, எதிர்பார்ப்பு, பக்குவம் என அனைத்தையும் வெளிப்படுத்தலாம் என்ற எண்ணம்! கல்லூரி வாழ்க்கை, திருமண வாழ்க்கை என ஏற்கனவே எழுதியிருந்தாலும் இது சராசரியான ஒரு பெண்ணின் வாழ்வை சித்தரித்து காட்டும் தொடராக அமைய வேண்டும் என்று நினைத்தேன்!

 

தொடரை தொடர்ந்து வாசித்து வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்க முடிந்ததாகச் சொன்னார்கள்! நிறைய விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடிந்ததாகவும் சொன்னார்கள்! நம் எல்லோரின் வாழ்வும் ஏறக்குறைய ஒன்று போல தானே இருக்கிறது!

 

சொல்லாமல் விட்டுப் போன விஷயங்களும் நிறைய உண்டு! நினைவுக்கு வந்த போது அந்த நிலையைக் கடந்து விட்டது! ஒரு சில விஷயங்களை அப்போது எழுதிக் கொண்டிருக்கும் பகுதியில் இணைத்ததும் உண்டு! நல்ல நினைவுத் திறன் உள்ளதாக சொன்னார்கள்! மனதில் படிந்து போன நினைவுகளை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா!!! சொல்லுங்கள்!!

 

தொடர் துவங்கியது முதலாக வீட்டிலும் பல இக்கட்டான சூழ்நிலைகள், மகளின் தேர்வுகள், வீட்டுப் பெரியவர்கள் மாற்றி மாற்றி கீழே விழுந்து படுக்கையில் இருப்பதும், வீட்டு வேலைகளுடன் அவர்களையும் கவனித்துக் கொள்வதுமாக தான் நாட்கள் நகர்கின்றன. எப்போதும் ஒரு பரபரப்புடன் தான் நேரங்கள் கடந்து செல்கின்றன.

 

இந்த மாதிரியான சூழலில் தான் தொடர் எழுதிக் கொண்டிருக்கும் போதே கதைகளும் சில எழுதினேன். சில பகுதிகளை எழுதும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், சிலவற்றை எழுதும் போது கண்கள் குளமாகியும், சிலவற்றை எழுதும் போது தன்னம்பிக்கையால் பெருமை கொண்டும் என உணர்ச்சிக் குவியலால் பிணைத்துக் கொண்ட தொடராக அமைந்ததில் மகிழ்ச்சி!

 

இதுவரை இந்தத் தொடருக்கு ஆதரவு கொடுத்து தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்! இடையில் சற்றே சோர்வு ஏற்படும் போதும் 'கொஞ்சம் ப்ரேக் எடுத்துண்டு எழுதும்மா!' என்று ஊக்கப்படுத்தும் என்னவரும், இன்னிக்கு அடுத்த பகுதியை போட்டுட்டயாம்மா?? கொண்டா! என்று ஆவலுடன் வாசிக்கும் மகளும் என அனைவராலும் இது சாத்தியமாயிற்று!

 

வாய்ப்பு கிடைக்குமானால் மீண்டும் நல்லதொரு பகிர்வுடன் சந்திக்கிறேன்.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

6 கருத்துகள்:

  1. உணர்வுக்குவியலாக, உண்மை கலந்து அருமையான தொடர் எழுதினீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆதி, இக்கட்டான சூழலிலும் எழுதுவதற்குப் பாராட்டுகள். நேரம் கிடைக்கும் போது மனம் ஒத்துழைக்கும் போது எழுதுங்கள். எனக்கும் சூழல் பல சமயங்களில் எழுதுவதற்கும், எழுதுவதை நன்றாக எழுத முடியாத அளவிற்குப் படுத்துகிறது. என்னையே நான் உற்சாகப்படுத்திக் கொள்ள முயற்சி.

    நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழல்.

    ஆதி வெங்கட்ஜி சொல்லுவது போல் ப்ரேக் எடுத்துக் கொண்டாவது எழுதுங்கள்....

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆதி உங்கள் தொடர் பலர் வாழ்விலும் நடந்திருக்கும் சம்பவங்களை நினைவூட்டியிருக்கும். உண்மைதான். அது போல ஏற்ற இறக்கங்கள்...இப்படி ஒவ்வொரு விதமாக.

    உங்களை நீங்கள் ஆராய்ந்து சொல்லியிருந்த தொடர். Self Analysis என்று சொல்வதுண்டே அது நமக்கான அனுபவங்கள் சூழல்கள் நம்மை நாமே கற்க உதவுகிறது. நம் வலிமை, நம் வீக்னெஸ் என்று.

    வாசிப்பவர்களுக்குச் சில ஐடியாக்களையும் கொடுத்திருக்கும்.

    விட்டுப் போனதாகச் சொல்லியிருப்பவற்றை பதிவாகக் கூட எழுதலாம், ஆதி.

    வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிரமங்களுடனும் தொடர்ந்து செய்துள்ளீர்கள் வாழ்த்துகள். பகிர்வுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....