வெள்ளி, 16 டிசம்பர், 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட சற்றே இடைவெளிக்குப் பிறகு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LUCK IS NOT IN YOUR HANDS, BUT DECISIONS ARE IN YOUR HANDS. YOUR DECISION CAN MAKE LUCK, BUT LUCK CAN NEVER MAKE YOUR DECISION; SO ALWAYS TRUST YOURSELF.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஒன்று




 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - அறிமுகம் 

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள முதல் விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

முதல் விதி சொல்வது, "உன் ஆசிரியரை விட உயர்ந்தவராக என்றும் உன்னை காட்டிக்கொள்ளாதே".  

 

மூல நூலில், இதை "NEVER OUTSHINE THE MASTER" என்கிறார் எழுத்தாளர். 

 

ஆசிரியர் என்பவர், நம் வீடுகளில் மூத்தோராகவோ, கல்லூரிகளில் பேராசிரியராகவோ, பணியிடங்களில் மேலாளராகவோ இருக்கலாம். 

 

மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் உலகச் சூழலால், சில நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவும், புதிய சிந்தனைகளும் நமக்கு கிடைத்திருக்கும். 

 

அதற்காக, நம் மேலாளர்களை எள்ளி நகையாடுவதும், அவர்களை விட திறமைசாலிகளாக நம்மைக் காட்டிக்கொள்வதும் நமக்கு ஆபத்தையே விளைவிக்கும் என்பது நடைமுறை உண்மை. 

 

அதனால், எப்போதும் நம் குருவிற்கு உரிய மரியாதை அளிப்பதும், நம் திறமையால் அவர் நற்பெயரை உயர்த்தி மிளிரச் செய்வதே, நம் உயர்வுக்கும் வழிகோலும் என்கிறார் நூலாசிரியர். 

 

"என்ன கொடுமையடா இது! மேலாளர் மீது தவறு இருந்தாலும் அவருக்கு ஆமாஞ்சாமி போடவும், காக்கா பிடிக்கவும் சொல்லும் இது ஒரு விதியா? இது எல்லாம் ஒரு நூலா?" என்ற கேள்வி உங்களைப் போலவே எனக்கும் எழுந்தது. 

 

ஒவ்வொரு மனிதரும், தம்முடைய இன்றைய செல்வ வளங்களும், பதவியும் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற தொடர் அச்சத்தில் தான் இருப்பார். 

 

அந்த அச்சத்திற்குத் தீனி போடும் வகையில் செயல்படுவோரை எதிரியாகப் பார்ப்பதும் மிக எதார்த்தமாக நடப்பதே. 

 

எனவே, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் நாம், அத்தகைய அச்சத்தை நம் மேலாளர்களிடமோ, ஆசிரியர்களிடமோ ஏற்படுத்தாமல் பணிவுடன் இருந்தால் மட்டுமே, அவர்களிடமிருந்து பல அனுபவ அறிவைப் பெற முடியும். 

 

அத்தோடு, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஆரம்பகட்டப் பணியாளருக்கு, அவர் வேலை சம்பந்தமான சிறு பகுதி குறித்த குறுகிய பார்வையே இருக்கும். 

 

எனவே, நிறுவனத்தின் சிக்கலான அமைப்பு, பல துறைகளின் ஒருங்கிணைந்த பணிகள், வாடிக்கையாளர்களுக்கும், ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் பதில் சொல்லும் கடமை உள்ளிட்ட அனைத்தையும், அனுபவம் வாய்ந்த மேலாளரிடம் ஆரோக்கியமான உறவைப் பேணுவதின் மூலமே, சிறிது சிறிதாகக் கற்க முடியும். 

 

அவ்வாறு கற்கையில், அதிகாரியின் திறமைகளைப் புரிந்து, நியாயமான வழிகளிலேயே, அவர் நல்லியல்புகளைப் புகழும் சந்தர்ப்பம் அமையும். 

 

அப்போதுதான், தம் திறமையை எவ்வழிகளில் மேம்படுத்தி நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவதோடு, தம் முன்னேற்றத்தை உறுதி செய்யலாம் என்னும் பாதை கண்களுக்குப் புலனாகும். 

 

எவருக்கும் ஒரே ஒரு குரு வாழ்வு முழுவதும் இருப்பதில்லை என்பதையும், எப்பதவியில் இருப்பவருக்கும், அவர் பதில் சொல்லவேண்டிய மேலாளர் நிச்சயம் இருப்பார் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. 

 

எனவே, மேலாளரின் நிறைகளைப் பொதுவிலும், அவரிடம் எதிர்பார்க்கும் மாற்றங்களை அந்தரங்கமாகவும் தெரிவிப்பதால், மேலாளர் தரப்பு நியாயங்களும் நமக்குத் தெரிய வரும். 

ஒரு மேலாளரிடம் போதுமானவற்றைக் கற்றபின், அவர் இடத்தைப் பிடிக்க முயலக்கூடாது எனவும், அதற்குப் பதிலாக அவரிடமிருந்து மரியாதையுடன் விலகி நம் தனி வழியில் செல்வதே நல்லது எனவும் இவ்விதி கூறுகிறது. 

 

இதற்கு உதாரணமாக, இசைஞானி அவர்களிடமிருந்து கற்ற பின், தனி இசை அமைப்பாளராக மாறி, ஆஸ்கார் விருது வரை வென்ற திரு . ஆர். ரஹ்மான் அவர்களைச் சொல்லலாம். 

 

இவ்விதிக்கு விதிவிலக்காக, மேலாளரின்  பலவீனமான காலம் வரை காத்திருந்து அவரின் இடத்தைப் பிடிக்கலாம் என உதாரணங்களுடன் நூல் கூறினாலும், அதற்கு ஆகும் நீண்ட காலத்தையும், ஆபத்தையும் கருதி அத்தகைய மார்கம் பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. 

 

இது எதுவும் சாத்தியமற்ற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, தரமான மேலாளர் அமையாத பட்சத்தில், நாமோ, அவரோ பணி மாற்றல் அடையும் வரை பொறுமை காப்பதே நலம். 

 

இதை அறியாத ஒரு நிறுவனப் பணியாளரான என் நண்பர், தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தும் புகாருடன், தன் மேலாளருக்கு எதிராக, ஊழியர் சங்கத்துடன் மனிதவளத் துறைக்கே சென்றுவிட்டார். 

 

அப்போதைக்கு, சங்கத்தைச் சமாளிக்க மேலாளரை மாற்றுவதாக உறுதி கூறிய மேலாண்மை, சில தினங்களில், நண்பரைத்தான் பணி மாற்றம் செய்தது. 

 

இதன் மூலம், நிறுவனத்தின் லாபத்தை எவ்வகையிலும் உறுதி செய்பவருக்கே மரியாதை அளிக்கப்படும் என்னும் உண்மையை உணர முடிந்தது. 

 

இதற்கு மாறாக, அதிகாரியிடம் தனிப்பட்ட முறையில் விவாதித்திருந்தால், இருவர் தரப்பு நியாயங்களும் அடுத்தவருக்கு உணர்த்தப்பட்டு ஒரு சாத்தியமான தீர்வு பிறந்திருக்கும். 

 

இப்போது கூட, "மேலதிகாரியின் தவறுகளைத் தட்டிக் கேட்காமல், அந்நியாயத்திற்குத் துணை போவதுதான் நம் வலிமையை உயர்த்தும் வழியாக நூல் சொல்கிறதா?" எனும் வினா நம் மனதின் ஓரத்தில் தொடர்ந்து இருக்கும். 

 

இதைச் சிறப்பாகக் கையாளும் பல்வகை வழிவகைகளை, அடுத்தடுத்த விதிகளைச் சுவைப்பதின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

 

நூல் குறித்த விவாதம் தொடரும். 

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

14 கருத்துகள்:

  1. ஒவ்வொரு விதியாக அலசப் போகிறீர்களா அரவிந்?  நன்று.  தொடர்கிறேன்.  இன்றைய முதல் வீதியில் அந்த விதியை வேண்டும் அளவு மட்டும் உபயோகப்படுத்தலாம் என்பது என் எண்ணம்.  அது அவரவர் சூழலை, அனுபவத்தை, வாய்ப்பைப் பொறுத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம் ஐய்யா. ஒவ்வொரு விதியையும் அலசுவோம்.
      சந்தர்ப்பத்திற்கேர்ப்ப ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு விதி பயன்படும்.
      அவரவர் ஆர்வத்திற்கேர்ப்ப முடிவுசெய்துகொள்ளலாம்.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  2. அலசல் சிறப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  3. அர்விந்த், அறிமுகப் பதிவும் வாசித்தேன், விதி ஒன்றும். இது அருமையான விதி. சூழல் பொருத்து. ஒவ்வொருவரது அனுபவமும் வித்தியாசப்படும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  4. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  5. மேலாளருடன் அல்லது குருவுடன் ஒத்துப்போவது நல்லது தான். ஆனால் நிறுவனத்துக்கு எதிராகவோ, அல்லது சட்டத்தை மீறியோ செய்ய மேலாளர் சொல்லும் பச்சத்தில் செய்யாமல் இருப்பது தவறில்லை என்று நான் நினைக்கிறேன். இது போன்ற அனுபவம் எனக்கு உண்டாகியது. அதனால் என்னுடைய பதவி உயர்வு நஷ்டமாகியது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐய்யா.
      தங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
      தங்களின் வருகைக்கும், அணுபவங்களைப் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஐய்யா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....