அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட நந்தி குண்ட் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
EVERY CLOSED EYE IS NOT SLEEPING AND
EVERY OPEN EYE IS NOT SEEING.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஐந்து
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ; விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
ஐந்தாம் விதி சொல்வது, "உன் மீதான உயர் பிம்பத்தை, உன் உயிரினும் மேலானதாக மதித்துக் காத்துக்கொள்".
மூல நூலில், இதை "SO MUCH DEPENDS
ON REPUTATION GUARD IT WITH YOUR LIFE" என்கிறார் எழுத்தாளர்.
சென்ற பகுதியின் இறுதியில் எழுந்த கேள்விக்குப் பதிலாக இவ்விதி சொல்வது, நாம் உருவாக்கியுள்ள நற்பெயரே, நம் பேச்சின் மீதான மதிப்பையும் கவனத்தையும் உருவாக்கும் என்பதே.
ஆரம்பக்கட்ட மாணவர்கள், தத்தம் குருக்களிடமோ, மேலாளர்களிடமோ, முதல் விதியில் சொல்வதுபோல், அடக்கமுடன் கற்று, குருவின் வளர்ச்சிக்குத் துணை நிற்பதின் மூலம், தம் நற்பெயரை படிப்படியாக உருவாக்குவதே சிறப்பான தொடக்கம்.
இங்ஙனம், நம் ஒவ்வொரு செயலும், பிறர் கவனத்தைக் கவரும் வண்ணம் அமைவதே, நம் மீதான உயர் பிம்பத்தை சிறிதுசிறிதாக உருவாக்கும் வழியாகும்.
ஒரு சிறு தவறு கூட, அத்தகைய பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்துவிடும் என்பதையும், அதை மீளுருவாக்க பல ஆண்டுகள் கூட ஆகும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
உதாரணமாக, பல்திறன் பேசிகளின் முன்னோடியான ஐஃபோன்களின் விலை அதிகமாக இருப்பினும், உயர்தட்டு மக்கள் வாங்குவதற்கான காரணம், அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களே.
இந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கியது, இஸ்ரேலிய நிறுவனமான "NSO" உருவாக்கிய பெகஸஸ் வைரஸ் விவகாரம்.
இதனால் ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க, ஆப்பிள் நிறுவனம், தன் அடுத்த இயங்குதளத்தில் "Lockdown mode " வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதன் பாதுகாப்பு அம்சங்களை உடைப்போருக்குப் பெறும் தொகையைப் பரிசளிப்பதாகவும் துணிச்சலுடன் கூறியுள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்களின் பழைய நம்பிக்கையைப் பெற, ஆப்பிள் தொடர்ந்து பல்லாண்டுகள் பாடுபட வேண்டியிருக்கும் என்பதில் ஐயமே இல்லை.
பிறர் கண்ணோட்டத்தில் நம் பிம்பம் உயர, நம்மைப் பணக்காரராகக் காட்டிக்கொள்வதோ, தெரியாததையும் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்வதோ, நாளடைவில் நம்மை பெரும் கடனாளியாகவும், எதிரிகளால் சூழப்பட்டவர்களாகவுமே மாற்றிவிடும் என்பதையும் இவ்விதியைக் கைகொள்வோர் மனதில் கொள்ளவேண்டும்.
இதற்கான உதாரணமாக, தம் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படையாகக் காட்டியதால், பலர் நிந்தனைக்குள்ளான கிங்ஃபிஷ்ஷர் உரிமையாளர், திரு விஜய் மல்லையா அவர்களைக் குறிப்பிடலாம்.
அவரை விட அதிகம் கடன் பெற்றுக் கட்டத் தவறிய "A. B. G. Shipyard" நிறுவனத் தலைவர் திரு ரிஷி அகர்வால் போன்றோர் இருக்க, மல்லையா அவர்கள் குறித்தே ஊடகங்கள் பேசுவதற்கும் இதுவே காரணம்.
எனவே, எளிமையான வாழ்க்கை முறையும், படிப்படியான கற்றலுமே, நம் பிம்பத்தை உயர்த்தும் கருவிகளாக இவ்விதி கூறுகிறது.
நற்பெயரை உருவாக்க இயலாதோர், மற்றவர்கள் பெயரைக் கெடுப்பதன் மூலமும் தம்மை உயர்த்திக் கொள்ளலாம் என நூல், இதன் விதி விலக்காக சில அரசியல் உதாரணங்களுடன் விளக்கியுள்ளது.
இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும், இது போன்ற குறுக்குவழிகள், காலப்போக்கில் நமக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதையும் நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பதிவு செய்கிறேன்.
எனவே, எளிமையான வாழ்வோடு, படிப்படியாகக் கட்டியமைக்கப்படும் நம் உயர் அடையாளமே, நம்மைக் குறித்து மற்றவர்களை உயர்வாகப் பேச வைத்து நம் வலிமை பெருக வழிகோலும் எனப் புரிந்துகொள்ளலாம்.
இத்தகைய பிம்ப உருவாக்கத்தில், நாம் கை கொள்ளவேண்டிய மிக முக்கியமான ஒன்றைக் குறித்து, அடுத்த விதியைச் சுவைக்கையில் விவாதிக்கலாம்.
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
ஆம், மற்றவர்கள் பெயரைக் கெடுப்பது சரியான செயலாகாது. கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதென்பது மிகவும் சிரமமான காரியம்.
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம் ஐய்யா.
நீக்குதீய நோக்கங்கள், நம்மைத்தான் இறுதியில் பாதிக்கும்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஐய்யா.
தகவல்கள் சிறப்பு தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குதொடர்வதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குபயனுள்ள தகவல்கள் பல வரும் விதிகளில் பகிரப்படும்.
Reputation என்பது எல்லோருக்கும் இருக்குமா? இல்லாதவரால் எப்படி பாதுகாக்க முடியும்.
பதிலளிநீக்குreputation இல்லாதவர்க்கு power இருக்காது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
தொடர்கிறேன்
Jayakumar
வணக்கம் ஐய்யா.
நீக்குஒவ்வொருவரிந் பொருப்பிற்கேற்ப ஒரு மதிப்பு "Reputation" இருக்கும்.
அதை படிப்படியாக உயர்த்தும் நுட்பங்கள் அடுத்தடுத்த விதிகளில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
தங்களிந் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் ஐய்யா.
அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குஆமாம் அரவிந்த் மற்றவர் பெயரைக் கெடுத்து நாம் உயர்வதை ஏற்க முடியாது...மற்றபடி இந்த விதி ஓகே. பெயர் அல்லது புகழ் எல்லோருக்கும் அமைவதில்லை..
பதிலளிநீக்குகீதா
ஆம் மேடம்.
பதிலளிநீக்குபிறர் பெயரைக் கெடுப்பது ஏர்க்கத்தக்கதல்ல.
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மேடம்.
மற்றவர்களைப்பற்றி கவலைபடாமல் நம்முடய வாழ்க்கையை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று நாம் முயற்சி செய்தால் நமது வாழ்க்கை சிறப்பாக்இருக்கும்.
பதிலளிநீக்குமிகச்சரி ஐய்யா.
நீக்குதங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி ராமசாமி ஐய்யா.
அதேதான்!!! டிட்டோ செய்கிறேன்..
நீக்குகீதா
பிறருக்கு தீங்கு செய்யாது நமது பெயரை கட்டிக் காப்பதே சிறந்த இலட்சணம். நல்ல விதி.
பதிலளிநீக்குஉலகில் அனைத்தும் அபரிமிதமாய் உள்ளன என்னும் நேர்மறை என்னத்தால் பிறரை கெடுக்கும் என்னத்தை வெற்றிகொள்ளலாம் மேடம்.
நீக்குதங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.