செவ்வாய், 20 டிசம்பர், 2022

தலைநகர் தில்லி - "ஆலும்மா டோலும்மா……"

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

MANAGEMENT IS ABOUT PERSUADING PEOPLE TO DO THINGS THEY DO NOT WANT TO DO, WHILE LEADERSHIP IS ABOUT INSPIRING PEOPLE TO DO THINGS THEY NEVER THOUGHT THEY COULD. 

 

******

 

"ஆலும்மா டோலும்மா……"



 

கனாட் பிளேஸ் - தலைநகர் தில்லியின் பிரதானமாக விளங்கும் ஒரு வியாபார ஸ்தலம். இந்தப் பகுதியில் சூப்பர் பஜார் என்று ஒரு பேருந்து நிறுத்தம் இப்போதும் இருக்கிறது, என்றாலும் அந்த இடத்திற்கு பெயர்க் காரணமாக இருந்த சூப்பர் பஜார் எப்போதோ மூடி விட்டார்கள். நான் தில்லி வந்த புதிதில் அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் இருந்தது. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கே கிடைத்துக் கொண்டிருந்தது. கூட்டுறவு பண்டக சாலையாக இருந்த அதை பல வருடங்களுக்கு முன்பே ஊற்றி மூடி விட்டார்கள். சரி போகட்டும் அதைப் பற்றி இப்போது நாம் பார்க்கப் போவதில்லை! இன்றைக்கு நாம் பார்க்கப் போவது வேறு விஷயம்! 

 

லாலு பிரசாத் யாதவ் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள்! "நான் அழிவில்லாதவன்" என்று அவருக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அவரது வாக்கியங்களில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு வாக்கியம் - "Jab tak Samosa mein rahega aalu, Bihar mein rahega Lalu". அதாவது "சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை, பீஹார் மாநிலத்தில் லாலு இருப்பார்". அவர் இருக்கிறாரோ இல்லையோ இந்த ஆலு என்னும் உருளைக்கிழங்கு இல்லாமல் வட இந்தியர்கள் இல்லை! 

 

எங்கும் ஆலு எதிலும் ஆலு என்பதே இவர்களது பிரதான கோஷமாக இருக்கிறது! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் உருளைக்கிழங்கை தன்னுடைய உணவில் சேர்த்து விடுகிறார்கள். எந்த காய்கறியாக இருந்தாலும் அதனுடன் உருளையை சேர்த்து சமைத்து விடுவார்கள். உணவகங்களில் கூட அதிகமாக பயன்படுத்தப்படுவது இந்த உருளைக்கிழங்கு தான். 

 

அலுவலக பயிற்சி காரணமாக, தினமும் காலை வேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பேருந்தில் சூப்பர் பஜார் வரை சென்று அங்கிருந்து இன்னும் ஒரு பேருந்து பிடித்து பயிற்சி நிலையம் செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி போகும்போது சூப்பர் பஜார் பகுதியில் இருக்கும் ஒரு மிகச்சிறிய கடை அதாவது உணவகம் அருகே தான் பேருந்துக்கு காத்திருப்பேன். காலை நேரத்திலேயே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த உணவகம். அங்கே விற்பனை ஆவது சுடச்சுட பிரட் பக்கோடா மற்றும் கச்சோடி சப்ஜி தான். தலைநகர் தில்லிக்கு அலுவல் சம்பந்தமாக அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து மின்சார ரயில் வழி வரும் பலரும் இந்த சூப்பர் பஜார் பேருந்து நிலையத்திற்கு வந்து, பேருந்து பிடிப்பதற்கு முன் இந்த கடைகளில் காலை உணவு சாப்பிடுவது வழக்கம். 

 

நாள் முழுவதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உணவகம். நான் அந்த காலை நேரத்தில் தினமும் பார்க்கும் விஷயம் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கும் உருளை மூட்டைகள்! ஒவ்வொரு நாளும் ஆறு மூட்டை உருளைக்கிழங்குகள் அங்கே வந்து சேர்கிறது! மூட்டை ஒன்றுக்கு 80 கிலோ! ஒரே ஒரு உணவகத்தில் இத்தனை உருளைக்கிழங்கு பயன்படுத்தினால் தலைநகரம் முழுவதும் எத்தனை மூட்டை உருளைக்கிழங்கு பயன்படுத்துவார்கள் என்று யோசிக்கும்போதே வயிறு கலங்குகிறது! 

 

தில்லி வந்த புதிதில் நண்பர் ஒருவர் சொல்லும் வாக்கியம் நினைவுக்கு வருகிறது - "சாப்பிடற ஆலுவெல்லாம் எல்லாம் உடம்பில் போய் ஆங்காங்கே சேர்ந்து விடுவதால்தான் இங்கே எல்லாரும் குண்டாக இருக்கிறார்கள் போலும்!" வீடுகளில் கூட உருளைக்கிழங்கு வாங்குவது கிலோ கணக்கில் இல்லை - DHதடி(d) கணக்கில் தான். ஒரு DHதடி(d) என்றால் ஐந்து கிலோ. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு DHதடி(d) உருளைக்கிழங்காவது வாங்கி விடுகிறார்கள்! 

 

லாலு சொல்வதையே கொஞ்சம் மாற்றிச் சொன்னால், சமோசாவில் மட்டுமல்ல வட இந்தியா முழுவதிலும் ஆலு எனும் உருளைக்கிழங்கின் ஆதிக்கம் தான். உருளை இருக்க பயமேன் என்று தொடர்ந்து அதையே சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் பழகிப் பழகி எனக்கும் கூட ஆலு மீது அதீத காதல் வந்துவிட்டது போங்கள்! சரி உங்களுக்கும் ஒரு DHதடி(d) ஆலு பார்சல் அனுப்பவா ?

 

விரைவில் தலைநகர் குறித்த வேறு ஒரு விஷயம் குறித்து பேசுவோம்.. 

 

******

 

இந்த வாரத்தின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டிலும் உருளைக்கிழங்கும் பெருமளவு காதலர்கள் இருக்கிறார்கள்.  எனக்குதான் பிடிப்பதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் உருளைக் கிழங்கு அவ்வளவாக பிடிப்பதில்லை ஸ்ரீராம். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  2. கனாட் பிளேஸில் மெட்ராஸ் கஃபே தற்போதும் இருக்கிறதா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெட்ராஸ் கஃபே தற்போதும் இருக்கிறது - ஆனால் முன்பு போல பிரபலம் இல்லை - கூட்டமும் இல்லை. பழைய வாடிக்கையாளர்கள் மட்டுமே வருகிறார்கள் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  3. உருளை வாயு என்று நம்மில் பலர் ஒதுக்கி விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  4. ஆலு இல்லை என்றால் வடஇந்தியர்கள் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர்களின் பிரதான உணவு உருளை தானே இராமசாமி ஐயா. தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது . ஆலு பற்றிய கட்டுரை சிறப்பு. நமக்கு ஒரு நாள் உருளை சேர்த்தால், பத்து நாட்களுக்கு அதன் பிடித்தமான பிடிப்பு தெரிகிறது. ஒருவேளை அங்கிருப்பவர்கள் தினமும் சேர்ப்பதால், அதன் பிடிப்பு பழகி விட்டதோ என்னவோ.. ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  6. உருளைக் கிழங்கு எல்லா இடங்களிலும் ரொம்பவே பயன்படுத்துவாங்க என்று நினைக்கிறேன். ஆமாம் வட இந்தியர்களுக்கு உகி யின் முன் முழிக்கவில்லை என்றால் அந்த நாள் பொழுது நன்றாக விடியவில்லை என்பது போல....

    பங்களூரிலும் நிறைய வட இந்தியர்கள் என்பதாலோ என்னவோ உகி நிறைய அதுவும் சாட் கடைகள் இங்கு அதிகம் அதிலும் பானி பூரி பக்கத்துக்கு பக்கம்....

    எனக்கும் உ கி பிடிக்கும். அதில் நிறைய வகைகள் எளிதாகச் செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உருளை இல்லாத இடம் இங்கே இல்லை கீதா ஜி! தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....