அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பாண்டவ் கில்லா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
EVERY MORNING YOU HAVE TWO OPTIONS;
CONTINUE TO SLEEP WITH YOUR DREAMS; OR WAKE UP AND CHASE THEM… THE CHOICE IS
YOURS!
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஏழு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ; விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
ஏழாம் விதி சொல்வது, "பிறர் செய்யக்கூடிய வேலைகளை நீ செய்யாதே, ஆனால் அவற்றிற்குரிய நற்பெயரை தவறாமல் எடுத்துக்கொள்".
மூல நூலில், இதை "GET OTHERS TO DO
THE WORK FOR YOU, BUT ALWAYS TAKE THE CREDIT" என்கிறார் எழுத்தாளர்.
சர்ச்சைக்குரியதானதாகவும், மனசாட்சிக்கு விரோதமானதாகவும், தவறான முன்னுதாரணங்களால் நம்மை தீய வழிக்குத் திசை திருப்புவதாகவும் இவ்விதி தோன்றுவது இயல்பே.
நூலின் முதல் விதியிலேயே, நம் வேலைத் திறமையால் நம் மேலாளர்கள் பயனடையுமாறு செயல்படச் சொல்லும் இதே எழுத்தாளர், இப்போது அப்படியே தட்டைத் திருப்பிப் போடுவதாக நண்பர்களுக்கு எழும் சினம் எனக்கும் ஆரம்பத்தில் எழுந்தது.
இவ்விதி, ஓரளவு வாழ்வில் முன்னேறிய நிலையில், ஒரு குழுவிற்கோ, ஒரு பெரும் நிர்வாகப் பிரிவிற்கோ தலைமையேற்றவர்களுக்குச் சரியாகப் பொருந்துவதாகும்.
ஆரம்பக்கட்டத்தில், அனைத்து சிறு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு நம் நற்பிம்பத்தை வளர்த்துக்கொண்டாலும், நிலை உயர உயர பெருகிவரும் பொறுப்புகளால், அனைத்து வேலைகளையும் நாமே செய்வது துளியும் சாத்தியமற்றதாகும்.
இந்நிலையில், நம் அனுபவத்தால், சரியான நபர்களிடம் சரியான வேலைகளைப் பகிர்ந்தளித்து குறித்த நேரத்தில் வெற்றிகரமாக முடிப்பதிலேயே உண்மையான தலைமைப் பண்பின் சாரம் உள்ளது.
இவ்விதியைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவுபவை, கிரிக்கெட் ஆட்டத்தின் தலைசிறந்த வீரராகத் திகழ்ந்த திரு சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மூன்று வருட அணித்தலைமை அனுபவங்களே.
1996 இலிருந்து 2000 வரை அணித்தலைவராக விளையாடிய சச்சின், தனிப்பட்ட அளவில், சிறந்த மட்டைவீச்சாளராகவும், ஆட்டத்தின் போக்கைச் சிறப்பாகக் கணிப்பவராகவும் திகழ்ந்தபோதிலும், அணியின் வெற்றி விகிதம் மிகவும் மோசமாகவே இருந்தது.
பதினொன்று பேர் குழுவாக ஆடவேண்டிய கிரிக்கெட் ஆட்டத்தை, எவ்வளவு திறமையாளராலும் தன்னந்தனியாகச் சமாளிக்க முடியாது என்பதையும், பிறர் திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தும் தலைமை உத்திகள் தமக்கு மட்டும் பிடிபடாத துயர்நிலை குறித்தும், திரு சச்சின், தம் சுயசரிதையில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.
இதனாலேயே, தமக்கு 2007 இல் மீண்டும் தலைமைக்கான அழைப்பு வந்தபோதும், இளைஞரான மஹேந்திரசிங் தோனியை பரிந்துரை செய்துவிட்டு, ஒரு வீரராகவும், வழிகாட்டியாகவும், சிறப்பான பங்களிப்பை அளித்தார்.
அவர் அடையாளம் கண்ட தோனி அவர்களின் தலைமைப் பண்புகளை நாடே இப்போது அறியும்.
எனவே, பொறுப்புகள் அதிகரிக்கும் சமையங்களில், விரிவான பார்வை கொண்ட தலைவன், வேலைகளை உரியவரிடம் பகிர்ந்தளித்து முடிக்கும் உத்திகள் குறித்தே இவ்விதி விவாதிக்கிறது.
இதன் மூலம், பிறர் உழைப்பைச் சுரண்டி பெயர் வாங்குவதாக எழும் அவப்பெயரைத் தவிர்க்கும் வழிகளையும் இவ்விதி தெளிவாக விளக்கியுள்ளது.
ஒரு தலைவன், வெற்றிக்கான வெகுமதிகளை, தம் குழு உறுப்பினர்களை வெளிப்படையாக அங்கீகரிப்பதன் மூலம் முழுமையாகப் பகிர்ந்தளிப்பதே இதற்கான வழிமுறையாகும்.
இதனால், தலைவனின் பிம்பம் ஊக்கம் நிறைந்த உறுப்பினர்களால் முழு மனதுடன் உயர்த்தப்படுவதோடு, அனைத்து வெகுமதிகளும் அவனையே சென்று சேர்வதும், அக்குழு மீதான நம்பிக்கை உயர்வதும் உறுதி.
ஒரு குழந்தை தற்கொலை செய்துகொண்டால், அக்குழந்தை படித்த பள்ளியின் தாளாளர் அதற்கு பொறுப்பாக்கப்படுதல், ஒரு வங்கிக் கிளை ஊழியர் தவறிழைத்தால், கிளை மேலாளர் முதல், வங்கியின் இயக்குனர் வரை பதில் சொல்லும் நிலை உருவாதல் போல, தோல்விகளுக்குத் தலைவன் பொறுப்பாக்கப்படும் கட்டாய நிலை ஏற்படுவதை நாள்தோறும் காண்கிறோம்.
எனவே, தம் குழுவோ, நிறுவனமோ வெற்றிபெறும் சமயங்களில், மேற்கண்ட உத்திகளால் வெகுமதிகளைத் தலைவன் அடைவதில் தவறொன்றும் இல்லை.
இத்தகைய உத்திகளால் மட்டுமே, நம்மால் வலிமையான தலைவர்களாக இருப்பதோ, திறமையானவர்களைத் தொடர்ந்து ஈர்த்து தக்கவைப்பதோ நீண்ட கால அளவில் சாத்தியமே இல்லை என நீங்கள் நினைப்பது மிகவும் சரியே.
இதற்காக நாம் மேலும் கையாளவேண்டிய சுவாரசியமான வழிகளை அடுத்தடுத்த விதிகளில் அறியவிருக்கிறோம்.
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
மஹேந்திரசிங் தோனி டெண்டுல்கர் உதாரணம் சரியில்லை. அந்த வேலையின் க்ரெடிட் தோனிக்குதான் கிடைத்தது. சச்சினுக்கு அல்ல. உதாரணமாக கொஞ்சம் ஐயா அப்துல் கலாம் அவர்களை சொல்லலாம். அக்னிச்சிறகுகள் படித்திருப்பீர்கள். அது கூட அவர் க்ரெடிட் எடுக்கவில்லை. ஆனால் மக்களுக்கு தெரியும் யார் சூத்திரதாரி என்று.
பதிலளிநீக்குஆம் ஐய்யா. கலாம் அவர்கள் இதற்கான சிறந்த உதாரணமாக இருந்திருப்பார்.
நீக்குஅவரது ஏவுகனை சோதனையின் முதல் முயர்ச்சி தோல்வியடைந்தபோது, அதற்கான பொருப்பை அவரின் தலைவர் திரு விக்ரம் சாராபாய் அவர்கள் ஏற்று மன்னிப்பு கோரிய நிகழ்வும் உண்டு.
அனைத்தையும் சேர்த்து ஒரு முக்கிய விதியில் உதாரணமாக குறிப்பிட விவரங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
This law is applicable only for Managers, not for leaders. Leaders participate in teamwork.
பதிலளிநீக்குThank you very much for sharing your valuable views sir.
நீக்குthe upcoming laws will focus on team work and interdependency.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
பதிலளிநீக்குஅதனை அவன்கண் விடல்
மிகப் பொருத்தமான குறல் தான்.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
அரவிந்த் , இந்த விதியை என்னால் ஏற்க இயலாது. வேலை செய்வது ஒருவர், பெயர் எடுப்பவர் வேறொருவர், அவர் என்னதான் அந்தக் குழுவின் தலைவனாக இருந்தாலும். அப்படி என்றால் தலைவன் அல்ல, அது Bossy...
பதிலளிநீக்குBoss, Leader இரண்டிற்கும் வித்தியாசம் தெரியும் உங்களுக்கு. ஒரு நல்ல தலைவன் தன் பெயரை பறைசாற்றிக் கொள்ளமாட்டான், தன் குழுவுடன் தன்னை இணைத்துக் கொள்வான் ஆனால் boss எனும் attitude இருப்பவன் தன் பெயரைத்தான் முன்னிலைப்படுத்துவான், தன் கீழ் உள்ளபவர்கள் உழைத்து வெற்றி பெறச் செய்தாலும்.....
கூடி இழுத்தால்தான் தேர் நகரும்.
கீதா
ஆம் மேடம்.
நீக்குநூலின் கருத்துக்கள் அனைவரும் ஏர்க்கும்படியாக இருப்பதில்லை.
சில விதிகள் நம் அடிப்படை நம்பிக்கைகளையே அசைப்பவை.
அந்த அளவு சிந்திக்க வைத்து விவாதிக்கத் தூண்டுவதாலேயே, இதை, தமிழில் எளிமையாக்கி சொல்ல முயல்கிறேன்.
மனித அறக்கொள்கைகள் அனைத்தும் பெரும் விவாதத்தின் மூலமே உருவாக்கப்பட்டவை.
மேலும் விவாதங்கள் மூலமே வருங்காலத்திற்கேற்ப அரங்கள், தம்மை தகவமைக்கும்.
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.
எடுத்துக்காட்டுகள் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குஎடுத்துக்காட்டுகள் தங்கள் வாழ்வின் அணுபவங்களையும் தூண்டினால் மிக்க மகிழ்ச்சி சார்.
நீக்குதங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நற்பெயரை கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் தவறுகளின் பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்தானே!
பதிலளிநீக்குநிச்சயமாக ஐய்யா.
நீக்குசெய்யாத தவறுக்கும் பொருப்பேற்கும் கட்டாயம் ஒரு தலைவனுக்கு ஏற்படுவதுண்டு.
இவ்விதி ஏற்புடையதல்ல.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐய்யா.
நீக்கு