அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
BEAUTIFUL RELATIONS ARE THOSE, WHO CARE
WITHOUT HESITATION, WHO SIMPLY REMEMBER WITHOUT LIMITATION, AND WHO REMAIN THE
SAME, EVEN WITHOUT COMMUNICATION!
******
யாரிவள் தொடரின் முந்தைய பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.
வருடங்கள் செல்லச் செல்ல அவளின் எண்ண அலைகளில் ஒரு வேகமும், ஆர்ப்பரிப்பும் உண்டாயிற்று. கணவனுடன் செய்த தனிக் குடித்தனத்தை விட புகுந்த வீட்டினருடன் சேர்ந்து வசிக்கும் வருடங்கள் தான் அதிகமாகியது! எதை நோக்கி தன் திருமண வாழ்க்கை பயணிக்கிறது?? என்று அவ்வப்போது அவளுள் எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தது!
கணவனின் அருகாமையை எண்ணி எதிர்பார்ப்புடன் காத்திருந்த மனதில் சோர்வும், சலிப்பும் ஏற்பட எல்லாவற்றையும் விட்டு விலகிட வேண்டும் என்ற எண்ணமும் ஒருபுறம் வலுத்தது! தனித்தே வாழ்ந்தும் தான் பழகியாச்சே! உடல்நலமின்மை, பண்டிகைகள், முக்கியமான நிகழ்வுகள் என்று எதற்கும் உடன் இல்லாமல் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டு இப்படியே தான் வாழ்க்கை நகர்கிறது என்று நினைத்தாள்!
அப்பா இப்போது இருந்திருந்தால் இந்த நிலைக்கு என்ன சொல்லியிருப்பார்?? அம்மா என்ன சொல்லியிருப்பாள்?? என்று சிந்தித்துப் பார்த்தாள்! பெற்றோர் இருந்திருந்தால் நிச்சயமாக இப்படி தனித்து இருந்திருக்க மாட்டாள் என்று மட்டும் அவளால் யோசிக்க முடிந்தது! காலப்போக்கில் பிரார்த்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு கடமைகளை மட்டும் செய்து கொண்டிருந்தாள்.
வயது முதிர்வின் காரணமாக அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுடன் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் வீட்டுப் பெரியவர்கள் மூவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவளுக்கு சேர்ந்து கொண்டது! வீட்டு வேலைகளுடன், மகளையும் கவனித்துக் கொண்டு, வயதானோரையும் கவனித்துக் கொண்டாள்!
கணவனுக்கு தன் வேலையில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம்! மகளுக்கு தன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம்! இவளுக்கு??? வீட்டைச் சுற்றி உறவுகள் இருந்தாலும் தனித்து போய்விட்ட உணர்வு அவளுக்கு உண்டாயிற்று! எதிர்பார்ப்புகளையும், வேதனைகளையும் கடந்து விட்ட பக்குவம் வந்து விட்டதை போன்ற உணர்வு அவளுள்!
எங்கோ பிறந்து பலவித கனவுகளுடன் வளர்ந்து வாழ்க்கைப் பாதையில் மனதை வருத்தும் பல துயரங்களையும் கடந்து, வாழ்க்கைத் துணையுடன் இணைந்து அவரே தன் உலகமாக நினைத்து, பின்பு பெற்றெடுத்த குழந்தையே அனைத்தும் என்றாகி, இப்போது அவளின் வாழ்க்கை கடமைகளை நோக்கி மட்டும் வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது!
தனக்கான அடையாளமாக எழுத்தையும், சமையலையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தனிக்கவனம் செலுத்தி சில முயற்சிகளை செய்தாள்! இன்னும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும்! தன் நேரங்களை அதில் செலவிட வேண்டும் என்ற எண்ணங்களும் அவளிடம் உண்டு! காலம் தான் அவளுக்கு உறுதுணையாக இருக்கணும்!
அவளால் எல்லாவற்றையும் கடந்து விட முடியும் என்ற தன்னம்பிக்கை உடனிருக்க இந்த நிலையும் ஒருநாள் மாறும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்!! இவளின் வாழ்க்கைப் பாதையில் இதுவரை பயணம் செய்து மகிழ்ச்சியையும், ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு அவளுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல!
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
இந்த நிலை கட்டாயம் சீக்கிரம் மாறவேண்டும் என்று நானும் மனதார பிரார்தித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்கு//பெற்றோர் இருந்திருந்தால் தனித்திருக்க விட்டிருக்கமாட்டார்கள்//- உண்மைதான். இருந்தாலும், காலம் செய்த கோலம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். விரைவில் மாற பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநல்லதே நடக்கும்...
பதிலளிநீக்குஅன்பு தோழி ஆதி, தன்னம்பிக்கையின் துணையுடன் வாழ்வில் இத்தனை தூரங்கள் கடந்து விட்டீர்கள். தங்கள் வாழ்க்கை துணையுடன் கூடிய சீக்கிரம் சேர்ந்து தங்கள் குடும்பம் மகழ்ச்சியாய் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎல்லாம் நன்மைக்கே.... நலமாகட்டும்.
பதிலளிநீக்குநல்லதொரு சுய வாழ்வுத் தொடரை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். விரைவில் இது ஒரு நூலாக வெளிவர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇந்நிலை மாறும் என்ற நம்பிக்கையே
பதிலளிநீக்கு