வியாழன், 29 டிசம்பர், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

THE HAPPINESS OF YOUR LIFE DEPENDS ON THE QUALITY OF YOUR THOUGHTS.

 

******


பயணங்கள் இனிமையானவை.  நாம் பயணிப்பது மட்டுமல்லாது அடுத்தவர்களையும் பயணிக்க வைப்பது கூட நல்ல விஷயமாகவே எனக்குத் தோன்றுகிறது.  இந்த நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்



 

நைமிசாரண்யம் சென்ற போது எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் பல இடங்களில் சுற்றி வந்திருந்தாலும் ஒரு சில இடங்களை பார்க்க முடியாமல் போனது. அப்படி பார்க்க முடியாத இடங்களில் ஒன்று பாண்டவ் கில்லா - அதாவது பாண்டவர்களின் கோட்டை என்ற இடம்.  அந்தக் காலத்தில் வனவாசத்தின் போது பாண்டவர்கள் தங்கி இருந்த கோட்டை என்று புகழ்பெற்றிருந்தாலும் தற்போது பெரிதாக அங்கே ஒன்றுமில்லை என்று எங்களிடம் எங்கள் Bபேட்டரி ரிக்க்ஷா ஓட்டுனர் கூறினார்.  ஆனாலும் நாங்கள் மாலை நேரத்தில் ஒரு நடையாக இருக்கட்டும் என்று நகரில் உலா வந்தோம்.  அப்படி வந்த போது அடுத்த நாள் பயணிக்க எந்த இடத்திலிருந்து பேருந்து கிடைக்கும் என்றும் தகவல் அறிந்து வந்தோம்.  நீண்ட ஒரு நடைப் பயணம் முடித்து நாங்கள் வந்து சேர்ந்த இடம் கோமதி ஆற்றின் கரை.  


 

கோமதி ஆற்றங்கரையில் மாலை நேரத்தில் அத்தனை கூட்டமில்லை.  நதியும் நாங்களும் மட்டுமே!  நதிக்கரைக்கு குளிக்கவும் பூஜிக்கவும் வந்திருந்த பக்தர்கள் கூட்டம் விட்டுச் சென்ற குப்பைகள், குளித்துக் கழற்றி வீசிய ஆடைகள் என எங்கே பார்த்தாலும் மனதை கவலைப்படுத்தும் விஷயங்கள் பார்க்கக் கிடைத்தது.  எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் நமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறோமோ? அதுவும் வசதிகள் குறைவு குறித்து வாய் கிழிய பேசும் அனைவரும் அவர்களது கடமைகள் குறித்து மறந்து விடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை. கோமதி ஆற்றங்கரையில் பார்த்த காட்சிகள் குறித்து அதிகம் யோசித்து என்னை நானே வேதனைப்படுத்திக் கொள்வதை விட இயற்கையை ரசிப்பது மேல் என அங்கே காணக் கிடைத்த இயற்கை அன்னையின் எழிலை மட்டும் ரசித்தேன்.  நண்பர்களுடனான அந்த இனிமையான மாலைப்பொழுது மனதை விட்டு அகலா நினைவுகளை எனக்குத் தந்தது.  

 

அதே பகுதியில் தான் பாண்டவ் கில்லா அமைந்திருந்தது.  மாலை ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அங்கே உள்ளே செல்ல முடியவில்லை.  நாங்கள் பார்க்காத அந்த இடத்தில் என்ன இருக்கிறது? ஹனுமான் Gகடி குறித்து முன்னர் எழுதி இருந்தேன் அல்லவா, அதற்கு சற்றே அருகில் தான் இந்த பாண்டவ் கில்லாவும் அமைந்திருக்கிறது.  பாண்டவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கோட்டை என்றாலும் இதனை அமைத்தது மன்னர் விதுரர் அவர்கள்.  கோட்டைக்குள்ளே ஒரு கோவில் அமைந்திருக்கிறது.  கோவிலில் பாண்டவர்களுக்கு மட்டுமல்லாது கிருஷண பகவானுக்கும் சிலை அமைத்திருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் இணையத்திலும் அங்கே உள்ளூர் வாசிகளிடமும் பேசியபோது தெரிந்து கொண்ட விஷயங்கள்.  மீண்டும் நைமிசாரண்யம் செல்ல வாய்ப்பிருந்தால் ஒன்றிரண்டு தினங்கள் தங்கி இன்னும் சில இடங்களை பார்த்து வர வேண்டும்.  

 

மாலை நீண்ட நேரம் நடைப் பயணம் முடித்து, தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.  சில மணித்துளிகள் ஓய்வுக்குப் பிறகு இரவு உணவுக்காக தங்குமிடத்தின் அருகிலேயே இருந்த, மதியம் நாங்கள் உணவு உண்ட அதே உணவகத்திற்குச் சென்று அங்கே உணவு உண்டு தங்குமிடம் திரும்பினோம்.  அடுத்த நாள் காலை சீக்கிரமாகவே எழுந்திருந்து அடுத்த நதிக்கரை நகரம் நோக்கி பயணிக்க வேண்டும் என்பதால் விரைவில் உறங்கச் சென்று விட்டோம்.  கோமதி ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்டுச் சென்ற அனுபவங்கள் அடுத்த நதிக்கரை நகரம் எங்கே என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் சொல்லட்டுமா? அதற்கு முன்னர் உத்திரப் பிரதேசம் குறித்து சில சிந்தனைகள்.

 

உத்திரப் பிரதேசம்..... என்னதான் காலம் மாறிக்கொண்டே இருந்தாலும், மனிதர்களின் மனநிலை மாறும் வரை எந்த முன்னேற்றமும் இந்த ஊரை/மாநிலத்தை மாற்றப் போவதில்லை.....  சாலைகள், வசதிகள் என பல விஷயங்களில் முன்னேற்றம் காண முடிந்தாலும் மனிதர்கள் அவற்றை வெகு விரைவில் கெடுத்து விடுவதை பார்க்க முடிகிறது. சுத்தம் குறித்த சிந்தனை இவர்களுக்கு வருவதே இல்லை என்பது வேதனையான நிதர்சனம். புதிதாக கட்டப்பட்ட இடங்களில் கூட, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிஞ்சித்தளவு கூட இல்லாமல், குட்கா மற்றும் பான் குதப்பித் துப்புகிறார்கள்......   இவர்களை அந்த ஆண்டவனே வந்தாலும் மாற்ற முடியாது...... 🙁 

 

அடுத்த பகுதியில் வேறு ஒரு நதிக்கரை நகரம் குறித்த சில தகவல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

13 கருத்துகள்:

  1. சுத்தத்தை நிலைநாட்ட படு கண்டிப்பான ஆட்சி ஒன்று வரவேண்டும். கொஞ்ச நாளைக்காவது தண்டனைகள் கடுமையாக இருந்தால் பழகி விடும்.

    பதிலளிநீக்கு
  2. பாண்டவ் கிலா சென்றதில்லை. நினைவில் வைத்துக்கொண்டேன்.

    உபி மாத்திரமல்ல. வட இந்தியர்களின் இந்த அசிங்கப் பழக்கத்தை தபிழ்நாடு வரை எடுத்துச் சென்றுவிட்டார்கள். எங்கள் வளாகத்தில், மேலிருந்து துப்புகிறார்கள் என்ற கம்ப்ளெயின்ட் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இதே நபர்கள் வெளிநாடு சென்றால் அங்கு சரியாக நடந்து கொள்கிறார்கள்.

    தண்டனை பயத்தை அரசுதான் கொண்டு வரவேண்டும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னமே எழுதியிருக்கிறேன். லண்டன் ஹாம் (?) பகுதியில் அல்லது அதற்கு அடுத்த பகுதியில் 80 சதம் வெள்ளையர்கள், 20 சதம் இந்திய, பாகிஸ்தானி, பங்களாதேஷ் என்று இருந்து, இவர்கள் பானைத் துப்பிய துப்பலில் சில வருடங்களிலேயே வெள்ளையர் சதம் 20, மற்றவர்கள் 80 என ஆன கதையை எழுதியிருக்கிறேன். சிங்கப்பூர், மிடில் ஈஸ்ட் (அதிலயும் சில நாடுகளில் மாத்திரம்) சென்றால் மாத்திரம் தண்டனை பயத்தில் ஒழுங்காக நடந்துகொள்வார்கள்

      நீக்கு
  4. உத்திரபிரதசேத்தை பற்றி நீங்கள் குறிப்பிட்டு இருப்பது மிகவும் வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அதுவும் வசதிகள் குறைவு குறித்து வாய் கிழிய பேசும் அனைவரும் அவர்களது கடமைகள் குறித்து மறந்து விடுகிறார்கள் என்பது வேதனையான உண்மை. கோமதி ஆற்றங்கரையில் பார்த்த காட்சிகள் குறித்து அதிகம் யோசித்து என்னை நானே வேதனைப்படுத்திக் கொள்வதை விட இயற்கையை ரசிப்பது மேல் என அங்கே காணக் கிடைத்த இயற்கை அன்னையின் எழிலை மட்டும் ரசித்தேன்.//

    ஆமாம் ஜி அதே தான்....நானும் இப்படி நினைத்ததுண்டு,....

    உபி பற்றி சொல்லியிருப்பது வேதனையான விஷயம்தான். வெளிநாட்டிற்குச் செல்லும் போது இவர்கள் பயந்து ஒடுங்கி இருக்கிறார்கள். இங்கும் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் அல்லாமல் மக்கள் திருந்த மாட்டார்கள் என்பது நிதர்சனம். Self discipline, Civic Sense அற்ற மக்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. குளித்துக் கழற்றி வீசிய ஆடைகள் என எங்கே பார்த்தாலும் மனதை கவலைப்படுத்தும் விஷயங்கள் பார்க்கக் கிடைத்தது. //
    இப்போது எல்லா புனித நீர் நிலைகளும் இப்படி ஆகி விட்டது யார் சொல்லி கொடுத்தது என்று தெரியவில்லை இப்படி செய்கிறார்கள்.
    பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. குளிக்கவும் பிடிக்கவில்லை.
    காணொளியில் நடுவில் நீர் சுத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. நேரில் பார்த்த ஒரு ஆத்ம திருப்தி இந்த பயண கட்டுரை இருந்தது .
    அடுத்தது எப்போது என்கிற
    ஆவலை தூண்டிய உணர்வுகள் மனசில் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளன .

    பதிலளிநீக்கு
  9. தகவல்கள் அருமை சார்.
    சுத்தம் சம்மந்தமான பழக்கங்களை படிப்படியான கல்வி மூலம் கொண்டுவருவதே பயனளிக்கும்.
    தலைக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மெதுமெதுவாக கட்டாயமாக்கப்படுவதுபோல் இதுவும் மெதுவாக வரும் என னம்புவோம்.

    பதிலளிநீக்கு
  10. இயற்கையை அழிக்கும் மக்களை என்ன செய்யலாம் ??

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....