அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட என் கிட்ட மோதாதே பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THE HAPPINESS OF YOUR LIFE DEPENDS ON THE
QUALITY OF YOUR THOUGHTS.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி ஆறு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ; விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
ஆறாம் விதி சொல்வது, "உன் மீதான கவன ஈர்ப்பை எவ்விலை கொடுத்தேனும் தக்கவைத்துக்கொள்".
மூல நூலில், இதை "COURT ATTENTION AT ALL COST" என்கிறார் எழுத்தாளர்.
சென்ற விதியில் விளக்கப்பட்ட நம் மீதான உயர் பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில், எப்போதும் மறக்கக் கூடாத உத்தியே, நம் மீதான சுற்றத்தின் கவனத்தை தொடர்ந்து தக்கவைத்தல் ஆகும்.
ஆடம்பரம் இன்றி, எளிமையானவராக வாழச் சொல்லும் முந்தைய விதியின் சாரத்தைப் பின்தொடர்ந்தால், எப்படி கவன ஈர்ப்பைப் பெற முடியும் எனும் ஐயம் எழுவது இயற்கையே.
இதற்கான விடையை, சௌபாக்கியா வெட் கிரைண்டர் தயாரிப்பு மூலம் வியாபாரத்தில் வென்ற திரு ஆதிகேசவன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் எனக்கு அளித்தன.
வெட் கிரைண்டர் விற்க ஆரம்பித்த காலங்களில், சில வாடிக்கையாளர்கள், அரவை இயந்திரத்தைத் தவறாக இயக்கி, இயந்திரம் ஓடவில்லை என இவரை திட்டிய அனுபவங்கள் எண்ணற்றவை.
அப்போதெல்லாம், தம் நிபுணத்துவத்தைக் காட்டி வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தாமல், இயந்திரத்தை இயக்கும் முறையை பொறுமையாகவும் தன்மையாகவும் செய்முறை விளக்கம் கொடுத்துள்ளார்.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு இவரை பிடித்துப் போக, அவர்கள் வாய் வார்த்தை மூலம், பல புது வாடிக்கையாளர்களும் கிடைத்தனர்.
இதிலிருந்து, வலிமையின் சாரம் வெறும் திறமையில் இல்லை என்பதும், அத்திறமையை, எல்லோருக்கும் எளிமையாக எடுத்துச் செல்வதிலேயே இருக்கிறது என்பதும் தெளிவாகிறது அல்லவா?
"இவ்விதி, தொழிலில் அடிமட்ட நிலையில் இருப்போருக்கு மட்டுமே பொருந்துமோ?" எனும் எண்ணம் மேற்குறிப்பிட்ட உதாரணத்தால் ஏற்பட்டால், அதற்கான விடை இல்லை என்பதை பின்வரும் சம்பவம் உணர்த்துகிறது.
உலகப்புகழ் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், தமது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கிடைத்த பிரபஞ்சத்தின் மர்மங்கள் குறித்த சில படங்களை சமீபத்தில் வெளியிட்டதை அறிவோம்.
அப்படங்கள் ஏன், நாசாவின் தலைவரை விடுத்து அமெரிக்க அதிபர், திரு ஜோ பைடன் அவர்களால் வெளியிடப்பட்டது? எனும் கேள்வியிலேயே, இவ்விதியின் நுட்பமான ஆற்றல் ஒளிந்துள்ளது.
நாசா போன்ற வானியல் ஆய்வு நிறுவனங்களின் பணிகள் எவ்வளவு பயன் மிக்கதாயினும், ஏழ்மை நிறைந்த இவ்வுலகில், இவற்றிற்காக அரசாங்கங்கள் செய்யும் செலவினங்கள் பெரும் விமர்சனத்திற்குள்ளாவது இயல்பு.
அவ்விமர்சனங்களை வெல்வதற்காகவே, அவ்வப்போது அவற்றின் சாதனைகள் வெளியிடப்படுவதும், அந்நிறுவனங்களின் நிதி ஆதாரங்களை உறுதிசெய்யவே, அச்சாதனைகளின் பலன்கள், நாட்டின் அதிபரிடமே சமர்ப்பிக்கப்படுவதும் நடக்கிறது.
இதனால், நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் பயன்படுவதோடு, வரும் இடைத்தேர்தலில், தம் நற்பெயரை உயர்த்தவும் நாசா பயன்படுகிறது என உணரும் அதிகாரவர்க்கம், அதற்கான நிதி ஆதாரத்தைத் தொடர்ந்து உறுதி செய்யும்.
இத்தொலைநோக்கியின் பெயருக்குக் காரணமான திரு ஜேம்ஸ் வெப் அவர்கள் ஒரு விஞ்ஞானி அல்ல என்பதை அறிகையில், இவ்விதி செயல்படும் நுட்பம் குறித்து உணர்ந்து பெரும் வியப்படைந்தேன்.
1960 களில், நாசாவின் நிர்வாகப் பிரிவில் "Administration" பணிபுரிந்த இவர், நிலவுக்கு மனிதனை அணுப்பும் பணித்திட்டத்திற்காக, அரசாங்கத்தின் பெரும் நிதி ஆதாரத்தை உறுதி செய்ததில் ஆற்றிய பங்கிற்கான நன்றியாகவே அவரின் பெயர் இத்தொலைநோக்கிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், பிறர் கவனத்தைக் கவர பெறும் நிறுவனங்களும் முயல வேண்டிய அவசியமும், அரசியலின் நெளிவுசுழிவுகளை அறிந்து செயலாற்றவேண்டிய கட்டாயத்தையும் இவ்விதி உணர்த்துகிறது.
"பிரபலத்திற்காக அலைகிறார்கள்!" என்னும் அவப்பெயர், இவ்விதியைச் சரியாக உணராமல் பயன்படுத்துவதால் உருவாகும் அபாயம் நிச்சயம் உண்டு.
எனவேதான், நம் திறமைகள் எவ்வளவு பயன்மிக்கதாயினும், அத்திறமைகளுக்காக உதவியோரை மறவாமல், அதன் பலன்களை அவர்களை நோக்கியே திருப்பிவிடும் நுட்பமே, நம் மீதான கவன ஈர்ப்பையும், மதிப்பையும் உருவாக்கும் சிறந்த வழி என அறிவோம்.
நம் நிலை உயர உயர, கவன ஈர்ப்பைத் தக்கவைக்க செய்யவேண்டிய மேலும் பல விசித்திரமான வழிவகைகளை, நூலின் அடுத்தடுத்த விதிகளைச் சுவைக்கையில் அறிய இருக்கிறோம்.
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
உதாரண விவரங்கள் சுவாரஸ்யம் அரவிந்த். கிடைத்த பெயரை, இடத்தை தக்க வைத்துக் கொள்வது இமாலயன் டாஸ்க்!
பதிலளிநீக்குபெயரைச் சம்பாரிப்பதை விட அதை தக்கவைப்பதுதான் மிகக்கடினம் ஐய்யா.
நீக்குதங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
அறம் தவறாமல், தன்னை தான், முதலில் கவனித்து கொள்ள வேண்டும்... பிறகு மற்றவை / மற்றவர்...
பதிலளிநீக்குஇதைத்தான் தனக்கு மிஞ்சியதே தானம் எனவும் சொல்வார்கள் ஐய்யா.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் அனுபவம் நமக்கு பாடம்.
பதிலளிநீக்குஆம் சார்.
நீக்குபல அணுபவங்கள் தொடர்ச்சியாக வரும்.
தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
அரவிந்த், எவ்விலை கொடுத்தேனும் னு சொல்லியிருப்பதற்கு அந்த எவ்விலை என்பதற்கு ஏதேனும் வரைமுறை சொல்லியிருக்கிறாரா ஆசிரியர்? இந்த விதி Comprehensive ஆக இல்லையோ? அலல்து எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஆனால் தொடர்ந்து தக்க வைத்தல் என்பது Herculean Task.
கீதா
எண் அடிப்படையிலான வரைமுறை எதையும் ஆசிரியர் கொடுக்கலை மேடம்.
நீக்குஎனவே, உயிரினும் மேலானதாக காக்குமாறு சொல்கிறார் என புரிந்துகொள்ளவேண்டும் என அணுமானம் செய்துகொண்டு விதிக்கான உதாரணங்களைத் தொகுத்தேன் மேடம்.
ஓ!
நீக்கு//உயிரினும் மேலானதாக காக்குமாறு சொல்கிறார் என புரிந்துகொள்ளவேண்டும் என அணுமானம் செய்துகொண்டு விதிக்கான உதாரணங்களைத் தொகுத்தேன் மேடம்.//
ஓகே...அப்படி என்றால் ஒவ்வொரு விதியும் ஒவ்வொருவரின் புரிதலின் அடிப்படையில்தான் இல்லையா...
நான் எண் அடிப்படையில் கேட்கவில்லை.....ஒழுக்க விதிகள் ஏதேனும் சொல்லியிருக்கிறாரா என்பது.....உங்கள் பதில் புரிந்தது.
மிக்க நன்றி அரவிந்த்
கீதா
ஆம் மேடம்.
பதிலளிநீக்குஅவரவர் புரிதலுக்கேற்பதே இந்நூலின் விதிகள்.
இது குழந்தைகளுக்கான நீதி நூல் அல்ல.
வளர வளர, மனிதர் எதிர்கொள்ளும் உலகியல் சிக்கல்களைச் சமாளிக்க உதவும் விதிகள் கொண்ட நூல்.
திருக்குறள் போன்ற தொன்மையான நூல்களிலும் பொருட்பால் போன்ற பகுதிகளில் இதுவே பேசப்படுகிறது.
எனவே, விதிகளை கூடுமானவரை, நேர்மறையாக பயன்படுத்துவோர் குறித்த உதாரணங்களோடு விளக்க முயர்ச்சிக்கிறேன்.
உலகில் எதுவும் முழுவதுமான தீமை பயப்பதும் அல்ல, நூறு சதவிகிதம் நன்மை பயப்பதும் அல்ல என்பது என் வாழ்வால் அடைந்த தெளிவு.
தங்கள் ஐய்யங்களுக்கும், பொருமையான வாசிப்புகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
அனுபவம் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குகிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், நம்பிக்கையை பெறுவதும் முக்கியம்.
ஆம் மேடம்,
நீக்குஅது மிகவும் அவசியமும் கடினமானதும் ஆகும்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.
கிடைத்த பெயரை வைத்துக் கொள்வது என்பது கடினமானதுதான்.
பதிலளிநீக்கு