அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
A LONG-LASTING RELATIONSHIP COMES WITH A LOT OF FORGIVENESS AND
UNDERSTANDING.
******
இந்த வாரத்தின் தகவல் - புதிய
மின்புத்தகம் - சிறுகதைத் தொகுப்பு :
சில மாதங்களாக பதிவுகள் எழுதுவது மட்டுமல்லாது மின்
புத்தகங்கள் வெளியிடுவதிலும் சுணக்கம் தான். சென்ற சில நாட்களாக பதிவுகள் தொடர்ந்து எழுதுவது
போலவே ஒரு மின்புத்தகமும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறேன். இல்லத்தரசி முகநூலிலும் இங்கேயும் எழுதிய 15
சிறுகதைகளை “தெய்வம் தந்த பூவே” என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாக, அமேசான் கிண்டில்
தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன். தொடர்ந்து இன்னும் சில மின்புத்தகங்களும் வெளியிட
எண்ணம் உண்டு.
தெய்வம் தந்த பூவே சிறுகதைத் தொகுப்பினை கீழ் கண்ட சுட்டி மூலம் வாங்கலாம்! அல்லது
Kindle Unlimited வசதி இருப்பவர்கள் நேரடியாக படிக்கலாம். சுட்டி கீழே!
தெய்வம் தந்த பூவே (Tamil Edition) eBook
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:
விவாகரத்து - KPG ROOFINGS
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக KPG ROOFINGS
சமீபத்திய விளம்பரம் ஒன்று. மனத்தைத் தொடும் விதமாக இருந்தது. இப்படியெல்லாம்
நடந்தால் விவாகரத்துகள் குறையலாம். பாருங்களேன்.
மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் கீழே
உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.
Under each roof, there is a home | Tamil |
Brand Video by KPG roofings - YouTube
*****
பழைய நினைப்புடா பேராண்டி : பீஹார்
டைரி – தீதார்கஞ்ச் யக்ஷி - பீஹார் அருங்காட்சியகம்
2019-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பீஹார் டைரி – தீதார்கஞ்ச் யக்ஷி - பீஹார்
அருங்காட்சியகம் - அந்தப் பதிவிலிருந்து
சில வரிகள் இங்கே.
பீஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவின் ஜவஹர் லால்
நேரு சாலையில் 13.5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 24000 சதுர அடி வளாகத்தில் 9500
சதுர அடி அளவு கொண்ட அறைகளில் கலைப்பொருட்கள் பார்வைக்கு வைக்க, அமைக்கப்
பட்டிருக்கும் பீஹார் அருங்காட்சியகம் 2016-ஆம் வருடம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் நிறைய கேலரிகள் உள்ளன.
மிகவும் அழகாக இந்த அருங்காட்சியகத்தினை வடிவமைத்து இருக்கிறார்கள். ஜப்பான்
நிறுவனமும், மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் சேர்ந்து இந்த அருங்காட்சியகத்தினை
நிறுவி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கான கூடம், பழமையான சிற்பங்களுக்கான கூடங்கள்,
என நிறைய கூடங்கள்.
பீஹார் மாநிலத்தின் வரலாறு பற்றிய ஒரு குறும்படம் கூட தினம் தினம் சில காட்சிகளை
காண்பிக்கிறார்கள்.
நாங்களும் அந்தக் குறும்படத்தினைக் கண்டு களித்தோம்.
எத்தனை எத்தனை சிற்பங்கள், ஓவியங்கள், அழகியல் வடிவங்கள் என பார்க்கப் பார்க்க
அனைத்துமே பிடித்திருந்தது. குழந்தைகளுக்கான அரங்கம் மிகவும் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகளுடன் சென்றால், இந்த அரங்கில் நிறைய
விஷயங்களை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும். பழமையின் பெருமையைச் சொல்லும் அந்தப்
பொருட்களை பார்த்துத் தெரிந்து கொள்ள குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு. திங்கள் தவிர
வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை 10.30 முதல் மாலை 05.30. வரை திறந்திருக்கும்
இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்ல நுழைவுக் கட்டணம் உண்டு – பெரியவர்களுக்கு 100
ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய். வெளிநாட்டவர்களுக்கு 500 ரூபாய். கேமராவிற்கு
அனுமதி உண்டு என்பது நல்ல விஷயம். அதற்கான கட்டணமும் உண்டு!
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!
******
இந்த வாரத்தின் ரசித்த முகநூல் இற்றை - வரம்
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில்
இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும்,
பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய்
அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப்
பார்த்து,”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள்.
“பார்த்தேன்” என்றார்
பரமன்.
பார்த்தபிறகு சும்மா
எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை.
“அட, அவன் அந்த நிலையெல்லாம்
கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம்”
“ஆனால் பார்வதி
விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
“வணக்கம், முனிவரே!” என
வணங்கினர் அம்மையும் அப்பனும்.
“முனிவர் நிமிர்ந்து
பார்த்தார். “அடடே! எம்பெருமானும் பெருமாட்டியுமா! வரணும் வரணும்…” என்று
வரவேற்றார் முனிவர். தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்.
மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
“சற்றுநேரம் பொறுமையாகக்
காத்திருந்துவிட்டு, “சரி, நாங்கள் விடை பெறுகிறோம்” என்றனர் அம்மையும் அப்பனும்.
“மகிழ்ச்சியாய்ப் போய்
வாருங்கள், வணக்கம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார்
முனிவர்.
“அம்மை குறிப்புக்
காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். “முனிவரே! நாங்கள் ஒருவருக்குக் காட்சி
கொடுத்துவிட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை.எனவே தாங்கள் ஏதாவது வரம்
கேளுங்கள்.கொடுக்கிறோம்” என்றார்.
“முனிவர் சிரித்தார்.
“வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும். வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள்”
என்று சொல்லிவிட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
“அப்பனும் அம்மையும்
விடவில்லை. “ஏதாவது வரம் கொடுக்காமல் செல்லமாட்டோம்” என்று பிடிவாதமாய் நின்றனர்.
“முனிவர் வேறு வழியின்றி
ஒரு வரம் கேட்டார். “நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல்
போகவேண்டும்; அது போதும்” என்றார்.
“இதைக்கேட்ட அம்மையும்
அப்பனும் திகைத்தனர்.
“ஏற்கனவே ஊசிக்குப்
பின்னால்தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தரவேண்டும்?”என்று அம்மை
பணிவாய்க் கேட்டார்.
“அதைத்தான் நானும்
கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி
தானாகப் பின்னால் வருமே.இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தரவேண்டும்?” என்று கேட்டார்
முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக்
கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.
தூய்மையான இறை
நம்பிக்கை கொண்டவர்களுக்கு, ”நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும்
சரியாக இருக்கும்” என்ற மனத்தெளிவு பிறக்கிறது.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் - வந்தா
வெட்டுவோம் :
திருவரங்கத்தில் ராஜ கோபுரம் அருகே நடந்து வந்து
கொண்டிருந்த போது, “பெயரை பார்த்தாலே சும்மா
அதிருதில்ல!” என்று சொல்லும் விதமாக ஒரு
கடையின் பெயரை பார்த்தேன் -
“வந்தா வெட்டுவோம்” என்பது தான் கடையின் பெயர்! முடி திருத்தகம் என்பதை பிறகு தான் தெரிந்து கொள்ள
முடிந்தது.
தமிழகம் முழுக்க பல இடங்களில் இந்த பெயரில் முடி திருத்தகம் அமைக்கிறார்கள் -
ஒவ்வொரு ஊரிலும் Franchise இருக்கிறார்கள். தற்போது பல ஊர்களிலும் Franchise மூலம் ஆரம்பித்து
கிட்டத்தட்ட 50 இடங்களில் தொடங்கி இருக்கிறார்கள். கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஆரம்பித்து ஓரிரு
வருடங்களுக்குள்
நல்ல நிலையில் தான் இருப்பதோடு தம்மை நம்பி இருக்கும் பலருக்கும் நல்ல நிலையில்
இருக்க உதவியாக இருக்கிறார் என்று தெரிகிறது.
கொஞ்சம் நாளாக (கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக) தாடி
மழிக்கவில்லை! தலை முடியும் வளர்ந்து கொண்டிருக்கிறது! முடிந்தால் திருவரங்கம் பகுதியில் இருக்கும் “வந்தா
வெட்டுவோம்” சென்று பார்த்து அந்த அனுபவத்தினை எழுதுகிறேன்.
******
இந்த வாரத்தின் தகவல் - தலைநகரை
வாட்டும் குளிர் :
கடந்த வாரம் முழுவதும் தலைநகர் தில்லி வாசிகளை குளிர்
வாட்டி எடுக்கிறது. தொடர்ந்து ஒரு வாரமாக தில்லியின் தட்பவெப்பம் சிம்லா, மணாலி,
நைனிதால் போன்ற குளிர் பிரதேசங்களை விட அதிகமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணமே
இருக்கிறது.
நான் அங்கே இருந்த வரை குளிர் சமாளிக்கும் அளவிற்கே இருந்தது. இப்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும் தாங்க முடியாத
அளவிற்கு இருப்பதாகவும் நண்பர்கள் பேசும்போது சொல்லிக் கொண்டு இருந்தார்கள். சில வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு குளிர் வாட்டி
எடுக்கிறது தில்லிவாசிகளை.
மேலே இணைத்திருக்கும் இரண்டு படங்களும் சென்ற வாரம் தில்லியில் எடுத்தவை. இரண்டுமே குடியரசு தலைவர் மாளிகை அருகே எடுத்தவை - ஆனால் மாளிகையை பார்க்க
முடியாத அளவு பனிமூட்டம்!
******
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - பலகை
முழுக்க நினைவுகள் :
சொல்வனம் தளத்தில் திரு மகேஷ் என்பவரின் “பலகை முழுக்க நினைவுகள்”
என்ற தலைப்பிட்ட கவிதை மனத்தைத் தொடும் விதமாக இருந்தது. கவிதை படிக்கும்போது பிள்ளையார் சதுர்த்தி நினைவுகள்
எனக்குள்ளும்! உங்களுக்கும் வரலாம் உங்கள் சிறுவயது நினைவுகள். படியுங்களேன்!
பிள்ளையாரை அமர வைத்துக்
கொணரவே ஒரு பலகை உண்டு
அப்பாவிடம்.
சைக்கிளை அப்பா தள்ளிவர
காரியரில் வருவார் பிள்ளையார்.
துரத்தி வரும் குறத்திகளிடம்
எருக்குமாலை குடை..
பண்டிகையின் பின் நின்ற
நுண்பொருளியல் புரிந்தது
பின்னொரு நாளில்
அகவல் ஓசையுடன்
அம்மா
பிடித்த மோதகம்
தட்டிய
வடையின் வாசம்
நாளின் நிறத்தையும்
மாற்றும்
பூஜை முடிந்து சாப்பிட்டு
எழுந்து மறுபடி
பூரணத்தை மட்டும்
சாப்பிட
கடந்து போகும்
இன்னொரு
சதுர்த்தி ..
பண்டிகை முடிந்தபின்
கடலோ குளமோ போகமாட்டார்
எங்கள் பிள்ளையார்..
பரணில் சரணடைவார்..
ஏதோவொரு பொங்கலில்
மொத்தமாக மாமரத்தடியில்
மண்ணில் கரைவார்
மழை வந்ததும்..
பிறிதொரு நாளில்
மறுபடியும்
வருவார்
பிள்ளையார்..
அமர்ந்து வர சைக்கிளும்
வாங்கி வர அப்பாவும்
மோதகம் செய்ய
அம்மாவும் தான்
இனி இல்லை.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும்
வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து….
கதம்பத்தை ரசித்தேன். பீஹார் அருங்காட்சியகம் காண ஆசை.
பதிலளிநீக்குவிரைவில் திருவரங்கம் வந்தால் வெட்டுவேன் என எழுத நினைத்தீர்களோ?
கதம்பம் அருமை ஜி
பதிலளிநீக்குகீழக்கரையிலும் "வந்தா வெட்டுவோம்" சலூன் இருக்கிறது.
மின் புத்தகத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாணொளி காரணங்கள் பெரிதாக இல்லாமல் சேர்ந்து விடுகிறது. பிரிந்த காரணம் பலவீனம் போலும். இருப்பினும் நெகிழ வைக்கிறது. நல்ல (விஷயம் சொல்லும்) விளம்பரம்'
இற்றை - வரம் - மிகவும் ரசிக்க வைத்தது. அருமை.\\\
வந்தா வெட்டுவோம் - வித்தியாசமான சிந்தனை, வியாபார யுக்தி.
கவிதையை ரசித்தேன்.
முனிவரின் விளக்கம் சிறப்பு...
பதிலளிநீக்குமின் புத்தகத்தக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகாணொளி அருமை.
தமிழர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. மின்புத்தக வெளியீட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குளிர் இங்கும் வாட்டுகிறது. தில்லியில் அதிகப்படியான குளிர் பற்றியும் செய்தியில் அறிந்தேன்.
கடைகளுக்கு விதவிதமான பெயர்களை வைப்பது இப்போது பிரபலமாகி விட்டது.
முகநூல் இற்றையின் கதையும் நன்றாக உள்ளது. அந்த முனிவரின் மனம் எல்லோரும் அமைந்து விட்டால் நலம்.
கவிதை அருமை. இறுதியில் உள்ள சோகம் மனதை கலங்க வைக்கிறது.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி, மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மின் புத்தகத்துக்கு வாழ்த்துகள். கதம்பம் அருமை.
பதிலளிநீக்குகாணொளி பார்க்கிறேன்.
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
மின் புத்தகத்திற்கு வாழ்த்துகள் ஆதி! புத்தகத்திற்கான பெயர் அழகு!
பதிலளிநீக்குவிளம்பரம் பாசிட்டிவ்.....அழகான விஷயம்...எதுக்காகப் பிரிதல்னு லைட்டா சொல்லிருக்கலாம் ஆனா இதென்ன குறும்படமா!!! ஹாஹாஹாஹா... நல்ல Concept! குழந்தையும் அப்பாவும் பேசிக் கொள்ளும் இடம் மிகவும் ரசித்தேன். பெரியவங்களுக்குள்ள பிரச்சனைனா எதுக்குக் குழந்தையையும் அப்பாவையும் பிரிக்கணும் என்று தோன்ற வைக்கும் காட்சி!!! ரசித்துப் பார்த்தேன்.
கீதா
பீஹார் அருங்காட்சியகம் பதிவு கொஞ்சம் நினைவு இருக்கு....ஒரு கதை தீதார்கஞ் யக்ஷி ஒரு கதை? அப்புறம் நிறைய குட்டி குட்டி மனிதர்கள் உருளியைச் சுற்றி இருப்பது நினைவுக்கு வருகிறது...பார்க்கிறேன் அங்கு சென்று....
பதிலளிநீக்குகீதா
அந்த உருளி இல்லை ஸ்தூபி? சுற்றி மனிதர்கள் புத்த பிட்சுகள் என்று இப்பத்தான் உரைக்கிறது!! புத்தரின் வாக்கைப் பிரதிபலிக்கிறது என்று தெரிகிறது...புத்த வாக்குகள் எல்லாமே அமைதியைப் பிரதிபலிப்பவைதானே..
பதிலளிநீக்குஹாஹாஹா சிகை அழகு கடைக்கு நல்ல பெயர்தான்!!!!
இற்றை - வரம் - ரசித்து வாசித்தேன். அருமை.
தில்லி குளிர் பற்றி தங்கை சொன்னாள். ரொம்ப கூடுதல் இம்முறை என்று. மற்றொரு உறவினரும் சொன்னார்,
கவிதை செம. பல நினைவுகள்....ரசித்தேன்..
கீதா
மின் புத்தகத்துக்கு வாழ்த்துகள் சார்.
பதிலளிநீக்குயார் இவள் நூலாக வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.
பீஹார் அருங்காட்சியகம் பீஹார் டயரீஸ் நூலைப் படித்த நாட்களை நினைவுக்கு கொண்டுவந்தன.
என் பீஹார் தோழியிடம் சுட்டியைப் பகிர்ந்து, அவள் குழந்தையை அழைத்துச் சென்று சொந்த ஊரின் வரலாற்றைத் தெரியப்படுத்துமாறு சொல்லியிருக்கிறேன்.
விளம்பரம் வெரும் பணத்திற்கு அப்பால் நல்ல கருத்துக்களையும் சொல்வது அருமை.
ஏனைய பகுதிகளும் சிறப்பு.