அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தமிழகம் நோக்கி ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
NEVER BLAME ANYONE IN YOUR LIFE; GOOD PEOPLE GIVE YOU HAPPINESS; BAD
PEOPLE GIVE YOU EXPERIENCE; WORST PEOPLE GIVE YOU A LESSON; AND BEST PEOPLE
GIVE YOU MEMORIES.
******
நேற்றைய பதிவின் தொடர்ச்சியாக இன்றும் தமிழகம்
நோக்கிய பயணத்தினைக் குறித்து முகநூல் பக்கத்தில் எழுதிய இற்றைகள் சிலவற்றின்
தொகுப்பு, இன்றைக்கும்.
என்ன தான் வேலை பார்க்கறாங்களோ……
இரவு 10.15 மணிக்கு விமானம் தரை தொட்ட சில
நிமிடங்களில் வெளியே குதிக்க தயாராக அனைவரும் எழுந்து நின்றார்கள். விமானப்
பணிப்பெண்கள் கரடியாகக் கத்தினாலும் யாரும் கண்டுகொள்ள தயாராக இல்லை.
கதவு திறந்து சில நிமிடங்களில் அனைவரும் வெளியே
வந்தார்கள். சொன்னபடி நான்காம் எண் கொண்ட Luggage Belt அருகே காத்திருக்க
ஆரம்பித்தேன். நீண்ட நேரம் காத்திருந்த பிறகும் எனது பெட்டி வரவில்லை.
ஆஜானுபாகுவான ஒரு பெரியவர் விமான நிறுவனத்தின் ஒரு சிறு பெண் மீது கோபத்தில்
பொரிந்து தள்ளினார். அந்தப் பெண் நிதானமாக பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்… ஒரு
நிமிஷம் கழிச்சு வரும் என பல நிமிஷங்களாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்……
பெட்டிகள் தாமதமாக வரும்போது, விமான ஊழியர்கள்
பயணிகளை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம் தான். இப்படி தாமதம் ஆவது, அதனை சரி
செய்வது என்பது ஒரு தனிநபரின் கையில் இல்லை…. ஏற்கனவே volatile ஆக நிலை
இருக்கும்போது கோபம் கொண்டு சண்டை போடுவதில் என்ன பலன்?
பெட்டி வந்த பின்னும் சத்தமாக, "என்ன
தான் வேலை பார்க்கறாங்களோ……?"
என்று கத்திகொண்டே சென்றார் அந்த
பெரியவர்.
*****
Life is not that easy but…..
எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வேகவேகமாக வெளியேறி,
ஓட்டமும் நடையுமாக, எதிரே இருக்கும் திரிசூலம் இரயில் நிலையம் வந்து பயணச் சீட்டு
வாங்கிக்கொண்டு நடைமேடை வந்த போது தாம்பரம் வரை செல்லும் மின்சார இரயில்
சீறிக்கொண்டு புறப்பட்ட போது மணி 11.00! அடுத்து வரும் மின்சார இரயிலுக்கான
காத்திருப்பில் நான்……
இண்டிகோ விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்களும்
பெண்களும் என நான்கைந்து இளைஞர்கள்/யுவதிகள், பணி முடிந்து வீடு திரும்ப
காத்திருந்தார்கள். அனைவரின் முகத்திலும் அப்படி ஒரு அயற்சி. ஆனாலும் தொடர்ந்து
பேசிக் கொண்டு இருந்தார்கள். எல்லோரும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மலையாளம் கலந்த தமிழில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அண்ணா, தங்கை என உறவு கொண்டாடி அத்தனை கஷ்டத்தில் கூட
சிரித்தபடியே பேசிக் கொண்டு இருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதில் ஒரு
இளைஞர், இருப்பதிலேயே மூத்தவர், நிறைய கடி ஜோக் சொல்வாராம்! இரண்டு மூன்று
ஜோக்குகள் அப்போதும் சொன்னார். அனைவரும் சிரித்துக் கொண்டு இருந்தார்கள். கடி ஜோக்
ஒன்று மாதிரிக்கு அவர் சொன்னது…..
மாம்பலம் கொலை கேஸ் விசாரிக்க சிபிஐ வநதாங்களாம்.
அவங்க வரும்போது தேங்காய் மூடியோட வந்தாங்களாம்……
ஏன்?
துருவி துருவி விசாரிக்கத்தான்!
பதினோரு மணிக்கு மேல் வீட்டுக்கு சென்று சமைத்து
சாப்பிட்டு தூங்க வேண்டும். காலைல திரும்பவும் வேலைக்கு வரணும்… இப்படியே ஓட்டமா
ஓடிப்போகுது வாழ்க்கை என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது என்னதான் வாழ்க்கை
கடினமானது என்றாலும் வாழ்க்கையை ஓட்டித்தானே ஆக வேண்டிய கட்டாயம் அனைவருக்குமே
என்று தோன்றியது……
Life is tough, but let's live it!
*****
இரயிலில் சங்கீதம்….
திரிசூலம் மின்சார இரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்
வந்து ராக்ஃபோர்ட் விரைவு வண்டியை பிடித்தேன். தில்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் முன்பதிவு
செய்ய நினைத்த போது இந்த வண்டியில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் இரு(படு)க்கை இருக்கவே, “வசதியாகப்
போயிற்று! படுத்து(தூங்கி)க் கொண்டே சென்று விடலாம்!” என உடனடியாக முன்பதிவு செய்து விட்டேன். தாம்பரம் இரயில் நிலையத்தின் எட்டாம் நடை மேடையில்
சிறிது நேரம் காத்திருந்த பிறகு வண்டி வந்து சேர்ந்தது. பெட்டிகளில் பாண்டியன் விரைவு வண்டியின் எண் எழுதி
இருந்தாலும் வந்தது என்னமோ ராக்ஃபோர்ட்!
எனக்கான பெட்டியில் ஏறிக்கொண்டு படுக்கை எண் 62
(Upper Berth)-ல் படுக்கை விரிப்புகளை விரித்து படுத்துக் கொண்டேன். சரி, ஒரு நான்கு மணி நேரமாவது தூங்கலாம் என நினைத்து
படுத்தால், “வெச்சான் பார் ஒரு ஆப்பு!” என்று சொல்லும் விதமாக இருந்தது அந்தப்
பெட்டியும் அதில் இருந்த சக பயணிகளும்! ஆறு பேரில், மூன்று பேர் குறட்டை பலமாக விட்டு
குறட்டை கச்சேரி நடந்த மற்றுமோர் நபர், தனது அலைபேசியில் ஆன்லைன் ரம்மி விளையாடிக்
கொண்டிருந்தார்.
அவரது ஒவ்வொரு Move-விற்கும் ஜிங்-சக் என ஒலி வரும்படி வைத்திருந்தார். குறட்டை கச்சேரிக்கு ஜால்ரா அடிப்பது போல இருந்தது. ஒரு மணி வரை அவர் விளையாடிக் கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி ஒன்றும் சூதாட்டம் அல்ல, போதை அல்ல
என்று சொல்பவர்கள் இவரைப் பார்த்தால் தனது எண்ணத்தினை மாற்றிக் கொள்ளக் கூடும்.
இரவு ஒரு மணிக்குப் பிறகு அவர் தொடர்ந்து விளையாடிய
படியே இருந்திருக்கலாம் என்று தோன்றும் படி இருந்தது, அவர் விட்ட குறட்டை சத்தம். சிங்கம், புலி, கரடி என பல வித மிருகங்களின் கர்ஜனை
அவர் விட்ட குறட்டையில்! பெட்டியே அதிர்ந்தது எனும்படி இருந்தது அவரது குறட்டை. “அய்யோடா,
நான் வரல இந்த விளையாட்டுக்கு!”,
என மற்ற மூவரும் அவர்களது குறட்டையை நிறுத்தி எழுந்து விட்டார்கள். மற்றொரு
படுக்கையில் இருந்த இளம்பெண் இரவு முழுவதும் அலைபேசியில் குறைவான ஒலியில் எதோ படம்
பார்த்துக் கொண்டு வந்தார் - “எவ்வளவு
குறட்டை விட்டாலும் எனக்கு பிரச்னை இல்லை!”
என்ற எண்ணத்துடன்!
சரி இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, தூங்காம இருந்து நான்
புண்ணியம் தேடிக்கொண்டே ஆக வேண்டும் என்று இருக்க, நான் தூங்க நினைப்பது
சரியல்லவே!
அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த இரயிலிலிருந்து வெளியேறி, திருவரங்கத்தில்
இறங்கி வீடு வந்து சேர்ந்தேன்.
குறட்டை கச்சேரி கேட்டு கொண்டாடிய காதுகளுடன்!
*****
இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கத்திலிருந்து….
கடி ஜோக் ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குகஷ்டமான அனுபவம்தான் ஜி
அந்தப் பெரியவர் மாதிரியான மனோபாவம் கொண்டவர்களை என் பணியிலும் நான் சந்திக்கிறேன். சிரமமாக இருந்தாலும் பொறுமையாக கடக்கப்பட வேண்டியவர்கள்!
பதிலளிநீக்குஜிங்சங்க் சத்தத்தில் கூட தூங்கி விடலாம்.. குறட்டை சத்தத்தில்.... ரொம்பக் கஷ்டம்.. பாவம் என் பாஸ்!
வாழ்க்கை கடினமானதுதான்
பதிலளிநீக்குசிரமமான பயணம்...
பதிலளிநீக்குநம் மூட்டை முடிச்சுகள் வரும் வரை பொறுமை காக்க பலராலும் முடிவதில்லை. உடனே சிஸ்டம் என்ன சிஸ்டம் நம்ம நாடு இன்னும் இப்படியேதான் என்று உள்ளூர்க்காரர்களும் சரி, வெளியூரில் இருக்கும் உள்ளூர்க்காரர்களும் சரி இப்படி அலட்டிக் கொண்டு திட்டிக் கொண்டு ஒரு சீன் போடுவாங்க.
பதிலளிநீக்குஜி ரயிலில் இவரு 10 மணிக்கு மேல் லைட் ஆஃப் செய்து மற்றவர்களின் தூக்கம் கெடாமல் இருக்க எந்தச் சத்தமும் போடக் கூடாது பேச்சு கூடக் கூடாது என்று ரயில் விதிகள் வந்திருப்பதாக எனக்கு கூகுள் அனுப்பிக் கொண்டே இருந்ததே...நாம் ஒரு எண்ணிற்கு/அல்லது ட்விட்டரில் மெசேஜ் கொடுத்தால் உடனடியாக வந்து பஞ்சாயத்து பண்ணுவாங்கன்னும் போட்டிருந்தாங்களே....யாரும் விதிகளைப் பின்பற்றுவதில்லை போல...
கீதா
ஹை! இண்டிகோல எங்க ஊர் மக்களா!!!! சந்தோஷமாக இருக்கு வாசித்ததும்.
பதிலளிநீக்குகடி ஜோக்!! ஹாஹாஹா ரசித்தேன்.
கீதா
ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல. ஆஃப்லைன் ரம்மியும் மோசம் தான். வெள்ளிக்கிழமை சாயந்திரம் உக்காந்தா திங்கட்கிழமை காலையில ஆபீஸ் போறது வரை ரம்மியோடு கும்மியடி ச்ச பார்ட்டிகள்ளாம் உண்டு.
பதிலளிநீக்குஇண்டிகோல நாகர்கோவில்காரங்களா. இது தெரியாம ரண்டுவாட்டி டிக்கெட் எடுத்து வந்துட்டனப்பா. நாகர்கோவில்காரங்க ரொம்ப நல்லவங்கல்லா.
ரயில் பயணத்தில் 'சிங்கம்,புலி,கரடி ' ஹா...ஹா. ..வைகுண்ட ஏகாதசி முழிப்புத்தான். ;)
பதிலளிநீக்குஇரவு பயணங்களில் எனக்கு தூக்கமே வருவதில்லை. இப்படியான அனுபவங்கள் உண்டு.
இரவு ரயில் பயணங்களில் நிம்மதியாக தூங்குவது கடினமான விஷயம்தான்.
பதிலளிநீக்கு