அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தேரோடும் வீதியிலே பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
SMALL STEPS IN THE RIGHT DIRECTION CAN TURN OUT TO BE THE BIGGEST STEP
OF YOUR LIFE.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
பதிமூன்று
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
பதிமூன்றாம் விதி சொல்வது, "உதவி கேட்கையில், பிறர் பரிதாபத்தையோ
நன்றிக்கடனையோ சொல்லிக் காட்டாமல், அவர்களின் சுயநலத்தைத் தூண்டு".
மூல நூலில், இதை "WHEN
ASKING FOR HELP, APPEAL TO PEOPLE'S SELF-INTEREST, NEVER TO THEIR MERCY OR
GRATITUDE" என்கிறார் எழுத்தாளர்.
நாம் செய்நன்றி மறவாதவர்களாகவும், பொதுநலவாதிகளாகவும்
இருக்க முடிந்தால் அதற்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளலாம்.
அதற்காக மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்ப்பவர்களே
மிகவும் பலவீனமானவர்களாக மாறுவதை நித்தமும் காணலாம்.
முன்பு செய்த உதவிகளைப் பட்டியலிட்டு பிறரிடம் உதவி
கோரினால், ஏதாவது காரணம் கற்பித்து உதவாமல் தப்பிவிடவே பெரும்பாலோர் முயல்வார்கள்.
அதற்குப் பதிலாக, நம்மால் ஏற்படும் வருங்கால நலன்களை
சூசகமாகக் குறிப்பிட்டு உதவி கோரினால், பிறர் அதீத ஆர்வத்துடன் உதவுவர்.
அத்தகைய வருங்கால நலன்கள், மக்களின் நம்பிக்கைக்கு
ஏற்ப பணமாகவோ, புகழாகவோ, புண்ணியமாகவோ இருக்கலாம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தின்
மாபெரும் வெற்றிக்கான காரணம், "Graphical user interface" என்ற
பொம்மைகளை கிளிக் செய்து கணினிக்குக் கட்டளையிடும் முறையை உருவாக்கியதே ஆகும்.
இந்தக் கண்டுபிடிப்பை ஏற்கெனவே தான் செய்துவிட்டதாகத்
தகுந்த ஆதாரங்களுடன் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்து பெரும் இழப்பீடு கேட்டது.
பல ஆண்டுகளாக வழக்கு இழுத்துக்கொண்டே செல்ல, ஸ்டீவ்
ஜாப்ஸ் அவர்களும் பில் கேட்ஸ் அவர்களும் 1997 இல் ஒரு ஒப்பந்தம் போட்டு உலகையே
அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
அதன் படி, கேட்ஸ், தம் மீது வழக்கு போட்ட ஆப்பிள்
நிறுவன பங்குகளில் 150 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்ததோடு, தம் பிரபல
மென்பொருள்களான ஆஃபீஸ் உள்ளிட்ட வசதிகளை, ஸ்டீவ் ஜாப்சின் மெக்கிண்டாஸ்
கணினிகளிலும் கிடைக்கும்படிச் செய்தார்.
இதற்கான கைமாறாக, ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம்,
இழப்பீடு கேட்ட வழக்கை திரும்பப் பெற்றது.
எலியும் பூனையுமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த
இவர்கள் செய்து கொண்ட இவ்வொப்பந்தத்தால், பிற்காலத்தில் ஆப்பிள் பெரும்
சரிவிலிருந்து மீண்டதையும், கேட்ஸ் செய்த முதலீடு அவருக்குப் பன்மடங்கு வருவாயையும்
புகழையும்
ஈட்டித் தந்ததையும் அறிவோம்.
இவ்வாறு, வருங்கால பயன் கருதியே உலகின் பெரும்
கூட்டணிகள், அனைத்து துறைகளிலும் உருவாவதைக் காணலாம்.
இத்தகைய உதவிகள், இரண்டாம் உலகப்போருக்குப் பின்,
நாடு பிடித்து உளவு பார்க்கும் நோக்கத்துடன், கடன் வடிவிலும் வருவதை உலகம் இப்போது
பெரும் திடுக்கிடலுடன் கண்டு கொண்டிருக்கிறது.
வளர்ச்சித் திட்டங்களுக்காகப் பெரும் கடன்களை வாங்கியுள்ள இலங்கை, பாக்கிஸ்தான்
போன்ற நாடுகள், வட்டி கட்ட முடியாமல், கடன் கொடுத்த சீனாவின் கைப்பாவையாகிப் பல
நிலப்பகுதிகளை இழக்கும் கையறு நிலையில் தவிப்பதைக் காண்கிறோம்.
எனவே, உதவி பெற இவ்விதி காட்டும் உத்திகளை
உபயோகிக்கையில், உதவுவோரின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைக் காத்துக்
கொள்ளவும் தெரிந்திருக்கவேண்டும்.
அதற்குப் பிறரின் குண இயல்புகள், நோக்கங்கள்,
பலங்கள், பலவீனங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைத்தாக வேண்டும்.
இத்தகவல்களைத் திரட்டும் சிக்கலான சவாலை எதிர்கொள்ள
துணைபுரியும் சுவாரசியமான வழிமுறையை அடுத்த விதியில் சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
புரிந்து கொள்ளவும் பின்பற்றவும் சற்றே சிரமமான விதிதான்.
பதிலளிநீக்குஆம் ஐய்யா, மனிதர்களாகிய நாம் மிகவும் சிக்கலானவர்களாகவே தோன்றுகிறோம்.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
புரிதல்கள் சரியாக இருந்தால் அனைத்து தரப்பினரும் பலன் பெறலாம்.
பதிலளிநீக்குஆம் சார். அவர்கள் நிலையிலிருந்து அவர்களைப் புரிதலே சிறந்த உபாயம்.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
மிகவும் முக்கியமான விதி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமசாமி சார்.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
நீக்குஇவ்வாறு, வருங்கால பயன் கருதியே உலகின் பெரும் கூட்டணிகள், அனைத்து துறைகளிலும் உருவாவதைக் காணலாம். //
பதிலளிநீக்குஅரவிந்த், அரசியல்வாதிகளுக்குப் பொருந்திப் போகும். பிஸினஸ் மக்களுக்குப் பொருந்திப் போகும். சாணக்கியரின் வாக்கு - அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை எனும் வாக்கு. லாபநோக்கில்தானே கூட்டணி எல்லாம்.
சாதாரண மக்களான நமக்குக் கொஞ்சம் கஷ்டம்னு தோணுது
கீதா
ஆம் மேடம், சற்று கடினம்தான்.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி மேடம்.
புரிதலும், விட்டுக் கொடுத்தலும் வேண்டும் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஆம், இது குறித்து 38 ஆம் விதியில் விவாதிப்போம்.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம்.
''இவ்விதி காட்டும் உத்திகளை உபயோகிக்கையில், உதவுவோரின் கட்டுப்பாட்டில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைக் காத்துக் கொள்ளவும் தெரிந்திருக்கவேண்டும்.''
பதிலளிநீக்குசிரமமான விதிதான்.
சிரமத்தை சமாளிப்பதிலேயே சுவாரசியம் ஒளிந்துள்ளது.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.
நம் சுயநலத்திற்காக பிறரின் சுயநலத்தை பயன்படுத்தி பலன் பெறுதல் பொதுவாக நலம் பயத்தால் நல்லதுதானே!
பதிலளிநீக்குஆம் ஐய்யா, தனக்கு மிஞ்சியதே தானம். தன் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைந்த பிறகே மனம் பொதுநலன் என்னும் உயர் என்னத்தைக் கொள்ளும் என மனிதவள மேலான்மை அறிஞர் ஆப்ரஹாம் மாஸ்லோவும் கூறியுள்ளார்.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி பத்மநாபன் ஐய்யா.