அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ஜானகி மஹல் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
UNTIL YOU VALUE YOURSELF, YOU WON’T VALUE YOUR TIME. UNTIL YOU VALUE
YOUR TIME, YOU WILL NOT ACHIEVE ANYTHING WITH IT.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
பதினெட்டு
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
பதினெட்டாம் விதி சொல்வது, "உன்னை ஒரு சிறு வட்டத்திற்குள்
அடைத்துக்கொள்ளாதே, தனிமை மிகவும் ஆபத்தானது".
மூல நூலில், இதை "DO
NOT BUILD FORTRESSES TO PROTECT YOURSELF. ISOLATION IS DANGEROUS" என்கிறார் எழுத்தாளர்.
இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த சமூக ஊடகங்கள்,
நமக்கென்ற ஒரு தனிமையையே இல்லாமல் செய்து விடுவதாகவும், நம் கவனத்தைச்
சிதறடித்துக் கொண்டே இருப்பதாகவும் பலர் குறைப்பட்டுக் கொள்வதுண்டு.
நாம் சமூக விலங்கு என்ற போதிலும், கூர்மையான
கவனத்துடன் முக்கிய முடிவுகளை எடுக்கவும், செய்த தவறுகளை சுய பரிசோதனை செய்து
அவற்றிற்கான தீர்வுகளைக் கண்டறியவும் சிறு தனிமை நேரம் மிக அவசியமானதே.
அதே தனிமையை, சுற்றத்தார் மீதான அவநம்பிக்கையால்,
சிலர் மிக அதிகமாக நாடும்போதுதான் பிரச்சனை உருவாகி விடுவதுண்டு.
மேலும் சிலர், எதிர்மறை மனிதர்களைத் தவிர்ப்பதாகக்
கூறி, சந்தேக மன நிலையுடன் தம்மை புற உலகிலிருந்து முழுமையாகத் துண்டிக்கும்
முயற்சியிலும் ஈடுபடுவர்.
இத்தகையோர், மிகச் சிலரையே நம்பி இருக்கும் ஆபத்தான
சூழ்நிலையில் மாட்டிக்கொள்வதோடு, அத்தகையோரின் விருப்பப்படி ஆட்டுவிக்கப்படும்
பொம்மைகளாக மாறிவிடும் அவல நிலையும் ஏற்பட்டுவிடுவதுண்டு.
பதினான்காம் நூற்றாண்டில், இந்தியாவின் பெரும்
பகுதிகளை ஆட்சி செய்த சுல்தானிய வம்ச மன்னர், திரு அலாவுதீன் கில்ஜி
அவர்களுக்கும், இதே நிலமை ஏற்பட்டு தளபதி திரு மாலிக்காபூரையே மலையெனச்
சார்ந்திருந்து பரிதாபமான முறையில் தம் முடிவைத் தேடிக்கொண்டார்.
கில்ஜியைப் போலவே, நடனப் புயல் மைக்கேல் ஜாக்சன்
அவர்கள், ஹிந்தி உலகப் பெரும் நட்சத்திரமான திரு ராஜேஷ் கன்னா அவர்கள் என எண்ணற்ற
பிரபலங்களின் இறுதிக்காலங்களும், இவ்விதிப்படியான பரிதாபகரமான உதாரணங்களே.
எனவே, இத்தகைய மாயச்சுழலில் மாட்டிக்கொள்ளாமல், நம்
வலிமையைப் பெருக்கவல்ல வழிவகைகளைச் சில உதாரணங்களுடன் அறிந்துகொள்ளலாமா?
பெரும் பொறுப்புகள் நம்மைத் தேடி வரும்போது, அவற்றைப்
பலர் உதவியுடன் மேற்பார்வையிட்டு முடிக்கும் சிக்கலான சூழலை எதிர்கொள்வோம்.
அப்போது, அனைவரின் மனநிலையையும்,
எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்ள நாம், பணிகளின் மையப்புள்ளியாக இருக்கவேண்டுமே
தவிர, அவர்களிடமிருந்து விலகி வெறும் ஆணையிடுபவராக இருக்கக் கூடாது.
அதிகாலை 3.45 மணிக்கு எழுந்து, இரவு 8.45 மணி வரை,
தம் சராசரி நாளை வடிவமைத்துக் கொள்பவர் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி திரு
டிம் குக் அவர்கள்.
கூரிய கவனத்துடன் தனியாக இயங்கும் நேரங்கள்
இருந்தாலும், மத்திய உணவு நேரத்தை, சாதாரண ஊழியர்களுடன் செலவிட்டு, நிறுவனத்தை
முன்னேற்றும் பல மாற்று சிந்தனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
காலை 10 மணியிலிருந்து 12 மணி வரையிலான நேரத்தை,
சிக்கலான, மிக முக்கியமான, தான் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவுகளுக்காகப்
பயன்படுத்திக்கொள்பவர், அமேசான் இணைய வணிக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்
முதன்மைச் செயல் அதிகாரி திரு ஜெப் பெசோஸ் அவர்கள்.
இத்தகைய முக்கிய திட்டமுடிவுகளை உருவாக்குவதற்கான
விலைமதிப்பற்ற தகவல்களை, நாளின் ஏனைய நேரங்களை, பலதரப்பட்ட மக்களுடன் செலவிட்டே
இவராலும் பெற முடிகிறது.
எனவே, இத்தகைய ஆளுமைகளின் வாழ்வனுபவங்கள், நமக்கான
தனிமையான நேரங்களை வகுத்துக்கொண்டே, பலதரப்பு மக்களோடு இயைந்து செயலாற்றும்
உத்திகளைக் கண்டறிய பெரிதும் உதவும்.
ஏமாற்றங்களும், தோல்விகளும், அவற்றால் ஏற்படும்
அவமானத்தின் மீதான அச்சமுமே, நம்மை தனிமைப்படுத்தவல்ல எதிர்மறைச் சக்திகளாகும்.
அனைத்தையும் அறிந்த மனிதர் உலகில் எவரும் இல்லை
என்பதையும், எவரும் நூறு சதம் நல்லவரோ தீயவரோ இல்லை என்பதையும், அவரவர் செயலுக்கான
நியாயம் அவரவரிடம் இருக்கும் என்பதையும் நாம் அறிவோம்.
இத்தெளிவை, நாம் ஏமாற்றங்களையும், தோல்விகளையும்
சந்திக்கும்போதும் மனதில் கொண்டிருந்தால் நாம் எளிதில் மீண்டு பெரும் சாதனைகளைப்
படைக்க இயலும்.
விவாகரத்து, வேலை இழப்பு, அன்னையின் இறப்பு
போன்றவற்றால், பெரும் தனிமையில் சிக்கிய எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் அவர்கள், தாம்
கற்ற வாழ்வியல் தத்துவங்களையே ஹாரி பாட்டர் என்னும் சுவாரசியமான புதினமாக வடித்து
வெற்றி கண்டதன் பின்னால் இத்தகைய தெளிவான சிந்தனைகள் இருப்பதை அவரின் பேட்டிகள்
மூலம் அறியலாம்.
"Trust but verify" என்னும் ஆங்கிலச்
சொல்லாடலுக்கேற்ப, ஒட்டுமொத்த மானுட குலத்தினை நம்பிக்கையுடன் நேசிப்போம்.
இருப்பினும், நம் சுற்றம் மூலம் கிடைக்கும்
தகவல்களின் மூலங்களை சரி பார்த்தே முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதையும்
மனதில் கொள்வோம்.
இதற்காக, நம் சுற்றத்தின் வட்டம் பெரியதாக இருக்கும்
அவசியத்தையும் உணர்வோம்.
இந்நிலையில், தவறான தகவல்களையோ மனிதர்களையோ கையாளும்
முக்கிய உத்தி ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
அப்படி தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் அன்றாட வாழ்வில் இருப்பார்களா தெரியாது. அதுசரி, யாசர் உஸ்மான் எழுதிய ராஜேஷ் கன்னா புத்தகம் படித்தீர்களா என்ன?
பதிலளிநீக்குதங்கள் நூல் பரிந்துரைக்கு மிக்க நன்றி ஐய்யா.
நீக்குவிரைவில் நூலைத் தேடி வாசிக்கிறேன்.
ராஜேஶ் கன்னா அவர்களின் அந்திம காலம் குறித்து சில ஆளுமைகளின் பேச்சுகள் மூலமே அறிந்துகொண்டேன் ஐய்யா.
மிகவும் ஆராய்ந்து விதிகளை சார்ந்த செய்திகளை தொகுக்கிறீர்கள். நன்று. எல்லா விதிகளும் பொருந்திய தலைவரும் இருந்தாரா? இருக்கிறாரா?
பதிலளிநீக்குJayakumar
அனைத்து விதிகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே தலைவரை நான் இன்னும் காணவில்லை ஐய்யா.
நீக்குதிரு அப்துல் கலாம் அவர்கள் பெரும்பாலான விதிகளுக்கு பொருந்துவார்.
அவரை, நூலின் தலைசிறந்த விதிக்காக வைத்திருக்கிறேன்.
தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் ஐய்யா.
சிந்தனைக்கு தனிமை நல்லது...
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.
நீக்குவிவரிப்பு அருமை நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குநாம் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்றால், குறிப்பாக இப்ப நான் எழுதணும்னா எனக்குத் தனிமை அவசியமா இருக்கே ஹாஹாஹா...(அதான் சினிமாக்காரங்க வெளிநாடு போய் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ பாட்டு ட்யூன் எல்லாம் கூட!!!) சில சமயங்களில் தனிமை மிக மிக முக்கியமாக இருக்கு,
பதிலளிநீக்குஆனால் இதில் மற்றொன்று தனிமை - Personal Space - என்பதிலிருந்து வேறுபடுகிறது மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளள்...ஏமாற்றங்களைம் தோல்விகளைக் கண்டு அஞ்சுதல் தப்பித்தல் என்பதான தனிமைப்படுத்திக் கொள்ளல் என்பது விதியில் சொல்லப்பட்டது போல் அபாயம். உளவியலில் இது வியாதியின் தொடக்கம் என்பது. Withdrawal symptom.
கீதா
ஆம் மேடம். தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆபத்தானதே.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.
தனிமைப்படுத்தாமல் சுற்று வட்டத்தை அதிகரித்தல் வேண்டும். நல்லது.
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.
நீக்கு