அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட சரயு நதிக்கரையில் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
TRANSPARENCY IN YOUR ATTITUDE WILL WIN
TRUST FROM EVERYONE.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பத்து
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ; விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
பத்தாம் விதி சொல்வது, "எதிர்மறை எண்ணம் கொண்டோரைத் தவிர்த்துவிடு".
மூல நூலில், இதை "INFECTION: AVOID
THE UNHAPPY AND UNLUCKY" என்கிறார் எழுத்தாளர்.
நூல் கூறும் நாற்பத்து எட்டு விதிகளிலேயே, மிக முக்கியமான விதியாக நான் இதைக் கருதுகிறேன்.
எவரைத் துணையாக ஏற்பது, எவரைத் தவிர்ப்பது எனும் முக்கிய முடிவை எடுப்பதுதான், எனக்கு மிகப்பெரும் சவாலாக என்றும் இருந்துள்ளது.
இச்சவாலை சரியாகக் கையாளுவோரால் மட்டுமே, தம் உடல் மற்றும் உள ஆற்றலைத் தலைசிறந்த வகையில் பயன்படுத்த இயலும்.
மிகப் பெரும் மனிதர்கள் கூட, இதில் தவறிழைத்து வாழ்வில் சறுக்கிய உதாரணம் சமீபத்திலும் நடந்ததைக் கீழே காணலாம்.
எந்தச் சிக்கலையும் எளிதில் சமாளிக்கும் பேராற்றல் கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களின் பதவி பறிபோனதை அனைவரும் அறிவோம்.
அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், தீய நடத்தைகளால் ஏற்கனவே அவப்பெயரைச் சம்பாதித்திருந்த திரு கிறிஸ் பிஞ்செருக்கு உயர் பதவி அளித்து ஆதரித்ததே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
இங்கே, நம் வளர்ச்சிக்கு உதவும் எல்லோரிடமும், ஓரளவு எதிர்மறை குணங்கள் இருக்கத்தான் செய்யும் எனவும், அனைவரையும் தவிர்ப்பது சாத்தியமற்றதும், நியாயமற்றதும் ஆகும் எனவும் நமக்குத் தோன்றுவதும் இயல்பு.
இவ்விதிப்படி, ஒரு மருத்துவர், நோயாளியையும், ஒரு ஆசிரியர், படிப்பு வராத மாணவரையும் தவிர்க்கவேண்டுமா? போன்ற நியாயமான கேள்விகள் எனக்கும் எழுந்தன.
இத்தகைய சிக்கலான கேள்விகளுக்கு நூலில் நேரடி பதில் இல்லை என்ற போதிலும், அடுத்தடுத்த விதிகளின் விளக்கத்தாலும், நண்பர்களுடன் விவாதித்ததின் மூலமும் நான் அடைந்த தெளிவுகளை இங்கே முன் வைக்கிறேன்.
எவ்வளவு திறமைசாலி கூட, வாழ்வின் சில துக்கமயமான காலங்களில், எதிர்மறையாகச் செயல்படக் கூடும்.
மீண்டெழ சந்தர்ப்பம் உள்ள இவர்களிடம், இத்தகைய காலங்களில் தோளோடு தோளாக துணை நின்று அவர்களைக் கரையேற்றுவது நமக்கு மிகவும் பயனை அளிக்கும்.
சமீபத்தில் தம் கணவரை துரதிர்ஷ்டவசமாக இழந்து வாடும் பிரபல நடிகை மீனா அவர்களை, தொடர்ந்து ஊக்குவித்து தேற்றி வரும் நடன ஆசிரியை திருமதி கலா மாஸ்டர் அவர்களின் நட்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
வாழ்வின் மிக மோசமான கட்டத்தில் உதவிக்கு வரும் இவர்களின் நட்பு, வாழ்நாள் முழுதும் நீடிக்கும் என்பதில் எனக்கு அணுவளவும் ஐயமே இல்லை.
மருத்துவர்களும் இதே விதத்தில், மீள விரும்புவோரை மட்டுமே தகுந்த பாதுகாப்பு முறைகளுடன் விரைவில் குணமாக்க முடியும்.
உதாரணமாக, சிகிச்சை முறைகளில் தொடுசிகிச்சை செய்வோர், நோயாளியை தொடும் சமயத்தில், மூச்சை வெளியேற்றி அவர்களின் எதிர்மறை ஆற்றல் தம்மைத் தாக்காவண்ணம் காத்துக் கொள்வதையும் பார்த்திருப்போம்.
மீண்டு வர சந்தர்ப்பமே இல்லாதவர்களுக்கு உதவுவதுதான், நம்மையும் படுகுழியில் ஆழ்த்திவிடும் என்பதை நூல் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளது.
அப்படிப்பட்டவர்கள், தேவையற்ற கடன்களை வாங்குபவர்களாகவோ, ஏதாவது காரணம் கூறி அடிக்கடி நம்மிடம் பண உதவி கேட்பவர்களாகவோ இருப்பர்.
அல்லது, எதற்கும் பொறுப்பேற்காமல், எல்லா தீமைகளும் தமக்கு மட்டுமே நடப்பதாகச் சொல்வதோடு, சுற்றத்தார் அனைவரிடமும் ஏதாவது குறையை கண்டுபிடித்துக்கொண்டே சாக்குபோக்கு சொல்பவர்களாக இருப்பர்.
இவர்களிடமிருந்து நாகரிகமான முறையில் விலகியிருப்பதே நமக்கு நலம் பயக்கும்.
ஒருவேளை, இத்தகையோர் நம்மால் தவிர்க்க முடியாத அளவு மிக நெருங்கிய உறவினர்களாகவோ, பணியிடங்களில் அருகில் இருப்பவர்களாகவோ இருப்பின், அவர்கள் சொற்களுக்கு உணர்வுப்பூர்வமான எதிர்வினையாற்றாமல் பொறுமை காத்தல், அவர்களின் ஏதாவது ஒரு நற்குணத்தைக் கண்டறிந்து பாராட்டுதல் போன்ற உத்திகள் நம்மைக் காத்துக்கொள்ளும்.
முடிந்தவரை, நேர்மறையாகச் சிந்தித்து உற்சாகமாகச் செயல்படுவோரின் நட்பை வளர்த்துக் கொள்வதையே, வலிமைக்கான வழியாக இவ்விதி கூறுகிறது.
எனினும், நேர்மறை-எதிர்மறை மனிதர்களை அடையாளம் கண்டபின்னும், எவரை விலக்குவது என்னும் முடிவை எடுக்கும் சுதந்திரம் பெரும்பாலும் நமக்கு இருப்பதே இல்லை.
அத்தகைய சுதந்திரத்தை அடைய உதவும் அற்புத உத்தியைத்தான் அடுத்த விதியில் சுவைக்கவிருக்கிறோம்.
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
அழகாக விளக்கி இருக்கிறீர்கள் அரவிந்த். எதைச் சேர்ப்பது, எதைத் தவிர்ப்பது என்கிற குழப்பம் தீர்ந்தாலே பாதி வெற்றி.
பதிலளிநீக்குஆம் ஐய்யா, அக்குழப்பத்தை கையாண்டுவிட்டாலேயே பெரும் சிக்கல் தீர்ந்துவிடும்.
நீக்குதங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
தீநட்பு தவிர்க்க...
பதிலளிநீக்குஆம், திருவள்ளுவரும் அதை பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்.
நீக்குதங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
இன்று மிக அருமையான விதி மற்றும் விளக்கம், அரவிந்த்!!!
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி மேடம்.
நீக்குசில விதிகளே வாசகர்களை கோபம் கொள்ளவும் குழப்பவும் செய்யலாம்.
பண்ணிரெண்டாம் விதியும், பதினைந்தாம் விதியும் அப்படிப்பட்ட சிக்கலான விதிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்.
நல்ல விளக்கம். தொடர்கிறோம் .
பதிலளிநீக்குதொடர்வதற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.
நீக்கு