செவ்வாய், 10 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

REMEMBER, AS LONG AS YOU ARE BREATHING, IT’S NEVER TOO LATE TO START A NEW BEGINNING.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு. 

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி. 

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…



கெட்டித் தயிர்….

 

பெரும்பாலும் எனது பயணங்களில் எந்த ஊருக்குச் செல்கிறேனோ அந்த நகரத்தின் உணவையே சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கிறேன்.  நமக்கு பிடித்த உணவு தான் வேண்டும், தென்னிந்திய உணவு தான் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடித்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்க நேரிடலாம் அல்லது அப்படியே விரும்பியது கிடைத்தாலும் அதன் தரம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.  தரம் குறைவு என்பதால் உங்களுடைய வயிற்றுக்கும் ஒப்புக்கொள்ளாமல் போகலாம். சில சமயங்களில் அப்படியும் நடந்தது உண்டு.  நாங்கள் அயோத்யாஜி சென்று தங்குமிடத்தில் உடமைகளை வைத்து விட்டு ஒரு பேட்டரி ரிக்ஷாவில் அமர்ந்து கோவில் அருகே விடும்படி கேட்டுக் கொண்டோம்.  நாங்கள் சென்ற சமயம் சைத்ர நவராத்திரி சமயம் என்பதால் அயோத்யா ஜி முழுவதும் பக்தர்களின் கூட்டம் அதிகம் என்பதால் நிறைய போக்குவரத்து தடைகள் போட்டு இருந்தார்கள்.  பிரதான சாலையை ஒரு வழிப் பாதையாகவும் மாற்றி இருந்தார்கள். கோவில் செல்லும் பாதை அருகே வரை மட்டும் விடுவோம் என்று சொன்னாலும் ஏறி அமர்ந்து கொண்டோம்.     



 எங்கெங்கும் கொடிகள்….

 

ஒரு மருத்துவமனை அருகே இறக்கி விட்டுச் சென்றார் அந்த ஓட்டுநர்.  இறங்கி பக்தர்கள் கூட்டத்துடன் நாங்களும் ஐக்கியமானோம். சில உணவகங்களிருந்தாலும் ஏனோ பார்க்கும் போதே பிடிக்கவில்லை.  பசி எங்களை அதிகம் வாட்ட ஒரு சிறு உணவகத்தில் நுழைந்துவிட்டோம். ஒரு பெண்மணி நடத்தும் அந்த உணவகத்தில் இரு சிறுவர்கள் (பதினைந்து வயதிற்குள் இருக்கலாம்!) தான் பிரதான உழைப்பாளிகள்.  உணவகம் நடத்தும் பெண்மணியின் பேரன்களாக இருக்கலாம்.  வேலை ஆட்களை வைத்துக் கொள்ளாமல் அவர்களே நடத்துகிறார்கள் போலும்.  சப்பாத்தி, dhதால், தயிர் என கிடைத்த சிலவற்றைச் சொல்லி காத்திருந்தோம்.  உணவு அப்படி ஒன்றும் சுவையாக இல்லை என்றாலும் அந்த பசி நேரத்தில் கிடைத்ததை உண்டே ஆக வேண்டிய கட்டாயம்.  இரண்டு மூன்று ரொட்டிகளை உள்ளே தள்ளி பசியாறினோம்.  உணவு உண்ட பிறகே கொஞ்சம் உடலில் தெம்பு வந்தது. அந்த உணவகத்தில் கிடைத்த உணவில் மிகவும் பிடித்தது கெட்டி தயிர் மட்டுமே🙂 அதன் பிறகு கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 




பறக்கும் கொடிகள்…. 


கோவிலுக்குச் செல்லும் முன்னர் வழியில் பார்க்க வேண்டிய இடங்களும் உண்டு என்பதால் ஒவ்வொரு இடமாக பார்த்து முடித்து கடைசியாக கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தோம். வழியெங்கும் கடைகள், பக்தர்களின் கூட்டம் என ஒரே கொண்டாட்ட மயமாகவே இருக்கிறது அயோத்யா ஜி   நகரம். எப்போதுமே இங்கே பக்தர்கள் கூட்டம் உண்டு. நவராத்திரி சமயங்களிலும் இராம நவமி, தீபாவளி நாட்களிலும் இங்கே வரும் பக்தர்களின் கூட்டம் மிக மிக அதிகம்.  நாங்கள் சென்ற சமயத்திலும் சைத்ர நவராத்திரி என்றாலும், இராம நவமிக்கு முன்னர் நாங்கள் சென்றதால் கூட்டம் இருந்தாலும் சமாளிக்கும் விதத்தில் தான் இருந்தது.  எங்கெங்கு காணினும் “ராம்ஜி” படம் போட்ட Bபgக்வா (காவி) வண்ணக் கொடிகள்! நிறைய இனிப்பகங்கள் பார்க்க முடிந்தது. இனிப்பகங்கள் குறித்து தனியாகவே ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்திருப்பதால், இங்கே அதிகம் எழுதப் போவதில்லை! 


பல வண்ணங்களில் குங்குமம்…
 

நகரமெங்கும் சாலை ஓரங்களில் பல வண்ணங்களில் குங்குமம் விற்கும் நபர்களைக் காண முடிந்தது. வட இந்திய பெண்கள், அதிலும் குறிப்பாக கிராமத்துப் பெண்கள் திருமணம் ஆனபிறகு “மாங்க்g” என ஹிந்தியில் அழைக்கப்படும் நெற்றி வகிடு ஆரம்பத்திலிருந்து உச்சி மண்டை வரை குங்குமம் பூசிக் கொள்வார்கள். விதம் விதமான வண்ணங்களில் வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதால் இப்படி நிறைய பேர் குங்கும வியாபாரம் செய்வதை பார்க்க முடிந்தது. படத்தில் கொடுத்திருப்பதை பார்க்கும்போது, உங்களுக்கே சில வண்ணங்கள் பார்த்திராத அல்லது நம் ஊரில் வைத்துக் கொள்ளாத குங்கும வண்ணமாக இருக்கலாம் - அது சரி இப்போதெல்லாம் நம் ஊரில் பெண்கள் குங்குமம் வைத்துக் கொள்வதை விட ஸ்டிக்கர் பொட்டுகளை வைத்துக் கொள்வதையே அதிகம் விரும்புகிறார்கள் அல்லவா? 




 ராம் கந்த்மூல் விற்பனை செய்த நபர்…


அயோத்யாஜி நகரத்தில் இந்த ராம் கந்த்மூல் நிறையவே விற்பனை செய்கிறார்கள். வழியெங்கும் ஒரு யானையின் கால் அளவு பருமனும் வெளியே இளஞ்சிவப்பு நிறத்திலும் உள்ளே வெண்மையாகவும் இருக்கும் ராம் கந்த்மூல் எனும் அந்த கிழங்கினை விற்பனை செய்வதை பார்க்க முடிந்தது. ராமர், சீதாதேவி மற்றும் இலக்குவனோடு 14 வருடம் வனவாசம் சென்றபோது கந்த்மூல் என்ற இந்தப் பொருளை உண்டு தனது உடலை சீராக வைத்து இருந்தார் என்று சொல்கிறார்கள். இந்த ராம் கந்த்மூல் கிழங்கு வகையைச் சேர்ந்தது. சின்னச் சின்ன முக்கோண துண்டுகளாக வெட்டிக் கொடுக்கிறார்கள். பத்து ரூபாய் ஒரு துண்டு, மூன்றாக வாங்கினால் இருபது ரூபாய் என்று விற்பனை செய்கிறார்கள். 



 


ராம் கந்த்மூல்.....


நம் ஊரில் பூமி சர்க்கரை வள்ளிக்கிழங்கு என்ற பெயரில் கிடைக்கிற இந்த ராம் கந்த்மூல்,  மெல்லிய துண்டுகளாக விற்பனை செய்வது வழக்கம். அதிக அளவில் சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்கள். இங்கே இதன் பயன்களாகச் சொல்வது வயிற்றுக்கு நல்லது, எல்லா வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்யும், கோடை காலத்தில் இதை சாப்பிடுவது சிறந்தது, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இது பயன் படும் என்பதெல்லாம் தான். இராமபிரான் தனது வனவாசத்தில் இதை பயன்படுத்தினார் என்பதிலிருந்தே இதன் சிறப்பை தெரிந்து கொள்ளலாம் என்கிறார்கள். 

 

சிறிது தூரம் நடந்த பிறகு நாங்கள் பார்த்த முதல் இடம் இராமனின் கோவில் அல்ல! அவனது தூதன் அனுமனின் கோவில்! அதுவும் அயோத்யா நகரம் முழுவதுமே இந்த அனுமனின் கண்காணிப்பில் தான் இருக்கிறது என்பது இங்கே இருக்கும் பக்தர்களின் நம்பிக்கை.  ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? எப்போதிலிருந்து இந்த வழக்கம் போன்ற தகவல்களையும், அந்தக் கோவிலின் சிறப்பு என்ன? அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களென்ன போன்ற விஷயங்களை வரும் பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

26 கருத்துகள்:

  1. வழியிலேயே நிறைய சுவாரஸ்யங்கள்..   தயிரைப் பார்த்தால் கலந்த தயிர்சாதம் அளவு கெட்டியாக இருக்கிறது!  கந்த்முல் மாதிரியே மதுரையில் தென்னையின் அடிப்பாகத்தை இளம் துண்டுகளாக சீவித் தருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னையின் அடிப்பாகம் குறித்த மேலதிகத் தகவல் நன்று. தங்கள் அன்பிற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அநோத்தியா சென்ற நினைவுகள் வந்தன. தயிர்... ஆக்ராவில் சாப்பிட்டதை நினைவுக்குக் கொண்டுவந்தது.

    அயோத்யாஜி என்றே சொல்லும் வழக்கம் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயோத்யாஜி என மரியாதையுடன் அழைக்கும் வழக்கம் இருக்கிறது இன்றைக்கும் நெல்லைத் தமிழன். வடக்கே குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கிடைக்கும் தயிர் மிக நன்றாக இருக்கும்.

      நீக்கு
  3. தயிர் மட்டும் இல்லையென்றால் வடதேச சுற்றுலா என்பது தண்டனைதான்.

    இப்போதெல்லாம் மோசமான உணவு சாப்பிட சுற்றுலா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே online-ல் ஆர்டர் செய்ய வேண்டியதுதான்.

    கேரளாவில் குழிமந்திபிரியாணின்னு ஒண்ணு சாப்பிட்டு ஒரு பெண்மணி செத்து போச்சாம். (மந்தி பிரியாணின்னதும் நான் குரங்கு பிரியாணின்னு நினைச்சது வேற கதை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போதெல்லாம் மோசமான உணவு சாப்பிட// வீட்டில் இருந்து கொண்டே online-ல் ஆர்டர் செய்ய.... இதைச் சரியாக கவனிக்காமல், வீட்டுச் சாப்பாடே பல வீடுகளில் அப்படித்தான் இருக்கும் என்றெல்லாம் எழுதிடுவாரோ என்று நினைத்தேன். எழுத்தைப் பார்த்தால் பத்மநாபன் அண்ணாச்சி மாதிரி தெரியுதுல்லா

      நீக்கு
    2. நெல்லை, பப்பு அண்ணாச்சியேதான் வே!!

      கீதா

      நீக்கு
    3. இப்போதெல்லாம் மோசமான உணவு சாப்பிட சுற்றுலா செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே online-ல் ஆர்டர் செய்ய வேண்டியதுதான்.//

      ஹாஹாஹாஹா அதானே....

      கீதா

      நீக்கு
    4. மந்தி பிரியாணி - ஹாஹா… நமக்கு எப்பவும் மந்தி மேலே ஒரு கண்! ஹாஹா….

      தயிர் நமது பயணங்களில் பெரும்பாலும் விரும்புவது என்பது உண்மை. ஹரித்வார் பயணம் நினைவில் இன்றைக்கு வரை….

      தங்கள் அன்பிற்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
    5. வீட்டுச் சாப்பாடே அப்படித் தான் இருக்கும் என்று எழுதி விட்டு எங்கே போக முடியும் அண்ணாச்சியால்…. நம்ம பத்மநாபன் அண்ணாச்சி தான் R.E.Padmanabhan, Eswaran Padmanabhan, Padmanaban எல்லாமே!

      தங்கள் அன்பிற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    6. சரியாகச் சொன்னீர்கள் கீதா ஜி. அவரே தான். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    7. வீட்டில் இருந்து கொண்டே வாங்கும் பல உணவுப் பொருட்கள் நன்றாக இருப்பதில்லை. அதனாலேயே பொதுவாக வீட்டிற்கு வரவழைப்பதில்லை. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. வட இந்தியாவி் விதவிதமான தயிரும் ஊருகாயும் சப்பாத்திக்கு சிறப்பாக பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊறுகாய் விதம் விதமாக கிடைப்பதோடு, தயிரும் நன்றாகவே இருக்கும் அரவிந்த். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  5. பெரும்பாலும் எனது பயணங்களில் எந்த ஊருக்குச் செல்கிறேனோ அந்த நகரத்தின் உணவையே சாப்பிடுவது வழக்கமாக வைத்திருக்கிறேன். //

    ஆமாம் வெங்கட்ஜி! எனக்கும் இப்பழக்கம் உண்டு.

    //நமக்கு பிடித்த உணவு தான் வேண்டும், தென்னிந்திய உணவு தான் வேண்டும் என்றெல்லாம் அடம் பிடித்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்க நேரிடலாம் அல்லது அப்படியே விரும்பியது கிடைத்தாலும் அதன் தரம் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது.//

    அதே...அதே...மட்டுமல்ல எனக்கு அந்தந்த ஊரின் உணவைச் சுவைத்துப் பார்க்க தெரிந்து கொள்ள விருப்பமும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஊர் செல்கிறோமோ அந்த ஊர் உணவு நம் வயிற்றுக்கும் கெடுதல் செய்யாது என்பது கூடுதல் வசதி. தங்கள் அன்பிற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. கெட்டிச் தயிர் - ஆஹா அது கிடைத்ததே!! வயிற்றுக்கும் நல்லதாக இருந்திருக்கும்..

    கந்த் மூல் - பூமி சர்க்கரைக் கிழங்கு/பூமி சீனிக்கிழங்கு இது விளைய 20 வருஷம் ஆகும். குறிஞ்சிப்பூ போல!!! அதை விட கூடுதல் வருஷம் இல்லையா.. தேனி மற்றும் சுற்று வட்டத்தில்தான் அதிகம் கிடைக்கும். ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் அதே மருத்துவப்பலன்கள்தான் சொல்லப்படுகிறது. பொடியாகவும் கிடைக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொடியாகக் கிடைக்கும் கிழங்கு - மேலதிக தகவலுக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. புதிய தகவல் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  8. வாசகம் அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  9. ராம் கந்த்மூல் விவரம் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்.
    தயிர் சப்பாத்தி வைத்து சமாளித்து கொள்ளலாம் வட இந்தியாவில்.
    பயண விவரம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. ஒருவகை வள்ளிக் கிழங்கு'ராம் கந்தமூல் நமக்குப் புதியது. விளைய இருபது வருடங்கள் என்பது ஆச்சரியம் .
    ஆஞ்சநேயர் கோவிலும் தகவல்களும் காண ஆவலுடன் ....

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....