திங்கள், 9 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினொன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நந்தி குண்ட் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

LIFE IS A MIRACLE AND EVERY BREATH WE TAKE IS A GIFT.

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதினொன்று



 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பதினொன்றாம் விதி சொல்வது, "பிறர் முழுமையாக உங்களைச் சார்ந்திருக்கும் அச்சாணியாக அமைய கற்றுக்கொள்". 

 

மூல நூலில், இதை "LEARN TO KEEP PEOPLE DEPENDENT ON YOU" என்கிறார் எழுத்தாளர். 

 

வலிமையின் சாரம், நம்மோடு மனதார ஒத்துழைப்போரின் எண்ணிக்கையைப்   பொருத்தது என்பதை நூல் விவாதத்தின் ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டோம். 

 

அத்தகைய ஒத்துழைப்பிற்காக, வலுவான உறவுமுறைகளை உருவாக்கவும், அவற்றை ஆரோக்கியமான முறையில் பேணவும் இவ்விதியில் வலியுறுத்தப்படும் நுட்பங்கள் பெரிதும் உதவும். 

 

சென்ற விதியில் கூறப்பட்டபடி,  சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, எதிர்மறை  நபர்களை தவிர்க்கும் சுதந்திரம், பிறர் நம்மைச் சார்ந்திருக்கும் அளவைப் பொருத்தே அமையும். 

 

நம்மைத் தவிர்த்தால், அவர்களின் அன்றாடப் பணிகள் முழுதும் ஆட்டம் காணும் அளவில் நம்மையே நம்பியிருக்குமாறு பொருத்திவிட்டோம் என்றால், நமக்கான ஆக்கப்பூர்வமான மனிதர்களோடு முழு சுதந்திரத்துடன் விரும்புவதைச் செயலாற்ற இயலும். 

 

இதைச் சரியாகச் செய்வோர், தனியார் நிறுவனங்கள், அரசுத்துறை என பல அமைப்புகளிலும், பல நிலைகளிலும் கொட்டிக் கிடப்பதை உதாரணங்களுடன் உணரலாம். 

 

அரசுப்பணியில் பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பணி மாற்றங்களை ஊழியர்கள் சந்திப்பது உண்டு. 

 

"இன்று ஒரு தகவல்" என்னும் நிகழ்ச்சியால் பிரபலம் ஆன திரு தென்கச்சி கோ. சுவாமினாதன் அவர்களை சென்னை வானொலி நிலையம், 1988 லிருந்து பதினான்கு ஆண்டுகள் பணி மாற்றம் செய்யவே இல்லை. 

 

அதற்கான முக்கிய காரணம், அவர் இல்லாமல், ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் விளம்பர வருமானம் ஈட்டிய அந்நிகழ்ச்சியைத் திறம்பட நடத்துவதை சென்னை வானொலியால் கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை என்பதே ஆகும். 

 

அவர் உரைகளை அப்போது நான் கேட்கத் தவறினாலும், இன்று அதன் நூல் வடிவத்தை கிண்டிலில் வாசிக்கும்போது, அவருடைய விரிவான வாசிப்புப் பழக்கத்தால் ஏற்பட்ட பல்துறை ஞானத்தையும், வருங்காலம் குறித்த கணிப்புகளையும் அறிந்து வியந்திருக்கிறேன். 

 

தம் தேடுபொறி மென்பொருளாலும், பக்கங்களை வரிசைப்படுத்தும் தந்திர சூத்திரத்தாலும், உலகையே தம்மைச் சார்ந்ததாக மாற்றிய கூகுள்  நிறுவனர்கள் திரு லாரி பேஜ் மற்றும் திரு செர்கே பிரைன் அவர்களை, இவ்விதிக்கான உதாரணப் புருஷர்கள் என்பதில் ஐயமே இல்லை. 

 

தம் கல்லூரி மாணவர்களை இணையம் வழியாக ஒருங்கிணைப்பதில் தொடங்கி, உலகின் பெரிய நிறுவனங்களையே தத்தம் விளம்பரத்திற்காகத் தம்மையே சார்ந்திருக்குமாறு வளர்ந்துவிட்ட ஃபேஸ்புக் நிறுவனர் திரு மார்க் ஜுக்கர்பர்க் அவர்கள், இவ்விதியின் மற்றொரு சிறந்த உதாரணம். 

 

இத்தகைய உதாரணங்களால், மலையளவு திறமையையும், தொழில்நுட்ப அறிவையும் இவ்விதி கோருகிறது என எண்ணினால் நம் புரிதல் தவறு என நான் அனுதினமும் காணும் பல மனிதர்கள் மீண்டும் மீண்டும் உணரச் செய்திருக்கிறார்கள். 

 

ஸ்விகி, சொமேட்டோ என இணைய வசதிகள் பெருகியபோதிலும், எங்கள் தெருவில் இருபத்தைந்து ஆண்டுகளாக இயங்கும் திருமலா என்ற ஒரு சிற்றுண்டிக் கடையை நோக்கி, மக்கள் தினமும் அலையென படையெடுத்து வருவதை வியப்புடன் பார்க்கிறேன். 

 

அதற்கான காரணமாக நான் கண்டது, சிற்றுண்டியின் உயர்தரத்தை விட, கடை உரிமையாளர்  தம் வாடிக்கையாளர்களை நினைவுகூர்ந்து, நேர்மையாகவும், கண்ணியமாகவும், கலகலப்பாகவும் நடத்துவதே ஆகும். 

 

இக்கடைக்காரர், எனக்கு ஜப்பானிய எழுத்தாளர், திரு "Hector Garsia" அவர்களின் “நீங்கள் கூறியுள்ளவற்றை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் அவர்களுக்குச் செய்துள்ளவற்றை அவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் அவர்களுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தினீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.” என்னும் கூற்றை அடிக்கடி நினைவுபடுத்துகிறார். 

 

மேற்கூறப்பட்ட உதாரண மனிதர்களின் குணாதிசயங்களைக் கைகொண்டு, நாமும் நம்மைப் பெரிதும் சார்ந்ததாக நம் சுற்றத்தை மாற்றுவோம். 

 

இதனால், நாமும் அவர்களைச் சார்ந்திருக்கிறோம் என்பதை மறவாதிருந்தால், தேவையற்ற செருக்கு குணமும் எழாது. 

 

இத்தகைய நிலையை அடைய கையாளவேண்டிய பல  முக்கிய உத்திகளையே அடுத்தடுத்த விதிகளில் அறியவிருக்கிறோம். 

 

அவற்றுள் இன்றியமையாத ஒன்றான, நம் பேச்சில் உண்மையை வெளிப்படுத்தும் சிக்கலான நுட்பம் ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

16 கருத்துகள்:

  1. முடிந்தவரை நம்மைச் சார்ந்திருக்கும்படி செய்ய முயற்சிக்கலாம்.  முழுமையாக முடியுமா என்பது சந்தேகமே.  நாம் அனைவருமே நிறைய விஷயங்களில் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கிறோம்!  உங்கள் உதாரணங்கள் சுவாரஸ்யமானவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவரையொருவர் சார்ந்திருப்பதையே சகசார்பு என "Interdependence" கூறுவதுண்டு.
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.

      நீக்கு
  2. ஒரு தனிநபராக இந்த விதியை ஏற்கலாமே தவிர பல சமயம் பெரிய சாம்ராஜ்யங்கள், அமைப்புகளின் வீழ்ச்சிக்கும் இவ்விதி காரணமாகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சார்.
      இந்நூல், பொதுவாக தனிநபர் வளர்ச்சி குறித்தே பேசுகிறது.
      ஒருவரை மட்டுமே நம்பியிருப்பது நிறுவனத்திற்கு ஆபத்தானதே.
      நிலையான வளர்ச்சியை தனிநபரும் நிறுவனமும் உறுதிசெய்யும் உக்தி குறித்து குறிப்பாக 48 ஆம் விதியில் பேசப்படும்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி பத்மநாபன் சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பணம் துன்பம் வராமல் நம்மைக் காக்கும் சார்.
      இன்பத்தை நம்முள் உருவாக்கும் உக்திகள் குறித்து சில விதிகளில் விவாதிக்கலாம்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
    2. பணம் துன்பம் வராமல் நம்மைக் காக்குமா? அரவிந்த்?

      பல உறவுகள் முறிவதே இந்தப் பணத்தால்தானே!! மனக்கசப்புகள் உட்பட...பணம் உதவுமாக இருக்கலாம் சில விஷயங்களுக்கு ஆனால் துன்பம் வராமல் காக்கும் என்று சொல்வது சரியான சொல்லா என்று தெரியலை அரவிந்த்.

      கீதா

      நீக்கு
  4. அரவிந்த் இந்த விதியை முழுமையாக ஏற்க முடியாது என்பது என் தனிப்பட்டக் கருத்து. நீங்கள் சொல்லியிருக்கும் தென்கச்சி அவர்களைப் போன்று நம்மால், நம்மால் மட்டுமே ஒரு நிறுவனத்திற்கு வருமானம் வரும் என்றால் கண்டிப்பாக சார்பு நிலை உண்டு. அது போன்று ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் மட்டுமே அதுவும் வியாபர உலகில் நிறுவனங்கள், மருத்துவர்கள் என்று சார்பு நிலை வர வாய்ப்புண்டு.

    சாதாரண நடைமுறை வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதுதானே சமூகம். நாடு எல்லாமே...

    இந்த விதியை நம்ம மக்கள் அழகாகக் கையாண்டால் நல்ல தலைவர் கிடைக்க வாய்ப்புண்டு!!!!! என்ன சொல்றீங்க அரவிந்த்? நான் சொல்றது சரியா? மக்களின் ஓட்டு இல்லாமல் தலைவராக முடியாது ...ஹூம் ஆனா மக்கள் இதைப் புரிஞ்சுக்கவே மாட்டேன்றாங்களே!!! புரட்சிகரமா சிந்திக்க மாட்டேன்றாங்களே!!!!!ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒன்று, நிபுணத்துவம் இருந்தால் கண்டிப்பாக அதிகமான சம்பளம் கேட்கலாம்...ஒரு சிலர் அரைகுறையாக இருந்து கொண்டே தங்களைச் சார்ந்திருக்கும்படி செய்துவிடுகிறார்கள்... அதிர்ஷ்டம் என்ற ஒன்று வேண்டும்.

      ஆனால் ஒருவரை மட்டுமே சார்ந்திருந்தால் நல்லதில்லை.

      கீதா

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது மிகச்சரி மேடம்.
      ஒருவரையொருவர் சார்ந்திருப்பதே மனித சமூகம்.
      இவ்விதி, நம்மிடம் உள்ள சில சிறப்பான திறன்களை வளர்த்து மற்றோர் பெரிய அளவில் நம்மைச் சார்ந்திருக்கும் நிலையால் விளையும் பயன் குறித்து பேசுகிறது.
      நிறுவனத்தின் தலைமைக் குழு தான், அடுத்தடுத்து திறமையான மனிதர்கள் உருவாவதை உறுதிசெய்ய வேண்டும்.
      தனிப்பட்ட பணியாளரால், தன்னை முக்கியமானவனாக ஆக்கிக்கொள்ள முடியுமே தவிர, ஒட்டுமொத்த நிறுவனத்தின் வருங்காலத்தை உறுதி செய்வது கடினம்.
      எல்லா உயிர்களும் அடிப்படையிலேயே சுயநலவாதிகள் தான்.
      அச்சுயநலத்தை பொதுநலனுக்காக பயன்பட வைக்க தேவையான உக்திகள் குறித்தே இந்நூல் ஒட்டுமொத்தமாக பேசுவதாக என் புரிதல்.
      13 ஆம் விதியில், இது குறித்து விரிவாக காண்போம்.
      திறமை முற்றிலும் இல்லாமல் சிலர் நல்ல நிலையில் இருப்பதுபோல தோன்றக்கூடும்.
      அவர்களையும் உற்றுநோக்கிநால், ஏதாவது வகையில் பெரும்புள்ளிகள் அவர்களைச் சார்ந்திருப்பர்.
      அது அந்த பெரும்புள்ளியின் ஒரு தேவையை அவர் பூர்த்தி செய்வதாலும் இருக்கும்
      என் நிறுவனத்தில் ஒரு Substaff இருக்கார் பெரும் தலைகளின் ஆதரவுடன்.
      அவருக்கு ஒரு திறமையும் ில்லை, வெரும் குடிப்பழக்கத்தால் எப்படி பணம் கிடைக்கும் என்றே பேயாய் அலைவார்.
      ஆநால் அவருக்கு பெரிய மனிதர்களுக்கு தேவையான சாப்பாடு, சரக்கு உள்ளிட்டவற்றை வாங்கிக்கொடுத்து அவர்கள் ஆதரவைப் பெற்றிருப்பார்.
      அவர் செய்யும் தவறுகளும் கண்டுகொள்ளப்படாது.
      அது நீண்டநாள் அளவில் செல்லுபடி ஆகாது, வரும் பணத்தால் மகிழ்ச்சியும் கிடைக்காது, அவரை ஆதரிக்கும் அதிகாரிகளும் காலப்போக்கில் பெரும் துன்பங்களை அணுபவித்ததையே கண்டிருக்கிறேன்.
      பணம், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை உறைவிடம் போன்றவற்றை நிறைவேற்றுவதால் துன்பம் வராது என கூறினேன் மேடம்.
      இன்பத்தை உருவாக்குவது அவரவர் என்னத்திலும் செயலிலும் தான் உள்ளது.
      அதற்கு, பணம் உருவாக்கப்பட்ட நோக்கம், செயல்படும் விதம், அதன் எல்லைகள் குறித்த தெளிவு தேவை.
      21 ஆம் விதி முதல் அவை குறித்தும் விவாதிக்கப்படும்.
      தஹ்கள் ஆழ்ந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு
  6. //அதற்கான காரணமாக நான் கண்டது, சிற்றுண்டியின் உயர்தரத்தை விட, கடை உரிமையாளர் தம் வாடிக்கையாளர்களை நினைவுகூர்ந்து, நேர்மையாகவும், கண்ணியமாகவும், கலகலப்பாகவும் நடத்துவதே ஆகும். //

    இதுதான் வேண்டும், உறவு முறையில் தொழில் செய்யும் இடத்தில் நேர்மையும், கண்ணியமும் விட்டு கொடுத்தலும், சகிப்பு தனமையும் இருந்தால்தான் முன்னேற்றம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மேடம்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....