அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட முக நூல் இற்றைகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும்
மனம் நிறைந்த நன்றி.
இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THERE IS NO BETTER FEELING OF HAPPINESS THAN WHEN YOU ARE HAPPY BECAUSE
YOU MADE SOMEONE ELSE HAPPY. IT'S SIMPLY THE BEST FEELING IN THE WORLD.
******
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி
இருபது
வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய
பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!
அறிமுகம் ;
விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ; விதி பதினான்கு ; விதி பதினைந்து ; விதி பதினாறு ; விதி பதினேழு ; விதி பதினெட்டு ; விதி பத்தொன்பது ;
என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும்
உற்சாகம் கலந்த வணக்கங்கள்.
திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48
Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா?
இருபதாம் விதி சொல்வது, "எவர் பக்கமும் சாய்ந்துவிடாதே".
மூல நூலில், இதை "DO
NOT COMMIT TO ANYONE" என்கிறார்
எழுத்தாளர்.
எவருக்கும் எந்தவித ஆதரவையும் அளிக்காமல், எங்கனம் மக்களின் நம்பிக்கையைப் பெற
இயலும் எனும் கேள்வி எழுவது மிக இயல்பானதே.
நடுநிலை வகிக்கும் நாடுகளை, எதிரிகளையும் விட மிக
ஆபத்தானவையாக கருதுமாறு வலியுறுத்தி இருக்கிறார், பதினைந்தாம் நூற்றாண்டு இத்தாலிய
சிந்தனையாளரான திரு நிக்கோலோ மாக்கியவல்லி அவர்கள்.
ஆனால், இன்றைய உலகில், நடுநிலை வகிக்கும்
ஸ்விட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளே, வல்லரசு நாடுகளையும் விட அமைதியான சூழல்
நிறைந்ததாகவும், செல்வச் செழிப்புடன் கூடிய மகிழ்ச்சி நிறைந்த மக்களைக்
கொண்டவையாகவும் உள்ளன.
எனவே, நம் வீடு மற்றும் பணி இடங்களில்,
பெரும்பாலோரின் நற்பெயரோடு நீண்டகால வெற்றி பெறுவதற்கான உத்திகளை வழங்கும்
இவ்விதியின்
அம்சங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாமா?
ஒருவர் பக்கம் எளிதில் சாய்ந்துவிட்டால், அவரின்
வெற்றி தோல்வி அடிப்படையிலேயே, நம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையும் அபாயத்தில்
சிக்கிவிடுவோம்.
காலப்போக்கில், அந்த மனிதர் செய்யும் எதையும்
ஆதரிக்கும் கட்டாயத்திற்குள்ளாகி நிறைய எதிரிகளைச் சம்பாரிப்பதோடு, அவரையே
சார்ந்தவராக மாறுவதால், நம் மீதான மதிப்பும் ஈர்ப்பும் நம் பலமும் படிப்படியாகக்
குறைந்தும் விடும்.
இதற்கு மாறாக, நடுநிலையைக் கடைபிடிப்பவராகவும், எந்த
ஒரு சிக்கலின் அனைத்து கோணங்களையும் கருத்தில் கொண்டு, அனைவரும் பயன்பெறும்
வகையிலான
தீர்வுகளை முன்வைப்பவராகவும் நாம் மாறிவிடுமாறு நூல் பரிந்துரை செய்கிறது.
அப்படிப்பட்ட நடுநிலையாளரைத் தம் பக்கம்
இழுப்பதற்காக, மக்கள் அனைவரும் அரும்பாடுபட்டு அவர் பலத்தைப் பெருக்கும் அதிசயம்
நடப்பதை இந்நூல், இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபத் போன்ற உதாரணங்களோடு
விளக்கியிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட நடுநிலை நாடுகளுக்கு இணையான தலைசிறந்த
வெளியுறவுக் கொள்கையைக் கடைபிடிக்கும் நாடு, நம் இந்தியா என பெருமையாகச்
சொல்லிக்கொள்ளலாம்.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட,
அணி சேராக் கொள்கை அடிப்படையிலான நம் வெளியுறவுக் கொள்கையை இன்றைய ஆட்சியாளர்களும்
கடைபிடிப்பதாலேயே, இன்றைய சவாலான போர்ச்சூழலிலும் நம் நாடு பெரிய அளவில்
பாதிக்கப்படாமல் இருக்கிறது.
வரும் குளிர்காலத்தை, ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய் இல்லாமல் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் பெரிதும்
திணறிக்கொண்டிருப்பதையும், மின்வெட்டால், அந்நாட்டு தொழில்களும் மக்களும்
அவதிப்படுவதையும் நாம் வருத்தத்துடன் காண்கிறோம்.
இச்சிக்கல் நம்மைத் தீண்டாமல் இருப்பதற்கான காரணம்,
ரஷ்ய-உக்ரைன் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும், அவர்களுக்குள் பேச்சுவார்த்தை
மூலம் தீர்வு காணுமாறு வலியுறுத்தி நடுநிலை வகிப்பதே ஆகும்.
அதற்காகப் பெரும் தவறுகள் இழைக்கப்பட்டபோது அது சம்மந்தப்பட்ட நாட்டையோ, அமைப்பையோ நாம்
கண்டிக்காமல் இருந்ததும் இல்லை.
போராலோ, வெள்ளத்தாலோ, பொருளாதார சிக்கலாலோ
பாதிக்கப்படும் உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு, மனிதாபிமான
அடிப்படையிலான உதவிகள் வழங்குவதிலிருந்தும் நாம் ஒருபோதும் விலகியதே இல்லை.
எனவேதான், அந்நாட்டுத் தலைவர்களும், அமெரிக்கா, ரஷ்யா
போன்ற வல்லரசுகளும், நம் நடுநிலையை மிக ஆக்ரோஷத்தோடு கண்டிக்காமல் இருப்பதும், நம்
ஆதரவைத் தொடர்ந்து பெற கடுமையாக முயற்சிப்பதும் நடக்கிறது.
புவியியல் மற்றும் மத அடிப்படையிலான காரணங்களால்,
சீனா, பாகிஸ்தான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகளோடு சிறு உறவுச் சிக்கல்கள்
இருப்பினும், அவற்றை மிக லாவகமாக கையாண்டுக் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாக, சர்வதேச அமைப்புகளில், காஷ்மீர் பிரச்சனை
குறித்து துருக்கி பேச எத்தனித்தால், துருக்கிக்கும், கிரீஸுக்கும் இடையிலுள்ள
சைப்ரஸ் விவகாரத்தை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் எழுப்ப
எத்தனித்து துருக்கியை அடக்கிவிடுவார்.
எல்லாவற்றிற்கும் மேல், பெரும் மனித ஆற்றல் வளம்
நிறைந்த நம் நாட்டில் உள்ள வியாபார சாத்தியங்களை இழக்க எந்த நாடும் தயாராக இல்லை.
பல்வகைப்பட்ட மக்கள் நிறைந்த சிக்கலான நம் நாட்டை,
பெரும் மனித ஆற்றலாக ஒருங்கிணைத்து கட்டியெழுப்பிய நம் முன்னோர்கள், இவ்விதியை
சிறப்பாக கடைபிடித்த விதத்தை, திரு இராமச்சந்திர குகா அவர்களின் "இந்திய
வரலாறு காந்திக்கு பிறகு" என்னும் நூலின் இரு பாகங்களை வாசித்து
அறிந்துகொள்ளலாம்.
ஐயன் வள்ளுவர், "மன்னரைச் சேர்ந்தொழுதல்" அதிகாரத்தில்
உரைத்தது போல, அனைத்துத் தரப்பினரிடமும் மிகவும் நெருக்கம் கொள்ளாமல், நெருப்பில்
குளிர் காய்பவர் போலச் சிறு இடைவெளியை பராமரிப்போம்.
அவ்வாறு செயல்படுவதால், நமக்கான சுதந்திரம்
காக்கப்படுவதோடு, நம் சொற்களின் மீதான பெரும் மதிப்பை உறுதி செய்வோம்.
இவ்விதிப்படி எவர் பக்கமும் சாயாமல் நெடுநாள்
நீடிப்பதால், அனைத்துத் தரப்பினரும் நம் உள்நோக்கத்தை சந்தேகிக்கும் அபாயம் உண்டு.
அத்தகைய ஆபத்தைக் கையாள்வதற்கான சிறப்பான உபாயம்
ஒன்றை அடுத்த விதியில் சுவைக்கலாமா?
நூல் குறித்த விவாதம் தொடரும்.
*****
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை
பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள்
அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்,
இரா. அரவிந்த்
நல்லது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதொடர்வதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐய்யா.
நீக்கு/ஒருவர் பக்கம் எளிதில் சாய்ந்துவிட்டால், அவரின் வெற்றி தோல்வி அடிப்படையிலேயே, நம் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அமையும் அபாயத்தில் சிக்கிவிடுவோம்.
பதிலளிநீக்குகாலப்போக்கில், அந்த மனிதர் செய்யும் எதையும் ஆதரிக்கும் கட்டாயத்திற்குள்ளாகி நிறைய எதிரிகளைச் சம்பாரிப்பதோடு, அவரையே சார்ந்தவராக மாறுவதால், நம் மீதான மதிப்பும் ஈர்ப்பும் நம் பலமும் படிப்படியாகக் குறைந்தும் விடும்.
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் மோடி பக்கம் சாய்ந்தவர்களின் நிலையை நன்றாக எடுத்து சொல்லி இருக்கிறது மேற்கூறிய வரிகள்
எவர் பக்கம் சாய்வோரும் காலம் காலமாக எதிர்கொள்ளும் சிக்கல்தான் இது ஐய்யா.
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
//பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட, அணி சேராக் கொள்கை அடிப்படையிலான நம் வெளியுறவுக் கொள்கையை இன்றைய ஆட்சியாளர்களும் கடைபிடிப்பதாலேயே, இன்றைய சவாலான போர்ச்சூழலிலும் நம் நாடு பெரிய அளவில் பாதிக்கப்படாமல் இருக்கிறது///
பதிலளிநீக்குஎன்னது நேருவின் கொள்கையை இன்றைய அரசு கடைபிடிக்கிறதா? நல்ல நகைச்சுவைதான் 2023 ல் இதுதான் சிறந்த ஜோக்
வெளியுரவுக் கொள்கை அளவில், நாம் நம் முன்னோர் வகுத்த பாதையிலேயே செல்வதாக தோன்றுகிறது ஐய்யா.
நீக்குஇதுவே நீடிக்கவேண்டும் என்னும் ஆசையும் உள்ளது.
///அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளும், நம் நடுநிலையை மிக ஆக்ரோஷத்தோடு கண்டிக்காமல் இருப்பதும், நம் ஆதரவைத் தொடர்ந்து பெற கடுமையாக முயற்சிப்பதும் நடக்கிறது. //
பதிலளிநீக்குஇந்தியாவின் நடுநிலை கொள்கைகளுக்காக மற்ற தலைவர்கள் ஆதரவை பெற முயற்சிகள் செய்யவில்லை... அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கான சந்தையாக இந்தியாவை கருதுவதால்தான் அமைதியாக இருக்கிறார்கள் இந்திய ம்க்கள்தொகைதான் இந்தியாவிற்கு இப்போது உள்ள பலம்
ஆம் ஐய்யா.
நீக்குஇளைஞர் நிறைந்த மக்கட்தொகையும் நம் மிகப்பெரும் பலம்தான்.
சீனா, ஜப்பான் போன்ற நாடுகள், முதியோர் என்னிக்கை அதிகரிப்பாலும், பிறப்புவிகித குறைப்பாட்டாலும் தினரிவருகின்றன.
இன்று, சீனாவின் சில மாகானங்கள், திருமணம் செய்யாமல் குழந்தைகள் பெற்றாலும் சலுகைகள் தருவோம் என அறிவிக்கும் அளவு தரம் தாழ்ந்துவிட்டதை அறிந்திருப்பீர்கள்.
தனித்திரு...
பதிலளிநீக்கு(தனிமையாக அல்ல...)
நீக்குமிகச்சரி ஐய்யா.
நீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் ஐய்யா.
அலசல் நன்று
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குஇன்றைய விதி நல்ல விதி. ஆமாம் நடு நிலைமை என்பது மிக மிக நல்ல விஷயம்.
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி கீதா மேடம்.
நீக்குநல்ல விதி. தொடர்வோம்...
பதிலளிநீக்குதொடர்வதற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.
நீக்கு