செவ்வாய், 17 ஜனவரி, 2023

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பத்தொன்பது - அயோத்யா ஜி - ஹனுமான் Gகடி - லட்டு பிரசாதம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

SAVE ONLY THOSE MEMORIES WHICH GIVES TWINKLE IN YOUR EYES NOT WRINKLES ON YOUR FACE.

 

******

 

பயணங்கள் இனிமையானவை.  தற்போது எழுதி வரும் நதிக்கரை நகரங்கள் பயணத் தொடர் உங்களுக்கும் பயன்படலாம்.  இதுவரை நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 

 

பகுதி ஒன்று - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு. 

 

பகுதி இரண்டு - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  

 

பகுதி மூன்று - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 

 

பகுதி நான்கு - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி. 

 

பகுதி ஐந்து - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 

 

பகுதி ஆறு - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.

 

பகுதி ஏழு - நைமிசாரண்யம் - காலை உணவு.

 

பகுதி எட்டு - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.

 

பகுதி ஒன்பது - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.

 

பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.

 

பகுதி பதினொன்று - நைமிசாரண்யம் - நவநரசிம்மர் கோவில்.

 

பகுதி பன்னிரெண்டு - நைமிசாரண்யம் - ஹனுமான் Gகடி.

 

பகுதி பதிமூன்று - நைமிசாரண்யம் - வ்யாஸ் Gகdhத்dhதி

 

பகுதி பதிநான்கு - நைமிசாரண்யம் - (Dh)தஸாஸ்வமேத்(dh) Gகாட்

 

பகுதி பதினைந்து - நைமிசாரண்யம் - பாண்டவ் கில்லா

 

பகுதி பதினாறு - அடுத்த நதிக்கரை நோக்கி ஒரு பயணம்

 

பகுதி பதினேழு - சரயு நதிக்கரையில்…

 

பகுதி பதினெட்டு - மதிய உணவும் அயோத்யா ஜி உலாவும்…



லட்டு பிரசாதம்….

 

அயோத்யா நகரில் கோவிலுக்குச் செல்லும் வழி நிறைய மிட்டாய் கடைகள். அங்கே எல்லா கடைகளிலும் சின்னச் சின்ன அளவில் லட்டுகள் விற்பனை கன ஜோராக நடக்கிறது.  வரும் பக்தர்கள் அனைவரும் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்ற கணக்கில் லட்டு வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சிலர் கைகளில் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு 10 பெட்டிகளில் லட்டு எடுத்துச் செல்வதையும் பார்க்க முடிந்தது. பிரதான கோவிலான ராம் ஜென்ம பூமியில் எதையும் உள்ளே கொண்டு செல்ல முடியாது என்பதால் பெரும்பாலும் இந்த லட்டு கொண்டு செல்வது எல்லாமே அயோத்யா நகரின் காவலை தனது பொறுப்பில் வைத்திருக்கும் ஹனுமனின் கோவிலுக்கு தான்! ஹனுமான் Gக(d)டி என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்கு தான் லட்டு பிரசாதம் எல்லாம்.  பலர் இந்த லட்டுவை உள்ளே கொண்டு செல்ல, அதை ஹனுமனின் முன் காண்பித்து விட்டு, கொஞ்சம் லட்டுவை அங்கே வைத்துவிட்டு, மீதியை கொண்டு வந்தவர்களிடமே கொடுத்து விடுவார்கள்.  ஹனுமனின் முன் வைக்கப்பட்ட லட்டுகள் வேறு பக்தர்கள் வரும்போது அவர்களுக்கு கொடுக்கப்பட்டு விடும்.  






 லட்டு தயாரிப்பு…


நகரம் எங்கும் பல கடைகள் இருந்தாலும் இந்த லட்டுகள் எல்லாமே பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கிறது!  செய்யப்படுவது ஒரே இடமாக வைத்துக் கொண்டு கடைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள் போலும் என்று தோன்றியது.  ஒரு சிறு கடையில் தேநீர் சாப்பிடலாம் என்று நின்றிருந்த போது, அங்கே பக்கத்தில் ஒரு சிலர் லட்டு தயாரித்துக் கொண்டிருந்தார்கள்.  சர்க்கரையிலேயே உணவுக்கான நிறம் (Food Colour) சேர்த்து பெரிய கட்டிகளாக வைத்திருக்கிறார்கள்.  லட்டு தயாரிக்கும் போது ஒரு சிறு காணொளியும், ஒரு நிழற்படமும் எடுத்தேன்.  சுத்தம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.  பெரிய அளவில் தயாரிக்கப்படும் இந்த லட்டு தயாரிக்க, சிலர் டால்டா பயன்படுத்த, சிலர் நெய் பயன்படுத்துகிறார்கள்.  சின்னச் சின்னதாய் ஒரே அளவில் பிடித்து வைத்திருக்கும் அந்த லட்டுவைப் பார்க்க நன்றாக இருந்தாலும் நாங்கள்  வாங்கவும் இல்லை.  என்னுடன் வந்திருந்தவர்களில் ஒருவர் மிகவும் இனிப்பானவர் என்பதால் நாங்கள் வாங்கவில்லை!  சுவைக்கவுமில்லை! 



கோவிலின் முகப்பு…

 

சினனச் சின்ன விஷயங்கள் தான் என்றாலும் இந்த மாதிரி தயாரிப்பு செய்வதில் எத்தனை எத்தனை பேரின் உழைப்பு, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு! பலரும் இதனால் பயன் அடைகிறார்கள் என்பதை அங்கே உணர முடிந்தது!  நீங்களும் லட்டு பிரசாதம் எடுத்துக் கொள்ளலாமே! படத்திலிருந்து தான்! ஹாஹா.... சரி லட்டு பற்றி சொன்னீர்களே, லட்டுவை பிரசாதமாக படைக்கும் ஹனுமான் Gகடி கோவில் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பதற்கு முன்னர் சொல்லி விடுகிறேன்.  ஏற்கனவே நைமிசாரண்யம் குறித்து எழுதும்போது அங்கே இதே பெயரில் இருந்த  கோவில் குறித்து எழுதி இருக்கிறேன் என்பது நினைவுக்கு வரலாம்.  அந்த கோவில் வேறு, இது வேறு.  அங்கே இருப்பது அஹி ராவணனின் பிடியிலிருந்து இராம இலக்குவனை காப்பாற்றிய கோலம்.  அயோத்யா நகரில் இருப்பது வேறு! அதன் கதை கீழே.



கோவிலின் உட்புறத்தில்….

 

வனவாசம் முடிந்து, இராவண வதமும் முடிந்து இராமபிரான், ஸீதாதேவி மற்றும் இலக்குவன் உடன் அயோத்யா ஜி திரும்புகிறார்.  அது சமயம் இராமதூதனான ஹனுமனும் கூடவே வருகிறார்.  இராமனுக்கு பட்டாபிஷேகம் முடிந்து அனுமனுக்கென்று ஒரு மாளிகை கொடுத்து (ஹனுமான் கோட்) அங்கேயே இருந்து கொள்ள வேண்டுகிறாராம்.  இராமனை விட்டு விலக மனம் இல்லாமல் ஹனுமன் அங்கேயே இருந்து கொண்டு ராம் கோட் என அழைக்கப்படும் இராமனின் மாளிகையையும், அயோத்யா ஜி நகரையும் பகைவர்களிடமிருந்து எப்போதும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது நம்பிக்கை.  இப்போது வரை அங்கே எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஹனுமனின் அனுமதி இல்லாமல் எடுக்கப்படுவதில்லை. 



கோவில் கோபுரம்….

 

தற்போது இருக்கும் கோவில் வளாகம் பைராகிகளால் கட்டப்பட்டது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.  தனது தாயார் அஞ்சனாதேவியின் மடி மீது அமர்ந்து இருக்கும் கோலத்தில் இருக்கிறது மூல விக்ரகம்.  மிகச் சிறிய விக்கிரகம் என்பதோடு எப்போதும் பக்தர்கள் கொண்டு வந்து படைக்கும் பூ மாலைகள், பல பக்தர்கள் கொண்டு வந்து வைக்கும் வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன அவரது ஆயுதமான Gகதைகள், துளசி மாலை என அனைத்தும் சேர்ந்து கொண்டு அவரை பார்க்கவே முடியாத அளவிற்கு குவிந்து இருக்கும்.  மிகவும் கவனமாகவே கவனிக்க வேண்டிய இடம் - அப்படிப் பார்த்தால் தான் உங்களால் அனுமனின் அழகிய முகத்தினைக் காண முடியும் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.  நாங்கள் அங்கே சென்றபோது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இல்லை என்றாலும் இருந்தவர்கள் இடித்துத் தள்ளியபடியே இருந்தார்கள்.  சற்றே ஒதுங்கி நின்று சிறிது நேரம் ஹனுமனை கண்ணார தரிசித்து மனதுக்குள் ஒன்றி ஹனுமனை நினைத்து சில ஸ்லோகங்கள் சொல்ல முடிந்தது.  வளாகத்தில் பக்கவாட்டு சுவர்களில் ஹனுமான் சாலிசா முழுவதும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.  தமிழகத்தில் அவ்வளவு பழக்கத்தில் இல்லை என்றாலும் ஹனுமான் சாலிசா வடக்கே அதிகம் பேர் சொல்கிறார்கள்.  




கோவிலுக்கு வெளியே பக்தர்கள்…. 


பக்தர்கள் கொண்டு வந்த லட்டு பிரசாதம் பூஜாரிகள் வாங்கி காண்பித்து விட்டு தந்தாலும், பக்தர்களும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு மானஸீகமாக கைகளில் லட்டு வைத்து ஹநுமனுக்கு ஊட்டுவது போல காண்பித்து, கொஞ்சம் கவனிக்காமல் விட்டால் நின்ற இடத்திலேயிருந்தே ஹனுமனின் மீது வீசுகிறார்கள்.  ஹனுமனின் மீது விழுகிறதோ இல்லையோ, முன் பக்கத்தில் நிற்கும் பக்தர்கள் மீதும், அங்கே இருக்கும் பூஜாரிகள் மீதும் நிச்சயம் விழுந்து விடுகிறது.  பக்தி செய்பவர்களை என்ன சொல்ல! நாங்களும் சற்றே ஒதுங்கி நின்று கண்ணார ரசித்ததோடு, அருகேயும் சென்று நின்று நிதானித்து ஹனுமனை தரிசித்து மனதில் மகிழ்ச்சி கொண்டோம்.  மிகவும் அழகான கோவில் - அயோத்யா ஜி சென்றால் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு கோவில் இந்த ஹனுமான் Gகடி! நீங்களும் சென்று பார்த்து வாருங்கள்.   

 

அயோத்யா ஜி குறித்த மேலும் பல தகவல்கள் வரும் பதிவுகளில் வரும். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

9 கருத்துகள்:

  1. இனிமையான அனுபவங்களின் தொகுப்பு. ஜெய் ஸ்ரீராம்; ஜெய் ஹனுமான்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா அருமையான வாசகம்...உண்மைதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அயோத்யா சென்றால் முதலில் தரிசிக்கவேண்டியது இந்த அனுமனைத்தான். நெடிய படிகள் ஏறிச் செல்லவேண்டும்.

    வட நாட்டு கோயில் பிரசாதங்கள்.. இந்த மாதிரி லட்டு, பால் இனிப்புகள், ஜீனி மிட்டாய்கள் என்னைக் கவர்வதில்லை... ஶ்ரீநாத்ஜி கோவிலின் பல்வேறு பிரசாதங்கள் தவிர.

    பதிலளிநீக்கு
  4. சினனச் சின்ன விஷயங்கள் தான் என்றாலும் இந்த மாதிரி தயாரிப்பு செய்வதில் எத்தனை எத்தனை பேரின் உழைப்பு, எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு! பலரும் இதனால் பயன் அடைகிறார்கள் என்பதை அங்கே உணர முடிந்தது!//

    கண்டிப்பாக ஜி. ..வெர்ச்சுவலாக லட்டைச் சுவைத்துக் கொண்டேன்!! ஹாஹாஹ் நானும் இனியவளே!

    கண்டிப்பாக ஹனுமான் Gகடி சென்று பார்க்க வேண்டும். அனுமனை மிகப் பெரிய சக்தி வடிவமாகப் பார்ப்பது வழக்கம் என் மனதிற்குப் பிடித்த அனுமன். (மற்றிருவர் தோஸ்த் ஆனைமுகத்தானும் மயில் வாகனனும்!)

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் லட்டு பற்றி சொல்லியிருப்பது போன்று, சின்ன சமோசா/வெங்காய சமோசாக்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் செய்யப்பட்டு எல்லாக் கடைகளுக்கும் வருவதாகத்தான் எனக்குத் தோன்றும். அதாவது ஒவ்வொரு பகுதியிலும்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அனுமன் மேல் லட்டு வீசுவது பக்தி என்ற பெயரில் நடக்கும் :)

    பதிலளிநீக்கு
  7. படங்களும் பகிர்வும் நன்று. அனுமாருக்கு பக்தர்கள் வெண்ணை உருண்டை வீசிப் பார்த்திருக்கிறேன். லட்டு வீசுவது இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கோயில் விவரங்கள், லட்டு செய்யும் முறை காணொளி எல்லாம் அருமை.
    வட நாட்டுப்பக்கம் இனிப்புகளுடன் கோயிலுக்கு செல்வார்கள். சாமிக்கு நீங்கள் சொல்வது போல அவர்களே ஊட்டினால்தான் மகிழ்ச்சி அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....