திங்கள், 2 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO REGRETS, JUST LESSONS; NO WORRIES, JUST ACCEPTANCE; NO EXPECTATIONS, JUST GRATITUDE.  LIFE IS TOO SHORT - SO ENJOY!

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி எட்டு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம்விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

எட்டாம் விதி சொல்வது, "பிறர் உன்னை நோக்கி ஓடி வரும் தூண்டிலாக மாறு". 

 

மூல நூலில், இதை "MAKE OTHER PEOPLE COME TO YOU, USE BAIT IF NECESSARY" என்கிறார் எழுத்தாளர். 

 

ஒரு தலைவராக, பிறர் திறமைகளை வழிநடத்தும் ஆற்றல் குறித்து முந்தைய விதி விளக்கியது. 

 

அத்தகைய தலைவர், வெறும் வேலை வாங்குபவர் என்னும் அவப்பெயரைத் தவிர்க்க, தம் குழு உறுப்பினர்கள், எப்பிரச்சனையில் சிக்கினாலும், அதை தீர்க்கும் வழிகாட்டியாக தம்மை உறுமாற்றிக் கொள்தல் மிக அவசியம். 

 

தான் விரும்பும் உணவை நோக்கி ஓடோடி வந்து தூண்டிலில் சிக்கும் மீன்களைப் போல், சில சிறப்புப் பணிகளுக்காகப் பிறர், தம்மை நோக்கியே வரும்படி சூழ்நிலைகளை தகவமைப்பது மிக அவசியம். 

 

முந்தைய விதிகளை உணர்ந்து படிப்படியாக முன்னேறுவோர், ஒரு கட்டத்தில், எவ்வித சுய விளம்பரமும் இல்லாமலேயே, பிறரால் கவரப்படும் காந்தமாக மாறிவிடுவர். 

 

அத்தகைய வலிமை மிக்க காந்தமாக மாற, விதி குறிப்பிடும் சிறப்பான குணநலன்களைத் தக்க உதாரணங்களுடன் அறிவோமா? 

 

இத்தகைய காந்த மனிதர்கள், தத்தம் வலிமையை உணர்ந்தவர்களாகவும், போட்டியாளர்களைப் பொறுமையிழக்கச் செய்து தமக்கு உகந்த இடங்களுக்கு இழுத்து வெற்றி பெறுபவர்களாகவும் திகழ்வர். 

 

இதை, தடுப்பாட்ட உத்தி "Defensive strategy" என்று சொல்லலாம். 

 

உதாரணமாக 1947 இல், காஷ்மீரை சுதந்திரமாக விட்டுவிட்டு, பதான் இன மக்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் மன்னரே தம்மிடம் ஓடி வரும் வரை காத்திருந்து ஒப்பந்தத்தால்  காஷ்மீரை தம்முடன் இணைத்த இந்தியாவின் தந்திரம் உலகறிந்ததே. 

 

இரண்டாம் உலகப்போரில் பெறும் படையுடன் வந்த ஜெர்மனியை, ருஷ்யா வெகுதூரம் உள்ளே வர விட்டு, உகந்த உறைபனி காலம் வந்ததும் பெரும் தாக்குதல் நடத்தி வெற்றி பெற்ற வரலாறு, வியட்னாம் போரில் அமெரிக்க தோல்வி போன்ற எண்ணற்ற சம்பவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

 

போர்ச் சூழலுக்கு அப்பாலும், பங்குவர்த்தகத்தில் நல்ல பங்குகளை சமயம் பார்த்து சல்லிசான விலையில் வாங்கும்  வாரன் பஃபெட் அவர்களின் முதலீட்டு உத்தி போல வாழ்வின் அனைத்து துறைகளிலும் இந்த உத்தியைச் சிறப்பாக உபயோகிக்கும் அறிஞர்களை காணலாம். 

 

பொறுமையுடன் தடுப்பாட்டம் ஆடுவோர், தமக்கான ஆற்றல் வளங்களை உறுதி செய்து  தக்க சமயத்தில் துரிதமாகச் செயல்படாமல் போனால் கூட, வெற்றி தவறிவிடும் என்பதையும் இவ்விதி தெளிவாக எச்சரிக்கிறது. 

 

2001 இல் கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டம் இதற்கான சரியான உதாரணமாகும். 

 

முதல் பாதியில், 274 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவுடன், ஆஸ்திரேலியா தொடர்ந்து மட்டை வீசி இந்தியாவை தோல்வியின் விளிம்பிற்குத் தள்ளியிருக்கவேண்டும். 

 

அப்படிச் செய்யாமல், ஏற்கெனவே தளர்ந்துள்ள தம் பந்துவீச்சாளர்களை எதிர்த்து ஆடும் நல் வாய்ப்பை இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அளித்தது. 

 

அதனால், வெறும் இரு வீரர்களின் தளராத எதிர்ப்பாட்டத்தால், பந்து வீச்சாளர்கள் நிலை குலைந்து கடைசியில் ஆஸ்திரேலியாவே தோல்வியடையும் அதிர்ச்சி நிகழ்ந்தது. 

 

எனவே, நம் ஆற்றலை விரையமாக்காமல், சரியான திசையை நோக்கிச் செலுத்தும் அவசியம் இவ்விதியால் தெளிவாகிறது. 

 

இங்கனம், நம் ஆற்றல் வளங்கள் மேலும் சிறப்பாகப் பயன்பட கையாளவேண்டிய மற்றொரு சுவாரசியமான உத்தியை, அடுத்த விதியில் சுவைக்கவிருக்கிறோம். 

 

நூல் குறித்த விவாதம் தொடரும். 

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

12 கருத்துகள்:

  1. நல்ல உதாரணங்கள்.  விதி உபயோகமானது - சரியாக புரிந்து கொள்ளப்பட்டு உபயோகபப்டுத்தப்பட்டால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக உபையோகமான விதி சார்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. திறமையும் பொறுமையும் உள்ளோர்க்கான ஒரு நல்ல விதி.

    "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து" என்பது வள்ளுவன் வாக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பொருத்தமான குறள் ஐய்யா.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐய்யா.

      நீக்கு
  3. கிரிக்கெட் உதாரணம் சூப்பர்.

    இந்த உதாரணத்தை வைத்துத்தான் இந்த விதியைப் புரிந்து கொள்ள முடிகிறது அரவிந்த்!!!

    சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளையாட்டுகள் சார்பான உதாரணங்கள், சர்ச்சை இல்லாத சுவாரசியமான முறையில் விதிகளை புரிய பயன்படும் என்பதாலேயே சில உதாரணங்களை வைத்துள்ளேன் மேடம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  4. விதிபற்றிய பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி மாதேவி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....