திங்கள், 16 ஜனவரி, 2023

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதிநான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நந்திகுண்ட் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீ எந்த அளவுக்கு வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைய விரும்புகிறாயோ அந்த அளவுக்கு பலரின் அர்த்தமற்ற பேச்சுக்களையும் கஷ்டங்களையும் கடந்தாக வேண்டும் என்பதை மறவாதே. 

 

******

 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - விதி பதிநான்கு


 

வலிமைக்கான நாற்பத்து எட்டு விதிகள் - தொடர் - முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே!

 

அறிமுகம் ;  விதி ஒன்று ; விதி இரண்டு ; விதி மூன்று ; விதி நான்கு ; விதி ஐந்து ; விதி ஆறு ; விதி ஏழு ; விதி எட்டு ; விதி ஒன்பது ; விதி பத்து ; விதி பதினொன்று ; விதி பன்னிரண்டு ; விதி பதிமூன்று ;

 

என் வாழ்வை வளமாக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் உற்சாகம் கலந்த வணக்கங்கள். 

 

திரு "ராபர்ட் கிரீன்" அவர்களின் "48 Laws of Power" நூலில் விளக்கப்பட்டுள்ள அடுத்த விதியை இப்போது சுவைக்கலாமா? 

 

பதிநான்காம் விதி சொல்வது, "நட்புடன் பழகிக்கொண்டே உளவாளியாகச் செயலாற்று".

 

மூல நூலில், இதை "POSE AS A FRIEND, WORK AS A SPY" என்கிறார் எழுத்தாளர்.

 

நம் சுற்றத்தார் குறித்த தகவல்களை அறிய வேண்டிய அவசியம் குறித்து சென்ற விதியின் இறுதிப்பகுதியில் விவாதித்தோம்.

 

அத்தகவல்களைப் பெற வழிகாட்டும் இவ்விதியைப் படிக்கையில், நண்பனாகப் பழகி மக்களை ஏமாற்றச் சொல்கிறாரா ஆசிரியர்! எனும் அதிர்ச்சியே ஏற்பட்டது.

 

ஆழ்ந்து சிந்திக்கையில், மக்கள் தம் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பெரும்பாலும் நேரடியாக வெளிப்படுத்துவதில்லை எனும் உண்மை விளங்கியது.

 

இதனால் தான், காதலியின் விருப்பங்களை அவள் கண்களால் அறிதல், உயர் அதிகாரிகளின் எண்ணங்களைக் குறிப்பால் உணர்தல் போன்ற எண்ணற்ற உத்திகள், திருக்குறள் உள்ளிட்ட பல நூல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 

எனவே, தாமே உளவாளியாகச் செயல்பட்டு தகவல்களைத் திரட்ட நூல் கூறும் உத்திகள், அனைத்துத் துறைகளிலும் பயன்படுவதை சில உதாரணங்களுடன் புரிந்துகொள்ளலாமா?

 

முதன்மையான மிக எளிய உத்தி, பிறர் பேசும்போது, தீர்வுகளைச் சொல்வதாக உடனே குறுக்கிடாமல் முழுவதுமாகப் பேச அனுமதித்தலே.

 

தம் துயரங்களைப் பொறுமையாகச் செவிமடுப்பவரிடம், மக்கள் பெரும் மதிப்பு வைப்பதும், தம் எதிர்பார்ப்புகளையும் இரகசியங்களையும் காலப்போக்கில் வெளியிடுவதும் எளிதில் நடப்பதுண்டு.

 

முருகன் என்னும் என் நெருங்கிய நண்பன் ஒருவன், ஒரு நிறுவனத்தில், அதன் மண்டல கிளைகளின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைத் தயாரிக்கும் தலைமை அலுவலகத்தில் பணிபுரிகிறான்.

 

அறிக்கைகளுக்கான உள்ளீட்டைப் பெற கிளைகளைத் தொடர்புகொள்கையில், ஆரம்பக்கட்டத்தில் அவனுக்குச் சரியான பதில்கள் கிடைக்கவே இல்லை.

 

அதற்காக அவன், கிளைப் பணியாளர்களிடம் அவ்வப்போது நட்புரீதியாகத் தொடர்புகொண்டு அவர்கள் சந்திக்கும் சவால்களைப் பொறுமையாகக் கேட்கத் தொடங்கினான்.

 

ஆரம்பத்தில், வாடிக்கையாளர்களை நேரடியாகக் கையாளும் சிரமம் அறியாத பாமரர்களாகத் தாம் உட்பட்ட தலைமை அலுவலக ஊழியர்கள் கருதப்பட்டதாக அறிந்து வியப்படைந்தான்.

 

மெதுமெதுவாக அவர்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து, பணிபுரிவதற்கான விதிகள் அடங்கிய சுற்றறிக்கைகள், வாடிக்கையாளர்களைக் கவர நிறுவனம் அளித்துள்ள சலுகைகள், வாடிக்கையாளர் குறைகளைக் களைய அணுகவேண்டிய தொடர்பு எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரல் நுனியில் கொண்டுவந்து தேவைப்படும் சமயங்களில் வழங்கத் தொடங்கினான்.

 

இதனால், தம் அறிக்கைகளை முடிக்கத் தேவையான தகவல்கள், அவன் கேட்காமலேயே, குறித்த நேரத்தில் கிளைகளிலிருந்து மடை திறந்த வெள்ளமாகப் பாய்வதைக் கண்டு அவன் உயர் அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

 

அது மட்டுமல்லாமல், நிறுவனத்தின் செயல் திறனும் பெருகியதால் அவன் மீதான மதிப்பும் உயர்ந்தது.

 

உரையாடல்களில், பிறர் கூறும் சில செய்திகளை நம்பாதது போல் பாசாங்கு செய்தால், மேலும் பல ஆழமான இரகசியங்களை அவர்கள் கட்டுப்பாட்டையும் உடைத்து பெற்றுவிடலாம் என்பதை, தத்துவ ஞானி திரு ஷோப்பனோவரின் மேற்கோளுடன் நூல் விளக்கியுள்ளது.

 

இரகசியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது வெளியிடப்படாமல் இருப்பது மிக முக்கியம் என்பதையும் மறக்கவேண்டாம்.

 

அதுபோல, நம்மைக் குறித்து அறியவும் நம் போட்டியாளர்கள் இதே போன்ற உத்திகளை உபயோகிப்பர் என்பதையும் மனதில் கொள்வது நல்லது.

 

இவற்றை தெளிவாகப் புரிந்துகொண்டால், பிறர் குறித்த பயனுள்ள தகவல்களைப் பெற்று, அனைவரின் நலனுக்காக ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவராக நம்மைத் தகவமைத்துக்கொள்ளலாம்.

 

கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒன்றை ஒன்று உளவு பார்க்கும் முயற்சியில், இவ்விதி பயன்படும் ஆழத்தைப் புரிந்துகொள்ள, இன்டெல் நிறுவனத்தைத் தொடங்கிய திரு ஆண்ட்ரு எஸ். கிரோவ் அவர்களின் "ONLY THE PARANOID SURVIVE" நூலை வாசிக்குமாறு பரிந்துரை செய்கிறேன்.

 

இங்ஙனம் தகவல்களைப் பெற்றபின், நாம் கையாளவேண்டிய மிக இன்றியமையாத உத்தியைத்தான், அடுத்த விதியில் அறியவிருக்கிறோம்.

 

நூல் குறித்த விவாதம் தொடரும்.

 

*****

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

15 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு. சிறப்பான பிரசன்டேஷன்.

    பதிலளிநீக்கு
  2. விரிவான விளக்கம் அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் பின்னூட்டக் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  4. இந்த விதியின் பயன்பாடு உளவாளி வேலைக்கு மிகவும் பொருந்தும் அதுவும் ஒரு நாட்டிற்குள் ஊடுருவிச் சென்று ...ரகசியங்கள் அறிய. அலல்து ஒரு நாட்டிற்குள்ளேயே ஆட்சியைப் பற்றி மக்களின் உண்மையான கருத்துகளை அறிய. பண்டைய ராஜாக்கள் காலங்களில் ராஜாக்களே அல்லது மந்திரிகள் இப்படி ஊருக்குள் சென்றதுண்டு என்று படித்திருக்கிறோம் இல்லையா?

    உறவுக்குள் யாருக்கேனும் நன்மை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் மனம் துறந்து பேசவில்லை என்றால் இப்படிச் செய்வது நலல்து ஆனால் மற்றபடி என்றால் உறவு முறிந்துவிடும். உறவுக்குள் ஸ்பை வேலை வேலைக்கு ஆகாது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வாசகம் மிகவும் யதார்த்தம். என் மகனுக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம்.
      பல நாடுகளின் உளவுத்துறை நடவடிக்கைகள் குறித்து திரு என். சொக்கன் மற்றும் குகன் அவர்களின் நூல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
      உறவுகளுக்கிடையே இவ்விதி மிகவும் சிக்கலானது தான். குருகிய மதில் மேல் நடப்பதுபோல் இருக்கும்.
      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  6. தங்களின் பதிவினை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் பயனுள்ள பதிவு. புத்தகம் கையில் இருந்தால் கூட முழுமையாக படிப்பேனா என்று தெரியாது. ஒவ்வொரு விதியாக படிப்பதால் அதன் ஆழம் புரிந்து படிக்க முடிகிறது.
    தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் 💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்வதற்கு மிக்க நன்றி நன்பரே.
      தங்கள் வாழ்த்துக்கிணங்க மீதமுள்ள விதிகளும் தொடர்ந்து விளக்கப்படும்.

      நீக்கு
  7. நல்ல செய்திதான் . சிக்கலானதும் கூட..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி மாதேவி மேடம்

      நீக்கு
  8. நட்புடன் பழகி கொண்டு உளவாளி என்பது மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும்.
    குடும்பத்திற்கு சரிபடாது. தொழில் நிறுவனத்திற்கு, நாட்டின் உளவு துறைக்கு உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மேடம். அடுத்த விதியும் மிகச் சிக்கலான பணிகளில் பயன்படுவது தான்.
      தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி கோமதியரசு மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....