திங்கள், 29 மே, 2023

கண்ணின் மணியே…. - சிறுகதை - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மாயங்கள் செய்திடும் மான் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



விடியற்காலை பொழுது!  கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை வெளிக்கொண்டு வந்து தன் ஒளிக்கிரணங்களால் இப்புவிதனில் உயிர்ப்பை உண்டாக்குவதற்கு கூட சற்று தாமதமாகி விட்டது! 


இங்கு ஒருவள் அதற்குள் தன் அன்றாட வாழ்விற்கான வேலைகளை துவக்கிட புத்துணர்வுடன் இயங்கிக் கொண்டிருந்தாள்! அன்றலர்ந்த மலராய் குளித்து விட்டு வந்த அவள் ஒரு புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு தன்னை தயார் செய்து கொள்ளத் துவங்கினாள்! 


அலைபேசி ஒலிக்க…..


ஹலோ! நந்தினி! 


சொல்லுங்கம்மா!


வீடு வரைக்கும் கொஞ்சம் வந்துட்டு போறியாம்மா! இன்னிக்கு அய்யாவ குளிப்பாட்டி விட்டு டயப்பர் மாத்தணும்!


இதோ இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடறேம்மா! உங்க வீட்ட முடிச்சு விட்டுட்டு மத்த வேலைய பார்க்கிறேன் போதுமா!


சரிம்மா! வா!


ஹலோ! நந்தினியா?


சொல்லுங்கம்மா!


சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்களா பாத்திரம் கொஞ்சம் சேந்து போச்சு! வந்து தேச்சு குடுத்துட்டு போறியா?


அப்படியாம்மா! கொஞ்ச நேரத்துல வந்து செஞ்சு தரேம்மா!


வரிசையாக வந்து கொண்டேயிருந்த ஃபோன் கால்களுக்கு பதிலளித்துக் கொண்டே தயாராகிக் கொண்டிருந்தாள் நந்தினி!


தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பி, 'மாமா! எழுந்திருங்க! எனக்கு நேரமாச்சு! சமையல் எல்லாம் செஞ்சு வெச்சுருக்கேன்! எடுத்து போட்டு சாப்பிடுங்க! என்ன!'


தம்பிய எழுப்பி விட்டு ஸ்கூலுக்கு  தயார் பண்ணி விட்டுடறீங்களா? இன்னிக்கு எனக்கு கொஞ்சம் கூடுதலான வேலைகள் இருக்கு என்றாள் கணவனிடம்!


சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தவன், 'எதுக்கு நந்து! இத்தன வேலைகள இழுத்து போட்டுட்டு செய்யற! வழக்கமா செய்யற நாலு வீட்ட மட்டும் முடிச்சுட்டு வந்துட வேண்டியது தான! மத்ததெல்லாம் முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான! என்றான்!


அவனுக்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்து விட்டு வீட்டிலிருந்து கிளம்பி விட்டாள் நந்தினி! தன் டூ வீலரை எடுத்துக் கொண்டு அன்றைய வேலைகளை திட்டமிட்டுக் கொண்டே சாலையில் பயணப்பட்டாள்! 


வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் வகுத்து விட்ட பாதைகளை மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டு பயணம் செய்திட தான் வேண்டும்! 


நந்தினி முப்பது வயது மதிக்கத்தக்க  நடுத்தர வர்க்கத்து பெண்! பள்ளிப்படிப்பும் அனுபவ பாடமும் தான் அவளின் தகுதிச்சான்று! நேரத்தை கடைபிடிப்பதும், கனிவான முகத்துடன் பணி செய்வதும் அவளின் குணாதிசயங்கள்!!


வயதானோருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதும், ஒரு சில வீடுகளில் வீட்டு வேலை செய்வதுமாக குடும்பத்துக்கான தேவைகளை நிறைவேற்ற அவள் இயங்குகிறாள்!


சந்தையில் ஒரு கடையில் தினசரி கூலியாக வேலை செய்து வரும் கணவனும் ஐந்து வயதில் ஒரு மகனும் தான் அவளுக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய உறவுகள்! 


பெற்றோருக்கு செல்லப் பெண்ணாக சுற்றி வந்த அவளுக்கு காலம் ஒவ்வொரு கட்டத்திலும் நிதர்சன பாடத்தை புகட்டியது! மனதிற்கான பக்குவத்தையும் தந்தது!


டூ வீலரில் பயணம் செய்து கொண்டே தன்னைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கினாள் நந்தினி!


பள்ளி விடுமுறை நாளில் ஒருநாள் மதிய நேரம் நண்பர்களோடு ஓடிச்சென்று சத்தமில்லாமல் கைகளை நிழலாக கொடுத்து பொறுமையாக பார்த்து பார்த்து பட்டாம்பூச்சி பிடித்து அதை ஒரு வெற்றிக்களிப்பில் வீட்டிற்கு எடுத்தும் வந்தாள் நந்தினி!


அதைப் பார்த்ததும் அவளின் அம்மாவுக்கு கடுங்கோபம் வந்தது!


எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு உயிருக்கு நம்மால ஆன உதவியைச் செய்யலாமேத் தவிர  நாம அத எதற்காகவும் துன்புறுத்தக் கூடாது! என்று அன்று அம்மா முதுகில் கொடுத்த அடியுடன் புகட்டிய பாடமும் தான் எத்தனை பசுமையாக என் நெஞ்சில் பதிந்து விட்டது! 


இப்போவும் என்னால முடிஞ்ச உதவிய தான் நான் செஞ்சு தரேன்! பணத்துக்கு தான் செய்யறேன்! ஆனாலும் இந்த வேலையில ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது! நமக்கே நாளைக்கு முடியாம போலாமில்ல! அப்போ என்ன பண்ணுவோமோ தெரியாது! முடியறவரைக்கும் செய்யப் போறேன்! என்று தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டாள்!


வாம்மா நந்தினி! 


உன் பையன ஸ்கூல்ல சேத்துட்டியா! ஒழுங்கா போயிட்டு வரானா! ஏதாவது உதவி வேணும்னா தயங்காம கேளு என்ன! 


நந்தினின்னா சுத்தம், செய்யற வேலையில நேர்த்தி! அப்புறம் சொன்ன நேரத்துல வரது! 


நீ போய் வேலையப் பாரு! நான் போய் உனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்!


கடவுள் உன்ன நல்லா வெச்சிருப்பார்! கவலையே படாத!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

  1. நந்தினிகள் நாட்டின் பொக்கிஷங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். தன்னலம் இல்லாத ஜீவன்கள்

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நிறைவான குட்டிக்கதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கில்லர்ஜி சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  4. நிறைவான குட்டிக்கதை மேடம்.
    எந்த அலுவலகத்திலும் இது போன்ற பலரை காணலாம்.
    பொதுவாக காண்டிராக்ட் வேலையாளாக இருப்பார்கள். ஆநனால், வாங்கும் தொகைக்கு அப்பாலும் பல சிறு வேலைகளைச் செய்துகொண்டே இருப்பர் பலன் கருதாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் வேலை செய்பவர்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் அரவிந்த் சகோ.

      நீக்கு
  5. வாசகம் நன்றாக இருக்கிறது.
    அருமையான கதை.

    //டூ வீலரில் பயணம் செய்து கொண்டே தன்னைப் பற்றிய எண்ணங்களில் மூழ்கினாள் நந்தினி!//

    இப்படி எங்கள் குடியிருப்பில் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு வருகிறார்கள் பெண்கள்,.

    ஒரு படத்தில் இப்படி கதாநாயகி இப்படி வேலை செய்து கல்லூரி படிப்பை படிப்பார், தன் காதலனை படிக்க வைப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கோமதிம்மா.

      நீக்கு
  6. அழகான குட்டிக் கதை. நந்தினி போன்ற பொக்கிஷ நாயகிகள் நம்மூரில் நிறைய இருக்காங்க. அவங்க இல்லைனா பல இல்லத்தரிகளுக்கும், வயதானவர்கல் முடியாதவங்களுக்கும் கை ஒடிந்தது போல் ஆகிவிடும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  7. அருமை..

    சிறு கதையாக இருந்தாலும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  8. நான் போட்ட கருத்தை காணவில்லையே!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....