அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட Himalayan Mountaineering Institute பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
"THE
MORE YOU DIP IN THE HOLY GANGA RIVER, THE MORE YOU WILL DESIRE TO DIP."
******
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு
கங்கா
மைய்யா கி ஜெய்!
சென்ற நான்கு பகுதிகளாக என்னுடன் பயணித்து என்னை உற்சாகப்படுத்திய
அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க
வேண்டுகிறேன். தலைநகர் தில்லியிலிருந்து டேராடூன் செல்லும் ஷதாப்தி விரைவு வண்டி
ஹரித்வார் வழி செல்லும் என்பதால் அந்த இரயில் பயணித்து ஹரித்வார் சென்றோம். ராஜதானி விரைவு வண்டியைப் போலவே இந்த
இரயிலில் உணவும் கிடைத்துவிடும் - பயணச்சீட்டு உடன் உணவுக்கான கட்டணமும் வாங்கி
விடுவார்கள். இரயில் அனுபவங்கள்
மற்றும் ஹரித்வார் பயண அனுபவங்கள் சிலவற்றை என்னவர் விரிவாக எழுதுவார் என
நினைக்கிறேன். நான் முகநூலில்
பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் மட்டும் இங்கே தலைநகர் பயணத் தொடரின் பகுதியாக
வெளிவரும். ஹரித்வார் சென்று
சேர்ந்த தமிழ் புத்தாண்டு நாளின் மாலைப்பொழுதில் Har ki pouri என்ற இடத்தில் மா
கங்கா என்று இங்கே அன்புடன் அழைக்கப்படும் கங்கை நதியை தரிசித்து விட்டு அங்கே
மாலை வேளையில் நடக்கும் ஆர்த்தியும் கண்குளிர கண்டு வந்தோம்! அருமையான அனுபவம்!
அலைமோதும் மக்கள் கூட்டத்தில் நாங்களும் ஒன்றென கலந்தோம்!
******
அமைதியான சூழலில் தங்கியிருந்தால் இரவு படுத்ததும் தூக்கம் கண்களைத்
தழுவிக் கொண்டது! புதியதோர் இடத்தில் எனக்கு அவ்வளவு எளிதாக தூக்கம் வந்துவிடாது!
ஆனாலும் ஹரித்வார் நகரில் அப்படியில்லை. அடுத்த நாள் பறவைகளின் கீச்சிடும்
ஒலியில் தான் விழித்துக் கொண்டேன். அந்த நாள் ரிஷிகேஷ் நோக்கிய பயணம் தொடங்கியது.
தங்கியிருக்கும் இடத்தில் காலை உணவாக தரப்பட்ட ஆலு பராட்டாவுடன் தயிர் மற்றும்
ஊறுகாயை எடுத்துக் கொண்டு நாங்கள் மூவரும் ரிஷிகேஷ் கிளம்பி விட்டோம்!
ஹரித்வார் வந்ததிலிருந்தே நான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம்
என்னவெனில் செல்லும் வழியெங்கும் சுவர்களிலும், பாலத்தின் அடியிலும் என
எங்கெங்கும் வண்ண ஓவியங்களாக ராமாயணக் காட்சிகளும், ரிஷிகளின் பெயர்களும்
அவர்களின் ஓவியங்களும்! இது போக சுத்தத்தை குறித்த விழிப்புணர்வு வாசகங்களும்,
ஓவியங்களும்! அவற்றையெல்லாம் நின்று புகைப்படமெடுக்க முடியாத அளவு வாகன நெரிசலும்,
அலைமோதும் மக்கள் கூட்டமும்!
சரி கதைக்கு வருவோம்!வழக்கமாக ரிஷிகேஷுக்கு செல்லும் பாதையில் ஏதோ வேலை
நடைபெறுகிறது போல! அதனால் சுற்றுப்பாதையில் 30 கிமீ கூடுதலாகவே பயணிக்க
வேண்டியிருந்தது! ஆங்காங்கே நின்று நின்று வாகன நெரிசலில் ஊர்ந்து கொண்டிருந்தோம்!
ரிஷிகேஷில் மோட்டார் படகில் கங்கையில் பயணித்தோம்! 'ராம் ஜூலா' என்று
சொல்லப்படுகிற தொங்கு பாலத்தில் இக்கரையிலிருந்து அக்கரை வரை அதிர்வுகளுடன்
நடந்தோம்! கங்கையில் கால்களை நனைத்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்! முகத்தில்
தெளித்துக் கொண்ட போது கொளுத்தும்
வெயிலிலும் கங்கை சிலீரென்று புத்துணர்வு தந்தாள்!தாகத்தை தணிக்க மட்கா
குல்ஃபியும், லெமன் சோடாவும் உதவியது! சுற்றிய கால்களுக்கு ஓய்வு தந்து மீண்டும்
பயணித்து ஹரித்வாரில் தங்குமிடம் திரும்பினோம்! மாலை தங்குமிடத்தில் தந்த சூடான
சர்க்கரையில்லாத இஞ்சி டீ பயணக் களைப்பை முற்றிலும் அகற்றியது!
******
அடுத்த நாள் காலையில் தங்குமிடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருந்த ஒரு
படித்துறைக்குச் சென்று நீராடினோம்! சிலீரென்ற நீரில் இறங்கி மூச்சிரைக்க
நின்றேன்.. கங்கையிலும் அந்த இடத்தில் நல்ல வேகம்! பின்பு பேட்டரி ரிக்ஷாவில்
பயணித்து மலை மீதிருக்கும் மானஸா தேவி கோவிலுக்குச் செல்ல மலையடிவாரத்துக்கு சென்று சேர்ந்தோம்!
இங்கிருந்து ரோப் கார் மூலம் மேலே செல்ல வேண்டும்! விடுமுறை நாள் என்பதால்
அடிவாரத்தில் கட்டுக்கடங்காத கும்பல்! டிக்கெட் வாங்க நீண்ட வரிசை! அதன் பின்பு
ஏறக்குறைய இரண்டு மணிநேரம் காத்திருக்க வேண்டும்! அதன் பின்பே மேலே செல்ல
அனுமதிக்கப்படுவார்களாம்! அவ்வளவு நேரம் நம்மிடம் இல்லை என்பதால் மானஸா தேவியை
மானசீகமாக பிரார்த்தித்துக் கொண்டு அங்கிருந்து கடைத்தெருவை சுற்ற கிளம்பி
விட்டோம்! காலை உணவை pandit ji kesariya என்ற ரெஸ்டாரண்ட்டில் முடித்துக்
கொண்டோம்! எங்கும் அலைமோதும் கூட்டம்! சல் சலோ! சல் சலோ! என்று சொல்லியபடியே
நகர்ந்து கொண்டிருந்தோம்!
கடைத்தெருவில் நான்கு மதிக்கத்தக்க பிஞ்சு சிறுவன் ஒருவன் கையேந்தி நின்றது
மனதை பிசைந்தது! வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் அமைந்து விடுகிறது!
அடுத்து இங்கு வந்த முதல் நாள் கங்கா ஆரத்தி பார்த்த Har ki pouri என்ற
இடத்தில் கங்கையின் கோவில் சென்று தரிசித்தோம்! அப்படியே கடைத்தெருக்களை சுற்றி வந்தோம்!
ஃப்ரெஷ்ஷான ஸ்ட்ராபெர்ரிக்களை பார்த்ததும் வாங்கிக் கொண்டோம்! அப்படியே பேட்டரி
ரிக்ஷாவில் ஊரைச் சுற்றி வந்து தங்குமிடம் திரும்பினோம்! பயணக் குறிப்புகள்
தொடரும்.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
விளக்கமாக சொல்வதைச் சுருக்கி இப்படி ஓரிரு வாசகங்களில் அனுபவத்தைச் சொல்லிப் போவது கவிதை மாதிரி இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதை மாதிரி இருக்கிறது - ஆஹா மகிழ்ச்சி ஶ்ரீராம். தங்கள் அன்பிற்கு நன்றி.
நீக்குஅருமையான விவரிப்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஎங்களை உங்கள் இந்த பதிவின் வழியாக புண்ணிய பூமிக்கு அழைத்து சென்றதிற்கு நன்றி. உங்கள் வர்ணனையும் படங்களும் மிகவும் அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் ராமசாமி ஜி.
நீக்கு